தற்கால மனிதன் – 3
(Sapiens தொடர்ச்சி)
எனது நீண்ட நாளைய கேள்விகளுக்கு இந்த நூலில் விடை கிடைத்தது.
அதி உயர் விருத்தியடைந்த மனித இனத்தில் சிக்கலான குழந்தை பிறப்பு ஏன்?
ஏனைய விலங்குகள் குட்டியை ஈன்று சில மணி நேரத்திற்குள் குட்டிகள் எழுந்து, ஓடியாடி விளையாடித் தானே தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி விடும்போது மனிதக் குழந்தைகள் மட்டும் சுதந்திரமாக இயங்க ஏன் நீண்ட காலம் எடுக்கிறது?
ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபட்டு மனித மூளை பெரிதாகவும், விருத்தியடைந்தும் செல்லத் தொடங்கியது. மனிதன் ஒரு சோடிக் கால்களை மட்டும் நகர்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு, நிமிர்ந்த நிலைக்கு வந்தமையால் கைகள் பல்வேறு மேலதிக பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படக் கூடியதாக இருந்ததுடன், பார்வை மட்டம் உயர்ந்து, எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முக்கியமாக மேலதிக ஆற்றல் பெற்ற கைகளைக் கொண்டு சிக்கலான செயற்பாடுகளைச் செய்வதுடன், பல நவீன கருவிகளையும் உருவாக்க முடிந்தது.
நிமிர்ந்த நிலையும், பெரிய மூளையும் வெற்றியை நோக்கிய பாதையைத் தந்தாலும், சில இடர்களையும் கூடவே தந்தது.
நிமிர்ந்த நிலைக்கு வந்து பெரிய பாரமான மூளையைத் தாங்க வேண்டி வந்தமையால் முதுகு வலி, கழுத்து வலியும் கூடவே வந்தது. பெண்களுக்கு இன்னும் அதிக இடர் தரக் கூடியதாக, நிமிர்ந்த நிலைக்கு ஏற்ப இடுப்பெலும்பு சிறியதாகி பிறப்புப் பாதை சுருங்கியது. எனவே பெரிய தலை கொண்ட குழந்தை பிறப்பின்போது, பிறப்பு சிக்கலாகி, பெண்களின் இறப்பு வீதம் அதிகரித்தது. அதனை ஈடுகட்ட மனிதக் குழந்தைகள் தமது முழுமையான விருத்தியை அடைவதற்கு முன்பே, சிறிய உருவில் பிறக்க ஆரம்பித்தன. அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் தாய் தப்பிப் பிழைத்து மேலதிக குழந்தைகளை உருவாக்க முடிந்ததால், அந்த இயல்பு இயற்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்றது.
மனிதக் குழந்தைகள்
முழு வளர்ச்சியின்றிப் பிறப்பதால் தாயின் உடலை விட்டு வெளியேறிய பின்னரே முழு வளர்ச்சியை நோக்கி நகர்கிறார்கள். அதனாலேயே நீண்ட காலத்திற்கு அவர்களைச் சீராட்டிப் பாராட்டும் தேவை ஏற்பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்