என்னமோ ஏதோ – கோ படப் பாடல்!

Posted On மே 6, 2011

Filed under நோர்வே
குறிச்சொற்கள்: , , ,

Comments Dropped 2 responses

கோ படத்தில் வரும் ‘என்னமோ ஏதோ’ பாடல் ரொம்பவே பிடித்திருக்கு. பாட்டு ரொம்ப நல்லா இருக்கிறது ஒரு புறம் இருந்தாலும், பாட்டு பேர்கனில் படமாக்கப்பட்டதும், படமாக்கப்பட்டதை நாங்க பார்த்ததும், நாங்க படமாக்கும்போது பார்த்த காட்சிகள் படத்தில் வந்திருப்பதும், அந்தப் பாடலில் வந்த அதே ‘Make up’ உடன் ஜீவாவுடன் நின்று மகள் படம் பிடித்துக் கொண்டதும் என்று பல விடயங்கள் பாடலை ரொம்ப பிடித்துப் போகச் செய்திருக்கிறது.

நான் பார்க்கும்போது படமாக்கப்பட்ட காட்சியில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள்:

“Lady lookin like a cindrella cindrella………Naughty looku விட்ட தென்றலா? Lady lookin like a cindrella cindrella.. என்னை வட்டமிடும் வெண்ணிலா..”

படமாக்கப்பட்ட காட்சியை நான் எடுத்த படங்கள் கீழே :).

This slideshow requires JavaScript.

கைத்தொலைபேசியும் தமிழும்!

எனக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் htc Hero mobile கிடைத்தது. ஆனால் அங்கே Unicode தெரியாமல் இருந்ததால், தமிழில் எதையும்  வாசிக்கவோ, எழுதவோ முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதை எப்படி என அறியும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தாலும், அதற்கான மனநிலை இல்லாமல் இருந்ததால் அதனைச் செய்யாமல் இருந்து விட்டேன்.

சில நாட்கள் முன்னால் அதனை எப்படியும் செய்ய வேண்டும் என முயற்சித்ததில், முதலில் Opera Mini browser ஐ பதிவிறக்கம் செய்து கொண்டதில் தமிழில் வாசிக்க முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்க முடிந்தபோது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பின்னர் ThamiZha’s Android TamilVisai 0.1 ஐயும் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன். இன்றுதான் முதன் முதலில் எனது கைத்தொலைபேசியில் இருந்து முதலாவது தமிழ் மின்னஞ்சலை எழுதியிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

Android Operative system இருக்கும் கைத்தொலைபேசி கிடைத்து கிட்டத்தட்ட 8 மாதங்களின் பின்னர் தமிழில் எழுதவும், வாசிக்கவும் தொடங்கியுள்ளேன்.

கோமாளிகள் நாள்!

Posted On பிப்ரவரி 25, 2010

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped 2 responses

எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. 🙂

வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் :).

1. திங்கள் – pyjama day

இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.

2. செவ்வாய் – gym games day

முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை நெறிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கு ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்லி அலுத்துப்போச்சாம். (ரொம்பத்தான் அலட்டிக்கிறா).

2. புதன் – Skiing day

இதற்கென்று தனியார் போக்கு வரத்து ஒழுங்கு செய்து பெரிய மலையொன்றுக்கு தொலைதூரம் போய் வந்தார்கள். தான் 10 தடவைக்கு மேல் விழுந்து எழும்பியதை, பெரிய சாதனையாக, மிகவும் சந்தோசத்துடன் சொல்லி மகிழ்ந்தாள் :). ஆனால், இன்றைக்குத்தான் கொஞ்சம் கழுத்து வலிப்பதாக கூறுகின்றாள் :(. விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகின்றேன்.

3. வியாழன் – crazy day

அப்பாவுடைய T-shirt ஐ எடுத்து அணிந்து கொண்டாள். அப்பாவிடம் ஒரு tie வாங்கி, அது சுற்றப்பட்டிருந்த polythene cover உடன் சேர்த்து t-shirt இல் குற்றிக் கொண்டாள். தலைமுடியை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் பின்னாமலும், ஒரு பக்கம் பின்னியும் விடச் சொல்லிக் கேட்டாள். போட்டு விட்டேன். உடைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு sweater எடுத்து அணிந்து கொண்டாள்.  The crazy girl was ready then :). Crazy parade 9 மணிக்கு தொடங்குதாம் என்று சொல்லி அவசரமாக ஓடுகிறாள்.

இப்படியெல்லாம் நாங்க படிக்கும்போது எதுவும் இல்லாம போச்சே என்று கவலையா இருக்கு. நல்லாவே குழந்தைகளை கவனிக்கிறாங்க 🙂

அழகோ அழகு!

Posted On பிப்ரவரி 23, 2010

Filed under நோர்வே, ரசித்தவை

Comments Dropped one response

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.

1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது :).

என் செல்லக் குட்டிம்மா!

Posted On பிப்ரவரி 5, 2010

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped 10 responses

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

இது ஒரு பனிக்காலம்!

Posted On ஜனவரி 25, 2010

Filed under நோர்வே, ரசித்தவை

Comments Dropped 7 responses

இது ஒரு அழகான பனிக்காலம்!

நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை 🙂 . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் :) . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை :) . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது.

வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.


நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.

அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.


Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, ‘இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?’ என்ற கேள்வி எழுந்துள்ளது :(. காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.

பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே’ என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது :(. இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. ‘என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.

அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.

ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!

Posted On திசெம்பர் 16, 2009

Filed under குழந்தை, சமூகம், நோர்வே

Comments Dropped 7 responses

மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?

ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை :). ஒரு பாடம் IT & DT (Information Technolgy and Design Technology).

முதலில் சந்தித்தது IT & DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.

கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார் :). வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது’ என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்’ என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality’ தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது’ என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.

அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.

அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள ‘தெனாலிராமன்’ என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான் :). Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம் :). பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.

பகிர்தல்!

Posted On செப்ரெம்பர் 23, 2009

Filed under சமூகம், நோர்வே

Comments Dropped one response

என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே ‘வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே’ என்கின்றார்.

இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முழுவதும் சொல்லி முடிக்க முதலே, இவர் ”நாம் வேறு ஏதாவது மகிழ்ச்சியாக பேசலாமே” என்கிறார். அது எப்படி கவலையில் வரும் ஒருவர், இவர் கேட்டதும் மகிழ்ச்சியாக பேச முடியும் என்பதை அவர் யோசிக்கவே இல்லையா என்று எனக்குத் தோன்றியது. எமது நாட்டுப் பிரச்சனை, அல்லது மக்களின் பிரச்சனை பற்றி ஏதாவது பேச்சு வரும்போது, நான் கவலைப்பட்டாலும், அவர் எனக்கும் இதையே சொல்லுகின்றார்.

சிலவேளை அவர் அப்படி சொல்வது, அவரால் அப்படி கவலையான விடயங்களை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமத்தினாலாக இருக்கலாம். ஆனால் அந்த சினேகிதியும், இவரிடம் ஒரு மன ஆறுதலுக்குத்தானே சொல்ல வந்தார். இவர் இப்படி கேட்க மறுத்தால் அவருக்கு அது மனப் பாரத்தை கூட்டாதா என்று தோன்றியது.

மகிழ்ச்சியோ, துக்கமோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதுதானே ஆறுதல்.

பதிவெழுத வந்த கதை!

Posted On செப்ரெம்பர் 19, 2009

Filed under கிறுக்கல்கள், நோர்வே

Comments Dropped 5 responses

சினேகிதி தத்தக்க பித்தக்க வில என்னையும் (நானும் ஒராளெண்டு) பதிவெழுத வந்த கதையை எழுதக் கூப்பிட்டிருக்கிறா. நானும் நாளைக் கடத்திப்போட்டன். இனியும் எழுதாமல் விட்டால், கனடாவில இருந்து நோர்வேக்கு தடியோட வந்து நிண்டாலும் நிப்பா போல கிடக்கு. வாறதுக்கிடையில எழுத வேணும் எண்டு நானும் எழுதத் தொடங்கி விட்டன். முந்தி ஒருக்கால் மழை ஷ்ரேயா இப்படித்தான் ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு, அந்த தொடர் விளையாட்டெல்லாம் முடிஞ்சு கன காலத்துக்குப் பிறகு நான் அந்தப் பதிவை எழுதினன். இந்த தொடர் விளையாட்டுல எல்லாரும் எழுதி முடிச்சிட்டினமா எண்டு தெரியேல்லை. பாப்பம்.

கணினியைப் பாத்ததும், பழகினதும்

நான் முதல் முதலில கணினியைப் பாத்தது, பேராதனைப் பல்கலைக் கழகத்தில கடைசி வருடப் படிப்பிலதான். அப்பதான் எங்களுக்கு ஒரு பாடம் கணினியில், கொஞ்சமா ஏதோ சொல்லிக் கொடுத்தாங்கள். ஏதோ கொஞ்சம் படிச்சிட்டு வந்தாச்சு. அதுக்குப் பிறகு, நான் அங்கேயே கொஞ்ச காலம் வேலை செய்தபோது, எங்களுக்கு senior ஆன, வெளிநாட்டு உதவித் தொகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, என்ரை அறைத் தோழிக்கு, தனிக் கணினி கிடைத்திருந்தது. அப்போது ஒரு நாள் “கணினி சாத்திரமெல்லாம் சொல்லுது, வாங்கோ பாப்பம்” எண்டு சொல்லி கூட்டிக் கொண்டு போய் காட்டினா. அதுக்குப் பிறகு இங்க நோர்வேக்கு வந்த பிறகுதான், வீட்டிலேயே கணினி பாவிக்கத் தொடங்கினது.  அப்பதான் தமிழிலயும் எழுதலாம் எண்டு தெரிஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா தட்டச்சு பழகினது. நான் தமிழ் எழுதத் தொடங்கினது ‘பாமினி’ யில்தான். எழுத்துக்களுக்குரிய விளக்கத்தை அச்சுப் பிரதி எடுத்து,  கையோட வைச்சுக் கொண்டு தட்டச்சினேன். முதன் முதல் நான் கணினியில் தமிழில தட்டச்சினது அப்பா, அம்மாக்கு கடிதம். அதை எழுதி, அச்சுப் பிரதி எடுத்து அஞ்சலில் அனுப்பினேன். அண்டைக்கு நல்ல மகிழ்ச்சியா இருந்தது இப்பவும் நல்லா நினைவிருக்கு.

அதுக்குப் பிறகு கணினியில் அரட்டை, இணையத் தமிழ் முற்றங்களில பங்களிப்பு, வலைப்பதிவு எண்டு எனக்கும், கணினிக்கும், இணையத்துக்குமான தொடர்பு நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமா வளர்ந்திட்டுது. இப்ப கடைசியா தமிழ் விக்கிபீடியா பங்களிப்புவரை கொண்டு வந்து விட்டிருக்கு :).

மின்னஞ்சல்

எப்ப முதன் முதலா மின்னஞ்சல் அனுப்பினன் எண்டு சரியா நினைவில்லாட்டியும், யாருக்கு அனுப்பினன் எண்டு நல்லா நினைவிருக்கு. துபாயில இருந்த மாமா (என்னை விட 2 வயதே கூடியவர்), தன்ரை மின்னஞ்சல் முகவரி எண்டு தந்திருந்தார். எனக்கும் இங்க பல்கலைக் கழகத்தில மின்னஞ்சல் முகவரி கிடைத்ததும், அதில இருந்து மாமாக்கு ஒரு மின்னஞ்சலைப் போட்டன். போட்டுட்டு கொஞ்ச நேரத்தில பாத்தால், அவரிட்ட இருந்து பதில். ஆச்சரியமும், மகிழ்ச்சியுமா இருந்துது. அட உலகம் இவ்வளவு சுருங்கியிட்டுதா எண்டு நினைச்சன். ஆனா அப்பெல்லாம் மின்னஞ்சல் ஆங்கிலத்துலதான் எழுத வேண்டியிருந்தது. அது எனக்கு ஏதோ குறையாயிருந்துது.

பிறகு சும்மா ஒருநாள் ஒரு அரட்டைப் பெட்டியுக்கை போய், யாரோ சிலரோட அரட்டை அடிக்கேக்கைதான் yahoo mail ப் பற்றி தெரிய வந்துது. சரி, எதுக்கும் இருக்கட்டுமெண்டு அதுலயும் ஒரு கணக்கை தொடங்கி வைச்சன். அப்ப அரட்டையெல்லாம் தமிங்கிலத்திலதான் தட்டச்சு செய்யுறது. அது வேற கரச்சலா இருந்துது. பிறகு தெரிஞ்சவை, தெரியாதவையெண்டு எல்லாரோடயும் அரட்டை பிடிக்காம, தெரிஞ்ச சிலரோட மட்டும் அரட்டை அடிப்பமே எண்டு MSN ஐத் தொடங்கிற எண்ணத்தில hotmail லயும் ஒரு கணக்கைத் தொடங்கினன். பிறகு Gmail க்கு ஆர் சொல்லி வந்தன், எப்படி வந்தனெண்டு தெரியேல்லை. ஆனா, மின்னஞ்சல் பரிமாற்றத்துக்கு, இப்ப மற்ற எல்லாத்தையும் விட்டுட்டு gmailலோடயே நிக்கிறன். Gmail தான் நல்லாப் பிடிச்சிருக்கு.

தமிழ் தட்டச்சு

2004 இல எண்டு நினைக்கிறன், நிலாமுற்றம் எண்ட ஒரு Tamil forum அறிமுகம் கிடைச்சுது. பிறகு யாழ்முற்றம் அறிமுகமும் கிடைச்சுது. அங்க எல்லாம் தமிழ்ல தட்டச்சலாம் என்பதே மகிழ்ச்சியைத் தந்தது. நிலா முற்றத்தில ஏற்கனவே நண்பர்கள் கிடைச்சிருந்ததால அங்கேயே நிண்டிட்டன். நிலா முற்றத்தில நிறைய எழுதத் தொடங்கினன். அங்க பட்டிமன்றம் எல்லாம் கூட நடந்துது. அப்பல்லாம் தொடர்ந்து பாமினியிலதான் தட்டச்சினனான். ஆனா கொஞ்சம் கெதியா தட்டச்ச பழகியிருந்ததால, அங்க நிறைய எழுதிக் கொண்டிருந்தன். அங்க கிடைச்ச ஒரு சினேகிதர் றெனிதான், ”இப்ப நீங்க தமிழ்லயே hotmail ல இருந்து  மின்னஞ்சல் செய்யலாம். அதுக்கு ஈகலப்பையை தரவிறக்கம் செய்யுங்கோ” எண்டு சொல்லித் தந்தார். மின்னஞ்சலில நேரடியா எழுதுறதுக்காக, ஈகலப்பையில் எழுதத் தொடங்கியதும், பாமினியை மறக்கத் தொடங்கிட்டன். ஈகலப்பை இலகுவாக இருந்ததுபோல இருந்தது.

பிறகு ரவி NHM writer பாவிச்சுப் பாக்கச் சொல்லி சொன்னதும், சரி அதையும் முயற்சி செய்வோமே எண்டு, அதையும் தரவிறக்கி பாவிக்கத் தொடங்கியிட்டன். அதில ஈகலப்பையை விட தெரிவுகள் கூட. தவிர ஈகலப்பையால, என்னால Microsoft word ல தமிழ் எழுத முடியாமல் இருந்தது. Notepad ல எழுதக் கூடியதாக இருந்தாலும், சில எழுத்துப் பிழைகள் வந்தது.ஆனால் NHM writer ஆல எல்லா இடமும் எழுதக் கூடியதா இருக்குது. இன்னொண்டையும் குறிப்பிட வேணும். முதல் NHM writer எல்லா இடமும் சரியாத்தான் வேலை செய்தது. ஆனால், இப்ப ஏனோ Internet Explorer ல gmail chat ல தமிழ் தட்டச்சும்போது எழுத்துக்கள் பிழையாக வருகுது. திடீரெண்டு என்ன நடந்ததெண்டு தெரியேல்லை. அதால நான் இப்ப Firefox browser ஐயே பாவிக்கத் தொடங்கிட்டன்.

ரவி என்னை தமிழ்99 பழகச் சொல்லி சொல்லிக் கொண்டே இருந்தாலும், ஏனோ நான் அதுக்குப் போகேல்லை. நேரமில்லாமையும், கிடைக்கிற நேரத்தில புதுசா தமிழ் எழுத்துப் படிக்க இருந்த கள்ளம்தான் காரணம் எண்டு நினைக்கிறன். பிறகு எப்படியும் தமிழ்99 சொல்லிக் கொடுத்தே தீருவது எண்டு ரவி முயற்சி செய்தபோதுதான், என்னட்டை இருக்கிற நோர்வேஜிய keyboard ல, அந்த முறையில தட்டச்சு செய்வது கொஞ்சம் சிரமமான வேலையெண்டு தெரிஞ்சுது. தப்பினன், பிழைச்சன் எண்டு நான் மகிழ்ச்சியா இருந்திட்டன். ஆனாலும், என்னட்டை யாராவது தமிழ் எழுத்துபற்றிக் கேட்டால் தமிழ்99 ஐ பரிந்துரை செய்யுறன் :).

வலைப்பதிவு

அப்பாடா, ஒரு மாதிரி கடைசியா நான் வலைப்பதிவு எழுத வந்த கதைக்கு வந்திட்டன் :).

என்ரை முதல் வலைப் பதிவு, rediffblog ல. அதை எனக்கு அறிமுகப்படுத்தினது திரு. ”ஏன் நீங்க எழுதக் கூடாது” எண்டு அவர் கேக்க, நானும் ”அதானே, நான் ஏன் எதையாவது எழுதக் கூடாது” எண்டு நினைக்க உருவாகினதுதான் என்ரை முதல் வலைப்பதிவு. இருங்க அது இப்பவும் இருக்கா எண்டு தேடிப் பாத்திட்டு வாறன்……………………………………………………….

இருக்கு இருக்கு :). ஆனா ஏன் அங்க ரெண்டு இருக்கெண்டு தெரியேல்லை. என்ரை முதல் பதிவு 10.11.2004. நிலா முற்றத்தில எழுதுறதெல்லாம், அங்க வெட்டி ஒட்டிக்கொண்டு இருந்தன். புதுசா எதையும் எழுதேல்லை :). அப்பவே எனக்கு சிலர் பின்னூட்டம் கூடப் போட்டிருக்கினம். ஆனா சில பின்னூட்டங்கள்ல தமிழ் எழுத்து வலைப் பதிவில தெரியேல்லை. எந்த தமிழ் எழுத்து பாவிச்சினமெண்டு தெரியேல்லை. அங்க நான் 21.05.2005 தான் என்ரை கடைசி இடுகையைப் போட்டிருக்கிறன்.

அதுக்கிடையில blogger பற்றி அறிஞ்சு, அங்க மாறிட்டன். அங்க ஒண்டுக்கு ஐந்து வலைப்பதிவு வைச்சிருந்தன் எண்டால் பாருங்கோவன் :). அங்க, பல வலைப்பதிவை, ஒரே கணக்கில இருந்து கட்டுப்படுத்தலாம் எண்டதை கண்டதும், ஒவ்வொரு இடுகையையும் தரம் பிரிச்சு, வெவ்வேற வலைப் பதிவாப் போட்டுட்டன். ஏதோ எழுதிக் கிழிக்கிற திறத்திலை, எனக்கு ஒரு கூடை வலைப் பதிவுகள் :). அப்படியே rediffblog ல இருந்ததையும் இங்க வெட்டி ஒட்டிப் போட்டு, blogger ல மட்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கினன். Blogger ல இருக்கேக்கைதான், வார்ப்புருவில மாற்றங்கள் எப்படி செய்யலாம் எண்டெல்லாம் சிலரிட்டை கேட்டும், நானாவே நோண்டி நோண்டியும் கண்டு பிடிச்சன். HTML எண்டாலே என்னெண்டு தெரியாம இருந்த நான், நானா எதையாவது மாத்தி மாத்தி போட்டுப் பாத்து, அது சரி வந்தபோது, நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை :).

இந்த கால கட்டத்திலதான் மழை ஷ்ரேயா ஒருநாள் எனக்கு(ம்) வலைப்பதிவு இருக்கெண்டு தெரியாமல், ”ஏன் நீங்க ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதக் கூடாது” எண்டு கேட்டா. நான் ஏற்கனவே இருக்கெண்டு சொல்லி அவவுக்கு காட்டினன். பிறகு என்ரை குட்டித் தேவதைக்கும் ஒண்டை தொடங்கிக் கொடுக்கச் சொன்னா. நான் இழுத்தடிச்சுக் கொண்டிருந்தன். அவ, இது சரிவராதெண்டிட்டு, அவவாவே ஒரு கணக்கை ஆரம்பிச்சுட்டு அனுப்பியிருந்தா. இதுக்குப் பிறகும் சும்மா இருந்தா மரியாதையில்லையெண்டு சொல்லி, அதை மகளுக்கும் காட்டி, அறிமுகப் படுத்தி, அங்க மகள் சொல்லுறதெல்லாம் எழுதிப் போடத் தொடங்கிட்டன். சொன்னா நம்புவீங்களோ தெரியேல்லை, என்ரை குட்டித் தேவதையின்ரை இந்த குட்டித் தோட்டத்தின்ரை banner நானே செய்து போட்டதாக்கும் :).

பொன்ஸ் உம் சில தொழில்நுட்ப விடயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறாங்க.

பிறகு ரவிதான் ”அக்கா, wordpress blog தான் நல்லது, நிறைய அனுகூலங்கள்” எண்டு சொன்னார். ”ஐயோ, பிறகு என்ரை blogger ல இருந்து ஆர் அதையெல்லாம் வெட்டி ஒட்டுறது” எண்டு நான் பயப்பிட, ”பயமே வேணாம். ஒரு அழுத்து அழுத்தினா போதுங்கா, அங்க blogger ல இருக்கிறது எல்லாம், இங்க கொண்டோடி வந்து போடும்” எண்டு, பயம் தெளிய வைச்சு, wordpress வலைப் பதிவுக்கு அத்திவாரம் போட்டார். ரவி நிறைய விதத்துல உதவியிருக்கிறார். அப்படியே என் குட்டித் தேவதைக்கும் அங்கே ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சுக் கொடுத்திட்டன்.

பிறகு ரவிதான் ”ஏன் நீங்க ஒரு சொந்த வலைப்பதிவு வைச்சிருக்கக் கூடாது?” என்று ஆசை காட்டி, இந்த வலைப்பதிவை போட்டுக் கொடுத்தார். kalaiarasy.com எண்டு பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா எழுதவெல்லோ வேணும்.

தற்போதைய நிலை 😦

ஆனா என்ன ஒண்டு, நானும் சரி, என் செல்ல குட்டி மகளும்சரி எழுதுறது நல்லாவே குறைஞ்சிட்டுது. அவளுடைய சில ஒலி, ஒளிப் பதிவுகளை நான் எடுத்துப் போடுறதோட சரி. இதையெல்லாம் போட சயந்தனும் உதவி செய்திருக்கிறார். (அவள் பியானோ வாசிக்கும்போது ஒளிப்பதிவு செய்து ஒரு இடுகை, அவளுடைய வலைப்பதிவில கெதியாப் போட நினைச்சிருக்கிறன். அவளின்ரை இடுகைகளைப் பார்த்து, மலைநாடான் ஒரு தடவை அவரது ஐரோப்பிய தமிழ் வானொலிக்கு ‘இணையத்தில் இன்பத் தமிழ்’ நிகழ்ச்சிக்கு அவளைப் பேட்டி எடுத்தார். அவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியேல்லை. வலைப் பதிவெழுத வந்ததில் எனக்கு கிடைத்த மிகவும் மகிழ்ச்சி தந்த விடயங்களில் அதுவும் ஒன்று.

அட, நானும் சிலருக்கு வலைப்பதிவு என்ன, எப்படி எழுதுவது, அதில சில முன்னேற்றங்கள் எப்படி செய்வது எண்டெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறன் எண்டு சொன்னால் நம்புவீங்களா? 🙂 எனக்கு நன்றியெல்லாம் கூட சொல்லியிருக்கிறாங்க ஒரு நண்பி.

தவிர இணையத்திலும், இந்த வலைப்பதிவு எழுத வந்ததாலும் எத்தனையோ நல்ல நண்பர்கள். இணையத்தில் கிடைத்து, வெறும் இணைய நட்புடன் நிற்காமல், நிலைத்த உறவுகளாய் சிலர். முகம் தெரியாமல் உதவி செய்த சிலர். இப்படி மகிழ்ச்சியடைய நிறைய………

பதிவெழுத வந்தது மொத்தத்தில் மகிழ்ச்சிதான். 🙂

(அப்பாடா, ஒரே மூச்சில இருந்து, நேரடியா வலைப்பதிவில எழுதி முடிச்சாச்சு. எழுதுற ருசியில, இடையில save பண்ணக் கூட இல்லை. நல்ல வேளை இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டு எழுதினது அழிபடேல்லை :). )

எழுதி முடிச்சாலும், சினேகிதி சொன்ன விதிகளை விட்டுட்டுப் போகேலாமலெல்லோ இருக்கு. ம்ம்ம். இந்தளவில எல்லாரும் இந்த இடுகையை எழுதி முடிச்சிட்டினமா எண்டு தெரியேல்லை. அதால ஆரைக் கூப்பிடுறதெண்டு தெரியேல்லை. திருவிட்ட இதைச் சொல்ல, முதலே சொல்லிட்டார், தன்னை கூப்பிட வேண்டாமெண்டு. எதுக்கும் இனி யாரிட்டையும் சொல்லாம மூண்டு நாலு பேரைக் கூப்பிடுவமெண்டு பாக்கிறன்.

1. மழை ஷ்ரேயா

2. நெய்தற்கரை மலைநாடான்

3. சாரல் சயந்தன்

4. காற்றோடு சோமீதரன்

(இன்னும் எழுதேல்லையெண்டால்), தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கோ என்று கேட்டுக் கொள்கிறேன்.

நட்புடன் கலை

பி.கு: அடடே, ஒண்டை சொல்ல மறந்து போனன். இருங்கோ சினேகிதியின்ரை இடுகையில போய் வெட்டிக் கொண்டு வாறன். அப்படியே இங்க ஒட்டி விடலாம். வேறென்ன, அந்த விதி முறைகள்தான் :).

உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ 🙂

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட 🙂 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

குழந்தையின் பெயர்!

Posted On ஒக்ரோபர் 17, 2008

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped one response

ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :).  

குழந்தைக்குப் பெயர் வைத்த கதை :).

குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு.

என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் “அஞ்சலி“.

ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, “அஞ்சலிதானே?”. “ஆம்” என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை :).  

கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

குழந்தை பிறந்தபோது மற்றவர்களிடம் அறிவித்தபோது, “அஞ்சலி பிறந்திட்டாள்”, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், “என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?” என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.

மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு :).  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, “அழகான பெயர்” என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து ‘அழகான பெயர்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் “It sounds like ‘angel'” என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும்.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »