ஒரு நல்ல மனிதரை இழந்தோம்!

Posted On ஜூன் 21, 2020

Filed under uncategorized

Comments Dropped leave a response

இந்தப் பழைய பதிவை என்னுடன் பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி ஜெயகுமார்!

https://m.facebook.com/story.php?story_fbid=1530599960289175&id=100000175560903

அருமையான, இனிமையான, அன்பான இரவீந்திரநாத் sir ஐப் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் கிளறிச் சென்றுள்ளது.

பேராதனையிலிருந்து வேலைக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கு வந்தபோது, என்னை நேர்காணல் செய்தவர்களில் முக்கியமானவர். நேர்காணலின்போதும், அதன் பின்னர் அவர் தலைவராக இருந்த துறையில் வேலையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், துறைத் தலைவராக அவருடனான சந்திப்பிலும், அதன் பின்னர் அவருடைய துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், எளிமையானவர். வேலை தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விடயங்களாக இருந்தாலும் சரி, தயங்காமல் ஆலோசனை பெற அவரை அணுகுவது மிகவும் இலகுவாக இருந்தது. வேலைத் தளத்தில், தான் துறைத் தலைவர் என்ற எந்தவித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். திறமைகளை அடையாளம் கண்டு கொள்வதில், பாராட்டுக்களைத் தாராளமாக வழங்குவதில், நகைச்சுவையாக உரையாடலை இனிமையாகச் நகர்த்திச் செல்வதில் வல்லவர்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவருமே அன்பானவர்கள்தான். நான் அங்கேயிருந்த காலத்தில், மிக நெருங்கிப் பழகிய நண்பிகள் மூவரும் (ஜெயரதி, சொர்ணா, சீதா), எனக்கு முன்னரே கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போய்விட்டார்கள். அப்போது நான் தனித்து விடப்பட்டதான ஒரு உணர்வு எனக்கும் இருந்தது. நாங்கள் ஒன்றாக சென்று வருவதைப் பார்த்திருந்த இரவீந்திரநாத் sir இன் அருமை மகள்கள், நான் தனியாக இருப்பதாக உணர்ந்து அவரிடம் சென்று “அவ இப்ப தனியா இருக்கிறா. நாங்கள் அவவோட friends ஆக இருக்கலாமா? அவவோட போய் உடன் இருக்கலாமா?” என்று கேட்டதாகவும், தான் “தாராளமாகப் போய் இருங்கோ” என்று சொன்னதாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் வந்து என்னையும் கூட்டிக்கொண்டு, நான் முன்னர் எனது நண்பிகளுடன் மாலை வேளைகளில் நடந்து செல்லும் இடங்களெல்லாம் நடப்பார்கள். தங்கள் வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிப் போவார்கள்.
நான் முன்னர் நண்பிகளுடன் இருந்து கதைத்த இடங்களில் என்னுடன் இருந்து கதைப்பார்கள் / பாடுவோம். அப்போது (1988-89) அவர்கள் இருவரும் குழந்தைகள். நாம் என்ன கதைத்தோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர்களது அன்பு என்னைக் கட்டிப் போட்டது என்னவோ உண்மை. இப்போது நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன. அவர்கள் மிகச் சிறியவர்களாக இருந்தமையால் என்னை நினைவிருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களில் நானும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தை விட்டு, வவுனியா விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் போய்விட்டேன். நான் வேலை விட்டு நீங்கும்போது, அவர் எனக்கு எழுதித் தந்த சான்றிதழ் சிறந்ததாகவும், இன்னொருவரின் முன்னேற்றத்திற்காக அடி மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவும் அமைந்திருந்தது. விரிவுரையாளர் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சித் தளத்திலும் காலூன்றுவது நல்லது என்று எடுத்துக்கூறி, என்னை உற்சாகப்படுத்தி, தானே ஓர் ஆய்வுக்கான திட்டத்தையும் தொடக்கித் தந்தார்.

பின்னர் 1993 இறுதியில் நோர்வேக்கு இடம் பெயர்ந்து விட்டேன். நான் இங்கு வந்த பின்னர் அவர் இரு தடவைகள் நோர்வேக்கு தொழில் நிமித்தமாக வந்து போனார். ஒவ்வொரு தடவையும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க மறக்கவில்லை. அவர் வந்திருந்த இடமும், நாம் வசிக்கும் இடமும் தூரமாக இருந்தமையாலும், மிகக் குறுகிய நாட்களே அவர் நோர்வேயில் இருந்தமையாலும் அவர் எங்களை வந்து சந்திக்க முடியாமல் போயிற்று. அப்போது அவர் என்னிடம் கூறிய “அடுத்த தடவை நோர்வே வரும்போது, உங்களிடம் வருவேன்” என்று கூறிய வார்த்தைகளே இறுதியாகப் போனது வேதனை ☹.

எனக்கு மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் இதே அன்புடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டிருப்பார் என்பது தெரியும். அவரின் இயல்பே அதுதானே. மேலும் நான் திருமணம் முடித்து வந்த பின்னர் எனது மாமனார், மாமியார் இவரைத் தெரியும் என்றும், அவர் ஆராய்ச்சிப் பிரிவில் பணி புரிந்த காலத்தில் தங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் வருவது பற்றியும், அவரது நல் இயல்புகள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல ஒரு மனிதரை இழந்து விட்டோம்.

‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்

Posted On ஏப்ரல் 20, 2018

Filed under uncategorized

Comments Dropped leave a response

வெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது.

மனதை மிகவும் பாதித்த சில வரிகள்:

  • “அவங்கள் யாருக்குப் பதில் சொல்லணும் எண்டு தேவை கிடக்குது இங்க. விட்டாச்சுது எண்டு சொல்லியாச்சுது. பத்துப்பேரை விட்டிட்டு, இருபதுபேரைக் கொன்று போட்டாலும் இங்க உலகமும் கேக்காது. ஊராக்களும் கேக்க மாட்டாங்க.” எத்தனை விரக்தியான வார்த்தைகள்.
  • “போர் அவளது மேல் கையொன்றில் தன் பதிவைச் செய்வதற்காக அக் கையின் உணர்வைப் பறித்திருந்தது. சூம்பிய கையில் விரல்கள் தம் பாட்டில் விரிந்து வேலை செய்வதில்லை. ஆனால் அந்தக் கையால் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு அந்த ஆழக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கிறாள்! இயலாமை என்பது எல்லாம் உடலில் இல்லை என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.”
  • “மனிதம். புனர்வாழ்வு என்றால் என்ன? யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்பென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும்?”

அலை அழித்த தமிழ்!

Posted On நவம்பர் 13, 2016

Filed under uncategorized

Comments Dropped leave a response

அலை அழித்த தமிழ்!

இரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.

20161113_110403

அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

கல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த ஆசிரியரும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை எப்படி ஆர்வமுடன் கேட்கும்படி (வாசிக்கும்படி) செய்வது என்று இந்த இருவரும் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மிகவும் விறுவிறுப்பாக, ஆர்வத்தைத் தூண்டும்படியாக எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

புனைவும், கற்பனையும் கலந்திருப்பதாக அவர்கள் சொல்லியிருப்பதால், வாசிப்பினூடே (முக்கியமாக இறந்த காலம் பற்றிய பக்கங்களில்) எது கற்பனை என்றும் சேர்த்தே ஆராய்ந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான வரலாற்று விடயங்களையும் எழுதியிருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர்களுக்கே இன்னமும் மேலதிகமாக எழுதும் உத்வேகம் இருப்பதையும் கூறிவிட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.

எதிர்காலம் பற்றிய கற்பனை (அல்லது எதிர்வுகூறல் என்றும் கொள்ளலாமோ), கவலைக்குரியதாக இருந்தாலும், வித்தியாசமாக எழுதப்பட்டிருந்க்கிறது. எதிர்காலம் மட்டுமன்றி, எழுத்தின் போக்கே வித்தியாசமாக இருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனது வாசிப்பு!

Posted On நவம்பர் 13, 2016

Filed under நூல், ரசித்தவை, uncategorized

Comments Dropped leave a response

மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

norway norway1 norway2 norway3 norway4 norway5 norway6

மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:

1. Long walk to freedom – Nelson Mandela

2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்

3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்

4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)

5. ஆதிரை – சயந்தன்

6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி

7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.

அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma

உங்கள் அம்மாவை எப்படி கையாளுவீர்கள்?

Posted On நவம்பர் 6, 2009

Filed under uncategorized

Comments Dropped 3 responses

எப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.

”இண்டைக்கு library க்கு போனீங்களா? என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க?” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது? அப்படி ஒண்டும் இருக்காதே. எனக்கும் உங்களுக்குமிடையில no secrets எண்டு அண்டைக்கு சொன்னனீங்களே. காட்டுங்கோ எனக்கும்” என்று சொன்னேன்.

எனக்கோ curiosity தாங்க முடியேல்லை :). அவளோ ஒளிச்சுக் கொண்டு ஓடித் திரியிறாள். நான் படும் அவதியைச் சகிக்காமல், அவளே கடைசியில் புத்தகத்தை காட்டினாள். புத்தகத்தின் தலைப்பு, “How to handle your mom?”. தலைப்பை பார்த்ததும் நான் சிரித்தேன், ”நல்ல புத்தகம்தான் எடுத்து வந்திருக்கிறீங்க.” என்றேன். அவள் உடனே முன்னுரையில் இருந்த ஒரு வசனத்தையும் காட்டி, “இப்பிடி இருக்கு இங்க. அதான் நான் உங்களுக்கு காட்டக் கூடாது” என்றாள். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்தேன். அங்கே இருந்தது…..

It’s dangerous when it falls into the wrong hands, that’s yr mom’s.

உடனே புத்தகத்தை திருப்பிக் கொடுத்து, “Good luck to handle your mom” என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே புத்தகத்தை பறிக்காத குறையாய் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் ஓடினாள். அவள் மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்வுதானே? 🙂