தற்கால மனிதன் – 5
தற்கால மனிதன் – 5
(தொடர்ச்சி)
மனிதனின் கட்டுக்குள் வந்த நெருப்பு!
300000 ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் தன் நாளாந்தத் தேவைக்கு நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது. வெளிச்சத்திற்கு, சூட்டுக்கு, ஏனைய விலங்குகளுக்கு எதிரான கருவியாக என்று பல தேவைகளுக்கு நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு புல்வெளியையே நினைத்தால் எரித்துவிடத் தொடங்கினர். எரிந்து முடிந்த நிலத்தில் இறந்து கருகிப் போன விலங்குகள், பருப்புகள், கிழங்குகள் என்பவற்றைச் சேகரித்து உணவாக்கிக் கொண்டனர்.
இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட நெருப்பு சமையல் பயன்பாட்டுக்கும் வந்தது. மனித இனத்தால் இயற்கையான வடிவில் உண்ணப்பட முடியாத உணவுகளையும் சமைத்து உண்ண இந்த நெருப்பு உதவியது. சமையலானது உணவை இலகுவாக சமிபாடடையும் நிலைக்கு மாற்றியதுடன், கிருமிகள், ஒட்டுண்ணிகளை அழித்து மனிதனுக்கு உதவியது.
இதனால் மனிதனால் பல்வேறு உணவு வகைகளை உண்ண முடிந்ததுடன், உணவிற்காக நீண்ட நேரம் செலவிடத் தேவை இருக்கவில்லை. சிறிய பற்கள், குறுகிய குடலே போதுமானதாக இருந்தது. அதிகமான ஆற்றலைப் பயன்படுத்தக்கூடிய குடல் குறுகியதால், அதற்காகப் பயன்படும் ஆற்றலையும் சேர்த்து மூளைக்கு வழங்க முடிந்தது. இதனால் மூளை மேலும் நன்றாகத் தொழிற்பட முடிந்தது.
ஒரு தனிப் பெண்ணால் சில மணி நேரத்திற்குள் ஒரு காட்டையே அழித்துவிடக் கூடிய ஆற்றல் கிடைத்தது. ஏனைய விலங்குகளைப்போல் அல்லாமல், மனித இனம் நெருப்பைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கத் தெரிந்து வைத்திருந்தமையால் ஏனைய விலங்குகளை விட மேலான படிநிலைக்கு உயர்ந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்