தற்கால மனிதன் – 7
(Sapiens தொடர்ச்சி)
மற்ற மனித இனங்களுக்கு என்ன நடந்தது?
நமது இனம் உலகின் வேறு பகுதிகளுக்கு நகரத் தொடங்கியதும் வேறு இனத்தவருடன் வேட்டையாடல், உணவு சேகரித்தல் என்பவற்றில் போட்டி ஏற்பட்டது. நமது இனத்திடம் மற்ற இனங்களிடம் இருந்ததை விடவும் சிறந்த தொழில் நுட்பமும், சமூகமாக இயங்கும் திறமையும் இருந்ததால் ஏனைய இனங்களால் ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போயினர். நியாண்டதால் என்ற மனித இனம் நம்மவர்களைவிட உடல் வலிமை கூடியவர்களாக இருந்தமையால் முதல் தடவை நம்மவர்கள் தோற்றுப் போனார்கள். ஆனாலும் நம்மவர்கள் மிகப் பெரிய கூட்டமாக, சமூகமாக ஒருங்கிணைந்து, திட்டமிட்டு, புதிய வியூகம் வகுப்பதில் வல்லவர்களாக இருந்தமையால் அவர்களால் நியாண்டதால் மனிதர்களைப் பின்னர் வெற்றிகொள்ள முடிந்தது.
மற்ற மனித இனங்களிலிருந்து ஒரு சிலர் மட்டும் நம் இனத்துடன் கலந்து விட்டனர்.
சகிப்புத் தன்மை என்றால் என்ன என்று கேட்கக் கூடிய நமது இனம் வாழ்வுக்குத் தேவையான வளங்களுக்கான போட்டியில், ஏனைய மனித இனங்களை வன்முறை மூலம் அழித்து ஒழித்திருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக உள்ளது. நமது இனத்துக்குள்ளேயே வெறும் தோல் நிறத்தை வைத்து, மதத்தை வைத்து, நாட்டை வைத்து இன்னும் எதையெல்லாமோ காரணம் காட்டி இன்றைய காலகட்டத்தில் வன்முறையில் நம் மக்கள் ஈடுபடும்போது, எமது முன்னோர்கள் மட்டும் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் வேறொரு இனத்திடம் பரிதாபம் காட்டியிருப்பார்களா? அவர்களிடம் மட்டும் சகிப்புத்தன்மை இருந்திருக்கவா போகிறது?
கடந்த 10000 ஆண்டுகளில் நமது இனம் மட்டுமே இவ்வுலகில் வாழும் மனித இனமாக இருக்கிறது. ஏனைய இனங்களும் இப்போது இருந்திருந்தால், என்ன மாதிரியான சமூகம், பண்பாடு, அரசியல் இப்போது இருந்திருக்கும்?
அவர்கள் அழிந்து போனதால், நமது இனமே படைப்பின் உருவகம் போலவும், நமக்கும் விலங்கு இராச்சியத்தின் ஏனைய உயிரினங்களுக்கும் இடையில் பென்னாம் பெரிய இடைவெளி இருப்பது போலவும் கற்பித்துக் கொள்வது நமக்கு இலகுவாகி விட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்