சில படங்கள்!
‘அயலி’ பார்த்தாச்சு. பின் பகுதியில் சில இடங்கள் யதார்த்தத்தை கொஞ்சம் மீறியதாகத் தோன்றினாலும், சொல்லப்பட வேண்டிய பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது 👌🏻.
எனக்கு ஒரு விடயம் புரிவதில்லை… 🤔. ஒரு பெண் தெய்வமாகவே இருந்தாலும் பெண்களின் பிரச்சனைகளை அந்தத் தெய்வம் புரிந்து கொள்வதில்லை என்று பெண்களே எப்படி நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள்? இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் சில விடயங்கள் நம்ப வைக்கப்படுவதுதான் ஆச்சரியம்.
அண்மையில் பார்த்த இரு படங்கள் மிகவும் பிடித்தது.
- செம்பி:
கோவை சரளா நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, இங்கே வேறுபட்ட ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் நடிக்கும் குழந்தையும் கூட மிகை நடிப்பில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறாள். சில காட்சிகள் யதார்த்தத்திற்கு மீறியதாகத் தோன்றினும் படத்தின் கதையும், முடிவும் பிடித்தது. 🙂 - நண்பகல் நேரத்து மயக்கம்:
மலையாளப் படம் என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினாலும், தமிழ்ப் படம் என்று நினைக்க வைக்குமளவு தமிழ் வாசனை. மம்முட்டியினதும், சில பார்த்த முகங்களினதும், பல முகமறிந்திராத கதாபாத்திரங்களினதும் இயல்பான நடிப்புடன் படம் நகர்கிறது.
நீண்ட கதை எதுவுமில்லை. ஒவ்வொரு பாத்திரத்தினதும் உணர்வுகளை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
காதை அடைக்கும் பின்னணி இசை இல்லை, பதற வைக்கும் வன்முறை இல்லை.
பின்னணியில் போகும் தமிழ்ப் பட வசனங்கள் சில இடங்களில் சத்தமாக இருப்பதால் காட்சியை மனம் முழுமையாக உள் வாங்க முடியாமல் செய்தது. அதே வேளை சில இடங்களில் சத்தம் மிகக் குறைவாக இருப்பதால் text மட்டும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதனால் இரண்டு தடவை படம் பார்த்தேன் 😀.
படத்தின் முடிவில் எல்லோரும் நடந்து பேருந்தை நோக்கிப் போகிறார்கள். அடுத்த காட்சியில் பேருந்து புறப்பட முன் மம்முட்டி மட்டுமே விளித்திருக்க மற்ற அனைவரும் தூக்கத்தில். அப்படியானால், அனைத்துமே மம்முட்டியின் ஒரு நண்பகல் மயக்கத்தில், அல்லது கனவில் நடந்ததுதானா? 🤔
எப்படியோ… கதையில் யதார்த்தம் உண்டா என்று ஆராயாமல் பார்த்தால், அங்கு வரும் மனிதர்களின் உணர்வுகளுடன் ஒன்றிப் போக முடிகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்