என் குட்டித் தேவதைக்கு….

என் குட்டித் தேவதைக்கு….

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
“எப்படியடி தெரிந்தது?” நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
“ஐயோ! தெரியலியே” தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…
பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…
இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!

நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்

சில முத்துக்கள்!

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!


> உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!

> தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது

> அனுபவங்களின்
தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை

வீ.எம், இன் blog இல் கண்டெடுத்தது!

Posted On ஜூன் 20, 2005

Filed under கவிதை, ரசித்தவை

Comments Dropped 2 responses

மிகவும் ரசித்து வாசித்தேன். கவிதையை எழுதியது யாரெனத் தெரியவில்லை.
…………………………………………………………………………………………..
வெற்றிகள் உனக்கு
சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்துகொள்…

மழை, நதி, விதை
விழுவதால் எழுபவை இவை..
நீ மட்டுமேன்
விழுந்த இடத்திலேயே
உனக்கு கல்லறை கட்டுகிறாய்….

உன் சுவடுகள்
சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்
திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்
உன் பாதங்களை…

உன் வழிகளெங்கும் தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்…
என தர்க்கம் செய்யாதே….

நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்…

நீ
தோற்றுப் போனதாய்
நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்…

உணர்ந்துகொள்
நீ தோல்வியுற்றது
வாழ்க்கையிலல்ல
வாழ்க்கையை புரிதலில்…
…………………………………………………………………………………………

காதில் கேட்டவை!

எங்கேயோ கேட்டு இரசித்தவை!!!

நாள் காட்டி

வருடம் முழுவதும்
இலையுதிர் காலம் உனக்கு
வசந்தம் வருவதோ
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே..


எச்சில் இலை

எச்சில் இலையை
எந்த பக்கம் போட
இந்தப் பக்கம் நாய்
அந்த பக்கம் மனிதன்

தேடல்!

அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.

தேடல்!

மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்
உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின்
ராஜாங்கம்


தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்


எல்லாமே நான் மகிழ்ந்த
கதை பேசின
பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே


வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய் தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது


காமமாம் இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த நண்பன்


எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும் தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?
மிக நீண்ட பிரயத்தனத்திற்குப் பின்
சொல்கிறேன்


தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ

நன்றி: சு.கவிதா
அவள் விகடன்..

தாமரையின் கவிதைகள்!!

தாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………

வலி

ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..

எதிர்வினை
‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?

வீடு

நண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!

மழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…

எல்லாம் சரி…
தண்டாயுதபாணி கோயிலுக்குப்
போகும் நடைபாதையில்
பழைய சாக்கு விரித்து
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரைவயிற்றிக் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
சூடம் விற்கும்
தாயம்மா கிழவியை
நினைத்தால்தான்..

ஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….

யார் அடிப்பது மனசின் ஒட்டடை?

நியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…

கனவுகள் கண்டு
கொண்டுநான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு
கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு…
இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ…
நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்..

அந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…

முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்…
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை…
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை…
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!

புத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…

ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….

குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை

 

இரசாயன ஆதிக்கம்!

மட்டக்களப்பு நவம் அரவிந்தன்

இரசாயன ஆதிக்கம்!

புறாக்களும்
ஒலிவஞ்செடிகளும்
கருகிப்போயின
மனிதன் மனிதனை
அடித்துக் கொண்டான்
சின்ன நாடுகளை
பெரிய நாடுகள்
ஏப்பம் விட்டு விட்டு
எச்சில் துண்டுகளை
தூர வீசியது
அனேகம்பேர்
பழமை சொல்லியே
குளிர் காய்ந்தார்கள்
அனேகமாய்
இரசாயனம்
முழுவதுமாய்
மனிதனை ஆண்டு கொள்ளும்!
நன்றி: “காத்திருத்தல்!”, மட்டக்களப்பு நவம் அரவிந்தன்

கண்களுக்குள் கண்ணீர்!!!

அன்னை தெரெசாவுக்கு ரா.பார்த்திபனின் கிறுக்கல்களில் இருந்து……..

கண்களுக்குள் கண்ணீர்!!!

கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
‘அன்னை’ ஆனவளே! – உன்
முக வரிகளில் மனித நேயத்தின் முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் – இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்சிஜனாக சுவாசிப்போம்!

நன்றி: ரா.பார்த்திபன்
கிறுக்கல்கள்