தற்கால மனிதன் – 6
தற்கால மனிதன் – 6
(Sapiens தொடர்ச்சி)
நாம் இனக்கலப்பில் (interbreeding) உருவானவர்களா?
150000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை மனிதர்கள் (Homo) ஒரு விளிம்புநிலை உயிரினமாகவே இருந்தனர். எல்லா மனித இனங்களும் சேர்த்தே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 மில்லியன் வரையிலேயே இருந்தனர். இதில் நமது இனமும் (sapiens) உலகின் ஒரு மூலையில் தானுண்டு, தன் வேலையுண்டு என்றுதான் வாழ்ந்து வந்தது.
70000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் இனத்தவர் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபியாவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். (அவர்களுக்கு வேறு இடம் பார்க்கும் ஆசை தோன்றியதோ…. அல்லது குறிப்பிட்ட இடத்தில் சனத்தொகை கூடியதும் தேவைகளை நிறைவு செய்வதில் இடைஞ்சல் ஏற்பட்டதோ… ஏதோ ஒரு காரணம்.) பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏற்பட்ட நகர்வினால் நமது இனம் உலகம் முழுவதும் பரந்துவிட்டது.
அப்படி அவர்கள் நகர்ந்தபோது, அங்கங்கே ஏற்கனவே இருந்த ஏனைய மனித இனங்கள் இல்லாது போயின. காரணம் என்ன? இரண்டு விதமான கொள்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
முதலாவது கொள்கை சொல்வது: அங்கிருந்த இனங்களுடன் நமது இனம் கலந்து, பிணைந்து இனப்பெருக்கம் செய்து (interbreeding) இரண்டறக் கலந்து விட்டார்கள். இது உண்மையாக இருந்தால், நமக்கும் வேறு ஒரு மனித இனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
இரண்டாவது கொள்கை சொல்வது: நமது இனத்திற்கும், ஏனைய இனங்களுக்கும் இருந்த மரபியல் இடைவெளி, பாலம் போட முடியாத அளவுக்கு இருந்தமையால் இனப்பெருக்கம் சாத்தியமில்லை. அவர்களுக்கும் நம்மினத்தவருக்கும் இடையில் இருந்த ஒவ்வாமை, மற்றும் வெறுப்பு இன அழிப்புவரை போயிருக்கலாம். அதனால் முன்னர் இருந்த இனம் அழிந்துபோய் நமது இனத்தால் மாற்றீடு (replacement) செய்யப்பட்டுவிட்டது.
இரண்டாவது கொள்கையே பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாகவாவது இனங்களுக்கிடையிலும் இனப்பெருக்கம் (interbreeding) நடந்திருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
புதைபடிவங்களில் பெறப்பட்ட ஐரோப்பாவில் வாழ்ந்த நியண்டர்தால் மனித இனத்தின் 1- 4% டீ.என்.ஏ நமது இனத்தின் டீ.என்.ஏ யுடன் ஒத்திருந்ததைக் காட்டி ஆய்வறிக்கை 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினரின் டீ.என்.ஏ யானது, சைபீரியாவின் டெனிசோவா குகையில் வாழ்ந்த ஒரு மனித இனத்தின் டீ.என்.ஏ யுடன் 6% ஒத்திருந்தது.
எனவே நாம் முழுமையாக பழைய இனங்களுடன் இரண்டறக் கலக்காவிட்டாலும், வேறு இனத்துடன் குறைந்த வீதத்திலாவது கலந்து கொண்டவர்கள்தான். பழைய மனித இனங்களின் ஒரு சில அதிர்ஷ்ட மரபணுக்கள், தற்கால மனித இனமான sapiens எனும் விரைவு வண்டியில் சவாரி எடுத்துக் கொண்டன.
(வேறு இனத்துடனான (species) கலப்பில் உருவான நாம், இப்போது நமது இனத்திற்கு உள்ளேயே கலந்து கொள்ள விரும்பாமல் சாதி, மதம், நிறம் என்று எத்தனை வேறுபாடுகளை உருவாக்கி வைத்து அட்டகாசம், ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணுகின்றோம்.)
மறுமொழியொன்றை இடுங்கள்