தற்கால மனிதன் – 8
(Sapiens தொடர்ச்சி)
உணவுச் சங்கிலியில் நமது இனம்!
நமது இனத்தவர் உணவுச் சங்கிலியில் ஒரு நடுநிலையிலேயே பல்லாண்டு காலம் வாழ்ந்தார்கள். 300000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவில் கூர்ப்படைந்த தற்கால மனிதர்கள் ஆப்பிரிக்க – ஆசியப் பகுதிகளில் தோன்றினார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழல் தொகுதியிலேயே வாழ்ந்தார்கள்.
இப்போதிலிருந்து 70000 – 30000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் படகு, விளக்கு, அம்பு-வில், சூடான ஆடைகளைத் தைத்துக்கொள்ளத் தேவையான ஊசி போன்றவற்றைக் கண்டு பிடித்தார்கள். இந்தக் காலகட்டமே அறிவுப் புரட்சிக்கான காலமாக அமைந்தது.
கிட்டத்தட்ட 45000 ஆண்டுக்கு முற்பட்ட காலம் வரையில், அவுஸ்திரேலியா போன்ற கடலினால் சூழப்பட்ட உலகின் பல பகுதிகள் மனித இனத்தினது காலடி படாமல் இருந்தன. மனித இனத்தின் காலடி மட்டுமல்லாமல், மனித இனத்துடன் கூடவே சூழலைப் பங்கிட்டு வந்த வேறு விலங்கினங்களோ, தாவர இனங்களோ அந்த இடங்களில் இருக்கவில்லை. அந்த இடங்கள் தமக்கென ஒரு தனித்துவமான சூழல் தொகுதிகளைக் கொண்டிருந்தன. எப்போது மனித இனம் தனது அறிவினைப் பயன்படுத்தி, கடலைக் கடந்து சென்று, முற்றிலும் புதிய சூழல் தொகுதிகளுக்குத் தம்மை இசைவாக்கப்படுத்தித் தம்மைத் தக்க வைத்துக் கொண்டதோ, அப்போதே மனித இனம் உணவுச் சங்கிலியின் உச்சியை நோக்கி நகர்ந்து மிக விரைவான வளர்ச்சியை அடைந்தது.
இன்னும் சரியாகச் சொன்னால் அவுஸ்திரேலியாவில் தம் காலடித் தடங்களைப் பதித்த மனித இனம் சூழலுக்குத் தம்மை இசைவாக்கம் செய்ததுடன், சூழலைத் தமக்கேற்றபடி மாற்றியமைக்க ஆரம்பித்தார்கள். அந்த இடங்களில் ஏற்கனவே இருந்த பல விலங்கினங்கள், தாவர இனங்கள் அழிவடைய நேரிட்டது. தற்கால மனித இனம் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள், சூழல் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆரம்பித்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்