தற்கால மனிதன் – 11

Posted On ஏப்ரல் 26, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

( Sapiens தொடர்ச்சி)

கூட்டுக் கற்பனையும், மனிதனால் கட்டமைக்கப்பட்ட கருத்துருக்களும்!

ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று கூடி மனிதர்கள் எப்படி ஒத்துழைக்கிறார்கள்? இதன் அடிப்படை என்ன?

கற்பனையும், அதுவும் கூட்டுக் கற்பனையும் (Collective imagination), அந்தக் கற்பனையில் மனிதர்கள் வைக்கும் நம்பிக்கையுமே அவர்களை இணைக்கிறது.

நாம் ஒரே ஊரை/ நகரத்தை/ நாட்டை/ நிறுவனத்தை/ மதத்தை/ கொள்கையைச் சேர்ந்தவர்கள்
என்று பல் வேறுபட்ட நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் தனித்தனிக் கூட்டமாக இணைகிறான்.

ஜேர்மனியில் இருக்கும் Stadel Cave இல் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய சிங்க-மனிதனின் உருவம் (சிங்கத் தலையுடன் உள்ள மனித உருவம்) கண்டெடுக்கப்பட்டது. இது மனிதர்களால் இல்லாத ஒன்றைக் கற்பனையில் கண்டுகொள்ள முடியும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. மனிதனால் தாம் என்றுமே கண்களால் பார்த்திராத, நுகர்ந்து பார்த்திராத, தொட்டு உணர்ந்திராத விடயங்களை கற்பனையாக உருவாக்கி, அதனடிப்படையில் கருத்துகளை புதிதாகக் கட்டமைத்து, அவற்றை நம்பும் இயல்பும், அதுவும் கூட்டமாக இணைந்து ஏற்றுக் கொள்ளும் இயல்பும் மொழிப் பரிமாற்றம் மூலம் மிகச் சாத்தியமான ஒன்றாகியது.

ஒரு பன்னாட்டு நிறுவனமும் இவ்வாறே தொழிற்படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது குழுமம் இயற்பொருளாக (physical object) இல்லாதிருந்தாலும், அதனை நிறுவியவர், அதற்காக உழைப்பவர்கள், அதன் பயனீட்டாளர்கள் என அனைவரும் அந்த நிறுவனத்தின் பெயரில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒரு limited liability company யில் நிறுவனத்திற்குச் சொந்தக்காரரின் பெயரில் அல்லாது நிறுவனத்தின் பெயரிலேயே கடன் வாங்க முடியும். நட்டமேற்பட்டால், நிறுவனத்தின் பெயரிலேயே அதைக் காட்டவும் முடியும். ஏதாவது தவறு ஏற்பட்டால், நிறுவனத்தின் பெயரிலேயே வழக்குப் பதிவு செய்யலாம். நிறுவனத்தை மூடினாலும், அதில் பணி புரிந்தவர்கள் உயிர் வாழ்வார்கள். ஆனால் அந்த நிறுவனம் உடல், பொருள், ஆவி அற்றது. அப்படி ஒரு நிறுவனம் இயங்குவது மனிதர்களின் கூட்டுக் கற்பனையும் நம்பிக்கையும்.

(பணம் என்பதை எடுத்தால் வெறும் காகிதத் தாளுக்கு பெறுமதி இருப்பதாக, அதுவும் வெவ்வேறு எழுத்துகள் பொறித்தவுடன், ஒரே மாதிரியான தாள்களுக்கு வெவ்வேறு பெறுமதி இருப்பதாக எண்ணி அதை நம்புகிறோம். ஏன் ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, கடன் அட்டையை ஒரு இயந்திரத்தின் முன் காட்டிவிட்டதும் வாங்கிய பொருட்களுக்கு நாமும் பணம் செலுத்திவிட்டதாக நம்புகிறோம், கடைக்காரரும் பணம் பெற்றுக் கொண்டதாக நம்புகிறார்.)

புராணக் கதைகள், கட்டுக் கதைகள், மதங்கள் எல்லாம் இதன் வெளிப்பாடாகவே உருவாகின. ஒரு கதையைத் திறம்பட, அனைவரும் நம்பும்படியாகச் சொல்வது இலகுவானதல்ல. அப்படிச் சொல்வதில் வெற்றியடைந்துவிட்டால், அந்த நம்பிக்கை ஒரு அளவற்ற சக்தியை மனிதருக்குத் தரும். அதனடிப்படையில் மில்லியன் கணக்கில் ஒருவருடன் ஒருவர் எந்த அறிமுகமும் அற்றவர்கள் இணைந்து ஒரு பொது இலக்கை நோக்கித் தொழிற்படுவார்கள்.

பல விலங்குகள், ஏன் வேறு மனித இனங்கள் “கவனம், சிங்கம்” என்று மட்டுமே தனது குழுவுக்கு எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருக்க, பழங்குடி மனிதன் “சிங்கம் எமது குழுவைப் பாதுகாக்கும் புனித ஆவி” (Lion is the guardian spirit of our tribe) என்று சொன்னான். இந்தக் கற்பனைத் திறன் மனித இனத்திற்கே கை வந்த கலையாக உள்ளது. எதையெல்லாமோ சொல்லி, மிகப் பெரிய கூட்டத்தை மனிதனால் சேர்க்க முடிகிறது, அதையெல்லாம் கேட்டு நம்பிக்கையுடன் சேரக் கூட்டமும் தயாராக உள்ளது.

இந்தக் கற்பனையைப் பயன்படுத்தி நம் மனித இனம் பெரும் கூட்டமாக இயங்கிப் பல நல்ல காரியங்களை நிறைவேற்றுகிறது. ஆனால், இவ்வாறான கற்பனை சில சமயம் ஆபத்தாகும் அளவுக்கு கவனத்தைச் சிதறடிக்கக் கூடியதாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் சென்றாலும், இதனை பெரிய குழுக்களாக இணைந்து செய்யும்போது, அதிக எண்ணிக்கையினர் தெரிந்தவர், தெரியாதவர் என்ற வேறுபாடின்றி அனைவருடனும் இணைந்து மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் ஒன்றாக ஒத்துழைக்கும் திறனைக் கொண்டிருக்கிறார்கள்.

அதனாலேயே நமது மனித இனத்தால் இந்த உலகையே ஆள முடிந்தது என்கிறார் நூலாசிரியர்.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s