என் உயிர்ச் சினேகிதி!
எனது மகள் என்னிடம் “யார் உங்களுடைய best friend?” என்ற கேள்வியைக் கேட்கும்போது, நான் உடனே சொல்லும் பதில் ‘ஜெயமணி’. அவளை நான் சந்தித்தது இலங்கையில் தாதியர் பயிற்சிப் பாடசாலையில். பல்கலைக்கழக அனுமதி கிடைக்க முதல் (நாங்கள் பரீட்சைகள் எழுதி முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பல்கலை அனுமதிக்காகக் காத்திருந்தோம். அந்த இடைவெளியில், தாதியர் பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே பழக்கமானவள்தான் இந்த ஜெயமணி. அவளுக்கு நான் வைத்திருந்த பெயர் ‘ஜெசி’. அவளது பெயரின் முதலெழுத்தையும், தகப்பனார் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வைத்த பெயர்.
எப்படி நாம் சினேகிதிகள் ஆனோம் என்று யோசித்துப் பார்க்கின்றேன். அவளும் நானும் அறைத் தோழிகளும் இல்லை. ஆனால் வகுப்பில் அருகருகே அமர்ந்திருப்போம். உயரத்தின்படி அமர்த்தினார்களா, அல்லது பெயர் முதலெழுத்துப்படி அமர்த்தினார்களா என்பது சரியாக நினைவில் இல்லை. பெயர் ஒழுங்கில் என்றால் J, அடுத்தது K என்றபடியால் அருகருகே அமர்ந்ததாக நினைவு. மேலும், மருத்தவமனைக்குப் பயிற்சிக்குப் போகும்போது, ஒரே பிரிவுக்குப் போய் வருவோம். இதனால் நெருக்கமான நண்பிகள் ஆனோம்.
எனக்குப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தபோது, நான் தாதியர் பயிற்சியை விட்டு விலகிப் போவதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தபோது, அவளும், வேறு பலரும், ஏன் அனைவருமே பல்கலைக்கழக படிப்பை இழக்க வேண்டாம் என்று அறிவுறித்தியதால், விட்டுவிட்டுப் போய் விட்டேன். ஆனால் எங்களிடையேயான அன்பு மட்டும் என்றும் மறையாமல் இருந்து வருகின்றது. நாட்டுச் சூழ்நிலை காரணமான அவளது இடமாற்றத்தால், சிலகாலம் தொடர்பேயில்லாமல் போயிருந்தோம். ஆனால் அன்பு இருந்தால், அது எப்படியும் எம்மை மீண்டும் இணைக்குமல்லவா? அவள் கனடாவிற்கும், நான் நோர்வேக்கும் வந்த பின்னர், ஒரு மாதிரி எப்படியோ தொடர்பை மீண்டும் பெற்று விட்டோம்.
நான் பல்கலைக்கழகத்திற்குப் போன புதிதில், இருவரும் ஒவ்வொருநாளும் கடிதப் பரிமாற்றம் செய்து கொள்வோம். “From Jesy” என்று கடித உறையில் எழுதி மடல்கள் வரும்போது (ஒருவேளை ஜெசி என்பது ஆண்பெயர்போல் தெரிந்ததோ என்னவோ), பலருக்கும் எனக்கு காதலர் உண்டோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது :). பல்கலைக்கழகத்தில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளுக்கு எழுதுவேன். அவளும் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடக்கும் விடயங்களை எனக்கு எழுதுவாள்.
நாளொன்றுக்கு அனுப்பப்பட்ட மடல்கள், இரண்டு நாட்களுக்கு ஒன்றாகி, மூன்று நாட்களுக்கு ஒன்றாகி, கிழமைக்கு ஒன்றாகி, மாதத்துக்கு ஒன்றாகி, ஒரு கட்டத்தில் நின்றே போனது :(. அவளுக்கு வந்த காதல்தான் இதற்குக் காரணமோ என்று, கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது :). பின்னர் நாட்டுச் சூழலில் அவள் இந்தியா போய்விட, தொடர்பை இழந்தோம்.
இந்த உயிர்ப்புப் பக்கத்தில் ஏதோ ஒரு பதிவில் இவளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எந்தப் பதிவில் என்பது நினைவில் இல்லை. இப்போ இவளைப்பற்றி எழுதக் காரணம் உண்டு :). 33 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த அவளை இந்த முறை கனடாப் பயணத்தில் கண்டு வந்தேன். கண்டதில் எனக்குண்டான மகிழ்ச்சி அளவில்லாதது :).
தாதியர் பயிற்சிக் காலத்தில் சாப்பிடப் போவது, வகுப்புகளிற்குப் போவது, மருத்தவமனைக்குப் போவது என்று ஒன்றாகவே செய்து வந்தோம். மிக வேகமாகச் சாப்பிடும் பழக்கம் கொண்ட நான் அவளுடன் சேர்ந்து மிக மெதுவாக உண்ண ஆரம்பித்தேன். இப்போது அவளை விடவும் மெதுவாக உண்ணுகின்றேன் என்று நினைக்கின்றேன் :).
நான் எனது அன்பை வெளிப்படையாகக் காட்டும் இயல்பு கொண்டிருந்தேன். எனவே அவளை விட்டுப் பிரிந்து பல்கலைக்குச் செல்ல நேர்கையில் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எனவே சிலசமயம் எனக்கு அவள் மேல் இருக்கும் அன்பு, அவளுக்கு என்னிடம் இல்லையோ என்றும் எண்ண வைத்ததுண்டு. ஆனால் நான் செல்லும் நாளிற்கு முதல் நாள் அவளது கவலையையும் அறிய முடிந்தது. நான் விலகிப் போகும் நாளன்று நன்றாக அழுது தீர்த்துவிட்டு வெளியே போய் விட்டேன். அதுவரை அவள் அழவில்லையென்றே நினைவாக உள்ளது. ஆனால், ஏதோ ஒன்றை மறந்துவிட்டு நான் திரும்பி வர வேண்டி இருந்தது. அப்போது வந்து பார்த்தால் அவள் அழுது கொண்டிருந்தாள். சினேகிதி அழுகின்றாளே என்ற கவலையையும் மீறி, அவளுக்கும் என்னைப் பிரிவதில் கவலைதான் என்பதை எண்ணி ஒரு மகிழ்ச்சி மனதுக்குள் வந்து போனதை மறுக்க முடியாது :).
நேர வேறுபாடு காரணமாக அடிகக்டி பேசிக் கொள்வது இல்லையென்றாலும், இருவரும் நமது பிறந்த நாளன்று மட்டும், அது என்ன நாளாக இருந்தாலும், எப்படியும் நேரத்தைச் சரிப்படுத்தி, பேசிக் கொள்வோம். இந்த ஏப்ரல் மாதம் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, அவள் பெரிய இரு குழந்தைகளுக்குத் தாய். நானும் ஒரு பெரிய குழந்தைக்குத் தாய். அவளின் குடும்பத்தினரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அதைவிட மகிழ்ச்சி, எனது நினைவுகளை அவள் சேகரித்து வைத்திருந்து, மறக்காமல் என்னிடம் காட்டியது. ஆம், அவளது கையொப்ப ஏட்டை (autograph) கவனமாக வைத்திருந்து காட்டினாள். அதன் முதல் பக்கத்தைத் திறந்தபோது, ‘என்ன இது, அவளது வரவேற்புச் செய்தியில், அவளுடைய கையெழுத்து, என்னுடையது போலவே இருக்கின்றதே’ என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது, அது என்னுடைய கையெழுத்தேதான். நான்தான் எழுதிக் கொடுத்திருக்கின்றேன் என்று.
இவை தவிர, அவளது இந்தக் கையொப்ப ஏட்டில் 5 பக்கங்களில் எனது அன்பைக் கொட்டி, கையொப்பமிட்டிருக்கின்றேன். தவிர ஒரு பக்கத்தில் ஏதோ கொஞ்சம் கோவத்தில்வேறு எழுதி வைத்திருக்கின்றேன். ஆனால் அது எந்த சந்தர்ப்பத்தில், என்ன கோவத்தில் எழுதியது என்று இருவருக்கும் நினைவில் இல்லை. அதுவும் நல்லதுதான். மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் நினைவில் கொள்வதும், ஏனையவற்றை மறந்துவிடுவதும் நல்லதுதானே? 🙂
எனது உயிர்ச் சினேகிதிக்காக ஒரு தனிப்பதிவு போட வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கின்றது இன்று.
Risk taker!
Abseiling என்ற வார்த்தை அண்மைக்காலம்வரை எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மகள் abseiling செய்துவிட்டு வந்தபோதுதான் அந்தச் சொல்லே எனக்கு அறிமுகமானது :). Abseiling படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் Paraseiling செய்தபோது எடுத்த படங்கள் உள்ளன. 🙂
கடந்துபோன ஒரு வருடத்திற்குள், சில adventure activities குடும்பத்துடன் செய்திருந்தோம். கடந்த டிசம்பரில் துபாய் போயிருந்த நேரம் Hot air baloon ride, Sand dune drive என்பனவும், பெப்ரவரியில் Florida போயிருந்தபோது Parasailing செய்தோம். Orlando வில் Disney world இன் Epcot centre theme park இலும் பல துணிச்சலான விளையாட்டுக்கள் செய்திருந்தோம்.
ஒரு Risk taker உடைய அம்மாவாக இருப்பதில் பெருமைதான். நானும் படித்துக்கொண்டிருந்த காலத்தில் risk taker என்று பெயர் பெற்றிருந்தேன் :).
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விஜேவர்த்தன எனப்படும் இந்த விடுதியில் சிலகாலம் இருந்தோம். விடுதி அறைகள் இரு புறமும் அமைந்திருக்க, அறைகளின் கதவுகள் நடுவில் ஒரு corridor இல் திறக்கும். வெளிப்புறமாக ஜன்னல்கள் இருக்கும். ஜன்னல்களுக்குக் கீழாக ஒரு சிறிய கட்டு மட்டுமே இருக்கும். யாராவது திறப்பை உள்ளே வைத்துவிட்டு, அறைக்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று தவித்துக் கொண்டிருந்தால் நான் உதவிக்குப் போவேன். அல்லது என்னைத் தேடி வந்து அழைத்துச் செல்வார்கள் :). இரண்டாம், மூன்றாம், அல்லது நான்காம் மாடிகளிலுள்ள அறையில் யாருக்காவது இவ்வாறு நிகழ்ந்தால், குறிப்பிட்ட அந்த அறைக்கான ஜன்னல் திறந்திருந்தால், பக்கத்து அறைக்குள் சென்றோ, அல்லது அதற்கு அடுத்த அறைக்குள் சென்றோ, அந்த அறையின் ஜன்னல் வழியாக கட்டடத்தின் வெளியே வந்து, அந்தச் சிறிய கட்டின்மேல் காலை வைத்து, சுவரைப் பிடித்தபடியே நடந்து, பூட்டப்பட்ட அறையின் திறந்திருக்கும் ஜன்னலூடாக உள்ளே குதித்துச் சென்று திறப்பை எடுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து கதவைத் திறந்து வெளியே வருவேன். இதனை ஒரு தடவை அக்கா கண்டுவிட்டு நன்றாகத் திட்டினார்.
இந்தப் பாலம் பேராதனை, சரசவி உயன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான இரயில் பாதையில் இருக்கும், மகாவலி கங்கைக்கு மேலாகச் செல்லும் ஒரு பாலம். இந்தப் பாலத்தின் இரயில் பாதை கீழே மூடப்படாமல் இருக்கும். ஆனால், இதில் வலப்பக்கமாக நடந்து செல்லக் கூடியதாக ஒரு சிறிய பாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நான் அதில் நடக்காமல் நடுவில் இரயில் பாதையிலேயே நடப்பேன். முழுத்தூரமும் அப்படி நடப்பதில்லை :). அதுவும், சிலசமயம், குறுக்காக இருக்கும் பலகைகளில் காலை வைக்காமல் தண்டவாளத்தின் மேல் நடந்து செல்வேன். கால் வழுக்கி விழுந்தால் கீழே மகாவலி கங்கைக்குள் போக வேண்டியும் வரலாம். கூட வருவோர்களிடம் திட்டு வாங்கினாலும், அப்படி செய்வதில் ஒரு விருப்பம் இருந்தது.
ஆனால் இங்கே பனிக்காலத்தில் வரும் இந்தப் பனியுறைந்த வழுக்குப் பாதை என்னவோ பயம் கொள்ள வைக்கின்றது :).
இன்றைய கனவு!
வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் :(. நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்……. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
ஈழத்து முற்றத்தில் நானும்!
முற்றம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம். ஈழத்தில், எமது வீட்டு முற்றத்தை நினைக்கும்போது, எத்தனையோ இனிய நினைவுகள். அவற்றையெல்லாம் மீண்டும் எமது வாழ்வில் கொண்டு வர முடியுமா, முடியாமலே போய் விடுமா என்பதுதான் வருத்தம்.
முற்றத்து மாமரம், அதன் நிழலில் மதிய உணவுக்குப் பின்னரான ஓய்வெடுப்பு, முற்றத்தில் விளையாட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்தபடி, வானத்து நட்சத்திரங்களை இரசித்தது, நிலா வெளிச்சத்தில் அமர்ந்து பேசிச் சிரித்தது, அதே வெளிச்சத்தில் விளையாடியது, இரவு உணவை அம்மாவின் கையிலிருந்து பெற்று உண்டது. அது மட்டுமா, மதிய நேரத்தில் முற்றத்து கொதிக்கும் வெண்மணலில் சூடு தாங்காமல் வெறும் காலுடன் ஓடுவது….. இப்படி எத்தனை எத்தனை நினைவுகள், ம்ம்ம்ம்
அதுசரி, நான் என்னவோ சொல்ல வந்து, எதை எதையோ சொல்லிக் கொண்டு போறேன். நான் சொல்ல வந்தது ஈழத்து முற்றம் வலைப் பதிவுபற்றி :).
ஈழத்தின் பிரதேசவழக்குகள், பேச்சு வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், சரித்திரம் சம்பந்தமான விடயங்கள் போன்ற பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக, ஈழத்துமுற்றம் வலைப்பதிவு வந்திருக்கிறது.
ஈழத்து முற்றத்தில் 51 பதிவர்கள் (தற்போதைக்கு. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகின்றேன்) பங்களித்து வருகிறார்கள். அந்த பங்களிப்பாளர்களில் நானும் ஒருத்தி. நான் எழுதுவதென்னவோ மிகக் குறைவுதான் என்றாலும், ஒரு கூட்டு வலைப் பதிவில் நானும் எழுதுவதில் (ஏதொ ஒப்புக்கு சப்பாணியாக) மகிழ்ச்சி. அங்கே நானெழுதிய பதிவுகளை இங்கேயும் சேமித்து வைக்கும் எண்ணத்தில் இந்த பதிவு. 🙂 (ஏதோ பெரிசா எழுதிக் கிளிச்ச மாதிரி, இங்க சேமிப்பு வேறயா???
மரணத்தின் வாசனை!
இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.
புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.
புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.
இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?
மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!
எரியும் நினைவுகள்!
எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.
நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.
பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.
இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.
இப்படியும் ஒரு ஆசிரியர்!
இது இன்னொரு ஆசிரியர் சம்பந்தமான கதை. அவர் ஒரு தாவரவியல் கற்பிக்கும் ரியூஷன் ஆசிரியர். மிகவும் கெட்டிக்காரர்தான். ஆனாலும் அவரை எனக்கு அதிகமாய் பிடிப்பதில்லை. காரணமுண்டு. நானும் எனது தோழியும் எமது இடத்தில் இருந்து அவரது டியூஷன் வகுப்பிற்கு போகும்போது எப்படியும், மற்றவர்கள் எல்லாம் முதலே வந்து அமர்ந்திருப்பார்கள். அதனால் நமக்கு அனேகமான நாட்களில் கடைசி வாங்கில்தான் கிடைக்கும். அந்த ஆசிரியர் என்னவோ கடைசி வாங்கில் இருப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல் அடிக்கடி கொமெண்ட் அடிப்பார். இவர் சொல்லி நமக்கென்ன ஆகப் போகிறது, அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போகட்டும் என்று நாம் விட்டு விடுவோம்.
எனக்கு தாவரவியலில் மிகவும் பிடித்தமான பகுதி, பரம்பரையியல். ஒருநாள் அவர் அதில் ஒரு கணக்கு கேள்வியை கொண்டு வந்தார். அந்தக் கேள்வி வழக்கமான கேள்விகளை விட கொஞ்சம் வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வியை தந்துவிட்டு, மாணவர்களிடம் சவால் விடுவதுபோல் “எங்கே இந்த கேள்வியை முடிந்தால் செய்யுங்கள் பார்ப்போம்” என்றார். எல்லோரும் மூளையை பிசைய ஆரம்பித்தோம். எனக்கு பிடித்த பகுதி என்பதாலும், நம்மை குறைவாக மதிப்பிடும் இவரது சவாலை முறியடித்தே ஆக வேண்டும் என்பதாலும், நான் மிகவும் தீவிரமாக சிந்தித்து, அந்த கணக்கை செய்து முடித்து விட்டேன். என்னருகில் இருந்த சினேகிதி “உடனே அவருக்கு காட்டுங்கோ. இவருக்கு எப்பவும் எங்களில ஒரு குறைதான்” என்று தூண்டினார். நானும் கையை உயர்த்தினேன். அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார். காரணம் வகுப்பில் நான் அதிகமாக கதைப்பதில்லை (அந்த காலத்தில் அப்படித்தான் இருந்தேன், ஹி ஹி). வழக்கமாக் கேள்விகள் தந்து செய்வதற்கு விட்டாரென்றால், அருகில் வந்து சரியா என்று பார்ப்பார். அதே போல் இன்றைக்கும் வந்து பார்ப்பார் என்றுதான் நான் எதிர் பார்த்தது. ஆனால் அவரோ கரும்பலகையில் வந்து அந்த கணக்கை அனைவருக்கும் செய்து காட்டும்படி சொல்லி விட்டார். வகுப்பில் கிட்டத்தட்ட 60 பேர் வரையில் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் எனக்கு அத்தனைபேர் மத்தியில் முன்னே போய் கரும்பலகையில் எழுதுவது முடியாத காரியமாக இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது சினேகிதியோ, “இவருக்கு விடக் கூடாது. நீங்கள் போய் அதை செய்து காட்டி விட்டு வாங்கோ” என்று தள்ளி விட்டார். நானும் சரியென்று எழுந்து போனேன்.
வெண்கட்டி (அதுதானே chalk க்கு தமிழ்) யை கையில் தந்தார். நான் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தபோது, நான் பயத்தில் அழுத்திய அழுத்தத்தில் வெண்கட்டி உடைந்து உடைந்து விழுந்து கொண்டிருந்தது. எனவே இடை இடையே எழுத வேண்டிய வசனங்களைத் தவிர்த்து விட்டு, எப்படியோ ஒருமாதிரி கணக்கை மட்டும் செய்து முடித்து விட்டு வந்து அமர்ந்தேன். அவருக்கு தனது சவாலை முறியடித்தது, அதுவும் தான் குறைவாக மதிப்பிட்டு கூறும் பின் வாங்கிலிருப்பவர் ஒருவர் வந்து செய்து விட்டுப் போனது பெரிய அவமானமாகத் தெரிந்ததோ என்னவோ, நான் எழுதிய விதங்களில் வசனங்கள் வரவில்லையென்றும், அதனால் இதை ஏற்றுக் கொள்வது கடினம் என்றும் கூறினார். அவர் கூறியதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் ‘இதே போன்ற கேள்வி பரீட்சைக்கு வந்தால் எப்படி இடை இடையே வசனங்கள் எல்லாம் வைத்து எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியும்தானே’ என்று எண்ணிக் கொண்டேன். தொடர்ந்து என்ன வசனங்கள் இடையில் வர வேண்டும் என்று கூறி விட்டு, அன்றைய வகுப்பை அத்துடன் முடித்துக் கொண்டு போய் விட்டார்.
அவரைப் பார்த்து நான் அறிந்து கொண்டது ஒரு ஆசிரியர் எப்படி இருக்க கூடாதென்பது, ஹி ஹி.
சினேகிதியின் கதி!
[QUOTE]இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம்.[/QUOTE]
தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே வகுப்பில் நாங்கள் தோழிகள் ஐவர் இருந்து வந்தோம். இடை இடையே ஏதாவது கோப தாபங்கள், சின்ன சின்ன சண்டைகள் இந்த ஐவருக்கிடையேயும் வராமல் இருக்காது. அப்படி வந்தாலும் ஒரு சில மணி நேரங்களில், மிஞ்சிப் போனால் ஒரிரு நாட்களில் அந்த குழப்பம் தீர்ந்து ஒன்று கூடி விடுவோம். இருவருக்குள் குழப்பம் வந்தால், மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது, இந்த கோபம் காணாமல் போய் விடும்.இந்த ஐவரில் ஒருவரின் பெயர்தான் பேபி. அவள் வீட்டில் அவள் எட்டாவது கடைசிப்பிள்ளை. அப்பா, அம்மா, அண்ணாமார், அக்காமார் எல்லோருக்கும் செல்லக் குழந்தை. அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். பாடசாலைக்கு தனது புதிய புதிய விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் எடுத்து வருவாள். எல்லோருமாக விளையாடுவோம்.
ஒருதடவை அவளுக்கு சமையல் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டில் குட்டி குட்டி பாத்திரங்கள் வாங்கி கொடுத்திருந்தார்கள். அதை அவளும் தனது ஸ்கூல் பாக்கில் போட்டு எடுத்து வந்திருந்தாள். ஏதாவது ஃபிரீ பீரியட் வராதா, அவற்றை வைத்து விளையாட என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். நல்ல வேளை ஒரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை. அப்படி வராவிட்டாலும், வேறு யாராவது ஆசிரியர் வந்து சிலசமயம் எம்மை சங்கடத்தில் மாட்டி வைப்பார். நல்ல வேளையாக அன்று யாரும் அந்த வேண்டாத வேலையை செய்யவில்லை, ஹி ஹி.
நமது மேசைக்கு கீழே புத்தகங்கள் வைக்க கூடிய மாதிரி திறந்த பெட்டி மாதிரி (drawer?) ஒரு அமைப்பு இருந்தது. அந்த வகுப்பில் மூன்று மூன்று பேராக இருக்கும் மேசைகள். எங்களில் ஐந்து பேரில் மூவர் ஒரு மேசையிலும், மற்ற இருவர் அடுத்த மேசையிலும் இருப்போம். அந்த மேசையில் இருக்கும் மூன்றாமவர், நம்மை எல்லாம் விட ஒரு வயது கூடியவர். அவர் எமது குரூப்பில் இல்லை, அவரது குரூப் தனி. ஆனாலும் நல்லவர். ஒரு மேசையில் இருப்பவர்கள் மூவரும் ஒரு வீட்டினர் என்றும், அடுத்த மேசையில் இருந்த இருவரும் அவர்களது உறவினர் என்று பிரித்துக் கொண்டோம். ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் விசிட் போகப் போகிறோமாம். அதுபற்றி கடிதம் போடுவோம். நமது குரூப்பில் இல்லாதவர்தான் பியோன், அதாவது நமது கடிதம் எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுப்பார்.
அந்த விசிட்டுக்கு அந்த வீட்டில் சமையல் தடபுடலாய் நடக்கும். எதை சமைப்பது என்று கேட்கிறீர்களா? முதல் நாளே பேசி வைத்துக் கொண்டபடி, சாப்பிடக் கூடிய பொருட்கள், அவரவர் இஷ்டத்துக்கு எடுத்து வந்திருந்தோம். அந்த சமையல் பொருட்களில் கொய்யாக்காய், பிஞ்சு போஞ்சிக்காய் (பச்சையாய் சாப்பிடக் கூடியது), கரட் போன்ற பொருட்கள் அடக்கம். அவர்கள் சமைப்பார்கள். நாங்கள் விருந்துக்குப் போய் சாப்பிடுவோம். ஒரு மேசையிலேயே ஐவரும் நெருக்கி அடித்து உட்கார்ந்துதான் விருந்துச் சாப்பாடு. பிறகு அவர்களை நமது வீட்டுக்கு வரும்படி அழைப்பு வைத்து விட்டு வருவோம். பாத்திரங்கள் இடம் மாறி நமது வீட்டு கிச்சனுக்கு (அதுதான் மேசைக்கு கீழே, ஹி ஹி) வந்து விடும்.
இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நுழைந்ததும், அப்படி எல்லோரும் ஒரு மேசையில் உட்கார்ந்து என்ன செய்கிறோம் என்று கேட்டதும், இனிமேல் எந்த விளையாட்டுப் பொருட்களும் ஸ்கூலுக்கு எடுத்து வரக் கூடாது என்று சத்தம் போட்டதும் தனிக் கதை. அவர் சொன்னதுக்காக நாங்கள் கொண்டு போகாமல் விட்டு விட முடியுமா என்ன? அது எல்லாம் தொடர்ந்தும் நாங்கள் விளையாடிக் கொண்டுதான் இருந்தோம்.
சரி, அந்த பேபிபற்றி எழுத வந்து எதை எதையோ சொல்கிறேன் நான். என்ன செய்வது பழைய நினைவுகளுக்குப் போனால், இப்படித்தான். ஒன்றுடன் ஒன்று தொடுத்துக் கொண்டு, மாலை கோர்த்தது மாதிரி, ஒராயிரம் நினைவுகள் வரும்.
நான் சொல்ல வந்தது அந்த பேபிக்கு நடந்த கொடுமை பற்றியதாச்சே. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகியதும், புதிய இடத்துக்குப் போனதும், அதன் பிறகு சில காலத்தில் அவர்களது தொடர்பு விட்டுப் போனதும் பற்றித்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே. ஒரு சினேகிதியின் மூலம் நான் அறிந்த சோகக் கதைதான் இது. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகி வந்து பல காலத்தின் பின்னர், அந்த விஷயத்தை எனது அடுத்த சினேகிதி மூலம் அறிந்த போது எனக்கு நம்பவே முடியவில்லை. அத்தனை செல்லமாக வளர்ந்த பேபிக்கா இந்தக் கதி என்று மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, என்னை மிகவும் பாதித்தது. இவற்றிற்கு எல்லாம் காரணம் இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள். அதுவும் சில சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் என்பதுதான் வருந்தக் கூடிய விடயம்.
பேபி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதாலேயோ என்னவோ, அவள் படிப்பில் பெரிய ஆர்வமில்லாது இருந்தாள். விளையாட்டு, விளையாட்டு, எந்த நேரமும் விளையாட்டுத்தான். அதனால், அவளால் படிப்பிலும் கெட்டிக்காரியாக வர முடியவில்லை. அவள் அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. விளையாடுவதற்காகவே ஸ்கூலுக்கு வருவதுபோல் வந்து போவாள்.
அவளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்து விட்டதாம். திருமணம் முடிந்த சில காலத்தில் ஏதோ காரணத்தால், பேபிக்கு மன நிலை பாதிப்படைந்திருக்கிறது. அத்துடன் அவளுக்கு உடல் சுகவீனங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. அந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் ஒரு தீய சக்திதான் என்று நம்பிய அவர்களது உறவினர்கள், அவளை வைத்தியரிடம் அனுப்பாமல், அவர்களது மதம் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் என்ன மதம் என்பது அவசியமற்றது என நினைக்கிறேன். ஏனென்றால் வேறு பட்ட மதங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரும் இது ஒரு தீய சக்திதான் என்றும், இதற்கு தமது மத முறைப்படி சிலவற்றை செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.
பேபியை அதற்குப் பிறகு, வீட்டை விட்டு வேறு ஒரு இடத்தில் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும், அவளை அடித்து எல்லாம் துன்புறுத்தியதாகவும் கூட சொல்கிறார்கள். ஒரு நிலையில் அவளால் கதைக்க கூட முடியாமல் போய் விட்டதாகவும், இப்படியே அவளது நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் இறந்தே போனாளாம்.
ஒரேயடியாக இறந்து போயிருந்தாலாவது பரவாயில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து போயிருக்கிறாள் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். உண்மையில் இதுவும் ஒருவகையில் கொலைதானே?
இதில் அதிகம் வருத்தம் தரக்கூடிய விடயம், கணவனும், அவளை அத்தனை செல்லமாக வளர்த்த அப்பா, அம்மா, சகோதரர்கள் கூட அவளது கஷ்டத்தை புரிந்துகொண்டு, அவளைக் குணப்படுத்த வேறு முயற்சிகளை எடுக்காமல், அது எல்லாம் தீய சக்தியால் வந்த விளைவு, அதற்கு இதுதான் முடிவு என்று நம்பிக் கொண்டு இருந்ததுதான்.
அவளது அந்த அழகிய, குழந்தைத்தனமான முகம் இன்னும் என் நினைவில் பதிந்துள்ளது. .
எனது ஆசிரியர்!
ஆட்டோகிராஃப் இன் கதை சொன்னேன்தானே. அங்கே பக்கங்களைப் ஒவ்வொன்றாக புரட்டிச் செல்கையில், அழகான கையெழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆசிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அவரைப் பற்றி இத்தனை நாளும் எப்படி நினைக்காமல் இருந்துவிட்டேன் என்று ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன்.அந்தப் பாடசாலையில், நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு, புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம். எங்களுக்கு ஒரு புதிய வகுப்பாசிரியர் வரப் போகிறார் என்று சொல்லியிருந்தார்கள். வகுப்பிற்கு மட்டும் அவர் புதியவர் அல்ல, அந்தப் பாடசாலைக்கே புதிதாக வருகிறார் என்றதும், அனைவரிடமும் அவரைப் பார்ப்பதில் அதீதமான ஆவல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
முதலாம்நாள், முதலாம் பாடம், மிகவும் ஆர்வத்துடன், யார் வந்து நமது வகுப்பினுள் நுழையப் போகிறார் என்று காத்திருந்தோம். அந்த ஆசிரியர் மெதுவாக வந்து வகுப்பறையினுள் நுழைந்தார். மெல்லிய உருவம், பொது நிறத்தைக் கொண்டவர். சுமாரான உயரம். ஆனால், அவர் கண்களில் மட்டும் ஒரு ஒளி. அத்தனை மாணவர்களையும் கட்டிப் போடக் கூடிய ஏதோ ஒரு கவர்ச்சி. அவர் வகுப்பில் வந்து பேச ஆரம்பித்ததும், அனைத்து மாணவர்களும், ஏதோ ப்ரேயரில் இருந்ததுபோல், ஒரு சிறு சத்தமும் செய்யாமல் கேட்டுக்கொண்டு இருந்தோம். அன்று அவர் எந்த பாடமும் நடத்தவில்லை. முதல் பாடம் முழுமையும் நம்முடன் கதைத்தார்.
அவர் அப்படி என்ன கதைத்தார் என்று கேள்வி எழுகிறதா? நம்முடன் ஒரு நண்பனைப் போல், சகோதரன்போல், இதமாக, இனிமையாக பல விஷயங்களையும் கதைத்தார். அதுவரை காலத்தில் (ஏன் அதற்குப் பிறகும் கூட) அப்படி ஒரு ஆசிரியரை சந்தித்திருக்கவில்லை. மாணவர்களுடன் பல ஆசிரியர்கள் நட்புடன் பழக விரும்புவதேயில்லை. அப்படி பழகினால், மாணவர்கள் தம்மை மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். வேறு சில ஆசிரியர்கள் நட்புடன் இருக்க விரும்பினாலும், அதை காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரோ மிகவும் நட்புடன் பழகுவார்.
நாம் அனைவரும், அவர்மேல் அளவு கடந்த அன்பும், அதீத மரியாதையும் வைத்திருந்தோம் என்பதுதான் உண்மை. காரணம் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த அந்த ஒரு வருடமும், அவர் எங்களுடன் பழகிய விதம், அப்படி நம்மை அவர்பால் இழுத்து வைத்திருந்தது. அவரது குழந்தையின் பிறந்த நாளுக்கு நம்மைத்தான் முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார் என்பதே நமக்கு பெருமையாக இருந்தது. அவரது வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை நமக்கு. அவரால் நமது வகுப்பிற்கே ஒரு தனி மரியாதை இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
அவர் எனது ஆட்டொகிராஃப் இல் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பிக்கையிலேயே, அந்த வரிகள் மனப்பாடம் செய்தது போல் எனக்கு வந்தது. அது என்னவென்றால்…..
அன்புத்தங்கை கலா!
இறை நம்பிக்கையும், உண்மையும் மனித வாழ்வினைச் சிறப்புடன் பார்க்க உதவும் இரு கண்கள். இவைகட்கு ஒளி கொடுப்பது அன்பு. எனவே அன்பெனும் ஒளிகொண்டு, இறை நம்பிக்கை, உண்மை எனும் இரு கண்களாலும் மனித வாழ்க்கைப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி வீறுநடை போடுங்கள். வாழ்வின் வெற்றி உங்களுக்கே!
அண்ணன்,
அ.மு.அருணாசலம்.
இதை வாசிக்கும்போது எனது கண்கள் பனித்தன. எத்தனை அருமையாக ஒரு அண்ணனாக இருந்து இதை எழுதியிருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியும். ஆனால் அங்கே எந்த இடம் என்பது நினைவில் இல்லை. அதை விலாசத்தில் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால், அங்கேயும் ‘நு/கைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்’ என்றுதான் உள்ளது.
நாங்கள் இடம் மாறி யாழ் வந்த பின்னர் சில காலம் நானும் அவருக்கு கடிதம் போட்டிருக்கிறேன். அவரும் பதில் போட்டிருந்தார். ஆனால் எப்போது, எப்படி அந்த தொடர்பு விடுபட்டது என்பது சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்பு நின்று போனது.
அவருக்கு நம்மையெல்லாம் நினைவிருக்குமா என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் எம்மைப் போல் எத்தனை மாணவர்கள் வந்து போயிருப்பார்கள். எனது அப்பாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றியதால், ஒருவேளை நினைவில் வைத்திருப்பாரோ, என்றால் அதற்கும் சாத்தியமில்லை. காரணம், அவர் அந்த பாடசாலைக்கு வந்த வருடத்தில் அப்பா, ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் போய் விட்டார். அருணாசலம் மாஸ்டர் நமக்கு எடுத்த பாடம் கணக்கு. அதில் நான் நன்றாகவே செய்வதால், ஒருவேளை என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் அப்படி எத்தனை பேர் வந்து போயிருப்பார்கள். மேலும் எல்லோரையும் கணக்கை நன்றாகச் செய்யச்செய்யும் வல்லமை அவரிடம் உண்டே.
அவர்பற்றி அறிய மிகவும் ஆவலாயுள்ளது. ஒருவேளை இதை வாசிப்பவர்களில் அவரது உறவினர்களோ, அவரைத் தெரிந்தவர்களோ, ஏன் அவரது பிள்ளைகளோ கூட இருக்கக் கூடும். அப்படி யாராவது இருந்தால், தயவு செய்து எனக்கு அறியத் தாருங்கள்..