நண்பர்களின் ஒன்றுகூடல்!
கடந்த மாதம் மிகவும் நல்ல ஒரு நிகழ்வு நடந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளின் பின்னர், பழைய பல்கலைக்கழக நண்பர்களைச் சந்தித்து ஒன்றுகூடிய நிகழ்வுதான் அது.
2014 நவம்பர் மாதமளவில், நண்பர்கள் சிலரிடையே திடீரெனத் தோன்றிய ஒரு எண்ணத்தில், பல்கலைக்கழகத்தில் கூடப்படித்த தமிழ் நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஒன்றுகூடலுக்கான தயார்ப்படுத்தலைத் தொடங்கினோம். நான்கு ஆண்டுகள் ஒன்றாகவே படித்த 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்த நமது குழுவில், 22 பேர் தமிழர்கள். நாட்டு சூழ்நிலை காரணமாக, அதில் அனைவரும் குறிப்பிட்ட படிப்பைப் படித்து முடிக்கவில்லை. சிலர் வெவ்வேறு படிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்து போய் விட்டார்கள். ஒரு சிலர் தொடர்பற்றும் போய் விட்டார்கள். ஆனாலும், 19 பேரைத் தொடர்புகொள்ள முடிந்தது. வெவ்வெறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டாலும், நாம்தான் 4 ஆண்டுகள் கூடப் படிக்கவில்லையே என்ற எண்ணம் சிறிதுமின்றி, விட்டுப் போனவர்கள்கூட எம்மில் ஒருவராய் உணர்ந்து நம்முடன் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. நம் அனைவரையும் அத்தனை நெருக்கமாக வைத்திருந்தது, நமது பல்கலைக்கழக வாழ்க்கையின் ஆரம்பத்தில் மகா இலுப்பல்லம என்ற இடத்தில் ஆறு மாத காலம் தங்கியிருந்து பயிற்சிப் படிப்புப் படித்ததுதான். சிறிய குழுவாகவும், வெளி மக்களுடன் பெரிதாக தொடர்புகளற்று, பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்ததுமே காரணம் என நினைக்கின்றேன். அனைவரும் அந்த ஆறுமாதம் ஒரு குடும்பம்போல ஒன்றாகவே இருந்தோம். வெவ்வேறு பாதையில் பயணமானது அதன் பிறகுதான்.
பல உரையாடல்களைத் தொடர்ந்து, அதிகமானோர் கனடாவில் இருப்பதால், கனடாவில் ஒன்றுகூடலைச் செய்வதெனத் தீர்மானித்தோம். “பின்போடும் காரியம் கைகூடாமல் போகச் சாத்தியம் உண்டு” என்று சிலர் அபிப்பிராயம் கொண்டதால் ஏப்ரல் ஆரம்பத்தில் ஒன்றுகூடலை வைப்பதெனத் தீர்மானித்தோம். கனடாவில் காலநிலை மிகப் பெரிதாக நன்றாக இருக்காதெனத் தெரிந்தாலும், அந்தக் காலத்தையே தெரிவு செய்தோம். குறிப்பிட்ட காலம் நமது குடும்பத்தை அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமற்றுப் போனதால், வெளிநாடுகளிலிருந்து சென்ற 6 பேரால், குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியவில்லை. ஏனைய கனடாவில் இருந்தோர் அனேகமாக குடும்பத்தையும் அழைத்து வர முடிந்தது. 13 பேரும் (6 பெண்கள், 7 ஆண்கள்), சிலரது குடும்பங்களும் என 26 பேரானோம். கிழக்கிலிருந்து மேற்கு, தெற்கிலிருந்து வடக்கு என ஒன்றுக்கூடலுக்கு வந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவர், இலங்கையிலிருந்து ஒருவர், நோர்வேயிலிருந்து ஒருவர் (வேறு யார், நான்தான்), பிரித்தானியாவிலிருந்து இருவர், அமெரிக்காவிலிருந்து ஒருவர், மற்ற எல்லோரும் கனடாவில் இருப்பவர்கள்.
எமது சந்திப்பின்போது, மிக அழகான நயகரா நீர்வீழ்ச்சி அருகே ஏற்பாடு செய்யப்படும் ஒரு தங்குமிடத்தில் 3 நாட்கள் ஒன்றாகத் தங்கியிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த மூன்று நாட்கள் வருவதற்கு, 4 நாட்களுக்கு முன்னராகவே கனடா சென்று, உறவினர்கள் சிலரையும், வேறு சில நண்பர்களையும் (பல்கலைக்கு முன் + பல்கலைக்குப் பின் கிடைக்கப்பெற்ற நண்பர்கள்) சந்திக்கலாம் என முடிவெடுத்தேன். எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக, பலரையும் சந்தித்து மகிழ முடிந்தது.
எமது பல்கலைக்கழகப் பயணத்தில் இரண்டாம் ஆண்டிலேயே எம்மை விட்டுப் பிரிந்து சென்று மருத்துவப் படிப்பை முடித்து, மருத்துவராக இருக்கும் ஒருவர் வீட்டில் எமது முதல் சந்திப்பை மேற்கொண்டோம். அவர் வீட்டில் இரவுணவும் ஏற்பாடு செய்திருந்தார். நீண்ட காலத்தின் பின்னர்தான் சில முகங்களைப் பார்க்க நேர்ந்தது. சிலரால், ஒரு சிலரை அடையாளம் கண்டுபிடிக்கக் கூட முடியவில்லை. அதுவே ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கித் தந்தது.
மறுநாள் நயகரா நீர்வீழ்ச்சி நோக்கி அனைவரதும் பயணம் செய்தோம். அங்கே மூன்று நாட்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு… அனைவரும் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, அந்தப் பழைய நாட்களை மீண்டும் ஒரு தடவை வாழ்ந்து வந்தது போன்றதொரு உணர்வு. 30 வயது குறைந்து போனதாகவே உணர்ந்தோம். அங்கிருந்தபோது, நிகழ்வுக்கு வர முடியாமல் போன 4 பேருடன் ஸ்கைப்பிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு அனைவரும் பேசினோம். சமைத்துச் சாப்பிட்டு, சிரித்து மகிழ்ந்திருந்தோம்.
30 ஆண்டுகள் முன்புகூட இத்தனை மனம்விட்டுப் பேசிக்கொண்டோமா என்றே எண்ணத் தோன்றியது. மிக அருமையான ஒரு ஒன்றுகூடல். அருமையான, மறக்க முடியாத ஒரு அனுபவம்.
உவர்நீர் மீன் தொட்டி!
(March 2015 இல் எழுதி, draft இல் போட்டு வைத்த ஒரு பதிவு இது.)
வீடு புதிதாகியதில் ஏற்பட்ட மகிழ்வில், உவர்நீர் மீன் தொட்டி (Salt water aquarium) ஒன்று வாங்கி வைத்தாயிற்று. இதனை பவளப் பாறைகள் நீர்த்தொட்டி (Coral Reef aquarium) என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். முன்னர் நன்னீர் மீன் தொட்டி ஒன்று வைத்திருந்து, நாம் விடுமுறைக்குப் போய் வந்த ஒரு தருணத்தில், அனைத்து மீன்களும் இறந்த கவலையில், மீன் தொட்டி வேண்டாம் என்று விட்டு விட்டு இருந்தோம்.
அன்றொரு நாள் வீடும், அதிலுள்ள பொருட்களுக்கான கண்காட்சி ஒன்றுக்குப் போயிருந்தபோது, உவர்நீர் மீன் தொட்டியைப் பார்த்து ஆசைப்பட்டு, அதனை வாங்கலாம் என்று முடிவெடுத்துப் பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு வாங்கியாயிற்று. வாங்கும்போது கூட, அந்த மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பது இத்தனை மகிழ்வாக இருக்குமென எண்ணியிருக்கவில்லை. ஆகா, என்ன அழகு, என்ன அழகு……
இந்தத் தொட்டியானது உயிர்ப் பாறைகளுடன் (Live Rocks) பல நிறங்களில், பல் வேறு வகையான பவளங்கள் (Corals), கடற் சாமந்திகள் (Sea anemones) என்பவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதற்குள் முதலில் இறால் (shrimps) வகையைச் சேர்ந்த 3 உயிரினங்கள், 5 சிறிய நத்தைகள் (snails) , மற்றும் விண்மீன் உயிரியுடன் (star fish) நெருங்கிய தொடர்புடைய Brittle star என அழைக்கப்படும் ஒரு உயிரினம் எல்லாம் முதலில் விடப்பட்டது.
Brittle star மண்ணிற, கறுப்புப் பட்டிகளாலான உடலையும், 5 மிக நீண்ட வெளிநீட்டங்களையும் கொண்டிருக்கின்றது. அவர் அனேகமாக கற்களின் கீழாகவே இருப்பதனால், அவரை முழுமையாகப் பார்ப்பது அபூர்வம். இடை இடையே வெளிநீட்டங்களை அங்கேயும் இங்கேயுமாகக் காணலாம். அரிதாகவே வெளியே வந்து கற்களின் மேல் படுத்திருப்பார்.
நத்தைகள் சிறியவையாகவும், கூரான ஓட்டை முகத்தில் சுமப்பனவாகவும் இருந்தன. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறு பிரித்தறிய முடியவில்லையாதலால், ‘நந்து’கள் என்று பொதுவான ஒரு பெயரில் அழைத்தோம்.
இறால் வகையில் இரண்டு ஒரே மாதிரியான சிவப்பு நிற உயிரினங்கள். அவற்றுக்கு ‘Jack and Jill’ என்று பெயர் வைத்தோம். Jack உம் Jill உம் அனேகமான நேரங்களில் பாறைகளின் நடுவே ஒளிந்தபடியே இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் வெளியே வந்து போவார்கள். மூன்றாவது இறால் சிவப்பு வெள்ளை பட்டிகளைக் கொண்ட உடலையும், கால்களையும், மிகவும் நீண்ட உணர் கொம்புகளையும் கொண்டிருப்பதுடன், வெளிச்சம் போன பின்னர் மிகவும் உற்சாகத்துடன், சுறுசுறுப்பாக அங்குமிங்குமாக உலாவித் திரிபவராகவும் இருந்தார். அவர் உணவை எடுத்து உண்பதே பார்க்க அழகாக இருக்கும்.
பவளங்கள், கடற் சாமந்திகளும் மிகவும் அழகாக இருக்கின்றன. அவை வெளிச்சம் இருக்கையில் ஒரு தோற்றத்திலும், வெளிச்சம் போனதும் வேறொரு தோற்றத்துக்கு மாறுவனவாகவும் உள்ளன. சில சடுதியான மாற்றங்களுக்கு, சில தொடுகைகளுக்கு, தமது உணர் கொம்புகளை குழாய்ப் பகுதிக்குள் சடுதியாக உள்ளே இழுப்பதும், சில நேரங்களில் மெதுவாக உள்ளே இழுப்பதும், வெளியே வருவதும், சுருங்கிக் கொள்வதும், விரிந்து வருவதும் என்று பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது.
ஒரு கிழமையின் பின்னர் பாசிகளை உணவாகக் கொண்டு மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருக்க உதவும் குட்டி நண்டு (crab) ஒன்றும், குட்டி மீன் ஒன்றும் விடப்பட்டது. நண்டுக்கு ‘முத்து’ என்றும், குட்டி மீனுக்கு ‘ராமு’ என்றும் பெயரிடப்பட்டது. நண்டு மிகவும் சுறுசுறுப்பாக தானும் உணவை உண்டு, தொட்டியையும் சுத்தம் செய்து கொண்டு திரிகின்றார்.
…………………………………………
May 2015 இல் தொடர்ந்து எழுதுவது….
அதன் பின்னர் Clown fish இரண்டு வாங்கி விட்டோம். அவைக்கு ‘பாலு’, ‘மணி’ என்ற பெயர்கள் இடப்பட்டன. எம்மிடமிருந்த இரு முயல்களின் நினைவாக இந்தப் பெயர் :). பின்னர் இன்னுமொரு நண்டு வாங்கி, அதற்கு ‘சுப்பு’ என்று பெயர் வைத்தோம். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக இரு மீன்கள் வாங்கி விட்டிருக்கின்றோம். அழகான நீலம், மஞ்சள் கலந்த மீனுக்குப் பெயர் ‘கீது’, வெள்ளை கலந்த மஞ்சள் நிறமும், ஒரு கறுப்புப் புள்ளியும் (beauty dot) கொண்டமீனுக்கு ‘மீனு’.
நத்தைகள் ஒவ்வொன்றாய்க் காணாமல் போயின. என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. அதேபோல் சிறிய இரு இறால்களும் காணாமல் போயின. மீண்டும் இரு நத்தைகள் கொண்டு வந்து விட்டோம். அப்போதுதான் தெரிந்தது, அவற்றையெல்லாம் கபளீகரம் செய்தது நண்டுகளில் ஒன்றுதான் என்று. அவர் பருமனில் கூடிச் செல்லும்போது, தனக்குப் புது ஓடு தேடி இந்த வேலையைச் செய்கின்றாராம். எனவே அவருக்கு ஒரு பெரிய ஓடு கொண்டு வந்து போட்டோம். மிக இலகுவாக ஒரு ஓட்டிலிருந்து வெளிவந்து, அடுத்த ஓட்டிற்குள் தன்னை நுழைத்துக் கொள்வார்.
புதிய கடற்சாமந்திகள் தோன்றும். சில அழிந்துபோகும். இப்படியே ஏதாவது மாற்றங்களுடன், எமது மீன்தொட்டிச் சூழல் போய்க் கொண்டிருக்கின்றது.
புத்தம் புதிதாகிய வீடு!
இந்த ஆண்டு எமது வீட்டைக் கொஞ்சம் திருத்தலாம் என்று எண்ணி வேலையைத் தொடங்கினோம். அது கொஞ்சம் அதிகமாகி, வீடே மாறிப் புதிதாகிய தோற்றத்தைத் தருகின்றது இப்போது.
பொதுவாகவே வீட்டிற்குள், இங்கிருப்பதை எடுத்து அங்கே வைப்பதும், பொருட்களை இடம் மாற்றி இடம் வைப்பதுமாக அமைப்பை மாற்றுவது வழமைதான் எனினும், இப்போது ஒரே நேரத்தில் பல மாற்றங்கள்.
சமையலறையை முழுமையாகப் புதிப்பிப்பதுதான் நோக்கமெனினும், அது அப்படியே ஏனைய அறைகளுக்குமாகப் பரவி, அப்படியே வெளியேயும் கொஞ்சம் போய் வீட்டுக்குப் புதுப் பொலிவைத் தந்திருக்கின்றது.
உருவாக்கப்படும் உறவுகள்!
கடந்த மாதத்தில் ஒருநாள், எதிர்பார்த்தேயிராத ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. மின்னஞ்சலின் சாரம் இதுதான் “நானும், மகனும் லண்டன் வருகின்றோம். அப்போது நோர்வேக்கும் உங்களிடம் வரலாம் என நினைக்கின்றேன். இந்தக் குறிப்பிட்ட காலம் உங்களுக்கு வசதி வருமா?”. குறிப்பிட்ட காலம் நம் வீட்டில் அனைவரும் விடுமுறையில் நின்றோம் என்றபடியால் உடனடியாகவே, நமக்கும் வசதிதான் நீங்கள் வரலாம் என பதிலிட்டேன்.
இதிலென்ன ஆச்சரியம்? இந்த மடல் வந்தது எனது அண்ணாவிடமிருந்து. அதாவது… உடன்பிறவாத, உறவாகவும் பிறந்திராத, ஆனால் எனது பல்கலைக்கழக வாழ்க்கையின்போது உருவான உறவான அண்ணாவிடமிருந்து. நமது பிறப்பால் ஏற்படும் உறவுகளும் உண்டு. அவ்வாறின்றி, நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் உறவுகளும் உண்டு. நண்பர்கள், நண்பிகள் தவிர, சிலருடன் சகோதரர்கள் போன்ற உணர்வும், அப்படியான ஒரு பாசமும் ஏற்பட்டு விடுகின்றது. அப்படிப்பட்ட உறவுதான் இந்த அண்ணா.
நான் பல்கலைக்கழகம் செல்ல முன்னர், எனது தோழிகள் பலருக்கும் அண்ணாக்கள் அதிகம். அவர்கள் எப்போது பார்த்தாலும் அண்ணா – புராணம் பாடிப் பாடியே எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். நான் “எனக்கும் ஒரு அண்ணா வேண்டும்” என்று கூறினால், “தம்பிக்கு ஆசைப்பட்டாலும் பரவாயில்லை. கிடைக்க வாய்ப்புண்டு. அது எப்படி அண்ணா கிடைக்கும்?” என்று மற்றவர்கள் கேட்பார்கள். அப்போதெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கவலையுடன் இருப்பேன். பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் போனபோது, இந்த வார்த்தை பொய்யாகி, எனக்கு அண்ணா கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த அண்ணாவுக்கு உடன் பிறந்த ஒரு தங்கையும் உண்டெனினும், என்னையும் சேர்த்து இரு தங்கைகள் என்று அனைவருக்கும் கூறியிருக்கின்றார்.
அதுசரி, அப்படிப்பட்ட அண்ணா வந்ததில், அப்படியென்ன ஆச்சரியம்? ஆம் ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சிதான். என்னென்னவோ காரணங்களால், தொடர்பு முற்றாக இல்லாமல் இருந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது மீண்டும் பார்ப்பதென்றால் மகிழ்ச்சிதானே?
அண்ணாவும், அவரது மகனும் வந்து இரண்டே இரண்டு நாட்கள்தான் எம்முடன் தங்கியிருந்தார்கள் என்றாலும், அதுவே உடன் பிறந்த அண்ணா வந்து எம்முடன் தங்கிச் சென்றது போன்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.
கைத்தொலைபேசியும் தமிழும் – புதியது!
2010 ஆம் ஆண்டில் htc Hero mobile வைத்திருந்தேன். அதில் தமிழ் எழுத, வாசிக்க சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி இருந்தது. அதற்குப் பின்னர் Samsung galaxy S3 கைத்தொலைபேசி ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதில் தமிழ் வாசிப்பதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், எழுதுவதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது iPhone வைத்திருந்தவர்களுக்கு, iOS7 upgraded ஆகியதும், கைத் தொலைபேசியிலேயே தமிழ் விசைப்பலகை வந்ததும், அட என்னுடைய பேசியில் இப்படி இல்லையே என்று கொஞ்சம் பொறாமையாக இருந்தது :).
சில மாதங்கள் முன்னர் Samsung galaxy S5 கிடைத்தது. அதுவும் பரிசாகத்தான் கிடைத்தது :). அதில் தமிழை எழுத சில செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். அதிலும் சில பிரச்சனைகள் வந்தது. ஓரிரு நாட்கள் முன்னர் சும்மா கைத்தொலைபேசியை கொஞ்சம் நோண்டிப் பார்த்தபோதுதான் அவதானித்தேன். தமிழ் மொழிக்கான விசைப் பலகையும் அதிலேயே உள்ளது. அந்த விசைப் பலகையில் எழுதுவதும் மிகவும் சுலபமாக உள்ளது. மகிழ்ச்சி 🙂
தமிழின் பெருமை!
அண்மையில் ஒருநாள் நமது வேலைத்தளத்தில் ஒருவர் இரு ஆபிரிக்க வைத்தியர்களை நமது ஆய்வுகூடத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் இங்கு சிலநாட்கள் தங்கியிருந்து, இந்த வைத்தியசாலையில் உள்ள வெவ்வேறு ஆய்வுகூடங்களையும், தொழில்நுட்பங்களையும் அறிய விரும்புகின்றார்கள் என்று கூறினார். அதனால், நாங்கள் குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, அவர்களை தொலைபேசியில் அழைத்தால், அவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறினார். அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்திலேயே போய்க் கொண்டிருந்தது.
சரியென்று கூறிவிட்டு, நான் அவர்களது தொலைபேசி எண்களை வாங்கி குனிந்து குறித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குரல், “தமிழ் தெரியுமா” என்று தமிழிலேயே கேட்டது. நிறைய தமிழர்கள் இந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்றார்கள்தான் என்றாலும், இந்த ஆய்வுகூடத்திற்கு தமிழர்கள் எவரும் வந்ததில்லையே என்றெண்ணிக் கொண்டே நிமிர்ந்தேன். மீண்டும் அதே கேள்வியை அந்த ஆபிரிக்கர்களுள் ஒருவர் கேட்டார். அதிர்ச்சியும், மகிழ்ச்சியுமாக இருந்தது. அவருக்கு அந்தக் கேள்வி மட்டும்தான் தமிழில் தெரியுமா அல்லது மேலதிகமாகத் தெரியுமா என்று அறிய, நானும் தமிழிலேயே “நல்லாவே தமிழ் பேசத் தெரியுமே” என்றேன். தொடர்ந்து அவர், “உங்க பெயரென்ன?” என்றார். நானும் பெயரைச் சொன்னேன். மற்ற வைத்தியரும், அழைத்து வந்தவரும் எதுவும் புரியாமல் திரு திருவென விழித்துக் கொண்டு நின்றார்கள். எனவே தொடர்ந்த உரையாடல் ஆங்கிலத்திற்குத் தாவியது.
அவர் இங்கு வர முன்னர் வேலூரில் 2 மாதங்கள் இருந்து விட்டு வந்ததாகவும், அதனால் தமிழ் கொஞ்சம் பேசப் பழகிக் கொண்டதாகவும் கூறினார். அத்துடன், உங்கள் மொழி 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாமே என்று சொன்னார். அப்போது மற்றவர், “அப்படியா, ஆச்சரியம்தான். இத்தனை ஆண்டுகளாக இந்த மொழி வளமுடன், உயிருடன் இருப்பது” என்றார். நம் மொழியை ஒன்னொருவர் புகழ்ந்து சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிலநேரம் உரையாடிவிட்டுப் போனபோது, மறக்காமல் தமிழிலேயே “போய்ட்டு வரேன்” என்று கூறிச் சென்றார்.
இலையுதிர்க் காலத்தின் ஒரு நாள்!
இலைகளை உதிர்த்துவிடும் அவசரத்தில்,
பாதையோர மரங்கள் காற்றைத் துணைக்கு அழைக்க,
வீசிப் பறந்து வந்த காற்று சுழற்றியடித்ததில்,
மரங்கள் இலைகளை உதறிவிட்டு,
வெறுமையாகிக் கொண்டிருந்தன.
அழுக்கடைந்து போனோமே என்ற துயரத்தில்,
பாதைகள் மழையை அழைக்க,
உடன் சீறி வந்த மழையும்,
பாதைகளைக் கழுவிச் சென்றது.
நீண்ட நாட்களின் பின்னர்!
ஏப்ரல் 6, 2013
Filed under கிறுக்கல்கள், சமூகம், நோர்வே, ரசித்தவை
குறிச்சொற்கள்: பயணங்கள், மகாதேவா சிறுவர் இல்லம், மனிதாபிமானம், வாழ்க்கை
நீண்ட நாட்களின் பின்னர்
இன்று சனிக்கிழமை. ஆனால் வேலை செய்யவென்று வேலைக்கான இடத்திற்கு வந்தேன். மகளுக்கு இன்று சங்கீதம் சோதனை. அவளைக் கூட்டிக்கொண்டு போய் சோதனைக்கான இடத்தில் விட்டுவிட்டு, கொஞ்சம் வேலை செய்யலாமே என்று வேலைத்தளம் வந்தேன். கடந்த வருடம் புதிதாக ஒரு project இல் வேலை செய்ய ஆரம்பித்தது முதல், நினைக்கிற நாளில் வேலை செய்து நினைக்கின்ற நாளில் விடுமுறை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. அதனால், சனியோ, ஞாயிறோ எனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்துவிட்டு, பாடசாலை விடுமுறையை ஒட்டி, எனக்குத் தேவையான நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் பல இடங்களுக்கும் பயணம் செய்ய முடிகின்றது. அதுசரி, வேலை செய்யவென்று வந்துவிட்டு, இங்கே வலைப்பதிவில் என்ன வேலை? 🙂 சும்மாதான். நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவு, வெறும் வெளி இணைப்புக்கள் கொடுக்கும் இடமாகவே உள்ளதே. இப்படியே விட்டால், எனது வலைப்பதிவு என்னுடையதுதானா என்ற சந்தேகம் எனக்கே வந்து விடுமோ என்றுதான், இன்று எதையாவது இங்கே எழுதலாமே என்று ஒரு எண்ணம் வேலைத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வந்தது. அதனால்தான் இந்தப் பதிவு.
கைத்தொலைபேசியில் ரேடியோ
வேலைத்தளம் மிகவும் அமைதியாக இருக்கின்றது. என்னைப்போல் வாரவிடுமுறையில் ஆய்வகத்தில் வேலை செய்ய (அல்லது செய்யும் எண்ணத்துடன் வந்த, ஹி ஹி) வந்திருக்கும் ஓரிருவரைத் தவிர, அமைதியாகவே இருக்கின்றது. அதனால், தமிழ் ரேடியோவைப் போட்டுக் கேட்டுக்கொண்டே, எனது வேலையை (அதாவது வலைப்பதிவில் இடுகை இடும் வேலையை) தொடர்கின்றேன். எனது கைத்தொலைபேசியில் பல இணைய ரேடியோ நிகழ்ச்சிகளும் எடுத்து விட்டிருக்கின்றேன். எனவே கைத்தொலைபேசிக்கு இணைய இணைப்பைக் கொடுத்துவிட்டு ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். சரி இன்றைக்கு ATBC கேட்கலாம் என்று போட்டேன். ஆனால் அது இன்றைக்கு வரவில்லை. எனவே CTBC போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
மகாதேவா ஆச்சிரம் சிறுவர் இல்லம்
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்குப் போய் குடும்ப உறவுகளைப் பார்த்து வருவதுடன், உதவி தேவைப்படுபவர்களுக்கு, எம்மாலான உதவிகளைச் செய்து வருவோம். அப்படி கடந்த ஆண்டில் சென்றபோது நாம் சென்ற இடம் மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லம். தயவுசெய்து இந்த இணைப்புக்குச் சென்று, அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையைப் பார்த்துவிட்டு, முடிந்த அளவில் அவர்களுக்கு உதவுமாறு இந்த இடுகையைப் பார்க்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். ஒவ்வொருவரும் நேரடியாகவே அவர்களைத் தொடர்பு கொண்டு உதவ முடியும். கடந்த ஆண்டில் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது (நாம் கடந்த ஆண்டில் அவர்களிடம் சென்று வந்ததால் அவர்களிடம் எமது வீட்டு விலாசம் இருந்தது). அதில் அரசாங்கம் தங்களுக்கு மின்சார வசதியை இலவசமாகத் தருவதாகச் சொல்லியிருந்ததாகவும், ஆனால் தற்போது இல்லையென்று விட்டார்கள் என்றும், அதனால் தாங்கள் சூரியவலுவைப் பெற்று, மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு உதவி தேவையென்றும் எழுதியிருந்தார்கள். அதற்கு எம்மாலான உதவியைச் செய்வதுடன், நண்பர்களிடமும் கூறுமாறு கேட்டிருந்தார்கள். நான் எனதுமின்னஞ்சல் தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் இது தொடர்பாய் மடலிட்டிருந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து இதனை அறிவியுங்கள். எவரை நம்பி உதவுவது என்ற பிரச்சனை இன்றி, ஒவ்வொருவரும் தாங்களாகவே அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவலாம். அவர்களது இணையப் பக்கத்தில் தேவையான அனைத்து தொடர்புக்கான தகவல்களும் உள்ளன. தமிழ்விக்கிப்பீடியாவிலும் மகாதேவா சிறுவர் இல்லம் என்று ஒரு கட்டுரை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருக்கின்றேன். யாராவது இதனை வாசிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களும் இதனைத் தொடங்கலாம்.
பயணங்கள் முடிவதில்லை
நோய் நிர்ணயத்துக்கான வழமையான சோதனை வேலையில் (Routine work of Diagnostic testing) இருந்து புதிதாக புற்றுநோய் தொடர்பான ஒரு Project இல் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து வேறு வேலைகளுக்கான நேரம் குறைந்து போனது. முக்கியமாக நான் மிகவும் விரும்பிச் செய்துவந்த தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பு குறைந்து போனது :(. விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், குடும்பத்துடன் எங்காவது வெளிநாட்டுப் பயணங்கள் செய்கின்றோம். அதனால் வீட்டில் இருக்கும்போது கணினியில் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படாமல் போய்விடுகின்றது. இந்தப் பயணங்கள் பற்றி, அங்கே பார்த்த அழகான இடங்கள்பற்றி, சந்தித்த adventurous experiences, பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றியெல்லாம் பல தனிப்பதிவுகள் போட வேண்டும். ஒவ்வொருமுறை பயணம் முடிந்து வரும்போதும், அவைபற்றி எழுதி, படங்கள் இணைக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் பொறுமையாக இருந்து அதனைச் செய்ய நேரம் கிடைப்பதில்லை. கடந்துபோன இரு ஆண்டுகளில்தான் எத்தனை பயணங்கள். அவற்றில் சில உறவுகளின் சுக துக்கங்களில் பங்கேற்பதற்கான பயணங்கள். ஏனையவை குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளையும் பார்த்து வருவதற்கான பயணங்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்.
இசையும் நினைவுத்திறனும்
காரில் போகும்போது கேட்பதற்காக பாடல்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். போன ஆண்டு வாங்கிய புதிய காரில் USB யில் பாடல்கள் போடும் வசதி இருந்ததால், எல்லாப் பாடல்களையும் ஒரே இடத்தில் சேர்க்கலாமே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். கடந்த கிழமை Easter holiday க்கு ஜேர்மனியில் இருக்கும் சகோதரி வீட்டிற்குப் போயிருந்தோம். அங்கே குளிராக இருந்ததனால், அதிகமாக எங்கும் வெளியே செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து, கதைத்து, சிரித்து, சமைத்துச் சாப்பிட்டு, சேர்ந்திருந்து படங்கள் பார்த்து, விளையாடி பொழுதைக் கழித்தோம். அத்துடன் எனது பாடல் சேகரிக்கும் வேலையையும் பார்த்தேன். USB யில் 800 பாடல்களுக்கும் மேல் சேர்த்து விட்டேன். இது ஒரு கதம்பம். எல்லா வகையான பாடல்களும் இருக்கின்றன.தமிழ்ப் பாடல்களில் மிகப் பழையவை, இடைக்காலப் பாடல்கள், புதியவை எல்லாம் அடங்கும். மேலும் இவற்றில் மிகப் பிடித்த சில ஆங்கில, மலையாள, தெலுங்கு, இந்திப் பாடல்களும் அடக்கம். ஆங்கில கார்ட்டூன் படங்களில் வரும் சில நல்ல பாடல்களும் கூட சேர்த்துள்ளேன். காரில் குடும்பமாகப் போகும்போது, எல்லோரின் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக இந்த கதம்பமாலை செய்தேன். இல்லாவிட்டால், ‘எனக்கு புதுப்பாட்டைப் போடுங்கோ, இல்லையில்லை எனக்கு பழைய பாட்டைப் போடுங்கோ, இல்லை ஆங்கிலப் பாட்டைப் போடுங்கோ’ என்று ஒவ்வொருவரும் கேட்கின்றார்கள். இப்போ அப்படி யாராவது கேட்டால், ‘பொறுத்துக் கொள்ளுங்கோ! அடுத்து அதுவும் வரும்’ என்று சொல்லி விடுகின்றேன். எப்படி இருக்கு இந்த ஐடியா? 🙂 எனக்கு பாடல்கள் சேகரித்து முடித்துவிட்டு எண்ணிக்கை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இந்த 800 இல் அடங்கியவற்றை விட இன்னும் எத்தனையோ பாடல்கள் எனக்குத் தெரியும். இத்தனை பாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா என்ன என்பதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம். எனது நினைவுத் திறனை நானே மெச்சிக் கொண்ட நேரமிது :).
சுருங்கிய உலகம்
அண்மையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு விடயம் “உலகம் எத்தனை சுருங்கி விட்டது” என்பதுதான். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிடமும் உடனடியாக தொடர்பு கொள்ள முடிகின்றது. ஊரில் எங்கள் சின்ன கிராமத்தில் கூட இணைய வசதி வந்து விட்டதால், அப்பா, அம்மாவுடன் skype இல் பார்த்துப் பேசும் வசதி. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் குறைந்து விட்டதால், நினைத்தவுடன் எவருடனும் (அதிகம் யோசிக்காமல்) பேச முடிகின்றது. தவிர கைத்தொலைபேசியில் WhatsApp, Viber, Tango, Skype, Snapchat என்று வெவ்வேறு இலவச தொடர்பாடல் வசதிகள். Latest ஆ நான் தொடர்பாடலுக்குப் பயன்படுத்துவது Snapchat. எதுவும் எழுதாமலே, ஒரு படம் மூலமே விசயத்தை இன்னொருவருக்குச் சொல்லிவிட முடிகின்றது. தட்டச்சு செய்யும் வேலை மிச்சம் :). இப்போவெல்லாம் கைத்தொலைபேசியிலேயே எத்தனை விடயங்கள் முடிந்து விடுகின்றது. ஒலி, ஒளித் தொடர்பாடல்கள், இணையப் பார்வை, விளையாட்டு (நான் விரும்பி விளையாடுவது Wordfeud, Chess, Draw free, Unblock me), facebook, twitter, messenger, bank வேலைகள், Notes and reminders, alarm etc etc. அது மட்டுமா, தொழில்நுட்ப வளர்ச்சியினால், எங்கிருந்தாலும், நினைத்தவுடன் கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். முன்பெல்லாம் “வீட்டுக்குப் போய் போன் செய்ய வேண்டும்” என்று நினைப்போம். இப்போ அப்படியா என்ன? வேலையில் இருக்கின்றீர்களா? No problem. கார் ஓட்டிச் சென்று கொண்டிருக்கின்றீர்களா? No problem. காரில் போகும்போது, கைத்தொலைபேசியைத் தொடக்கூடத் தேவையில்லை. இருக்கவே இருக்கு Blue tooth and mike வசதி. வெளியே எங்காவது நின்றாலோ, வேலைத் தளத்தில் இருக்கும்போதோ கூட இலவச Wi-Fi பல இடங்களில். இலவச தொடர்பாடல் வசதிகள் கைத்தொலை பேசிகளில்.
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் 🙂
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். முன்பொரு தடவை நான் எழுதிய எனது ஆசிரியர் என்ற இந்தப் பதிவில் குறிப்பிட்ட எனது ஆசிரியரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவரின் சொந்த இடம் மானிப்பாய் என்று எனது நினைவில் இருந்தது. அதனை அம்மாவிடம் சொல்லியிருந்தேன். அம்மாதான் மானிப்பாயில் தொடர்புள்ளவர்கள் மூலம் விசாரித்து, அவரது தொலைபேசி எண்ணை எடுத்துத் தந்தார். அதன்பின்னர் தொடர்புகொண்டு அவருடன் கதைத்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றபோது நேரில் சந்திக்க முடிந்தது. அதே பழைய அன்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வேலையில் ஓய்வெடுத்த பின்னர், பல சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றார். எனது வகுப்பில் என்னுடன் படித்த ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கேட்டார். சிலருடன் தொடர்பிலும் இருக்கின்றார். அவர் கேட்கும்போதுதான் எனக்கே சிலருடைய பெயர் நினைவுக்கு வந்தது. இப்படி பெயர்கள் கூட மறந்து விட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. அவருடைய நினைவுத் திறனையும், மாணவர்கள்மேல் அவர் தற்போதும் வைத்திருக்கும் அதே அன்பையும் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும், சரியான ஒருவரைத்தான் தேடிச் சந்தித்திருக்கின்றோம் என்று மகிழ்வாகவும் இருந்தது.
ஆசிரியரைக் கண்டு பிடித்ததுபற்றி சொல்கையில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகின்றது. மிக அண்மையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகத் தொடர்பு விட்டுப் போயிருந்த ஒரு நெருங்கிய சினேகிதியையும் கண்டு பிடித்திருக்கின்றேன். அவளிருப்பது அமெரிக்காவில். ஏதோ ஒரு கட்டத்தில் நாமும் வீடு மாற, அதே நேரத்தில் அவர்களும் வீடு மாற, தொடர்பு தொலைந்து போனது. இலங்கை சென்ற அவளது கணவர் தற்செயலாக அங்கே எனது சகோதரியைச் சந்தித்ததால் மீண்டும் தொடர்பு துளிர் விட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எனது உயிர்ப்பு
இன்று இங்கே வரும்போது, எனது இந்த உயிர்ப்பு பக்கம் Google search இல் எங்கே இருக்கின்றது என்று பார்த்தேன். அடடா 8 ஆவதாக வருகின்றதே. இது எனக்கு மட்டும்தான் வருகின்றதா, அல்லது எல்லோருக்கும் வருமா? 🙂
சரி சரி, இனி கொஞ்சம் எனது வேலையைப் பார்த்து விட்டு மகளைக் கூட்டிச் செல்ல போக வேண்டும். வணக்கம்.
மகளின் பிறந்தநாள் வாழ்த்து!
என் செல்லக்குட்டியிடம் இருந்து எனக்கு இன்று கிடைத்த பிறந்தநாள் வாழ்த்து.
Youtube link அனுப்பினாள். அது இங்கே>
இயக்குநர் சேரனுடன்!
ஒஸ்லோவில் நடந்த தமிழ்த் திரைப்பட விழாவுக்கு வந்த இயக்குநர் சேரன் குடும்பத்தினர் நம்ம மழை நகரம் பேர்கனையும் பார்க்க வந்தார்கள். தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன் எங்களுடன் தங்கியதில் மகிழ்ச்சி. என்ன ஆச்சரியம், அவர்கள் வந்து நின்ற இரு நாட்களும் பேர்கனில் மழையே இல்லை :). அதனால் அவர்களையும் கூட்டிக் கொண்டு பேர்கன் சுற்றிப் பார்க்க முடிந்தது. இயக்குநருக்கு guide ஆக இருந்ததில் மகளுக்கும் மகிழ்ச்சி :).
சேரன் அவர்கள் மிகவும் எளிமையானவராக இருந்தார். அவரை படங்களில் பார்த்திருந்தாலும், நேரில் அவரில் ஒரு நல்ல அப்பாவைப் பார்க்க முடிந்தது.
நிறைய படங்கள் எடுத்திருக்கலாம். வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததனால் படங்களை எடுக்கத் தவறி விட்டேன். சில படங்கள் கீழே Slide show வாக உள்ளது. இவற்றில் நான் எடுத்தது மட்டுமில்லாமல் இயக்குநர் சேரன் எடுத்த படங்களும் உள்ளது. இயக்குநர் பேர்கனின் இயற்கை அழகை மிகவும் இரசித்தார்.