என் குட்டி சினேகிதி!
என் பிரியமான குட்டி சினேகிதி!
நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.
இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது. 🙂
ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது. 🙂
🙂 எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
மதம் பிடிக்காதவர்கள்!
மதம் பிடிக்காதவர்கள்!
மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். ‘ஆரம்ப வருட திட்டம்’ (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, ‘உலக வெப்பமயமாதல்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.
இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.
முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன். 🙂
அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, ‘உலகிலுள்ள மதங்கள்’. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் அன்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.
மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது.மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது. 🙂
புரியாத கதை!
காலைநேரம். மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வெளியே வந்தேன். வெளியே மழை. குடையை விரித்தபோது, என்னை அறியாமல் சிறு வயதில் மனப் பாடம் செய்த பாட்டு வாயில் வந்தது. அதை உரத்துச் சொன்னேன்.
குடை பிடித்து செருப்புமிட்டு
புத்தகமும் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்
(சிறுது இடைவெளி விட்டேன். மகள் சொன்னாள் “”நல்ல பாட்டம்மா, படியுங்கோ”)
மழைக்காலம் மிக வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்
(“ஏனம்மா splash splash அடிச்சுக் கொண்டு வந்தால்தானே நல்லாயிருக்கும்?” இது மகள். “இங்க நீங்க shoe போடுறதால splash splash அடிக்கலாம். ஆனா slippers அல்லது வெறும் காலோட அங்க நாங்க விளையாடினால் காலில புண் வரும்” இது நான். “ஓஓஓஓஓஓஒ” பெரீய ஒரு ஓ போட்டாள் மகள்.)
வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாட வேண்டாம்
(“ஏனம்மா விளையாடக்கூடாது?” இது மகள். “கல்லெறிஞ்சு விளையாடினால், உடுப்பெல்லாம் சேறாகி விடும். மிச்ச பாட்டை கேளுங்கோ” இது நான்.)
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்
(கடைசி பந்தி நினைவுக்கு வர கொஞ்சம் அடம் பிடித்தது. பிறகு ஒரு மாதிரி, அதையும் தேடிப் பிடித்து பாடினேன்.)
கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணுறக்கம் இல்லாமல்
கதறி அழ நேரும்
“அது என்னம்மா நீச்சிரங்கு?” என்று மகள் கேட்க, அதுக்கு விளக்கம் கொடுத்தேன். பிறகு “பாத்தீங்களா? அம்மாக்கு சின்ன வயசுல பாடமாக்கினது இன்னும் நினைவிருக்கு” என்று நானே பெருமைப் பட்டுக் கொண்டேன். “வேறு என்னெல்லாம் நினைவிருக்கு?”
“நிறைய எல்லாம் நினைவிருக்கு”.
“அதுதான் என்ன நினைவிருக்கு?” மகளுக்கு அம்மாக்கு உண்மையா நினைவிருக்கா என்ற சந்தேகம் தீரவில்லை. 🙂
“ம்ம்ம்,, அம்மா சின்ன வயசுல நடிச்ச நாடகம் ஒண்டு நினைவிருக்கு”.
“அது என்ன? சொல்லுங்கோ, பாப்பம்”, அட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.
“அது தமிழ் இலக்கணத்தோட வரும். நான் சொன்னாலும், உங்களுக்கு விளங்காது”.
“நீங்க சொல்லுங்கோ”.
இவள் இன்றைக்கு விடமாட்டாள் என்று புரிந்தது. “சரி சொல்லுறன் கேளுங்கோ. அது கண்ணகி நாடகம். அதுல நான் king. ஆனால் எனக்கு மற்றவை பேசின வசனங்களும் பாடம். அதையும் சேர்த்து சொல்லுறன், சரியா?”
“ஓம்”.
“ஓகே”
மன்னன்:”அரண்மனைக் காவலர்களை மீறி ஆவேசக் கோலத்தில் உள்ளே நுழையும் நீ யார்?”
கண்ணகி:”நானா? புறாவுக்கு உடல் தந்து புகழ்பெற்ற மன்னவனின் வரலாற்றை, தேர்க்காலில் மகனையிட்டு நீதி காத்த மனுநீதிச் சோழனது பெருங்கதையை, நீதியின் இலக்கணமாய் உரைக்கும் திருமாவளவன் கரிகாற்சோழனது (அம்மா, அம்மா, இடையில் மகளின் குறுக்கீடு, ஆனால் நான் நிறுத்தவில்லை :)) பூம்புகாரே எனது ஊர். பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள். என் பெயர் கண்ணகி”. சொல்லி விட்டு நான் ஒரு சின்ன இடைவெளி விட்டதும், மகள் இடையில் புகுந்தாள்.
“அம்மா, போதும் நிப்பாட்டுங்கோ. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை”.
“நான் முதலே சொன்னேன்தானே விளங்காதேண்டு”.
கண்ணகி, யாருடைய மகள் என்று சொல்லாமல், யாருடைய மருமகள் என்று சொன்னதன் காரணமென்ன என்று எனக்குள் ஒரு கேள்வி ஓடியது. நாடகம் நடித்த வயதில் தோன்றாத கேள்வி இது.
“அந்த நாடகத்தை எனக்கு விளங்குற மாதிரி சொல்லுறீங்களா?” என்று மகள் கேட்டாள். சரியென்று, கண்ணகியும், கோவலனும் பாண்டிய நாட்டுக்கு ஒரு கஷ்டத்தால் வந்தார்கள் என்று தொடங்கி (முன்கதை சொல்லவில்லை, அதில் எனக்கே பல கேள்விகள் உள்ளது என்பதாலும், நாடகம் இந்த இடத்தில் இருந்தே ஆரம்பித்தது என்பதாலும்), கண்ணகி ஊரை எரித்தது வரை சொன்னேன்.
“அது எப்படி எரிச்சாங்க? ஏன் எல்லாரையும் எரிச்சாங்க?” சோகமாகக் கேட்டாள் மகள். எனக்குள் இன்னமும் இருக்கும் கேள்விகள்தான் அவை. அதற்குள் நான் போக வேண்டிய bus வந்துவிட்டதால், அத்துடன் நிறுத்தி விட்டு புறப்பட்டு விட்டேன்.
மாட்டிக்கிட்டேன்!!
அன்னைக்கு insects பத்தி என்னமோ TV ல போச்சுது. அதுல தேனீ பத்தி போனது. அப்போ நான் என் 8 வயது மகளுக்கு விளக்கம் கொடுத்துக் கிட்டே வந்தேன். தேனீ தேன் இருக்கிற இடத்தை மத்த தேனீக்களுக்கு எப்படி சொல்லும், தேனீ சமூகத்துல பெண் தேனீக்கள் தான் வேலையாட்கள், அதுல ஒரு பெண் தேனீ மட்டும் அரசியா இருக்கும். ஆண் தேனீக்களோட வேலை just mating தான், அவங்க வேறு ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க ன்னு சொன்னேன். மாட்டிக்கிட்டேன், நல்லா மாட்டிக்கிட்டேன். அவ உடனே கேட்டா, mating? அப்படின்னா என்ன? நான் அதுக்கு எப்படி பதில் சொல்லுறதுன்னு நல்லா முழிச்சேன். அப்புறம், babies வாறதுக்கு அவங்க செய்யுறதுதான் mating னு சொன்னேன். நல்ல வேளையா அவ வேறு எதிலோ ரொம்ப busy யா இருந்ததுனாலே, அதுக்கு மேலே கேள்வி கேக்காம போய்ட்டா. தப்பினேன், பிழைச்சேன்.
இது நானாப் போய் மாட்டிக்கிட்டது. அவளா நிறைய தர்ம சங்கடமான கேள்வியெல்லாம் கேக்கிறா. உதாரணம் baby எப்படி வயுத்துக்குள்ளே வருது? அவளுக்கு சரியான பதிலை, அவளுக்கு புரியுற மாதிரி எப்படியெல்லாம் சொல்லுறதுன்னு மண்டையை உடைக்கிறேன். “இப்போ சொன்னா உங்களுக்கு புரியுமா தெரியலை, நீங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு அது சொல்லித் தாறேன்” ன்னு சொன்னேன். அவளும் (நல்ல வேளையா) அந்த பதிலில் திருப்தியாகி போய்ட்டா.
கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!
கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!
அண்மையில் எங்கள் வீட்டிற்கு எனது சினேகிதியின் குடும்பத்தினர் வந்து தங்கினார்கள். அவருக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை செளம்யாவுக்கு நான்கு வயது. அந்தக் குழந்தையை இப்போதுதான் முதன் முதலாய் சந்தித்தேன்.
அவர்கள் வந்து சேர்ந்த நேரம் இரவு 10.30 மணி, வந்து இறங்கிய நேரத்தில் செளம்யா நித்திரையாகி இருந்தாள். வந்து இறங்கியதும் அவளை எழுப்பினார்கள். அவள் கண்ணை விழித்து எங்களைப் பார்த்தாள். அப்போது நான் அவளிடம் “என்னை தெரியுமா?” என்று (meaningless?) கேள்வி ஒன்றைக் கேட்டேன். அவள் அதுக்கு ஒரு சிரிப்பு சிரித்தாளே பார்க்கலாம். அழகான ஒரு கள்ளச் சிரிப்பு. அந்தச் சிரிப்பை பிறகு பல தடவை எங்கள் வீட்டில் இருந்த பொழுதுகளில் பார்த்தேன். அதுபற்றி கவிதை (அல்லது வழமையான எனது கிறுக்கல்) ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. இதுபற்றி இன்னொரு சினேகிதி (எம் இருவருக்கும் பொதுவான சினேகிதிதான். குழந்தை செளம்யாவையும், அவளது கள்ளச் சிரிப்பையும் அறிந்த சினேகிதிதான்), தானே ஒரு கவிதை வடித்து விட்டாள். அந்த கவிதை இங்கே.
வீட்டிற்கு விஜயம் செய்த கவிதை இங்கே>
நண்பியின் கவிதை இங்கே>
கள்ளச் சிரிப்பில் என் கற்பனையை தூண்டி
சிறு கவிதை புனைய வைத்த கண்மணியே
கற்றவர்கள் பெற்றெடுத்த கருவிழி நீ – உன்
மேனிதான் கறுப்பு, உன் உள்ளம் வெள்ளையடி
நாலாண்டென்ன, நாற்பது ஆனாலும்
உன் சிரிப்பு மாறக்கூடாது
கற்பதைக் கற்று கால்நூற்றாண்டில் பெறும்
கல்வி பேரொளியாய் வர
கந்தனை வேண்டுகிறேன்
கவிதைக்கு நன்றி சொர்ணா. 🙂
(கவிதைக்கு மட்டுமில்லை. பல காலமாய் தொடப்படாமல் இருந்த இந்த பக்கத்தை தொட வைத்ததுக்கும் நன்றி. :))
என் குட்டித் தேவதைக்கு….
என் குட்டித் தேவதைக்கு….
நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
“எப்படியடி தெரிந்தது?” நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
“ஐயோ! தெரியலியே” தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…
பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…
இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!
நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்
கண்ணீர்ப்பூக்கள்!!
போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.
நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.
படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு…. இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது.
அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக).
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்… உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது.
கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
பிஞ்சு மலர்கள்
கொஞ்சும் மொழியில்…..
பாடம் கற்றுத்தந்த
பாடலை
பாங்காய் பாடினர்……
வண்ணங்களை
வார்த்தையில் குழைத்து
வசந்தமாய் வீசினர்………
“காலைத் தூக்கி
கண்ணில் ஒற்றி
கட்டிக் கொஞ்சும் அம்மா”……
தேனைத் தீயில்
தெளித்ததுபோல்….
மனம் கனத்தது
மெளனமாய் அழுதது….
கண்களில் கண்ணீர்…..
காரணம்………
பாடிய பாலகர்கள்…..
அம்மாவின்
அரவணைப்பை,
அர்த்தத்தை,
அன்பை,
அறிந்திராத
அநாதை குழந்தைகள்!
உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…
உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…
கருவே!!!!
என் உறவில் விழைந்த உயிரே!
உலகே எனக்கு உறங்கியிருக்கையில்,
உதிரத்தில் உதித்து, உயிரினுள் உயிரானாய்,
நீ அரும்பிய நாள் முதலாய்,
அழுகின்றேன் ஆனந்தத்தில்,
அலைகின்றேன் ஆகாயத்தில்,
நீ மலரும் நாளுக்காய்,
மயங்கி தவிக்கின்றேன்,
மனம் ஏங்கி துடிக்கின்றேன்,
நீ கருவாய் உருவாகி,
கற்பனைக்கு உரமிட்டு,
கனவுகளை பயிரிட்டாய்,
கவலைகளை போக்க,
களிப்புடனே வந்து விடு,
மருட்டும் பார்வையுடன்,
மங்களமாய் வந்து விடு,
உனக்காக இங்கே…..
உயிரை தாங்கும் உயிர்………