குருவி சொன்ன கதை!

Posted On ஜனவரி 26, 2016

Filed under எனது கதை

Comments Dropped leave a response

இதனை ஒரு மீள்பதிவு என்று சொல்லலாம். இதனை எப்போதோ பதிவு செய்திருந்தேன். ஆனாலும் எனது வலைப்பதிவிலிருந்து காணாமல் போனது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தள நிருவாகத்தில் போய்ப் பார்த்தால், பதிவு Published என்றே காட்டுகின்றது. ஆனால் பதிவை வலைப்பதிவில் பார்க்க முடியவில்லை. எனவே இதனை மீள்பதிவு செய்து பார்க்கிறேன்.

குருவி சொன்ன கதை!!

சுவரிலே மாட்டியிருந்த குருவி ஒன்றை உள்ளே வைத்திருக்கும் குடிசை அமைப்புடைய கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை கூ கூஎன்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.அட, அதற்குள் மணி ஒன்று ஆகி விட்டதா?’ என்று அகல்யா தனக்குள் கேட்டுக் கொண்டாள். காலை எழுந்து முற்றம் கூட்டி முடிக்கவே ஒரு மணித்தியாலம் எடுத்தது அகல்யாவுக்கு. அவர்கள் வீட்டிற்கு முன்னால் பெரிய முற்றம். வெள்ளை வெளேரென்று, மிகவும் அழகாக இருக்கும் வெண்மணல் முற்றம். அந்த வீட்டை அப்பா கட்ட நினைத்த போது அந்த வளவு வெறும் பள்ளக் காணியாகத்தான் இருந்தது. அதற்கு செம்மண் வாங்கி கொட்டி நிரப்பி விட்டு, அதன் மேலாக, கடற்கரை மணலும் வாங்கி கொட்டியிருந்தார் அப்பா. பூங்கன்றுகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் மட்டும் செம்மண் நிரப்பியபடி விட்டிருந்தார்கள். அகல்யாவும், அம்மாவுமாக இணைந்து அங்கே விதம் விதமான பூக்கன்றுகளை வைத்து, அதற்கு நீர் இறைத்து பராமரித்த நாட்கள் அவளது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.

அகல்யா வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கிப் பார்த்தாள். உச்சி வெயில் அகோரமாக எரித்தது. வெள்ளை மணல் நெருப்பாய் காலில் சுட்டது. அம்மா நெல் அவித்து, முற்றத்திலே பாயில் பரவி இருந்தார். நெல் மணிகளை உண்ண காகம் வந்து விடுமே என்று, நீண்ட தடி ஒன்று காகம் கலைப்பதற்காக சுவரில் சாத்தப்பட்டு இருந்தது. காகம் கலைப்பதே சில சமயம் பெரிய வேலையாக இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு காகமும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவற்றிற்கும் இந்த வெயிலைக் கண்டு பயம் வந்து விட்டது போலும் என்று அகல்யா எண்ணிக் கொண்டாள்.

அப்பா வேலை முடிந்து வருவதற்கு இன்று இரவாகி விடும் என்று கூறிச் சென்றிருந்தார். எனவே அம்மாவும், அகல்யாவுமாக நிதானமாக பல கதைகளும் பேசியபடியே வீட்டு வேலைகளை முடித்து, மதிய சமையலையும் முடித்து, சாப்பிட்டும் ஆயிற்று. அகல்யாவால் நாட்டு சூழ்நிலை காரணமாக ஆறு மாதமளவில் வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் அவளுக்கு அம்மாவிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தது. அவளுக்கு வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா விடயங்களையும் சொல்லி ஆக வேண்டும். அப்பா கூட அவர்களை கேலி செய்வார், “சினேகிதிகளிடம் கூட இப்படி வாய் ஓயாமல்தான் பேசுவாயா?” என்று. அம்மாதான் அவளுக்கு மிக நெருங்கிய சினேகிதி. அதற்குப் பிறகுதான் மற்ற சினேகிதிகள்.

முற்றத்திலே வீட்டில் இருந்து பத்தடிகள் தள்ளி அடர்ந்து படர்ந்த மாமரம். அநேகமாக மதிய உணவை முடித்த பின்னர் அனைவரும் அந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்வார்கள். வீட்டுக்குள் இருப்பதை விட இந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. இன்று அவள் வந்து மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவும் அங்கே வந்து, அருகிலிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டார். இருவரும் மீண்டும் அவள் ஊரில் இல்லாதபோது, ஊரில் நடந்த புதினங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா அப்படியே சரிந்து வாங்கில் படுத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.

அப்போது சின்னஞ் சிறிய குருவி ஒன்று அடிக்கடி தங்கள் தலைக்கு மேலாக அந்த மாமரத்திற்கு வந்து வந்து போவதை அகல்யா அவதானித்தாள். எதற்கு அந்த இத் குருவி வந்து வந்து போகிறது என்று குறிப்பாகப் பார்த்தபோதுதான், அங்கே ஒரு குருவிக் கூடு இருப்பதைக் கண்டாள். அதற்குள் குருவிக் குஞ்சுகள் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. ஆனால் எப்படி பார்ப்பது, அவள்தான் அவ்வளவாய் உயரம் கிடையாதே. கொஞ்சம் தூரமாகப் போய் நின்று எம்பிப் பார்த்த போது, அந்த கூட்டுக்குள் இருந்து வெளிப்பக்கமாக அந்தக் குருவிக் குஞ்சுகள் சின்னஞ்சிறிய அலகுகளை அகலத் திறப்பதைப் பார்க்க கூடியதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் போகத்தான் அவளுக்குத் தெரிந்தது, அங்கே வந்து போவது ஒரு குருவி அல்ல, இரண்டு குருவிகள் என்று.

ஒரு குருவி வந்து விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த குருவி உணவுடன் வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடே, இவை அந்தக் குஞ்சுகளின் அம்மாவும், அப்பாவுமாகத்தான் இருக்கும்” என்று அம்மாவிடம் சொன்னாள்.

எத்தனை சிறிய குருவிகள், அவைகள்தான் எத்தனை பொறுப்புடன், குழந்தைகளுக்குஉணவூட்டுகின்றன. அம்மா சொன்னார், “அந்த குருவிக்குப் பெயர் பிலாக்கொட்டை குருவி” என்று. பலாக்கொட்டை போலிருப்பதால் பலாக்கொட்டைக் குருவி எனப் பெயர்வந்திருக்கலாம். பலாக்கொட்டை பேச்சுவழக்கில் பிலாக்கொட்டையாகிவிட்டது.அந்தக் குருவிகள், வந்து வந்து உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே, நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அகல்யாவின் பெரியம்மாவின் மகன், ரூபன் சைக்கிளில் வந்தான். அகல்யா அக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து லீவில் வந்திருக்கிறார் என்றால், அவனும் முக்கால்வாசி நேரம், சித்தி வீட்டிலேயேதான் இருப்பான். சகல கதையும் பேசி அரட்டை அடிப்பதில் அவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும்.

இன்றைக்கு அந்தக் குருவிகளைச் சுற்றிச் சுற்றியே அவர்களது சம்பாஷணை அமைந்திருந்தது. ரூபன் நல்ல உயரம். ஆறு அடிக்கும் மேலே, மெல்லிய ஒடிந்துவிடுவது போன்ற உடல் அமைப்பு. அகல்யா கூட அவனைக் கேலி செய்வாள், “எலும்புக்கு மேல் தோலைப் போர்த்தி வைத்திருக்கிறாயா?” என்று. பதிலுக்கு அவனும் அகல்யாவை, “குண்டுப் பூசணிக்காய்” என்று கேலி செய்வான். கொஞ்சம் எட்டிப் பிடித்தால், அவனுக்கு அந்தக் குருவிக்கூடு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அவனும் அந்தக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக, அந்தக் கூடு இருந்த கிளையைப் பிடித்து, மெதுவாக கீழ் நோக்கி இழுத்து உள்ளே எட்டிப்பார்க்க முயன்றான்.

எங்குதான் இருந்தனவோ அந்தக் குருவிகள். இரண்டும் விரைவாகப் பறந்து வந்து ரூபனைச் சுற்றிச் சுற்றி பறந்த படி கீ கீ கீஎன்று கத்தின. கிளையைவிட்டு விட்டு ரூபன் பதறினான். அகல்யாவும், அம்மாவும் கூடப் பதறித்தான் போனார்கள். அந்தக் குருவிகள் இரண்டும் பறந்த வேகமும், கத்திய கத்தலும், அவை எத்தனை கோபமாக இருக்கின்றன என்பதை காட்டின. அவை ரூபனைக் கொத்திவிடுவன போல இருந்தன. அந்தக் கத்தலுக்கு அகல்யா பயந்தே போனாள். தங்களது குஞ்சுகளைப் பிடிக்கப் போகின்றான் என்று நினைத்துத்தான் அவை அத்தனை கத்தல் போட்டன. நல்ல வேளையாக, சிறிது நேரம் கத்தி விட்டு, அவை ரூபனை விட்டு அகன்றன.”குருவிகள் அகன்று விட்டனவே என்றுவிட்டு, மீண்டும், அவை என்ன செய்கின்றன என்று மூவருமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தக் குருவிகள் இரண்டும் உணவு கொண்டு வருவதை நிறுத்தி விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தன. கூட்டுக்கு அருகில் சென்று அமர்வதும், கத்துவதும், மீண்டும் தூரமாகச் சென்று வேலியுடன் இருந்த நாவல் மரத்தில் அமர்வதுமாக இருந்தன.

இவை ஏன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிட்டன, ஏன் சுற்றிச்சுற்றி கத்திக் கொண்டே இருக்கின்றனஎன்று அகல்யாவும், ரூபனும் திகைத்துப் போயிருந்தார்கள். மிகவும் கவலையுடன் அந்தக் குருவிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரூபனுக்கு, ‘தன்னால்தானே இப்போ அந்தக் குருவிக் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லைஎன்று ஆதங்கமாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அம்மா மட்டும் எதையோ உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தார்.

இப்படியே சில நிமிடங்கள் கரைந்தது. அந்தக் குருவிக் குஞ்சுகளும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. அவற்றுக்கு பசியாகவும் இருக்கலாம். என்ன செய்வது என்று புரியாத நிலையில், குருவிக்குஞ்சுகளுடன் சேர்ந்து அகல்யாவும் ரூபனும் கூட துடித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் ஒரு குருவிக் குஞ்சு மெதுவாக வெளியே பறந்து வந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாமரக் கிளைகளில் பறந்து பறந்து உட்கார்ந்தது. அப்போது, அந்த குருவிகள் நாவல் மரத்துக்கு தூரமாக போக, குஞ்சும் அங்கேயே பறந்து, அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டது. அதற்குப் பிறகு ஒரு குருவி, அந்தக் குஞ்சைக் கூட்டிக் கொண்டு பறந்து பறந்து தூரமாகச் செல்ல ஆரம்பித்தது. மற்ற குருவி, தொடர்ந்தும், மற்ற இரு குஞ்சுகளையும் வெளியே பறக்கச் செய்யும் முயற்சியில் இருந்தது.

அதுதான் அம்மாக் குருவியோ?’ என்று அகல்யா நினைத்துக் கொண்டாள்.இப்படியே மேலும் ஒரிரு மணி நேரம் ஓடி முடியும்போது, மற்ற இரு குஞ்சுகளும் கூட மெதுவாக கிளம்பிப் பறக்க ஆரம்பித்தன.

ஆபத்து என்று உணர்ந்த பின்னர், அந்தக் குருவிகள் எத்தனை சாமர்த்தியமாக அந்த குஞ்சுகளை தம்முடன் அழைத்துச் சென்று விட்டன என்று நினைக்கையில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது அகல்யாவுக்கு. குஞ்சுகளுக்கு உணவைக் கொடுக்காமல் ஏன் இந்தக் குருவிகள் குஞ்சுகளைத் தண்டிக்கின்றன?’ என்று எண்ணி நொந்து கொண்டிருந்த அகல்யாவுக்கு, இப்போதுதான் அந்தக் குருவிகளின் சாதுர்யம் புரிந்தது. இந்தச் சிறிய குருவிகளுக்கு இத்தனை புத்திசாலித்தனமா? வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.

உணவு கொடுக்காமல் குஞ்சுகளைப் பட்டினி போட்டாலும், அவை ஆபத்து என்று உணர்ந்த இடத்தில் இருந்து, குஞ்சுகளை எப்படியோ கூட்டிச் சென்றுவிட்டனவே? ”நமது பெற்றோர்கள்கூட நமக்கு கஷ்டமாக இருக்கும் சில விடயங்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது நமது நன்மைக்காகத்தானே?’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

அம்மா மட்டும், மெதுவாக புன்னகை புரிந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முதலிலேயே அம்மாவுக்குப் புரிந்திருந்ததோ? இதுதான் அனுபவம் அம்மாவுக்கு தந்திருக்கும் முதிர்ச்சி போலும்என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

நேரம் போனதே தெரியவில்லை. இனியாவது எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்போம்என்று சொன்னபடியே அம்மாவீட்டினுள் சென்றார். அகல்யாவும், ரூபனும் பிரமிப்பிலிருந்து மீளாமல் குருவிகள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு, எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.

விடியல்!!

Posted On நவம்பர் 1, 2005

Filed under எனது கதை

Comments Dropped one response

விடியல்!!

ஆர்த்திகாவுக்கு இன்றைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்து விட்டது. குழந்தை அருணும் நித்திரையாக இருக்கிறான். ஏதாவது படம் போட்டுப் பார்க்கலாம் என்றால், எல்லாம் பார்த்த படமாயிருக்கிறது. சரி, இந்த சோஃபாவில கொஞ்சம் ஓய்வாக கண்ணை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணி அப்படியே சாய்ந்து உட்கார்ந்த ஆர்த்திகா கண்களை மூடிக் கொண்டாள். அபிக்கு ஒருவரை திருமணம் பேசி முடித்திருப்பதாக அப்பா நேற்று போனில் கதைக்கும்போது சொன்னார். அவர் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான் என்று அப்பா கூறியது அவளுக்கு நிம்மதியாகவும் நிறைவாகவும் இருந்தது. அவளுக்கு தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு படமாக எண்ணத்தில் ஓடத் தொடங்கியது……………….

ஆர்த்திகா அவசரம் அவசரமாய் தான் ஆசிரியராக கடமையாற்றும் பாடசாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். நேற்று இரவு அப்பாவும், அம்மாவும் பேசிக் கொண்டிருந்த விஷயம், தற்செயலாக அவளது காதையும் எட்டி, அவளது தூக்கத்தைக் கெடுத்து விட்டதால், இன்று காலை நித்திரையால் எழும்புவதற்கு லேட்டாகி விட்டது. நடந்து கொண்டிருக்கும்போதே, அவர்கள் பேசிய அந்த விஷயம் மீண்டும், மீண்டும் மனதில் வந்து அவளை குழப்பிக் கொண்டே இருந்தது.

அப்பா நேற்று சாத்திரியாரிடம், அவளது சாதகத்தையும், அவர்களது தூரத்து உறவினர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த ஒரு பையனின் சாதகத்தையும் எடுத்துப் போயிருக்கிறார். அப்பா, அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த இரண்டு சாதகங்களும் நல்லாப் பொருந்தி இருக்குதாம், சாத்திரியார் சொல்லுறார், அதால இந்த இடத்தை கை விட வேண்டாம் எண்டும் சொல்லுறார். அந்த மாப்பிளையைப்பற்றி, ஸ்வீடனில இருக்கிற உங்கட பத்மா அக்கான்ரை மகனிட்டை விசாரிச்சுப் பாப்பம். நல்ல பொருத்தமும் இருக்கிறதால, இது சரி வந்தால் நல்லது, செய்யலாம்”. அதற்கு அம்மா சொன்னா “இவ்வளவு தூரத்தில பிள்ளையை அனுப்ப வேணுமோ? இங்கயே இருக்கிற ஒரு மாப்பிளையை பாத்தால் அவளும் எங்களோடயே இருக்கலாமே. அவள் தனக்குப் பிடிச்ச ஒரு வேலையிலும் இருக்கிறாள். அதையெல்லாம் விட்டுட்டு, அங்க போகத்தான் வேணுமோ?”. இதற்கு அப்பா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு சொன்னார் “அதுக்கு என்ன செய்யுறது? எனக்கு மட்டும் என்ன அவளை விட்டிட்டு இருக்க விருப்பமே? இப்ப இருக்கிற நாட்டுச் சூழ்நிலையில, இங்க எங்களுக்குப் பிடிச்ச மாதிரியும், அவளுக்குப் பொருத்தமான மாதிரியும் மாப்பிளை தேடுறது ஒண்டும் லேசான விசயமில்லை. இனி அடுத்து அபிக்கும் கூட மாப்பிளை தேட வேணும். இரண்டு பேருக்கும் என்ன ஒரு வயதுதானே வித்தியாசம்? நல்ல மாப்பிளையாய்ப் பாத்துச் செய்ய வேண்டியதுதான். எங்களுக்குப் பக்கத்திலயே வைச்சிருக்கிறதெண்டால், அது கொஞ்சம் கஷ்டம். பிள்ளையள் எங்கயெண்டாலும் போய் சந்தோசமாயிருக்கட்டும்”. “ம்ம்ம்ம்ம்” இது அம்மாவிடமிருந்து வந்த முனகலான பதில்.

ஆர்த்திக்கும் அம்மா, அப்பாவை விட்டுவிட்டு, தான் ஆர்வத்துடன் செய்யும் இந்த தொழிலையும் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போவதற்கு விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஸ்வீடனில் என்றபடியால், அங்கு தனது ஆருயிர்த்தோழி சுகந்தி இருப்பதால், ஓரளவு பரவாயில்லையே என்று தோன்றியது. சுகந்தியைப் பற்றி நினைக்கையில், அவளும் தானும் சேர்ந்து அடிக்கடி பாடும் அந்த இனிமையான பாடலை அவளது வாய் முணுமுணுக்கத் தொடங்கியது.

கல்லூரி மலரே……, (படம் > சினேகிதியே)

அப்படியே முணுமுணுத்தபடி, பாடசாலையை அடைந்து, பின்னர் தனது வேலையில் மூழ்கிப் போனாள் ஆர்த்திகா.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. மாப்பிள்ளையைப்பற்றி கொஞ்சம் தூரத்து உறவானாலும், அவளது பெரியம்மாவின் மகனிடம் தொலைபேசி விசாரித்தபோது, “நான் இருக்கிறது, அவர் இருக்கும் இடத்தில இருந்து நல்ல தூரம், ஆனால் அங்கையிருக்கிற எனக்குத் தெரிஞ்ச யாரிட்டையாவது விசாரிச்சுப் பார்க்கிறன்” என்று சொன்னான். சில நாட்களின் பின்னர் அவனே அழைத்து “அந்தப் பொடியன் அமைதியானவன் எண்டுதான் சொல்லுகினம். நல்ல ஒரு வேலையில் இருக்கிறான் எண்டும் சொல்லுகினம். வேற ஒண்டும் பெரிசா அறிய முடியேல்லை. ” என்றும் சொன்னான். “சாதகமோ அமோகமாகப் பொருந்தி வந்திருக்கு. அதால எந்தப் பிரச்சனையும் இருக்காது” என்று அப்பா சொன்னார். அதனால், சாதகம் கொண்டுவந்து தந்த அந்த உறவினர் மூலமாக, மேலும் பேச்சுவார்த்தைகள் நடந்து, படங்களும் பரிமாறப்பட்டன. ஆர்த்திகாவிடம் அப்பா கேட்டபோது, ஆர்த்திகாவும் தனது சம்மதத்தைக் கூறினாள். அந்த மாப்பிள்ளை கார்த்திக்கும் போன்பண்ணிப் பேசினார். மிகவும் பணிவாகவும், அமைதியாகவும் அவர் பேசிய முறை அப்பா, அம்மாவுக்கு பிடித்திருந்தது. அவளிடம் எதுவுமே அவர் பேசவில்லையே என்று சிறிய உறுத்தல் ஆர்த்திகாவுக்கு இருந்தாலும், அமைதியானவன் என்ற படியால், அவளிடம் பேசப்போகிறேன் என்று கேட்பதற்கு தயக்கமாக இருந்திருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

மாப்பிள்ளை கார்த்திக் ஊருக்கு வந்தாயிற்று. ஊருக்கு வந்த அன்றே, அவர்கள் வீட்டுக்கும் வந்து ஆர்த்திகாவையும் பார்த்து விட்டுப் போனான். ஆர்த்திகா நல்ல நிறம். அதிக நீளம் இல்லையென்றாலும் சுருண்ட தலைமுடி. கொஞ்சம் உயரம் குறைவாக இருந்தாலும், அழகானவள் என்று எவரும் சொல்லக் கூடிய முக அமைப்பு. கார்த்திக்கின் உயரம் ஆர்த்திகாவுக்கு பொருந்தக் கூடியதாக இருந்த போதிலும், ஆள் கொஞ்சம் கறுப்புத்தான். ஆர்த்திகாவைப் பொறுத்த அளவில், அவள் வெளித் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள் அல்ல. நல்லவனாக இருந்தாலே போதும் என்பதால், அவள் அவனது தோற்றத்தைப் பற்றி அவ்வளவாய் அலட்டிக் கொள்ளவில்லை.

இருவரிடமும் சம்மதம் கேட்டுப் பெறப்பட்ட பின்னர், பிறகென்ன, வேலைகள் துரித கதியில் நடக்க ஆரம்பித்தது. ஆர்த்திகாவும், தன் உயிர் சினேகிதிக்கு இந்த விஷயத்தை கடிதம் மூலம் தெரிவித்தாள். சுகந்தி உடனேயே தொலைபேசி ஆர்த்திகாவுடன் கதைத்தாள். சுகந்தி ஸ்வீடனிலிருக்கும் பல்கலைக்கழமொன்றில், தனது மேல்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். சுகந்திக்கோ விசயம் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சியான மகிழ்ச்சி. “உன்ரை கல்யாணம் கெதியில நடக்குமெண்டால், எனக்கு எக்ஸாம் இருக்கும், நான் வர முடியாது. ஆ்னா என்ன, கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கதானே வரப்போறாய். நாங்கள், பழைய மாதிரி சேர்ந்து நிறைய நேரம் செலவிடலாம். நீ இங்க வரும் நாளைத்தான் ஆவலோட எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறன்” என்று சொன்னாள்.

கார்த்திக்கும் இடையிடையே இவர்களது வீட்டுக்கும் வந்து, திருமண ஏற்பாடுகள்பற்றியெல்லாம் கதைத்து விட்டு போனான். ஆர்த்திகாவிடம் ஓரிரு வார்த்தைகள் தவிர அதிகம் கதைக்கவில்லை. எல்லோர் முன்னிலையிலும் எதைக்கதைப்பது என்று தெரியாத சூழ்நிலைதானே என்று எண்ணிக் கொண்டாள் ஆர்த்திகா. திருமண நாளும் வந்தது.

வாரணமாயிரம் சூழ வலம் வந்து………., (படம்> கேளடி கண்மணி)

திருமணம் முடிந்த பின்னரும், கணவர் தன்னிடம் அதிகம் பேசாமல் இருந்தது ஆர்த்திகாவுக்கு என்னவோபோல் இருந்தது. ஸ்வீடன் போவதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்வது, என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பது போன்ற ஒரு சில விடயங்களைத் தவிர வேறு எதையும் அவன் அதிகமாகப் பேசவில்லை. அவளாக எதைப் பேசுவதென்று அவளுக்கும் தெரியவில்லை. திருமணம் என்ற அழகிய பந்தத்தில், நிறைய எதிர் பார்ப்புக்களோடு இணைந்து கொண்ட ஆர்த்திகாவுக்கு, அவரது போக்கு கொஞ்சம் சங்கடத்தைக் கொடுக்கத்தான் செய்தது. பெற்றோரால் நிச்சயம் செய்யப்படும் திருமணங்களில் இப்படித்தான் எல்லோருக்கும் ஆரம்பத்தில் இருக்கும்போலும் என்று ஆர்த்திகா தன்னை தேற்றிக்கொண்டாள்.

திருமணம் முடிந்த இரு நாட்களிலேயே “விசா எடுக்கும் விசயமா கொழும்புக்கு போக வேணும். எல்லாம் சரி வந்திட்டால், அங்கயிருந்து அப்பிடியே ஸ்வீடனுக்கப் போக வேணும். திரும்பி வீட்ட வந்து போக நேரமிருக்குமா எண்டெல்லாம் தெரியாது” என்று கார்த்திக் சொல்லியிருந்தான். ஆர்த்திகாவுக்கு உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் சரியானபடி சொல்லிக் கொண்டு புறப்படக்கூட நேரமிருக்கவில்லை. அப்பா, அம்மா, தங்கையும் அவர்களுடன் கூடவே, வழியனுப்புவதற்காக கொழும்புக்கு வந்தார்கள். ஆர்த்திகாவின் ஒரு பெரியப்பா வீட்டிலேயே கொழும்பில் தங்கினார்கள். கார்த்திக்குக்கும் கொழும்பில் தனியாக போய் வர அவ்வளவாக தெரியாது இருந்ததால், விசா எடுக்கும் விடயமாக கொழும்பில் அங்கும் இங்குமாக அலைந்த பொழுதுகளிலும், யாராவது ஒருவர் கூட வந்தார்கள். வந்த இடத்திலும், அவர்களுக்கென்று பெரிதாக தனிமை என்பது கிடைக்கவில்லை. அதனால் அவன் அவளிடம் அதிகம் பேசாமல் விட்டதையும்கூட அவள் பொருட்படுத்தவில்லை.

அவளது விசாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் கார்த்திக் ஓரளவு ஏற்கனவே செய்து விட்டு வந்திருந்ததால், அவளுக்கு விசா எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. எல்லாம் சரி வந்ததும் ஒருநாள் ஷொப்பிங் செய்யப் போகலாம் என்று சொன்னான் கார்த்திக். அப்பாவும், தங்கையும் கூட வந்தார்கள். உடுப்பு கடைக்குள் சென்றதும் ‘சம்மர் க்கு உடுப்பு, வின்டருக்கு உடுப்பு’, என்று என்னவெல்லாமோ பார்த்து எடுத்தான் கார்த்திக். அவ்வளவும் அவசியமா என்று அவளுக்குத் தோன்றியது. எல்லாம் எடுத்து முடிந்ததும், பணம் கொடுக்கும் இடத்துக்கு வந்தார்கள். அப்போது, அவசரமாக தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்தபடி வெளியே சென்றுவிட்டான் கார்த்திக். அவளுக்கு என்ன செய்வது என்பதில் குழப்பமாக இருந்தது. அவளிடம் அவ்வளவு தொகைப் பணம் கையில் அப்போது இருக்கவில்லை. தனக்குத் திருமணம் முடிந்து விட்டதால், கணவன் என்ற முறையில் அவன் தானே பணம் கொடுப்பான் என்ற எண்ணம் ஒரு பக்கமும், புதிய கணவனிடம் போய் எப்படி கேட்பது என்ற எண்ணம் ஒரு பக்கமுமாய் அவள் நிற்கையில், அப்பா தானே முன்வந்து அந்தப் பணத்தைக் கட்டி விட்டார்.

பிறகு ஷூ கடை, ஜக்கற் கடை, சூட்கேஸ் கடை என்று பல இடங்களிலும் போய் பல பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்கினாலும், கார்த்திக் ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு காரணமாய் பணம் கொடுக்க முயற்சிக்காமல் ஒதுங்கிக் கொண்டது அவளுக்கு சிறிது மன உளைச்சலைத் தந்தது. சீதனம் என்று பெரிதாக அவனாக எதையும் கேட்டு வாங்கவில்லைத்தான். ஆனாலும் அவளது அப்பா, அவளுக்கெனச் சேர்த்து வைத்திருந்த கணிசமான ஒரு தொகையை சீதனமாக கொடுத்திருந்தார். ஒருவேளை சீதனம் கேட்டு வாங்காததால், அதை இப்படியாவது பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றாரோ கார்த்திக் என்றும் அவளுக்குத் தோன்றியது. என்றாலும், திருமணம் முடிந்த பின்னர் எல்லாம் கணவன்தானே செய்யவேண்டும் என்று எண்ணியிருந்த அவளுக்கு அவனது செய்கை என்னவோபோல் இருந்தது. அப்பா அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. திருமணச் செலவில் இதுவும் ஒரு செலவுதான் என்று எண்ணிக் கொண்டார் போலும். கடைசியில் அவர்கள் வாங்கிய அத்தனை பொருட்களுக்கும் அப்பாவே செலவு செய்திருந்தார். சரி, என்னவோ போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

அப்பா அதைப் பற்றி அதிகம் யோசிக்காவிட்டாலும் தங்கை அபி, தனிமை கிடைத்த நேரத்தில் ஆர்த்திகாவிடம் மெதுவாக கேட்டாள் “அக்கா! அத்தான்ரை போக்கு எனக்கொண்டும் சரியாப் பிடிபடேல்லை. கல்யாணம் முடிந்ததும் தனது மனைவிக்கு அதை இதை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவினம். ஆனா இவர் வேணுமெண்டே விலகிக் கொண்டு ஓடித் திரியுறாரே? குறை நினைக்காதையுங்கோ அக்கா, அவர் உங்களிட்டை எப்படி இருக்கிறார்?”. இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று உண்மையிலேயே ஆர்த்திகாவுக்குத் தெரியவில்லை. தனக்குள் ஏற்பட்டிருந்த உறுத்தலை தங்கை அபியிடம் சொல்லி விடலாமா என்றும் யோசித்தாள். அவளையும் எதற்குக் குழப்ப வேண்டும், அவனது அந்தச் செயல்கள் தற்செயலாக நடந்ததாயும் இருக்கக் கூடுமே. தான் எதையாவது சொல்லி வைக்க, பிறகு அவளும் யோசித்து, அப்பா அம்மாவிடமும் சொல்லி, அவர்களையும் குழப்ப வேண்டுமா என்று எண்ணிய ஆர்த்திகா “எல்லாம் என்னட்டை நல்லபடியாகத்தான் இருக்கிறார்” என்று சொன்னாள். என்ன அபியின் மனதுக்குள் ஓடியதோ தெரியவில்லை, அல்லது அக்காவின் சங்கடத்தைப் புரிந்து கொண்டாளோ என்னவோ “அக்கா! ஏதாவது உங்களுக்குப் பிரச்சனை என்டால், இங்க நாங்களெல்லாம் உங்களுக்காக இருக்கிறம் எண்டதை மறந்துடாதையுங்கோ” என்று சொன்னாள். “அடி பைத்தியம், எனக்கு அப்படி என்ன பிரச்சனை வரப் போகுது. நீ சும்மா கனக்க யோசிக்கிறாய்.” என்று கூறி விட்டு, நிமிர்ந்தால், அங்கே கார்த்திக் வந்தான். எதுவுமே பேசாமல் அவர்களைக் கடந்து போய் விட்டான். ஒருவேளை கேட்டுக்கொண்டு வந்திருப்பானோ. சரி, எதுவும் தப்பாக தான் சொல்லவில்லையே என்று எண்ணிக் கொண்டு, அந்தக் கதை மேலும் தொடராமல் ஆர்த்திகா அந்த இடத்திலிருந்து எழுந்து போய் விட்டாள்.

மறுநாள் ஸ்வீடன் பயணம் ஆக வேண்டிய நாள். அன்று இரவெல்லாம் ஆர்த்திகாவுக்கு தூக்கமே வரவில்லை. அத்தனை நாள் கூட இருந்த அப்பா, அம்மா, தங்கையைப் பிரிந்து செல்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. அழுதுகொண்டே இருந்தாள்.

மறுநாள் ஸ்வீடனை நோக்கி அவர்களது பயணமும் ஆரம்பித்தது. அவர்களுக்கு மட்டுமான முழுமையான தனிமை கிடைத்திருக்கிறது. இப்போதாவது, மனம்திறந்து அவனுடன் பேச வேண்டும் என்று ஆர்த்திகா தனக்குள் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவனோ, டிக்கற், லக்கேஜ், பாஸ்போட் சம்பந்தமான விடயங்கள் தவிர வேறெதுவும் பேசவேயில்லை. விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே, ஒரு வாரப் புத்தகத்தை விரித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தான். இப்போது உண்மையிலேயே அவளுக்கு ஏதோ ஒருவகைப் பயமும், உறுத்தலாகவும் இருந்தது. ‘என்ன இவர், இப்படி எதுவுமே கதைக்காமல் இருந்தால் என்ன அர்த்தம். இவ்வளவு நாட்களும்தான், உற்றார், உறவினர் அருகில் இருக்கும்போது, கூச்சம் இருந்திருக்கலாம். இப்போது நமக்கேயான முழுமையான தனிமை. இப்போதும் பேசாவிட்டால், எப்போதுதான் பேசப் போகிறார்’ என்று தனக்குள் யோசித்தாள். பொறுக்க முடியாமல் அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள். அவனை எப்படி அழைப்பது என்பதும் இன்னும் புரியாததால், மெதுவாக அவன் பக்கமாகச் சாய்ந்து, “அப்பா, அம்மா, அபியை விட்டுட்டு வாறது எனக்கு சரியான கவலையாயிருக்கு” என்றாள். அவன் யாரோ அறிமுகமில்லாத ஒருவரைப் பார்ப்பதுபோல் திரும்பி அவளைப் பார்த்தானேயன்றி எதுவுமே சொல்லவில்லை. அவளுக்கு அவனது பார்வை என்னவோபோல் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து அவளே “அபிக்கும் கவலைதான். நாங்கள் இரண்டு பேரும் ஒரு நாளும் பிரிஞ்சு இருக்கேல்லை” என்றாள். சடக்கென திரும்பிய கார்த்திக் “அவளைப் பார்த்தாலே நல்ல வாய்க்காரி போல இருக்கு, அவளுக்கு இதுக்கெல்லாம் கவலை வருமோ?” என்றான். இந்தப் பதில் ஆர்த்திகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘முதன் முதலில் தனது மனைவியிடம், அவளது தங்கைபற்றி கூறும் வார்த்தை இதுதானா? என்ன இது?’ என்று குழம்பினாள். ஒருவேளை அன்று அபி தன்னிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டதால் வந்த கோபமாக இருக்குமோ என்று எண்ணினாள். இருந்தாலும், “என்ன நீங்கள், அவளுக்குச் சரியான மென்மையான மனசு. உண்மையிலேயே அவளுக்கு என்னை விட்டுப் பிரியிறது சரியான கவலைதான்” என்றாள் ஆர்த்திகா. “அப்படி பாசப் பிணைப்பென்றால் பேசாமல் இலங்கையிலேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதுக்கு இப்ப என்னோட ஸ்வீடனுக்கு வாறாய்?” என்று கார்த்திக் கேட்டதும், ஆர்த்திகா உண்மையிலேயே அதிர்ந்து போனாள். அதற்குப் பிறகு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. பேசாமல் வாயை மூடிக் கொண்டாள். அவனும், இதற்கு மேல் என்னைத் தொந்தரவு செய்யாதே என்பதுபோல் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினான்.

ஆர்த்திகாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அடக்கப் பார்த்தாள். ஆனால் அவளையும் மீறி, கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதற்கும் ஏதாவது கோபமாக சொல்ல ஆரம்பிப்பானோ என்ற பயத்தில் மெதுவாக கண்களைத் கைக்குட்டையால் துடைத்துவிட்டு, கண்களை மூடி, தனது இருக்கையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டாள். அவளுக்கு தொடரப் போகும் வாழ்க்கை இருளடைந்து தெரிவதுபோல் இருந்தது. ‘இவர் என்ன மாதிரியான ஆள் என்றே புரியவில்லையே. அமைதியானவர் என்று சொன்னார்களே. ஆனால் இப்படி கடுகடுக்கிறாரே’ என்று மனதுக்குள் புலம்பியவாறே முதல்நாள் தூங்காத அயர்ச்சியும் சேர்ந்து அப்படியே சிறிது நேரம் உறங்கிப் போனாள். முழுப்பயணமும் மனக் கலக்கமும், இடை இடையே தூக்கமுமாக கழிந்தது. விமானத்தில் தந்த எந்த உணவையும் உண்ணக் கூட பிடிக்கவில்லை அவளுக்கு. பசியும் இருப்பதாகத் தோன்றவில்லை.

ஸ்வீடனை வந்தடைந்தாயிற்று. வீட்டில் மின்விளக்குப் போட்டபடியே இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் இன் வீடு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அறையையும், அதனுடன் இணைந்தபடியே சிறியதொரு சமைப்பதற்கான பகுதியையும், ஒரு படுக்கை அறையையும், ஒரு குளியலறையையும் கொண்டிருந்தது. பெரிதாக பொருட்கள் எதுவும் இல்லாவிட்டாலும், அவனது ஆடைகள் எல்லா இடத்திலும் போட்டது போட்டபடி அலங்கோலமாக இருந்தது. தனியாக இருந்தவர்தானே அதனால் இப்படி இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள் ஆர்த்திகா. அவளுக்கு எங்கே எதை வைப்பது என்று புரியாததால், ஆறுதலாக நாளை எல்லாம் அவரிடம் கேட்டு அடுக்கி, சரிப்பண்ணி வைக்கலாம் என்று முடிவெடுத்தாள். “இதுதான் என்ரை வீடு. இந்த வீடு ரெண்டு பேர் இருக்க போதாது” என்றான் கார்த்திக். அவளுக்கோ ‘வந்ததும் வராததுமாக இவர் என்ன சொல்கிறார். ரெண்டு பேர் இருக்க போதாது என்றால் நான் என்ன வெளியிலேயே நிற்பதாமா’ என்று மனதில் கேள்வி வந்தது. ஆனாலும் எதையும் வாக்குவாதம் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவள் மெளனமாய் இருந்தாள்.

வந்து சேர்ந்ததும், மனதில் களைப்பும், ஒருதடவை குளித்தால் நன்றாக இருக்குமென தோன்ற, ஆர்த்திகா குளித்து விட்டு வெளியே வந்தாள். அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனும் எதையும் வெளிப்படையாக பேசுவான் எனத் தோன்றவில்லை. பேசாமல் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவனும் குளித்து விட்டு வந்தான். வந்தவன் ஜன்னலூடாக வெளியே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றான். பிறகு அவளருகில் வந்து, “எனக்கு நித்திரை வருது. நான் படுக்கப் போறன். நீயும் படுக்கலாம்”. என்றான். அவளுக்கும் கொஞ்சம் படுத்து எழுந்தால் நல்லதென்று தோன்ற, பல் விளக்கிவிட்டு வருவதற்காய் குளியலறையினுள் நுழைந்தாள். அங்கே பேஸ்ட் எங்கேயிருக்கிறதென்று தேடினாள். அப்பொழுது பின்னாலிருந்து கார்த்திக்கின் குரல் “அங்க என்ன தேடுறாய்” என்றது. “பேஸ்ட்” என்று ஒற்றை வார்த்தையால் பதில் சொன்னவளுக்கு, அடுத்து வந்த அவனது வார்த்தை மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. “ஏன், உனக்கு பேஸ்ட் நீ அங்கே இலங்கையிலிருந்தே வாங்கி வரேல்லையோ? என்ரையைப் பாவிக்கலாம் எண்டு வந்தனியோ?” என்றான் கார்த்திக். அவளுக்கு வாயடைத்துப் போயிற்று. ‘என்ன சொல்கிறார் இவர். அவருக்கு கல்யாணம், கணவன், மனைவி என்பது ஏதாவது உண்மையில் தெரியுமா, இல்லையா? எங்காவது பேஸ்ட்டை கணவன், மனைவி தனித்தனியாக வாங்கி வைத்திருப்பார்களா?’. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. அதற்குமேல் பேஸ்ட் பாவிக்காமலே, வெறும் பிரஷ் ஆல் பல்விளக்கிவிட்டு, பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டாள்.

பக்கத்தில் வந்து படுத்துக் கொண்ட கார்த்திக் “நான் உன்னட்டைக் கொஞ்சம் கதைக்கோணும்” என்றான். அவன் ஏதாவது பேச மாட்டானா என்றிருந்த ஏக்கமெல்லாம் போய், எதைப் பேசி விடப் போகிறானோ என்ற பயம் மட்டுமே இப்போது அவளிடம் மிஞ்சி இருந்தது. அவள் “ம்” என்றாள். அவன் அவளது எந்தப் பதிலுக்கும் காத்திராதவனாய் தொடர்ந்தான். “எனக்கு இந்த கல்யாண வாழ்க்கையே பிடிக்கேல்லை” என்றான். ‘அப்போது எதுக்கு கல்யாணம் செய்து கொண்டீங்க’ என்று வாய்வரை வந்த கேள்வியை தனக்குள் விழுங்கிக் கொண்டு, அவன் மேலே சொல்வதைக் கேட்டாள் ஆர்த்திகா. “எனக்கு தனிய இருந்துதான் பழக்கம். ஆரோடையும், எதையும் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை” என்றான். இப்போது அவளால் பொறுக்க முடியவில்லை, “அப்ப எதுக்கு என்னை கல்யாணம் செய்து இங்க கூட்டி வந்தனீங்க?” என்று கேட்டாள். அதற்கு கார்த்திக் எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரம் மெளனமாயிருந்தான். பின்னர் அவள் கேட்ட கேள்விக்கு சிறிதும் தொடர்பில்லாமல் “நீ உயரம் குறைவு. அதனால் உன்னுடன் வாழ எனக்குப் பிடிக்கேல்லை” என்றான். இப்போது ஆர்த்திகாவுக்கு கோபம் வர ஆரம்பித்தது. “நான் எவ்வளவு உயரம் எண்டெல்லாம் முதலே உங்களுக்கு தெரியும்தானே. என்னை வந்து பார்த்துட்டுத்தானே கல்யாணம் செய்தனீங்க. தவிர நீங்கள் ஒன்டும் பெரிய உயரம் இல்லையே” என்றாள். அவனோ “நானும் உயரமில்லாமல், நீயும் உயரமில்லாமல் இருந்தால் நமக்கு பிறக்கும் பிள்ளையும் உயரமில்லாமல் போகும். அதால எனக்கு உன்னோட வாழ விருப்பமில்லை. நான் உங்கட அப்பா, அம்மா கவலைப் படக் கூடாது எண்டுதான் உன்னை கல்யாணம் செய்தனான்” என்றான். ஆர்த்திகாவுக்கு கார்த்திக்கின் பேச்சு உளறல்போலத்தான் இருந்தது. ‘அப்பா, அம்மாவை கவலைப் படுத்த விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து கொண்டாராமே. அப்படியெண்டா, இப்ப இப்படி என்னுடன் பேசுவதற்கு மட்டும், அவர்களுக்குத் தெரிந்தால் கவலைப் பட மாட்டார்களா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்’. யோசிக்க யோசிக்க அவளுக்கு வெறும் குழப்பம்தான் வந்தது. கூடவே அழுகையும் வந்தது. எதுவும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கார்த்திக்கும், அதற்குமேல் எதுவும் பேசாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

ஆர்த்தி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். கார்த்திக்கோ இத்தனையும் பேசிவிட்டு, எதுவுமே நடக்காத மாதிரி உறங்கிப் போனான். ஆர்த்திக்கு தலை வலிவேறு வந்து மண்டையைப் பிளந்தது. நல்லவேளை எப்போதும் தனது கைப்பையில் இருக்கும் பனடோல் மாத்திரை அன்றும் இருந்தது. எடுத்துப் போட்டுக் கொண்டாள். உறங்காமல் விழித்திருந்தே, அன்றைய இரவு அவளுக்கு விடிந்தது. அதி காலையில் எழுந்ததும், மீண்டும் கார்த்திக் பேச்சைத் தொடங்கினான். “நீ பேஸ்ட் கொண்டு வரேல்லை எண்ட படியால, இண்டைக்கு அதை எடு. உனக்கு வேறை வாங்கித் தாறன். என்னுடைய பொருட்கள் வேறெதையும் நீ தொட வேண்டாம். சமையலுக்கு பொருட்கள் நான் வாங்கி வந்ததும் சமைக்கலாம்”. இத்தனையும் சொன்னவன் தொடர்ந்து “எனக்கு உன்னுடன் வாழவே விருப்பமில்லை.” என்று முடித்தான். அவளுக்கு இதற்கு மேலும் பொறுக்கவில்லை. “அப்படியென்றால் என்னை நீங்கள் கல்யாணம் செய்திருக்கக் கூடாது. அதுக்குப் பிறகும் இங்க கூட்டி வந்திருக்க கூடாது. உங்களுக்கு தனிய இருக்கத்தான் விருப்பம் எண்டால் எதுக்கு இந்த கல்யாணம்? எதுக்கு என்னை இப்படி செய்தனீங்கள்? சொல்லுங்கோ.” என்று அழுதுகொண்டே கேட்டாள். அவன் அவளுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. ஏன், காதில் விழுந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.
அந்த நேரம் தொலைபேசி மணி அடித்தது. கார்த்திக் போனை எடுத்தான்.

மறுமுனையில் சுகந்தி கேட்டாள் “ஹலோ நான் சுகந்தி கதைக்கிறன். ஆர்த்திகாவிண்ட சிநேகிதி. அவவோட கதைக்கலாமோ?”. கார்த்திக் ஒரு நிமிடமும் தயங்கவில்லை, “அவ இங்க இல்லை இப்ப. வெளியில போயிருக்கிறா. ஒரு அரை மணித்தியாலத்துக்குப் பிறகு எடுங்கோ”, என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான். ஆர்த்திகாவைப் பார்த்துக் கேட்டான் “அது யார் சுகந்தி? அவவுக்கு எப்படி இந்த போன் நம்பர் கி்டைச்சது?”. அந்தக் கவலையிலும் ஆர்த்திகாவுக்கு, சினேகிதியின் போன் வந்தது என்றதும், ஒரு சிறு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. கல்யாணம் பேசி வந்தவர்கள், கார்த்திக்கின் தொலைபேசி எண்ணையும் ஆர்த்திகாவின் வீட்டில் கொடுத்திருந்தார்கள். கொழும்பில் நின்றபோது தொலைபேசியில் கதைத்த சுகந்தியிடம் ஸ்வீடனுக்கு வரும் நாள் பற்றி சொல்லி, தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தாள் ஆர்த்திகா.

சுகந்தி அழகான திருமண வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததோடு, திருமண தினத்தன்று அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தாள். “சுகந்தி எண்டை ஃபிரண்ட்தான். அவளும் இங்கே ஸ்வீடனில்தான் இருக்கிறாள். நான்தான் அவளுக்கு போன் நம்பர் கொடுத்தனான்” என்று சொன்னாள் ஆர்த்திகா. “என்னைக் கேக்காமல் என்ரை போன் நம்பரை நீ எப்படி யாருக்கோ கொடுக்கலாம்” என்று கார்த்திக் கோபப்பட்டான். “சரி, போனது போகட்டும். இன்னும் அரை மணித்தியாலத்துக்குப் பிறகு போன் பண்ணச் சொல்லி சொல்லியிருக்கிறன். போன் வரும். அப்ப, இதே அழுகையுடன் பேசுறதாயிருந்தால் போனில் பேசவே விட மாட்டன். அழுகையை நிறுத்தி விட்டு பேசுறதாயிருந்தால் பேசு” என்று கடுகடுப்புடன் சொன்னான். ஆர்த்திகாவுக்கு, சுகந்தியுடன் பேச கிடைத்த சந்தர்ப்பத்தையும் இழந்து விடக் கூடாதே என்று படபடப்பாய் இருந்தது. “நான் அழாமல் கதைக்கிறன். அவள் எடுத்தால், நீங்க போனில் என்னை கதைக்க விடுங்கோ” என்று அவசரமாய் சொன்னாள் ஆர்த்திகா. “சரி, தாறன், ஆனால் அவளிடம் எதையாவது உளறி வைக்காத. கன நேரம் கதைக்கவும் வேண்டாம். இப்ப நீ முகம் கழுவிப் போட்டு வா” என்று சொல்லி விட்டு காத்திருந்தான். ஆர்த்திகாவும், குளியலறைக்குள் சென்று தனது துக்கத்தையே தண்ணீர் கொண்டு கழுவி விடவேண்டும் போன்ற வேகத்தில், முகத்தில் தண்ணீரை மீண்டும் மீண்டும் வேகமாய் அடித்துக் கொண்டாள். முகத்தை துடைத்துக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்து சுகந்தியின் அழைப்புக்கு காவலிருந்தாள்.

கார்த்திக்குடன் கதைத்து விட்டு போனை வைத்த சுகந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘நேற்றுத்தானே ஆர்த்திகாவும், கணவனும் இங்கே வந்து சேர்ந்திருப்பார்கள். அதற்குள் இன்று ஆர்த்திகா தனியாக, அதுவும் இந்த காலையில வெளியே போய் விட்டதாகச் சொல்கிறானே. நம்பவே முடியவில்லையே. சரி அவன் சொன்னதுபோல் இன்னும் அரை மணித்தியாலத்தில் போன் பண்னிப் பார்க்கலாம்’ என்று எண்னிக் கொண்டாள். அவளுக்கு இன்று 11 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குப் போனால் போதுமானது. அவசரமில்லை. இருந்தாலும், சமைத்து வைத்து விட்டுப் போனால், பிறகு திரும்பி வந்ததும் சாப்பிடலாம் என்று எண்ணிக் கொண்டே சமையல் வேலையில் இறங்கினாள். அடிக்கடி கண்கள் நேரத்தை பார்த்துக் கொண்டே இருந்தன.

சரியாக அரை மணித்தியாலத்தில் சுகந்தி மீண்டும் அழைத்தாள். மறுமுனையில் கார்த்திக் ரிசீவரை எடுத்தான். “நான்தான் சுகந்தி கதைக்கிறன்” என்று சொன்னதுமே நல்ல பிள்ளையாக “இருங்கோ, ஆர்த்திகாவிடம் கொடுக்கிறன்” என்று கொடுத்து விட்டான். ஆனால் அவனது பார்வை அவளை விட்டு ஒரு சிறிதும் அகலாமல், அவளையே உற்று நோக்கியபடி இருந்தது. ஆர்த்திகா “ஹலோ” என்ற போதே அவளது குரல் தழுதழுக்க ஆரம்பித்தது. சுகந்தி கேட்டாள் “என்ன உன்ரை குரல் ஒரு மாதிரியாயிருக்கு? ஸ்வீடன் வந்ததும் எனக்கு போன் பண்ணுறதாய் சொன்னாய்? நான் நேற்றே உன்ரை போன் வரும் எண்டு காத்துக் கொண்டிருந்தன். பிறகு லேட்டானதும், சிலவேளை களைப்பில் இருப்பீங்க எண்டுதான் நானும் பிறகு போன் பண்ணேல்லை. அது சரி, கொஞ்சம் முதல் நான் போன் பண்ணினனான். நீ வெளியில போயிருக்கிறதாய் சொன்னார். என்ன வந்ததும், அதுவும் தனியா எங்க போனனி?” என்று கேள்விமேல் கேள்வியாய் அடுக்கினாள். ஆர்த்திகாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சுகந்தியின் சில கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்த்து விட்டு, “ஓம், நாங்க நல்லாயிருக்கிறம். சுகமாய் வந்து சேர்ந்தம். நல்ல களைப்புத்தான். அதுதான் போன் பண்ண முடியேல்லை.” என்று கொஞ்சம் தடுமாறிய குரலில் கூறினாள் ஆர்த்திகா. சுகந்திக்கு என்னவோ உறுத்தலாக இருந்தாலும் தொடர்ந்து வீட்டினர்பற்றி, பொதுவாக விசாரிக்க ஆரம்பித்தாள். ஆர்த்திகாவும், அந்த பொதுவான கேள்விகளுக்கு ஓரளவு நிதானமாகவே பதில் சொல்ல ஆரம்பித்தாள். கார்த்திக் தொலைபேசியைப் பறித்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு அந்த நிதானத்தை தந்தது. இப்படி ஏதேதோ பேசினார்கள். இடை இடையே ஆர்த்திகாவின் உடைந்த குரலை சுகந்தியால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. “என்ன உன்ரை குரல் ஒரு மாதிரியா இருக்கு” என்று அவள் திருப்பி திருப்பி கேட்டாலும், சுகந்தி “அப்படி ஒண்டும் இல்லை. கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு. அதுதான்” என்று சொல்வதைக் கேட்ட கார்த்திக், ‘ஓ நல்லாவே சமாளிக்கிறாய்’ என்று அவளை மெச்சுவதுபோல் தலையை ஆட்டிக் கொண்டான். ஒரு 15 நிமிடமளவில் சென்றதும் ‘இனிப் போதும்’ என்பதுபோல் சைகை காட்டினான். ஆர்த்திகாவும் “சரி சுகந்தி. நாங்கள் வெளியே போக வேண்டும். பிறகு கதைக்கலாம்.” என்றாள். “சரி, நான் அப்ப பிறகு கோல் பண்ணுறன்” என்று சொல்லி சுகந்தியும் போனை வைத்து விட்டாள்.

போனை வைத்தாலும் சுகந்தியின் மனதில் பெரிய போராட்டம் ஆரம்பித்தது. நிச்சயமாய் எங்கேயோ ஏதோ பிழை இருக்கிறது என்று அவளது மனது சொல்ல ஆரம்பித்தது. சுகந்தி இருக்குமிடம், அவர்கள் இருக்குமிடத்திலிருந்து தூரமாக உள்ளதால், அவளால் அங்கே உடனே போகவும் முடியாமல் இருந்தது. ஆனால் ஆர்த்திகாவிடமிருந்து எப்படி விஷயத்தை வரவழைப்பது என்றும் தெரியவில்லை. சரி, கார்த்திக் இல்லாத நேரம் அவளுக்குத் தொலைபேசிக் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அதே நேரம் இங்கே கார்த்திக் ஆர்த்திகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் “நான் இல்லாத நேரம் அவளுடன் கதைக்கலாம் எண்டு மட்டும் யோசிக்காதை. நான் தனியாக உன்னை வீட்டுல விட்டுட்டு போற நேரங்களில டெலிபோன் லைனை என்ரை மோபைல் போனுக்கு கனெக்ட் பண்ணி விட்டுத்தான் போவன். நான் வீட்டுல இருக்கிற நேரங்களில, பாத்ரூமுக்குப் போனாலும், இந்த ஹான்ட் போனை எடுத்துக் கொண்டுதான் போவன். அதால நீ போனை எப்பவும் ரிசீவ் பண்ண முடியாது”. ஆர்த்திகாவின் மனதில், ‘இவர் இல்லாத நேரம் சுகந்தியுடன் கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாம்’ என்று எழுந்த எண்ணமும் தவிடு பொடியாகியது. ‘நான் என்ன செய்யப் போகிறேன். எப்படி இவருடன் வாழ்நாள் முழுமைக்கும் வாழப்போகிறேன்’ என்றெண்ணித் தவித்தாள்.

அன்று கொழும்புக்கும் தொலைபேசி, வந்து சேர்ந்த விடயம்பற்றி கார்த்திக் அறிவித்து விட்டான். ஆர்த்திகாவையும் அழாமல் கதைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கதைக்க அனுமதித்தான். அபியோ அழுதுகொண்டே அக்காவுடன் கதைத்தாள். அம்மாவுக்கும் ஆர்த்தியுடன் கதைக்கும்போது குரல் அடைத்தது. அப்பாவின் குரலிலும் ஏதோ கவலை தெரிவதுபோல் இருந்தது. திருப்பி திருப்பி, “நல்லா இருக்கிறாயா? பிரச்சனை ஏதுவும் இல்லையா?” என்று எல்லோரும் கேட்டார்கள். ஆர்த்திகாவும், மனதிலுள்ள கஷ்டத்தை மறைத்துக் கொண்டு “நல்லாயிருக்கிறம்” என்றே பதில் சொன்னாள்.

கார்த்திக் பின்னர் வெளியில் போய் பொருட்கள் வாங்கி வந்து சமைக்கும்படி கொடுத்தான். அவளும் அவன் சொல்வதையெல்லாம் செய்தால், அவனுள் மாற்றம் வரலாமே என்று ஒரு நப்பாசை தோன்றி, அவன் சொற்படி நடந்தாள். தொடர்ந்து வந்த ஓரிரு நாட்களும் எதுவும் மாறப் போவதில்லை என்பதைப் போல் இருந்தது. கார்த்திக் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருப்பான். அதில் யாராவது பெண்கள் போனால், ஆர்த்திகாவைக் கூப்பிட்டு அந்த பெண்ணைக் காட்டி, “இவளோட நான் முந்தி ஒண்டா வாழ்ந்திருக்கிறன்” என்பான். அவளுக்கு என்னவோ அவன் சொல்வதில் எந்த உண்மையும் இருப்பதாய் தோன்றாது. அவளைச் சீண்டவேண்டும் என்ற நோக்கத்துடனேயே சொல்வதாய் தோன்றும். அவள் எந்த பதிலும் சொல்வதில்லை. இப்படியாக பலவற்றை தொடர்ந்தும் செய்தான். அவளது உயரம் குறைவு என்பது அடிக்கடி அவன் சொல்லும் குற்றச் சாட்டுக்களில் ஒன்று. “அது உங்களுக்கு முதலே தெரிந்த விசயம்தானே. அப்போ ஏன் என்னை கல்யாணம் செய்தனீங்கள்” என்று ஆர்த்திகா கேட்டால், அவனிடமிருந்து பதில் வராது. அவளும் பொறுக்க முடியாமல் கோபம் வரும் நேரங்களில் அவனை பல விதமாகவும் கேள்விகள் கேட்டுப் பார்த்தாள். அவன் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டான். அவள் தாங்க முடியாமல் அழுவாள். “என்னை என்ரை வீட்டுக்கு, இலங்கைக்கே திருப்பி அனுப்பி விடுங்கோ” என்பாள். அவன் அதற்கும் பதில் சொல்ல மாட்டான். ஆர்த்திகாவுக்கோ ‘இவர் எப்படிப் பட்டவர்? நல்லவரா, இல்லையா? இவரை எப்படி இந்த குடும்ப வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு வருவது?’ என்று ஒரே குழப்பமாக இருந்தது.

சுகந்தி பல தடவைகள் போன் செய்த போதிலும், கார்த்திக் இல்லாத ஒரு நேரமும், ஆர்த்திகாவுடன் கதைக்க முடியாமல் இருப்பதை புரிந்து கொண்டாள். எப்படியும் ஒரு லீவு எடுத்துக் கொண்டு ஆர்த்திகாவைப் பார்க்க போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். ‘ஆனால் அதற்கு கார்த்திக் அனுமதிப்பானா, தான் வருவதாகச் சொன்னால் என்ன சொல்வான்’ என்று குழம்பிக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் அந்த பெரியம்மாவின் மகன் அமலன் அண்ணாவும் போன் பண்ணி பேசினார். அவரிடம் மிகவும் நல்லவன்போல் கார்த்திக் பேசினான். அவன் பேசியதிலிருந்து, அவர்கள் எதையும் தவறாக எண்ணவில்லை.

இப்படியே ஒரு வாரம் போயிருந்த சூழலில் ஒரு நாள் கார்த்திக் சோக முகத்துடன் வந்தான். “நான் இதுவரைக்கும் மிகவும் தப்பாக உன்னட்டை நடந்திட்டன். இப்பதான் எல்லாம் யோசிச்சுப் பார்க்க புரியுது. என்னை மன்னிச்சுக்கொள். இப்ப இருக்கிற இந்த வீடு நான் தனிய இருக்கும்வரைக்கும் போதுமாயிருந்தது. நான் கொஞ்சம் பெரிசா ஒரு வீடு உடனடியா பார்க்கலாம் எண்டு இருக்கிறன். அதுவரைக்கும், உன்ரை அண்ணா வீட்டை போயிருக்கிறியா?” என்றான். ஆர்த்திகாவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘எத்தனை அமைதியாகப் பேசுகிறார். இவ்வளவு நாளும் என்ன பிரச்சனையோ. நல்ல வேளை இப்பவாவது புத்தி வந்துதே’ என்று நினைத்துக் கொண்டாள். அவனது மன மாற்றத்துக்காக சந்தோஷப்படுவதா அல்லது இப்போ திடீரென்று அண்ணா வீட்டில் போயிருக்கச் சொல்கிறாரே என்று கவலைப்படுவதா என்றே அவளுக்குத் தெரியவில்லை. “நீங்கள் வீட்டை பாருங்கோவன். நானும் இங்கேயே இருக்கிறன். வீடு மாறுறதென்றால், நானும் உதவியாக இருப்பன்தானே” என்றாள் மென்மையாக. அதற்கு கார்த்திக்கும் மென்மையாகவே “இல்லை ஆர்த்திகா, நீ இங்கையிருந்தால் எனக்கு சரியாக வெளியில போய் வந்து வீடு எல்லாம் தேடுவது கஷ்டம். நீ அங்க போயிரு, ஒரு கொஞ்ச நாள்தானே. எப்படியும் கெதியில நான் வீடு பாத்துட்டு உன்னை கூப்பிடுவன்” என்றான். முதன் முதலாக ஆர்த்திகா என்று அவன் தன் பெயர் சொல்லி அழைத்தது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு.

மனம்மாறி வந்திருக்கும் அவனிடம் மேலும் தர்க்கம் செய்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறின கதையாகிவிடுமோ என்றும் ஆர்த்திகாவுக்கு பயமாக இருந்தது. ஆனால் அந்த பெரியம்மாவும் தூரத்து உறவாதலால், அங்கு வந்து கொஞ்ச நாள் நிற்கப் போகிறேன் என்று எப்படி அமலன் அண்ணாவிடம் சொல்வது என்று யோசித்தாள். தவிர அவளுக்கு சுகந்தியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. எனவே மீண்டும் மெதுவாக “அண்ணாட்ட எப்படி கேக்கிறது? அவர் எங்களுக்கு தூரத்து சொந்தம்தானே. தவிர, அவரது மனைவியையும் எனக்குத் தெரியாது. நான் வேணுமென்டால் என்ர ஃபிரண்ட் சுகந்தியோட போய் நிக்கட்டோ?” என்று கேட்டாள். சில நிமிட யோசனைக்குப் பிறகு கார்த்திக், “நீ சொல்லுறதும் நல்ல ஐடியாத்தான். ஃபிரண்டோட என்றால் உனக்கும் மனம் விட்டுப் பேசலாம். அப்படியெண்டா, அவவுக்கு போன்பண்னி கேள்” என்று சொன்னான் கார்த்திக். அவளும் தன்னிடம் இருந்த சுகந்தியின் தொலைபேசி எண்ணை எடுத்து வந்து சுகந்திக்கு போன்பண்ணி வியத்தைச் சொன்னாள். சுகந்திக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உடனேயே, நீ உடனேயே வரலாம் என்று எல்லா விபரங்களும் கொடுத்தாள். ஆர்த்திகாவும் அவற்றை கார்த்திக்கிடம் சொன்னாள்.

மறுநாளே கார்த்திக் அவள் சுகந்தியிடம் போவதற்கான ஒழுங்குகள் எல்லாம் செய்து விட்டு வந்தான். அவளும் சில நாட்கள் இருக்கத்தானே என்று ஒரு சில உடைகளை மட்டும் எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டாள். அவன் அவளை தொடருந்தில் வழியனுப்பி விட்டுத் திரும்பி விட்டான். சுகந்தி அவளை தொடருந்து நிலைய் வந்து அழைத்துப் போனாள். சுகந்தி ஆர்த்திகாவைக் கண்டதுமே “எப்படி இருக்கிறாய்? கார்த்திக் எப்படிப்பட்டவர்? ஏதாவது பிரச்சனையா? உன்ரை முகத்தில சந்தோசமே இல்லை போலிருக்கே?” என்று கேள்விமேல் கேள்வியாக அடுக்கினாள். ஆர்த்திகாவும், “என்ன அவசரம். வா எல்லாம் வீட்டுக்குப் போய் நிதானமா சொல்லுறன்” என்றாள்.

அன்று முழுவதும் சினேகிதிகள் இருவரும் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆர்த்திகா திருமண ஏற்பாடு நடந்ததில் இருந்து ஒன்று விடாமல் அனைத்தையும் சுகந்தியிடம் கொட்டித் தீர்த்தாள். பல இடங்களில் அழுதாள். சில இடங்களில் ஆத்திரப்பட்டாள். சுகந்திக்கு, ஆர்த்திகாவின் கதையைக் கேட்க கேட்க, அந்த கார்த்திக் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. “என்ன மனுசன் இவன்? உயரம் குறைவென்பது பார்த்து, சம்மதம் தெரிவித்து, திருமணம் முடித்து, இங்கே கூட்டியும் வந்த பிறகுதான் தெரியுதாமா? வேறொருவருடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? ஒரு பெண்ணை அழவிட்டு வேடிக்கை பார்க்கிறதுல இவனுக்கு என்ன சந்தோசம்?” என்று பொரிந்து கொட்டினாள். ஆர்த்திகாவுக்கு இப்போது சுகந்தியை சமாதானப்படுத்த வேண்டி வந்தது. “சரி விடு சுகந்தி. இப்பதான் அவர் மனம் திருந்தி விட்டாரே. இனி எதுக்கு கவலை” என்றாள். சுகந்திக்கு மனதில் பெரிய உறுத்தலாய் இருந்தாலும், அப்போதைக்கு ஆர்த்திகாவையும் எதையும் சொல்லி மனம் நோகச் செய்ய வேண்டாமே என்று பேசாமல் இருந்தாள்.

ஆர்த்திகா புறப்பட முன்னர் கார்த்திக்கிடம் சுகந்தியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தாள். அப்போது கார்த்திக் அவளது விலாசத்தையும் கேட்டான். அதையும் கொடுத்து விட்டுத்தான் வந்திருந்தாள். இருந்தாலும் வந்து சேர்ந்ததை அழைத்துச் சொன்னபோது அவன் சுருக்கமாக “சரி, சரி, நான் இப்ப வெளிய போறன், பிறகு உனக்கு போன் பண்ணுறன்” என்றான். அதற்குப் பிறகு நண்பிகள் இருவரும் தங்கள் பழங்கதைகள் எல்லாம் பேசி, பழைய நாட்களை அசை போட்டபடி சந்தோசமாக இருந்தார்கள். அடுத்த இரு நாட்களும் கார்த்திக்கிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. வீடு தேடுவதில் மும்முரமாக இருக்கிறார் என்று தன்னைத்தானே சமாதானப் படுத்த முயன்றாலும், மீண்டும் ஆர்த்திகாவுக்கு குழப்பம் ஆரம்பித்தது.

மூன்றாம் நாள், அவளது பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் மட்டும் சுகந்தியின் விலாசத்துக்கு வந்திருந்தது. இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. “கார்த்திக்குக்கு போன் பண்ணிப் பார்க்கலாம்” என்று சுகந்தி சொன்னாள். தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திவிட்டு, ஆர்த்திகாவிடம் கொடுத்தாள். மறுமுனையில் கார்த்திக் “ஹலோ” என்றான். ஆர்த்திகா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள். “எதுக்கு நீங்க என்ரை சூட்கேசை இங்க அனுப்பி இருக்கிறீங்க” என்றாள். அதற்கு கார்த்திக், “நான்தான் சொன்னேனே, எனக்கு உன்னோட வாழப் பிடிக்கேல்லை எண்டு. அதுதான், நீ இனிமேல் இங்க வர வேண்டாம்” என்றான். “இப்படி நீங்க சொன்னால் நான் என்ன செய்யுறது?” என்றாள் ஆர்த்திகா. “என்னவாவது செய். என்னால எதுவும் செய்ய முடியாது. எனக்கு உன்னோட வாழவும் ஏலாது. இனி இங்க எனக்கு போன்பண்ணி கஷ்டம் தராத.” என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணி விட்டான். அவன் தன்னிடம் மாறி விட்டதாகச் சொன்னது பொய்யென்பதும், தன்னை இங்கே இலகுவாக அனுப்பி வைப்பதற்காக நடித்த நடிப்பென்பதும் புரிந்தது.

காற்றில் எந்தன் கீதம்……, (படம்>ஜானி)

சினேகிதிகள் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுவதா, ஆத்திரப் படுவதா, மீண்டும் அவனுக்கு அழைத்து கதைத்துப் பார்க்கலாமா, அல்லது அம்மா, அப்பாவுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லலாமா என்று எதுவுமே புரியவில்லை. ஆர்த்திகா மிகவும் குழம்பிப் போய் இருந்தாள். சுகந்தி சொன்னாள் “அழாதை ஆர்த்தி. இப்ப அப்பா, அம்மாவுக்கு சொல்லி அவர்களையும் கவலைப் படுத்த வேண்டாம். அந்த அமலன் அண்ணாவுக்கு சொல்லிப் பார்ப்பம். அவர் கதைச்சுப் பார்க்கட்டும்”. ஆர்த்திகாவுக்கும் அதுவே சரியென்று பட்டது. அமலன் அண்ணாவுக்கு போன்பண்னி விடயத்தைச் சொன்னார்கள். அண்ணாவுக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது.

அண்ணா கார்த்திக்குடன் பேசியபோதும், கார்த்திக் ஆர்த்திகாவிடம் சொன்னதையே உளறிக் கொண்டிருந்தான். பலமுறை சுகந்தி, அண்ணா, ஆர்த்திகா எல்லோரும் எப்படி எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தும், கார்த்திக் திருப்பி திருப்பி கிளிப்பிள்ளை மாதிரி, தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு இவர்கள் குரலைக் கேட்டதுமே தொலைபேசியை நிறுத்தத் தொடங்கினான். இதற்குப் பிறகும் ஒளித்துப் பிரயோசனமில்லை என்பதை உணர்ந்ததும் அப்பா, அம்மாவிடம் விடயத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கும் இது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. அம்மா, அபி அழத் தொடங்கி விட்டார்கள். கார்த்திக்கை திருமணம் பேசியவர்கள் மூலமாகவும், மற்றும் அவனது உறவினரும், ஐரோப்பாவில் வாழ்பவர்கள் மூலமாகவும், எல்லா விதமாகவும் கதைத்துப் பார்த்தார்கள். எதுவுமே சரி வரவில்லை. அவன் தனது பிடியில் இருந்து கொஞ்சம் கூட விலகி வரத் தயாராயில்லை.

அமலன் அண்ணாவும் இப்போதுதான் கொஞ்சம் அதிக அக்கறையுடன் அவனது இடத்தில் இருக்கும் ஒரு சிலரைப் பிடித்து அதிகமாய் அவனைப் பற்றி விசாரித்த போது, அவனுக்கு கெட்ட பழக்கங்கள் என்று எதுவும் இருப்பதாய் தெரியவில்லை என்றாலும், அவனுக்கு சினேகிதர்கள் என்று சொல்லிக் கொள்ள எவரும் இல்லை என்பதும் தெரிய வந்தது. அவனுக்கு திருமணம் நடந்ததோ, அவன் இலங்கை போய் வந்ததோ கூட அங்கிருக்கும் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆர்த்திகாவுக்கு தாங்கள் வந்து வீட்டில் இறங்கிய அன்று கூட, வீட்டினுள் மின்விளக்குக் எரிந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. தான் இங்கேயே இருப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கத்தான் இதுவோ என்றும் தோன்றியது.

இனி என்ன செய்வது என்று அமலன் அண்ணா தனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரை கலந்தாலோசித்தார். வழக்கறிஞரோ, அவன் ஆர்த்திகாவை எந்த ஒரு கொடுமைக்கும் ஆளாக்கி இருக்கவில்லை என்ற நிலையில், அவனுக்கு விருப்பமே இல்லை என்று சொல்வானானால், விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி விட்டார். ஆர்த்திகாவும், “இனி இவனுடன் எப்படி சேர்ந்து வாழ்வது. நான் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளுறன்” என்று சொன்னாள். ஆனால் விவாகரத்துக்கு அவள் விண்ணப்பித்தால், தொடர்ந்து ஸ்வீடனில் அவள் இருக்க முடியாமல் போகும் என்பதையும் வழக்கறிஞர் சொன்னார்.

ஆர்த்திகாவுக்கு இப்போ என்ன செய்வது என்று புரியவில்லை. ‘இங்கிருந்து திருப்பி அனுப்பினால், எப்படி மீண்டும் இலங்கையில் போய் உற்றார், உறவினர் முகத்தில் விழிப்பது? ஏளனம் செய்வதற்கென்றே இருக்கும் ஒரு சிலரை எப்படி சமாளிப்பது? இதனால் அபியின் கல்யாணமும் சரி வராவிட்டால் என்ன செய்வது?’ என்று பல கேள்விகள் அவளைக் குடைய ஆரம்பித்தது.

அதனால், மீண்டும் கார்த்திக்கிடம் அண்ணா போன்செய்து பேசிப் பார்த்தார். “உங்கட வாழ்க்கையில இனிமேல் ஆர்த்திகா வர மாட்டா. ஆனால் இப்ப நீங்க விவாகரத்து செய்தால், அவளுக்கு இங்க இருக்க நிரந்தரமான விசா கொடுக்க மாட்டாங்களாம். அதால அந்த நிரந்தர விசா கிடைக்கும் வரைக்குமாவது உதவி செய்யுங்கோ”. அதற்கும் அந்த கல்லுளிமங்கன் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டான். “நான் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதையெல்லாம் செய்து கொண்டிருந்தால், திருப்பி இலங்கை போய் நான் இன்னொரு கல்யாணம் செய்யேலாது” என்றான். சுகந்திக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது “செய்த ஒரு கல்யாணத்தையே காப்பாற்றத் தெரியேல்லை. இவருக்கு இன்னொரு கல்யாணமோ? யார் இவருக்கு இனி கல்யாணம் பேசப் போகினம்?”. ஆர்த்திகா பேச்சிழந்து போய் மெளனமாகி விட்டாள். ‘ஏன் ஆண்டவன் என்னை இப்படிச் சோதிக்கிறான்’ என்று நொந்து கொண்டாள். அவளுக்கு செத்துப் போய் விட வேண்டும் போலிருந்தது.

சுகந்திதான் அவளுக்கு அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தாள். “இந்த அறிவு கெட்டவனுக்காய் நீ எதுக்கு உன்னையே வருத்திக் கொள்ளுறாய். அவனை விடு. இனி உன்ரை வாழ்க்கைக்கு என்ன செய்யலாம் எண்டு யோசிப்பம். அவனில்லாட்டி வாழ்க்கையே இல்லையா என்ன? ஒரு நல்லவனுக்காய் அழுதாலும் இருக்கு. இவனுக்காக அழுதால் நமக்குத்தான் பாவம். அவனைத்தான் நல்ல ஒரு சைக்கெயாட்ரி்ஸ்ட்டிட்டை போகச் சொல்ல வேணும்” என்பாள். வழக்கறிஞர் சொன்னதன்படி, விவாகரத்துக்கும் விண்ணப்பித்து விட்டு, இங்கேயே இருப்பதற்கு விசாவும் கேட்டு விண்ணப்பித்தார்கள்.

அடிக்கடி இந்தப் பாடலை சுகந்தி போடுவாள். இருவருமாய், அதன் அர்த்தங்களை முழுமையாக உள்வாங்கி கேட்க முயல்வார்கள்.

ஒவ்வொரு பூக்களுமே……., (படம் ஆட்டோகிராஃப்)

ஆர்த்திகாவும், சுகந்தியுமாய் பழையபடியே தமது நட்பை பலப் படுத்திக் கொண்டு, சந்தோசமாயிருக்க முனைந்தார்கள். சுகந்தி பல்கலைக் கழகத்துக்குப் போகும் நேரத்தில் ஆர்த்திகா சமைப்பாள், பாடல்கள் கேட்பாள், படம் பார்ப்பாள். இப்படி ஏதாவதொன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாள். சுகந்தி வந்ததும் இருவருமாய் வெளியே நடப்பதற்கு, கடைக்கு, படத்திற்கு என்று எங்காவது போவார்கள். வீட்டில் இருக்கும் வேளையில் சி.டி.யில் நல்ல பாடல்களை போட்டு விட்டு, இருவருமாய் செஸ், ஸ்கரபிள் என்று எதையாவது எடுத்து வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டுக்களில் இருந்தால் இருவருக்கும் நேரம் போவதே தெரியாது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் விடயங்கள் எல்லாம் சுகந்தி ஆர்த்திகாவுக்கு சொல்லுவாள். கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்த்திகாவும் சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தாள்.

இந்த நிலையில் அவளுக்கு இங்கே விசா தர முடியாது என்று நிராகரித்து கடிதம் வந்தது. சுகந்தி அழ ஆரம்பித்தாள். ஆனால் ஆர்த்திகாவோ “கவலைப் படாத சுகந்தி. நான் இலங்கைக்குப் போய் அங்க ஏதாவது வேலை தேடிக்கொள்ளுவன். எனக்கும் இந்த உலகத்தில வாழ ஏலும். அபிக்கு நிச்சயம் கல்யாணம் சரி வரும். என்ரை வாழ்க்கையோட அபியின்ரை வாழ்க்கையை போட்டுக் குழப்பிக் கொள்ளாத நல்ல மனிதர்களும் நிச்சயமாய் இருப்பினம்” என்று ஆறுதல் சொன்னாள். “நான் உனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்துல நீ எனக்கு ஆறுதல் சொல்லுறாய் ஆர்த்தி. உனக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கை கிடைக்கும்” என்று அழுதாள் சுகந்தி. “உன்னோட இங்க இருந்த இவ்வளவு நாளும் நானும் நல்ல சந்தோசமாய்த்தான் இருந்தன் சுகந்தி. நீ படிச்சு முடிச்சுட்டு இலங்கை வந்தால் நாங்கள் மீண்டும் அங்க இதே நட்போட இருப்பம். நீ வராட்டாலும் என்ன, எங்கட நட்பு ஒருநாளும் மாறாது. அவரவர் வாழ்க்கை எண்டு ஆகிட்டாலும், சாகும்வரைக்கும் இதே நட்போட இருப்பம்” என்றாள்.

ஆர்த்திகாவும் மீண்டும் இலங்கைக்கு வந்து சேர்ந்தாள். அம்மாவும், அபியும்தான் தாங்க முடியாமல் அழுது தீர்த்தார்கள். ஆர்த்திகா அவர்களுக்கும் ஆறுதல் சொன்னாள். மிகவும் உறுதியுடனே வேலை தேட ஆரம்பித்தாள்.

அன்று ஒருநாள் மதிய உணவு முடித்து விட்டு எல்லோரும் ஓய்வாக இருந்த ஒரு மாலைப் பொழுது. அவர்களது உறவினர் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார். பொதுவில் சுக நல விசாரிப்புக்கள் முடிந்ததும், “நான் உங்களிட்டை ஆர்த்திகான்ரை வாழ்க்கை, எதிர்காலம் பற்றிக் கதைக்க வேணும்” என்றார். அப்பா விரக்தியாக “அதைப்பற்றிக் கதைக்க என்ன இருக்குது இனி. அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே. நானே என்ரை மகளின்ரை வாழ்க்கையை அவசர புத்தியால பாழாக்கிப் போட்டன்” என்றார். உடனே ஆர்த்திகா “ஏன் அப்பா அப்படிச் சொல்லுறீங்கள். எனது வாழ்க்கை ஒண்டும் பாழாகேல்லை அப்பா. நீங்கள் பாழாக்கவும் இல்லை. அந்த கார்த்திக்கோடயே இருந்து கஷ்டப்படாம நான் மீண்டு வந்ததே பெரிய விசயம்தானே” என்றாள். அதற்கு வந்த உறவினரும் “அதுதானே. நடந்ததை மறந்துட்டு நடக்க வேண்டியதைப் பாருங்கோ. உங்களுக்கு மயூரனைத் தெரியும்தானே” என்றார். “யாரது மயூரன்?” இது அம்மாவின் கேள்வி. அப்பா கேட்டார் “யாரந்த கனடாவுக்குப் போன மயூரனைச் சொல்லுறீங்களோ?”. “ஓம், அவனேதான். உங்களுக்கே தெரியும். நல்ல பிள்ளை அவன். இளம் வயசிலயே மனைவியை துரதிர்ஷ்டவசமாய் இழந்திட்டான். ஆர்த்திகாவுக்கு நடந்த வி்சயங்களை யாரோ மூலம் கேள்விப்பட்டிருக்கிறான். அவ தன்னைக் கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்வாவா என்று அன்றைக்கு போன் பண்ணி என்னட்டை கேட்டான். நானும் உங்களிட்டை கேட்டுச் சொல்லுறதா சொல்லி இருக்கிறன். என்ன சொல்லுறீங்க”. “இப்படி வந்து திடீரெண்டு கேட்டால் என்னத்தை சொல்லுறது” அப்பாவும், அம்மாவும் ஒரே குரலில் சொன்னார்கள். “அதுவும் சரிதான். அவசரம் ஒண்டுமில்லை. நீங்கள் எல்லாரும் நல்லா யோசிச்சு, முக்கியமா ஆர்த்திகாவோட சேர்ந்து யோசிச்சு, முடிவைச் சொல்லுங்கோ. நல்ல பதிலைச் சொல்லுவீங்கள் எண்டு எதிர் பார்க்கிறன்” என்று சொல்லி விட்டுப் போனார் அவர்.

இவர்களுக்கும் மயூரனை முன்பே தெரியும்தான். ஆர்த்திகாவை விட ஏழு வயது மூத்தவன். மிகவும் நல்லவன். யுத்த காலத்தில் மனைவியை இழந்து, பின்னர் கனடாவுக்கு போய் விட்டான். அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆர்த்திகாவிடமே கேட்டார். எப்படியாவது தனது மகளின் வாழ்க்கை சீர்ப்படாதா என்று உருகிக்கொண்டிருந்தார். தான் சரியாக விசாரிக்காமல் விட்டதால் தனது மகளின் வாழ்வே பாழாகி விட்டதே என்ற குற்ற உணர்ச்சி வேறு அவரை வாட்டிக் கொண்டிருந்தது. “நீ என்னம்மா சொல்லுறாய் ஆர்த்தி?” என்று அப்பா கேட்டபோது, “அப்பா எதுக்கும் இப்ப அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பம். முதலில் சரியாக விசாரிக்காமல் நான் பட்ட கஷ்டம் எல்லாம் போதும். விசாரித்து விட்டு முடிவு சொல்லலாம்” என்றாள். “ஓம், அப்படித்தான் செய்ய வேணும்” என்று அம்மாவும் சொன்னாள்.

ஆர்த்திகாவும் இதுபற்றி சுகந்தியிடம் போன்பண்ணி கேட்டாள். சுகந்திக்கும் மயூரனைத் தெரியும் என்பதால் அவளும், “அவர் நல்லவர்தானே. எதுக்கும் நானும் எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரிக்கிறன், எல்லாம் சரி வந்தால் சரியென்று சொல்லு” என்றாள். எப்படியாவது ஆர்த்திகாவின் வாழ்க்கை நல்லபடி அமைந்து விடவேண்டும் என்று அவளும் மனதுக்குள் என்னேரமும் பிரார்த்தித்தபடியே இருந்தாள். அவர்கள் எல்லோரும் விசாரித்த வரைக்கும் மயூரன் நல்லவன் என்றே தெரிந்தது.

ஆர்த்திகா முதலில் நிறைய தயங்கினாள். மயூரனே தொலைபேசியில் அழைத்து  ஆர்த்திகாவுடன் கதைத்தான். “உங்களுக்கு நடந்த எல்லாம் கேள்விப்பட்டனான். என்ன செய்வது சிலரை எப்பவுமே புரிஞ்சு கொள்ள முடியாது. நடந்ததை மறந்திட்டு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குங்கோ. உங்கட வாழ்க்கையில கூட வரும் நல்ல ஒரு துணையாக என்னால இருக்க முடியும்” என்று சொன்னான். அவளும் இறுதியில் தனது சம்மதத்தை தெரிவித்தாள். மயூரனும் இலங்கைக்கு வந்து, மிகவும் எளிமையாக அவளைத் திருமணம் செய்து கூட்டிச் சென்றான். அவர்களது வாழ்வு மிகவும் இனிமையாக ஆரம்பித்தது. தனது வாழ்வில் கடந்து போன வருடங்களில் எத்தனை எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று ஆர்த்திகா நினைத்துக் கொண்டிருந்தாள்.

கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தவள், குழந்தை அருண் நித்திரையில் இருந்து எழுந்து பின்புறமாய் தத்தி தத்தி நடந்து வந்ததை கவனிக்கவில்லை. கிட்ட வந்த அருண் “அம்மா” என்று அழைத்ததும், திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள். அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டாள். அவன் அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு ஊஞ்சலாடினான். அவளும் அவனைத் தூக்கி கொஞ்சியபடி பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

சின்ன சின்ன வெண்ணிலவே………., (படம்> கண்ணாடிப் பூக்கள்)

குருவி சொன்ன கதை!

Posted On மே 20, 2005

Filed under எனது கதை

Comments Dropped leave a response

குருவி சொன்ன கதை!!

சுவரிலே மாட்டியிருந்த கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை ‘கூ கூ’ என்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. ‘அட, அதற்குள் மணி ஒன்று ஆகி விட்டதா?’ என்று அகல்யா தனக்குள் கேட்டுக் கொண்டாள். காலை எழுந்து முற்றம் கூட்டி முடிக்கவே ஒரு மணித்தியாலம் எடுத்தது அகல்யாவுக்கு. அவர்கள் வீட்டிற்கு முன்னால் பெரிய முற்றம். வெள்ளை வெளேரென்று, மிகவும் அழகாக இருக்கும் வெண்மணல் முற்றம். அந்த வீட்டை அப்பா கட்ட நினைத்த போது அந்த வளவு வெறும் பள்ளக் காணியாகத்தான் இருந்தது. அதற்கு செம்மண் வாங்கி கொட்டி நிரப்பி விட்டு, அதன் மேலாக, கடற்கரை மணலும் வாங்கி கொட்டியிருந்தார் அப்பா. பூங்கன்றுகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் மட்டும் செம்மண் நிரப்பியபடி விட்டிருந்தார்கள். அகல்யாவும், அம்மாவுமாக இணைந்து அங்கே விதம் விதமான பூக்கன்றுகளை வைத்து, அதற்கு நீர் இறைத்து பராமரித்த நாட்கள் அவளது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.

அகல்யா வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கிப் பார்த்தாள். உச்சி வெயில் அகோரமாக எரித்தது. வெள்ளை மணல் நெருப்பாய் காலில் சுட்டது. அம்மா நெல் அவித்து, முற்றத்திலே பாயில் பரவி இருந்தார். நெல் மணிகளை உண்ண காகம் வந்து விடுமே என்று, நீண்ட தடி ஒன்று காகம் கலைப்பதற்காக சுவரில் சாத்தப்பட்டு இருந்தது. காகம் கலைப்பதே சில சமயம் பெரிய வேலையாக இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு காகமும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவற்றிற்கும் இந்த வெயிலைக் கண்டு பயம் வந்து விட்டது போலும் என்று அகல்யா எண்ணிக் கொண்டாள்.

அப்பா வேலை முடிந்து வருவதற்கு இன்று இரவாகி விடும் என்று கூறிச் சென்றிருந்தார். எனவே அம்மாவும், அகல்யாவுமாக நிதானமாக பல கதைகளும் பேசியபடியே வீட்டு வேலைகளை முடித்து, மதிய சமையலையும் முடித்து, சாப்பிட்டும் ஆயிற்று. அகல்யாவால் நாட்டு சூழ்நிலை காரணமாக ஆறு மாதமளவில் வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் அவளுக்கு அம்மாவிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தது. அவளுக்கு வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா விடயங்களையும் சொல்லி ஆக வேண்டும். அப்பா கூட அவர்களை கேலி செய்வார், “சினேகிதிகளிடம் கூட இப்படி வாய் ஓயாமல்தான் பேசுவாயா?” என்று. அம்மாதான் அவளுக்கு மிக நெருங்கிய சினேகிதி. அதற்குப் பிறகுதான் மற்ற சினேகிதிகள்.

முற்றத்திலே வீட்டில் இருந்து பத்தடிகள் தள்ளி அடர்ந்து படர்ந்த மாமரம். அநேகமாக மதிய உணவை முடித்த பின்னர் அனைவரும் அந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்வார்கள். வீட்டுக்குள் இருப்பதை விட இந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. இன்று அவள் வந்து மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவும் அங்கே வந்து, அருகிலிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டார். இருவரும் மீண்டும் அவள் ஊரில் இல்லாதபோது, ஊரில் நடந்த புதினங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா அப்படியே சரிந்து வாங்கில் படுத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.

அப்போது சின்னஞ் சிறிய குருவி ஒன்று அடிக்கடி தங்கள் தலைக்கு மேலாக அந்த மாமரத்திற்கு வந்து வந்து போவதை அகல்யா அவதானித்தாள். எதற்கு அந்த இத் குருவி வந்து வந்து போகிறது என்று குறிப்பாகப் பார்த்தபோதுதான், அங்கே ஒரு குருவிக் கூடு இருப்பதைக் கண்டாள். அதற்குள் குருவிக் குஞ்சுகள் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. ஆனால் எப்படி பார்ப்பது, அவள்தான் அவ்வளவாய் உயரம் கிடையாதே. கொஞ்சம் தூரமாகப் போய் நின்று எம்பிப் பார்த்த போது, அந்த கூட்டுக்குள் இருந்து வெளிப்பக்கமாக அந்தக் குருவிக் குஞ்சுகள் சின்னஞ்சிறிய அலகுகளை அகலத் திறப்பதைப் பார்க்க கூடியதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் போகத்தான் அவளுக்குத் தெரிந்தது, அங்கே வந்து போவது ஒரு குருவி அல்ல, இரண்டு குருவிகள் என்று.

ஒரு குருவி வந்து விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த குருவி உணவுடன் வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடே, இவை அந்தக் குஞ்சுகளின் அம்மாவும், அப்பாவுமாகத்தான் இருக்கும்” என்று அம்மாவிடம் சொன்னாள்.

எத்தனை சிறிய குருவிகள், அவைகள்தான் எத்தனை பொறுப்புடன், குழந்தைகளுக்குஉணவூட்டுகின்றன. அம்மா சொன்னார், “அந்த குருவிக்குப் பெயர் பிலாக்கொட்டை குருவி” என்று. பலாக்கொட்டை போலிருப்பதால் பலாக்கொட்டைக் குருவி எனப் பெயர்வந்திருக்கலாம். பலாக்கொட்டை பேச்சுவழக்கில் பிலாக்கொட்டையாகிவிட்டது.அந்தக் குருவிகள், வந்து வந்து உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே, நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அகல்யாவின் பெரியம்மாவின் மகன், ரூபன் சைக்கிளில் வந்தான். அகல்யா அக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து லீவில் வந்திருக்கிறார் என்றால், அவனும் முக்கால்வாசி நேரம், சித்தி வீட்டிலேயேதான் இருப்பான். சகல கதையும் பேசி அரட்டை அடிப்பதில் அவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும்.

இன்றைக்கு அந்தக் குருவிகளைச் சுற்றிச் சுற்றியே அவர்களது சம்பாஷணை அமைந்திருந்தது. ரூபன் நல்ல உயரம். ஆறு அடிக்கும் மேலே, மெல்லிய ஒடிந்துவிடுவது போன்ற உடல் அமைப்பு. அகல்யா கூட அவனைக் கேலி செய்வாள், “எலும்புக்கு மேல் தோலைப் போர்த்தி வைத்திருக்கிறாயா?” என்று. பதிலுக்கு அவனும் அகல்யாவை, “குண்டுப் பூசணிக்காய்” என்று கேலி செய்வான். கொஞ்சம் எட்டிப் பிடித்தால், அவனுக்கு அந்தக் குருவிக்கூடு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அவனும் அந்தக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக, அந்தக் கூடு இருந்த கிளையைப் பிடித்து, மெதுவாக கீழ் நோக்கி இழுத்து உள்ளே எட்டிப்பார்க்க முயன்றான்.

எங்குதான் இருந்தனவோ அந்தக் குருவிகள். இரண்டும் விரைவாகப் பறந்து வந்து ரூபனைச் சுற்றிச் சுற்றி பறந்த படி ‘கீ கீ கீ’ என்று கத்தின. கிளையைவிட்டு விட்டு ரூபன் பதறினான். அகல்யாவும், அம்மாவும் கூடப் பதறித்தான் போனார்கள். அந்தக் குருவிகள் இரண்டும் பறந்த வேகமும், கத்திய கத்தலும், அவை எத்தனை கோபமாக இருக்கின்றன என்பதை காட்டின. அவை ரூபனைக் கொத்திவிடுவன போல இருந்தன. அந்தக் கத்தலுக்கு அகல்யா பயந்தே போனாள். தங்களது குஞ்சுகளைப் பிடிக்கப் போகின்றான் என்று நினைத்துத்தான் அவை அத்தனை கத்தல் போட்டன. நல்ல வேளையாக, சிறிது நேரம் கத்தி விட்டு, அவை ரூபனை விட்டு அகன்றன.”குருவிகள் அகன்று விட்டனவே என்றுவிட்டு, மீண்டும், அவை என்ன செய்கின்றன என்று மூவருமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தக் குருவிகள் இரண்டும் உணவு கொண்டு வருவதை நிறுத்தி விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தன. கூட்டுக்கு அருகில் சென்று அமர்வதும், கத்துவதும், மீண்டும் தூரமாகச் சென்று வேலியுடன் இருந்த நாவல் மரத்தில் அமர்வதுமாக இருந்தன.

‘இவை ஏன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிட்டன, ஏன் சுற்றிச்சுற்றி கத்திக் கொண்டே இருக்கின்றன’ என்று அகல்யாவும், ரூபனும் திகைத்துப் போயிருந்தார்கள். மிகவும் கவலையுடன் அந்தக் குருவிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரூபனுக்கு, ‘தன்னால்தானே இப்போ அந்தக் குருவிக் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லை’ என்று ஆதங்கமாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அம்மா மட்டும் எதையோ உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தார்.

இப்படியே சில நிமிடங்கள் கரைந்தது. அந்தக் குருவிக் குஞ்சுகளும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. அவற்றுக்கு பசியாகவும் இருக்கலாம். என்ன செய்வது என்று புரியாத நிலையில், குருவிக்குஞ்சுகளுடன் சேர்ந்து அகல்யாவும் ரூபனும் கூட துடித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் ஒரு குருவிக் குஞ்சு மெதுவாக வெளியே பறந்து வந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாமரக் கிளைகளில் பறந்து பறந்து உட்கார்ந்தது. அப்போது, அந்த குருவிகள் நாவல் மரத்துக்கு தூரமாக போக, குஞ்சும் அங்கேயே பறந்து, அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டது. அதற்குப் பிறகு ஒரு குருவி, அந்தக் குஞ்சைக் கூட்டிக் கொண்டு பறந்து பறந்து தூரமாகச் செல்ல ஆரம்பித்தது. மற்ற குருவி, தொடர்ந்தும், மற்ற இரு குஞ்சுகளையும் வெளியே பறக்கச் செய்யும் முயற்சியில் இருந்தது.

‘அதுதான் அம்மாக் குருவியோ?’ என்று அகல்யா நினைத்துக் கொண்டாள்.இப்படியே மேலும் ஒரிரு மணி நேரம் ஓடி முடியும்போது, மற்ற இரு குஞ்சுகளும் கூட மெதுவாக கிளம்பிப் பறக்க ஆரம்பித்தன.

ஆபத்து என்று உணர்ந்த பின்னர், அந்தக் குருவிகள் எத்தனை சாமர்த்தியமாக அந்த குஞ்சுகளை தம்முடன் அழைத்துச் சென்று விட்டன என்று நினைக்கையில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது அகல்யாவுக்கு. ‘குஞ்சுகளுக்கு உணவைக் கொடுக்காமல் ஏன் இந்தக் குருவிகள் குஞ்சுகளைத் தண்டிக்கின்றன?’ என்று எண்ணி நொந்து கொண்டிருந்த அகல்யாவுக்கு, இப்போதுதான் அந்தக் குருவிகளின் சாதுர்யம் புரிந்தது. இந்தச் சிறிய குருவிகளுக்கு இத்தனை புத்திசாலித்தனமா? வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.

‘உணவு கொடுக்காமல் குஞ்சுகளைப் பட்டினி போட்டாலும், அவை ஆபத்து என்று உணர்ந்த இடத்தில் இருந்து, குஞ்சுகளை எப்படியோ கூட்டிச் சென்றுவிட்டனவே? ”நமது பெற்றோர்கள்கூட நமக்கு கஷ்டமாக இருக்கும் சில விடயங்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது நமது நன்மைக்காகத்தானே?’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

அம்மா மட்டும், மெதுவாக புன்னகை புரிந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முதலிலேயே அம்மாவுக்குப் புரிந்திருந்ததோ? இதுதான் அனுபவம் அம்மாவுக்கு தந்திருக்கும் முதிர்ச்சி போலும்’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

‘நேரம் போனதே தெரியவில்லை. இனியாவது எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்போம்’ என்று சொன்னபடியே அம்மாவீட்டினுள் சென்றார். அகல்யாவும், ரூபனும் பிரமிப்பிலிருந்து மீளாமல் குருவிகள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு, எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.