தற்கால மனிதன் – 10
(Sapiens தொடர்ச்சி)
புது மொழியும், வெட்டிப்பேச்சும் (gossiping)!
(Gossiping ஐ வெட்டிப்பேச்சு எனலாமா? சரியான தமிழ்ச் சொல் பிடிபடவில்லை).
நமது மனித இனம் தொடர்பாடலை இலகுவாக்க மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். தேனீக்கள், எறும்புகள் கூட எங்கே உணவு கிடைக்கும் என்பதை ஒரு தொடர்பாடல் முறை மூலம் தெரிவித்துக் கொள்கின்றன. குரங்குகள் மற்றும் பல விலங்குகள் வேறுபட்ட சத்தங்கள் மூலம் வேறுபட்ட செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன.
நமது மனித இனத்திடம் அறிவுப் புரட்சி மூலம் ஏற்பட்ட தொடர்பாடல் மொழி, ஏனைய விலங்குகளின் மொழியிலிருந்து வேறுபட்டதாய் இருந்தது.
- இந்த மொழி பல விடயங்களைத் தெளிவாகவும், விரிவாகவும் பகிர்ந்து கொள்ள உதவியிருக்கிறது. எ.கா. ஒரு குரங்கு தனது குழுவினருக்கு ஒரு சிங்கம் வருகிறது அல்லது கழுகு வருகிறது என்பதை வேறுபட்ட சத்தங்கள் மூலம் சொல்லும். கழுகு என்ற சத்தத்திற்கு ஏனைய குரங்குகள் மேலே அண்ணாந்து பார்க்கும். சிங்கம் என்ற சத்தத்திற்கு அவை தாவி ஓடி மரங்களில் ஏறிக்கொள்ளும். ஆனால் மனிதனோ எந்தத் திசையில், குறிப்பாக எந்த இடத்தில் சிங்கம் இருக்கிறது, என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வான். குழுவினர் தமக்குள் உரையாடி எந்தெந்த வழிகளால் அந்த இடத்திற்குப் போகலாம், சிங்கத்தை எப்படித் துரத்தலாம், துரத்திவிட்டு சிங்கம் துரத்திக் கொண்டு செல்லும் காட்டெருமையை எப்படி மடக்கிப் பிடித்து, வேட்டையாடி, தமக்கு உணவாக்கலாம் என்பதை முடிவு செய்வான்.
- மனிதர்கள் பயன்படுத்தும் மொழி மனிதனிடம் காணப்பட்ட, காணப்படுகின்ற gossiping இயல்பை அடிப்படையாகக் கொண்டு தொடர்பாடல் திறனைக் கூட்டியிருக்கும் என்கிறார் நூலாசிரியர். Gossiping என்பது அன்று தொட்டு இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தற்போதும் ஈமெயில்கள், செய்தித்தாள் பத்திகள், தொலைபேசி அழைப்புகள் என்று பலவற்றிலும் இந்த வெட்டிப்பேச்சைப் பார்க்கிறோம்தானே? (ஏன் நல்ல பல விடயங்கள் இருந்தாலும் முகநூல், வாட்சப் எல்லாவற்றிலும் சிலசமயம் நாம் வெட்டிப் பேச்சில் மும்முரமாக இருக்கிறோமல்லவா? 😅) நம் இன மனிதனுக்கு இந்த இயல்பு ஆரம்பத்திலிருந்து மிகவும் இயல்பாக வந்திருக்கிறது.
மதிய உணவு இடைவேளையில் சந்தித்துக் கொள்ளும் இரு வரலாற்றுப் பேராசிரியர்கள் உலகப் போர் பற்றியோ, அறிவியல் மாநாட்டின் சிறு இடைவேளையில் (a coffee break) சந்தித்துக்கொள்ளும் இரு அணு இயற்பியலாளர்கள் (nuclear physicists) குவார்க்கு (quark) பற்றியோதான் பேசிக் கொள்வார்களா என்று கேட்கிறார் நூலாசிரியர். சில சமயம் பேசிக் கொண்டாலும், (அதைவிட முக்கியமான 😜) ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்ட பணத்தை Lexus வாங்கப் பயன்படுத்திய சக ஊழியர் பற்றியோ, கணவன் தன்னை ஏமாற்றியதைக் கண்டு பிடித்த பேராசிரியை பற்றியோ, பீடாதிபதிக்கும், துறைத் தலைவருக்கும் இடையிலான சச்சரவு பற்றியோ மிகவும் சுவாரசியமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்கிறார். இந்த gossiping சக மனிதர்களிடையேயான பிணைப்பைக் கூட்டி, அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை உள்வாங்கி, அவர்களை வெற்றிகரமான பெரிய குழுவாக இயங்க உதவுகிறது என்கிறார். (Gossiping இற்கு இப்படியொரு நேர்மறை விளக்கத்தை இப்போதுதான் பார்க்கிறேன் 😀).
ஆனாலும் இந்த மொழித் தொடர்பாடல் அல்லது gossiping மூலம் கூடும் கூட்டத்துக்கும் ஒரு வரையறை உண்டு. இந்த முறையில், ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பரிச்சயம் ஏற்பட்டு 150 பேரளவில் இணையலாம்.
ஏனைய மனித இனங்கள் உட்பட விலங்குகள் அனைத்தும் இந்த 150 எண்ணுக்குள்ளேயே கூட்டமாக இணைந்திருந்தன/ இணைந்திருக்கின்றன.
அப்படியிருக்க நமது இனம் மட்டும் எப்படி இந்த குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று கூடி ஒத்துழைக்கிறார்கள்? இதன் அடிப்படை என்ன? ஒரே நாட்டைச் சேர்ந்தோர், ஒரே மதத்தைச் சேர்ந்தோர், ஒரே கொள்கையைச் சேர்ந்தோர், ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தோர் என்று பல வகையில், எத்தனையோ அறிந்த, அறியாத முகங்களுடன் கூட இணைந்து தொழிற்படுகிறார்கள், பயணிக்கிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், உலகளவில் இலட்சக்கணக்கில் மனிதர்கள் இணைந்து தொழிற்படுகிறார்கள்.
மிக மிக அதிகமான எண்ணிக்கையில் கூட்டமாக மனித இனம் எப்படி இயங்குகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
மறுமொழியொன்றை இடுங்கள்