தற்கால மனிதன் – 4
(Sapiens தொடர்ச்சி)
மனிதனும் சுற்றுச் சூழலும்!
மனிதக் குழந்தைகள் முழு விருத்தியடைய முன்னர் பிறப்பதனால், அவற்றைச் சீராட்டிப் பாராட்டி, பாதுகாத்து, அறிவு புகட்டி வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. குழந்தையைப் பெறும் பெண்ணால் தனியாக முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாத சூழலில், குடும்பம், சமூகம் என்ற கட்டமைப்பு உருவானது. இந்தச் சமூகக் கட்டமைப்பு, பிணைப்பு அதிகரிக்கையில் மனித இனம் கூட்டாக இயங்கத் தொடங்கி, பல இன்னல்களைத் தாண்டி உயர்வான நிலையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டது.
மனிதர்களது சமூக வாழ்க்கை முறையே நாம் உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்குமான நமது திறவுகோல் என்கிறார் நூலாசிரியர்.
மேலும் குழந்தைகள் முழு விருத்தியடையாமல் பிறப்பதால் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பார்கள். வளர்க்கும், அறிவூட்டும் பொறுப்பு பெரியவர்கள் கையில் இருப்பதனால், வேறுபட்ட கொள்கைகளுடன், முரண்பாடுகளுடன் குழந்தைகள் பெரியவர்கள் ஆகிறார்கள் (அல்லது ஆக்கப்படுகிறார்கள்).
இத்தனையும் இருந்தும் பல்லாயிரம் ஆண்டுகாலமாக மனித இனம் பெரிய விலங்குகளுக்கு பயந்தும், ஒடுங்கியும் வாழ்ந்து வந்தது. தாவரங்கள், சிறு விலங்குகள் போன்றவற்றை உணவாக உட்கொண்டு வந்தனர். 400000 ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் பெரிய விலங்குகளையும் வேட்டையாடி உண்ணத் தொடங்கினர். அதிலும் 100000 ஆண்டுகளுக்கு முன்னரே, மிக விரைவாக வளர்ந்து உணவுச் சங்கிலியின் உச்சியை அடைந்தனர்.
ஏனைய விலங்குகள் படிப்படியாக மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் பின் உயர் படிகளை அடைந்தன. அதனால் சுற்றுச் சூழலுடன் ஒரு சமநிலை பேணப்பட்டது.
மனித இனமோ ஒரு பெரிய குதி குதித்து, பெரிய பாய்ச்சலுடன் மிகக் குறுகிய காலத்தில் உச்சிக்கு வந்தது. இதனால் சுற்றுச்சூழலால் மனிதனுடன் அனுசரித்துப் போக முடியவில்லை. மனித இனமும் சுற்றுச் சூழலுடன் அனுசரித்துப் போக முயற்சிக்கவில்லை. இது மனித இனத்தை ஒரு ஆபத்தான இனமாக்கி விட்டது.
இப்படி மனித இனத்தின் அவசரமான பாய்ச்சலே கொடிய போர்களிலிருந்து, சூழல் பேரழிவுகள் வரை கொண்டு வந்து விட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்