வாசிப்பு!
எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது :(. நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.
பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை வாசிப்பது போதாதென்று, பொருட்கள் சுற்றி வரும் காகிதங்களையும் நான் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கிருக்கும் ஆச்சி சொல்லுவா, ”எனக்கு உன்னைப் பார்க்க பொறாமையாய் இருக்கு பிள்ளை” என்று. காரணம் அவவுக்கு வாசிக்க தெரியாது என்பதுதான்.
சரி, எதுக்கு இந்த முன்னோட்டம் இப்போ? திரு எழுதிய ‘திரை கடலோடியும் துயரம் தேடு’ வாசித்தேன். நிறைய தரவுகளுடன், ஆராய்ந்து புலம்பெயர் மக்களின் வாழ்வைப்பற்றி எழுதியிருக்கிறார். அதையெல்லாம் வாசித்தபோதுதான், மக்களின் எத்தனை பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம் என்று இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தனை தூரம் எத்தனையோ புலம்பெயர் மக்களுக்கு துன்பம் கொடுக்கிறது என்பது ஓரளவு எதிர் பாராதது. நமக்கு அந்த துன்பங்கள் நேராமையால், இதை எதிர் பார்க்கவில்லை போலும்.
ஏன் மக்கள் புலம் பெயர்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் புலம்பெயர்கிறவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்ட திட்டங்கள், அறிவுரைகளுடன் முடித்திருக்கிறார்.
இனி மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.
சுதந்திர உணர்வு!
ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.
அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் குடும்பமில்லாமல், மேலும் தொலை தூரப் பயணம் சினேகிதிகளுடன் சேர்ந்து போக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது, சாதாரண எண்ணங்களிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டுத் தோன்றியது. அவள் இருப்பது Australia. நானிருப்பதோ நோர்வே. மற்ற சினேகிதிகள் இருப்பதோ கனடா. இப்படி எல்லோரும் கூட்டாக போக வேண்டும், எமது பழைய காலத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற அவளது எண்ணம், ஆசை, அந்த நாட்களை மீண்டும் வாழ அவளுக்கு உள்ள ஆசையைக் காட்டியது.
யோசித்துப் பார்த்ததில் எனக்கும் அப்படி ஒரு பயணம் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், எனது குழந்தையின் வயது, விடுமுறை காலத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தில் இப்போதைக்கு பங்கேற்க முடியவில்லை என்று (வருத்தத்துடன்) எழுதினேன். மற்ற சினேகிதிகள் இதற்கு என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பொதுவான மடல் எதுவும் வரவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ளாததில் அவள் கொஞ்சம் மன வருத்தம் அடைந்திருப்பாள் என்றே தோன்றியது. காரணம் அவள் மிகவும் உற்சாகத்துடன் இந்த பயணம்பற்றி எழுதி இருந்தாள். ஆனால் அதில் எவரும் இணைந்து கொள்ளவில்லை. எனக்கும் இது கொஞ்சம் மன வருத்தமாய் இருந்ததுபோலவே தோன்றுகிறது.
அதன் பிறகு நீண்ட நாட்களாய் அவளிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை. பிறகு திடீரென்று மீண்டும் ஒரு மடல். அது தனது adventure trip பற்றின மடல். மிகவும் விரிவாக அந்த மடல் இருந்தது.
அதில் தான் மட்டும் தனியாக, எவருடைய எந்த சிறு உதவியுமில்லாமல் ஒரு பயணம் ஒழுங்கு செய்து போக வேண்டும் என்று தோன்றியதாம். காரணம் திருமணத்தின் பிறகு, பல விடயங்களில் யாரையாவது (முக்கியமாக கணவனை) சார்ந்தே இருப்பது போன்ற எண்ணம். திருமணத்தின் முன்னர், துணிச்சலுடன் செய்த பல விடயங்கள், தானாக தனித்து திட்டமிட்டு, முடிவெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்திய விடயங்கள் எதையுமே தற்போது செய்ய முடியாதது போன்ற ஒரு பிரமை. எதை செய்வதாக இருந்தாலும், வேறொருவரிடம் கேட்டு, அதைப்பற்றி ஆராய்ந்து, முடிவெடுத்து…. இவையில்லாமல் முன்புபோலவே இப்போதும் தனித்து செயற்பட முடியும் என்று பார்க்கும் ஆவல்.
வீட்டில் கணவருடனோ, பிள்ளைகளுடனோ கலந்தாலோசிக்காமல், தானாகவே சுற்றுலா வழிகாட்டி ஒன்றைப் பெற்று, எவரிடமும் சொல்லாமல், சுற்றுலா பயணக் குழு ஒன்றுடன் இணைந்து ஒரு வாரப் பயணம் ஒன்றை ஒழுங்கு செய்தாளாம். மறுநாள் காலையில் பயணம் என்றால், முதல்நாள் இரவில் ஒரு தாளில் தனது பயணம்பற்றிய முழுமையான குறிப்புக்களையும் குறித்து வைத்தாளாம். தான் போகுமிடங்கள், விலாசங்கள், அவசரமானால் தொடர்பு கொள்ளக்கூடிய முறைகள் அத்தனையும் குறித்து, அவர்கள் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு, போய் வருவதாக அதிலேயே விடைபெற்றுக்கொண்டு, மறுநாள் புறப்பட்டு விட்டாளாம். அந்த பயணம்பற்றி, தான் அதை எவ்வளவு இரசித்தேன் என்பது பற்றியெல்லாம் அந்த மின்னஞ்சலில் மிகவும் விரிவாக எழுதி இருந்தாள்.
மிகவும் உற்சாகத்துடன் அந்த மடலை முடித்திருந்தாள். ஆனால் அவளுடைய கணவரைப் போலவே, எல்லா கணவர்களும் இப்படிப்பட்ட செயலை, முழுமனதுடன், புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.
நானும் கூட திருமணத்தின் பின்னர், தனித்தியங்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டதாய் எண்ணி கவலைப் பட்டது (படுவது) உண்டு. திருமணமான பெண்களுக்கு இந்த உணர்வு அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. முழு சுதந்திரத்துடன் எந்த ஒன்றையும் செய்ய முடியாமல் போகின்றதோ?
ஆனால் குடும்பத்துடன் இருப்பதால் ஏற்படும் மற்றைய மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் அவள் குறிப்பிட தவறுவதில்லை.
அண்மையில் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மடல். அவர்களது திருமணநாளை முன்னிட்டு, பிள்ளைகள் தங்களுக்கு (அவளுக்கும், கணவருக்கும்) ஒரு சுற்றுலா போய், மூன்று நாட்கள் வேறொரு இடத்தில் தங்கி, அங்கே hot air balloon இல் ஏறிப் பார்த்து வரவும் ஒழுங்குகள் செய்து, அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்ததாகவும், போய் வந்த அனுபவத்தையும் மிகவும் இரசனையுடன் எழுதியிருந்தாள். அத்துடன், அந்த மடலில், சினேகிதிகள் மட்டுமாக இணைந்து செல்ல வேண்டிய அந்த பயணத்தைப் பற்றியும் நினைவூட்டி இருந்தாள்.
மரணத்தின் வாசனை!
இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.
புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.
புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.
இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?
மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!
எரியும் நினைவுகள்!
எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.
நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.
பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.
இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.
என்னோடு பாட்டு பாடுங்கள்!
எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.
ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக இருக்குமென்பதால் இந்த ஏற்பாடு.
Sun TV, கலைஞர் TV, Jeya TV, தீபம் தொலைக்காட்சி, தென்றல், இன்னும் சில மலையாள TV எல்லாம் வீட்டினுள்ளே வரத் தொடங்கி இரண்டு கிழமையாச்சு. இருந்தாலும், அவற்றை போய் உட்கார்ந்து பார்ப்பதில்லை. செய்திகள் போகும்போது சில சமயம் உட்கார்ந்து பார்த்ததுண்டு. அங்கே இங்கே நடந்தபடி, அல்லது வேலை செய்தபடி, இடை இடையே அங்கே கண்ணையும், காதையும் வைத்ததோடு சரி.
இன்றைக்கு கலைஞர் TV ல ‘வேட்டையாடு விளையாடு’ படம்னு சொன்னாங்க. படம் எப்படி, கதை என்ன ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், அட நான் தமிழ் படம் பாத்து நீண்ட நாளாச்சே. இன்றைக்கு பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனா, அந்த படம் தொடங்க கொஞ்ச நேரம் முதல் Jeya TV ல பாலசுப்ரமணியம் நடத்தும், ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ இசை நிகழ்ச்சி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்க்கிற ஆசையில், படத்தை துறந்து விட்டு, அதைப் பார்த்தேன்.
முதலில் எனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ஒரு பெண் பாடினார். ‘காக்க காக்க’ படத்திலிருந்து, ‘தூது வருமா தூது வருமா’ பாடல். அதை அவர் பாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஆனால், அவர் பாடி முடிந்ததும், அதுபற்றி பாலசுப்ரமணியம் எந்த கருத்துமே சொல்லாமல் அடுத்தவரை கூப்பிட்டது கொஞ்சம் கவலையாகி விட்டது. அத்தனை அருமையாகப் பாடினாரே, எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டாரே என்று இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில் அவர் பொதுவாகவே எந்த கருத்தையும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவில் தான் தலையிடக் கூடாதென்று நினைத்திருப்பாரோ. இடை இடையே வேறு விடயங்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆறு பேர் பாடினார்கள். அனைவரும் நன்றாகப் பாடினாலும், எனக்கென்னவோ, முதலில் பாடியவர் எல்லா விதத்திலும் அருமையாக பாடியதாகவே தோன்றியது. இடையில் அதிக விளம்பரங்கள் எதுவும் வராமல் இருந்ததும் நன்றாக இருந்தது.
நடுவர்களான இசையமைப்பாளர் M.S.Visvanathan, இயக்குனர் பாலாவும், இடை இடையே தமது சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். M.S.Visvanathan சொன்ன ஒரு விடயம், ஒரு பாடல் இந்த தலை முறைக்கு என்றில்லாமல், எல்லா தலை முறையினரையும் ரசிக்க வைக்குமானால், அதுவே பாடலின் வெற்றி என்று. அதற்கு ஒரு உதாரணமும் சொன்னார். ஒரு இசைநிகழ்ச்சியில் 18 வயது ஆண் ஒருவர், அந்த சமயத்தில் 38 வயதான பாடலான, நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடல் ஒன்றை விரும்பிக் கேட்டாராம். உண்மைதான், சில பாடலகள் எத்தனை தலைமுறை கடந்தாலும், மனதில் நிறைந்திருக்கத்தான் செய்கின்றது. ‘எண்ணப்பறவை சிறகடித்து’ பாடலும் அப்படிப்பட்ட பாடலில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.
இரண்டாம் சுற்றில், பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் மெட்டை இடையில் கொடுக்க, அந்த பாடலைக் கண்டு பிடித்து பாட வேண்டும். எல்லோரும் இலகுவாக கண்டு பிடித்துப் பாடினார்கள். அவர்கள் பாடும்போது பாலசுப்ரமணியமும், அவர்களுடன் இணைந்து பாடியது இன்னும் அழகாக இருந்தது. அதில கடைசிப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலான ‘இளையநிலா பொழிகிறது’.
முடிவில் நான் எதிர் பார்த்தபடி முதலில் ‘தூது வருமா தூது வருமா’ பாடிய பெண்ணே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் மகிழ்ச்சி. இறுதியில், அந்த பெண்ணுடன் பாலசுப்ரமணியம், இன்னொரு அழகான பாடலைப் பாடினார்.
‘ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை’
பாடலைப் பாடியபடியே, அந்தப் பெண்ணை வாழ்த்தியும் வரிகளை மாற்றி பாலசுப்ரமணியம் பாடியது நன்றாக இருந்தது. அதுனால, முதலில் அவர் அந்த பெண்ணின் பாடலுக்கு கருத்து எதுவும் சொல்லலையே என்ற குறையும் தீர்ந்தது. 🙂
அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கலைஞர் TV யைப் போட்டால், கமலும், Jothika வும், தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பேசிக் கொண்டார்கள். முன்னுக்கு போனது என்னவென்று புரியாததில், சரியாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்தேன். படம் பிடிக்கலை. எழுந்து எனது வேலைகளை செய்யப் போனேன். ஆனாலும் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, ‘உயிரிலே எனது உயிரிலே’ பாடல் போனது. அட, இது ஒரு நல்ல பாடலாச்சே, அது இதில்தானா என்று நினைத்த போதுதான், ‘பார்த்த முதல் நாளே’ பாடலும் இந்தப் படத்தில் என்பது நினைவுக்கு வந்தது. சரி, பாட்டு போகும்போது, கேட்கலாம் என்று இருந்தால், அந்த பாடல் வரவில்லை. முதலே போய் விட்டதுபோல.
வேலைகள் எல்லாம் முடிய, அதில் வந்து உட்கார்ந்தேன். கமல், Jothika விடம் ‘இனி நீயும் மாயாவும் என் சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனி ஒரு வேலையும் இல்லைத்தானே என்று அதிலேயே உட்கார்ந்து படம் முடியும்வரை பார்த்தேன். ஆனால் படம் பிடிக்கவில்லை.
‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ ஒவ்வொரு கிழமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கேன். 🙂
வயது முதிர்ந்த வலைப்பதிவர்!!
முதிர்ந்த வலைப் பதிவர்!
உலகிலேயே வயது முதிர்ந்த வலைப்பதிவர் யார் தெரியுமா? அவுஸ்திரேலியப் பெண்மணி Olive Riley. இந்த மாதம் 17 ஆம் திகதி அவர் தனது 108 ஆவது வயதை எய்தினார். மூன்று நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவரரென்ற பெருமையை பெற்றிருக்கும் இவர், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் The Life of Riley என்ற பெயரில் வலைப் பதிவு செய்து வருகின்றார்.
அவரது பதிவு உலகளவிலான அதிகளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. அவரது பதிவால் கவரப்ப்பட்ட ஒரு ஸ்பானியர், அவரது பதிவை ஸ்பெயின் மொழியில் மாற்றி அமைத்தி வருகின்றாராம்.
அவருக்கு வலைப் பதிவு செய்வதில் உதவி வரும் Mike Rubbo, Olive Riley யை active ஆக வைத்திருக்கவே தான் விரும்புவததகவும், inactivity என்ற காரணத்தால் அவர் இறந்து போகக் கூடாது என்றும் கூறுகின்றார்.
அவரது பிறந்த ந்ஆளுக்கு முதல் இந்த படிவை போட வேண்டும் என்றிருந்தேன். ஆனால் நேரமின்மையால் பின் தள்ளி விட்டது. இருந்தாலும் அந்த ம்உதிய பதிவருக்கு எனது வாழ்த்துக்கள். 🙂
நேரத்தின் மதிப்பு!
நேரத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள:
> பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.
> நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.
> ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர்,
இறுதிப் பரீட்சையில் தோல்வியடந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.
> ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.
> ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர்,
கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.
> ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்துகொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.
> ஒரு மணித்தியாலத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.
> ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.
> ஒரு செக்கனின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.
> ஒரு மில்லி செக்கனின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.
நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவு செய்யும்போது, உங்களது நேரம் மேலும் பெறுமதி மிக்கதாயிருக்கும்.
மொழி!
மொழி!
நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.
படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது :). பெண்ணின் பெற்றோரிடம், “நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்.” என்று சொல்வது நன்றாக இருந்தது :).
அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.
படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.
மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.
காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.
ஆனாலும், அந்த ‘பேசா மடந்தையே’ என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.
எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை ‘மொழி’, ‘மெளனம்’.
அன்புக்கு மொழி அவசியமில்லை!!!
என் குட்டித் தேவதைக்கு….
என் குட்டித் தேவதைக்கு….
நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
“எப்படியடி தெரிந்தது?” நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
“ஐயோ! தெரியலியே” தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…
பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…
இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!
நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்
சில முத்துக்கள்!
கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!
> உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!
> தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது
> அனுபவங்களின்
தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை