தற்கால மனிதன் – 9
(Sapiens தொடர்ச்சி)
அறிவுப் புரட்சி (Cognitive revolution)!
நமது இனத்தவர் 300,000 ஆண்டுகளுக்கு முன்னரே உலக அரங்கில் தோன்றியிருந்தாலும், மிக நீண்ட காலத்திற்கு பெரிய மாற்றங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தத் தொன்மையான நம் மூதாதையர்களின் மூளை அமைப்பு நமது மூளை அமைப்பை விட வேறுபட்டதாக இருந்திருக்கலாம். தற்போதைய மனிதர்களிடம் இருக்கும் கற்கும் திறன் (learning), நினைவாற்றல் (remembering), தொடர்பாடும் ஆற்றல் (communicating) அந்தத் தொன்மையான மனிதர்களிடம் இல்லாது இருந்திருக்கலாம். அதனால் , நீண்ட காலமாக நமது மனித இனம் ஏனைய மனித இனங்களைவிட மேலதிகமாக எந்த அனுகூலங்களையும் கொண்டிருக்கவில்லை.
பின்னர் 70000-30000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே அறிவுப் புரட்சி ஏற்பட்டது. படகு, விளக்கு, அம்பு-வில், ஊசி போன்ற புதிய கண்டு பிடிப்புகள் ஏற்பட்டன. சிங்க-மனிதனின் உருவச் சிலை போன்ற கலை வடிவங்கள் உருவாக்கப்பட்டன. மதங்கள் உருவாகின. “நீ எனக்கு இரண்டு கடற் சிப்பிகள் தந்தால் நான் உனக்கு ஒரு பாசிமணி மாலை தருவேன்” என்பது போன்று வணிகம் ஆரம்பித்தது. ஒரு குழுவுக்கு ஒருவன் தலைவன், ஏனையோர் அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் போன்ற
சமூக அடுக்கு உருவாகியது. அந்தக்கால மனிதர்களிடம் நவீன மனிதர்களிடம் இருக்கும் அறிவாற்றல், படைப்பாற்றல் இருந்திருக்கிறது. அப்போதிருந்த சூழ்நிலைக்கேற்ப அந்த ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது.
இம்மனித இனத்தில், இப்படியான அறிவுப் புரட்சி ஏற்படக் காரணம் தற்செயலாக ஏற்பட்ட மரபணுப் பிறழ்ச்சியினால் மனித மூளையில் ஏற்பட்ட மின்பிணைப்பு மாற்றங்களாக இருக்கும். இதனை Tree of knowledge mutation என்கிறார்கள். இந்த மாறுதல் மூலமாக மனித இனம் ஒரு புது வகை மொழியை தம்மிடையே பயன்படுத்தி தமது தொடர்பாடல் முறையை முன்னேற்றிக் கொண்டது.
முன்பிருந்த வேறு மனித இனங்களில் ஏற்படாமல் தற்கால மனித இனத்தில் இந்த மரபணுப் பிறழ்ச்சி ஏன் ஏற்பட்டது? நமது இனத்திற்கு யோகமடித்துக் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான் 😀.
மறுமொழியொன்றை இடுங்கள்