தற்கால மனிதன் – 2
தற்கால மனிதன் – 2 (Sapiens தொடர்ச்சி)
இறுதி மனித இனம்!
2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உருவாகிய ஒரு மனித இனம் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவர்கள் பின்னர் உலகின் பல்வேறு இடங்களுக்கு நகர்ந்தார்கள். தவிர பல்வேறு மனித இனங்கள் வெவ்வேறு இடங்களில் உருவாகத் தொடங்கியிருக்கிறது. அப்படி உருவாகிய இனங்களின் பரிணாம வளர்ச்சியில், அவர்களுக்குத் தசைகள் கூர்ப்பு அடைவதற்குப் பதிலாக நரம்பணுக்கள் கூர்ப்படைய ஆரம்பித்தன. அதன்மூலம் பெரிய மூளையையும், தொடர்ந்து அறிவையும் வளர்த்துக் கொண்டார்கள். சிம்பன்சி ஒன்றுடன் நேருக்கு நேர் நின்று மோதும் தசைவலு இந்த மனிதர்களிடம் இல்லாவிட்டாலும், பாதுகாப்பான தூரத்தில் ஒளிந்திருந்து அவற்றைத் தாக்குவதற்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.
Neander Valley யில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மனித இனம் Homo neanderthalensis என்ற பெயருடன் ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறது. நிமிர்ந்த மனிதன் என அழைக்கப்பட்ட Homo erectus கிழக்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறான். இந்தோனேசியாவில் Solo Valley யில் வாழ்ந்த மனிதன் Homo soloensis என்றும், Flores இல் வாழ்ந்த மனிதன் Homo floresiensis என்றும், சைபீரியாவின் Denisova Cave இல் வாழ்ந்த மனிதன் Homo denisova
என்றும் அழைக்கப்படுகிறான். இன்னும் பல மனித இனங்கள் இருந்தன என்பது தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த புதைபடிமங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இன்னும் இப்படி எத்தனை மனித இனங்கள் (அதாவது காணாமல்போன நமது உறவினர்கள்) கண்டுபிடிக்கப்படுவார்களோ தெரியாது என்கிறார் நூலாசிரியர்.
இன்றைய கால கட்டத்தில், நம்மைத் தவிர ஏனைய அனைத்து மனித இனங்களும் உலகிலிருந்து அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன. அவற்றில் Homo erectus கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தமையால், நம்மை விடவும் (Homo sapiens ஐ விடவும்) நீண்ட காலம் வாழ்ந்த மனித இனமாக இருக்கும் என்றும் கூறுகிறார். காரணம் கிட்டத்தட்ட 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது இனம் (அதாவது Homo sapiens), இன்னும் 1000 ஆண்டுகள் இருப்பதே சந்தேகம் என்பதால் (உலகம் போகும் போக்கைப் பாரு என்று சொல்லாமல் சொல்கிறார்), Homo erectus இன் சாதனையை முறியடிப்பது நினைத்துப் பார்க்க முடியாது என்கிறார். 300000 ஆண்டுகள் எங்கே, 2 மில்லியன் ஆண்டுகள் எங்கே?
2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 10,000 ஆண்டுகள் முன்னர் வரை ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் ஒரே நேரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு இனம் அழிவடைந்திருக்கிறது. ஆனால் எங்களுடன் கூடவே, எங்களை ஒத்த வேறு மனித இனமும் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நம்மை ஒத்த மனித இனங்களை, நாமே அழித்திருந்தால் அதற்குக் காரணம் என்னவாகஇருந்திருக்க முடியும் என்பதற்கு அவருக்குத் தோன்றிய காரணம், அந்த மனிதர்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு நம்மை ஒத்திருந்ததும், பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நம்மில் இருந்து வேறுபட்டிருந்ததுமாக இருக்கலாம் (may be they were too familiar to ignore and too different to tolerate) என்கிறார்.
தற்கால மனிதனால்தான் அந்த இனங்கள் அழிந்தனவா என்ற கேள்வியை மீறி, தற்கால மனிதர்கள் எந்த இடங்களில் எல்லாம் சென்று கால் பதித்தார்களோ, அந்த இடங்களில் எல்லாம் இருந்த ஏனைய மனித இனங்கள் அழிவடைந்தன. அவர்கள் விட்டுச் சென்றவை எலும்புகள், சில கல்லினால் ஆன உபகரணங்கள், எங்களுடைய டீ.என்.ஏ. யில் சில மரபணுக்கள். கூடவே பல பதில் கிடையாக் கேள்விகளையும், இறுதி மனித இனமாக இருக்கும் நம்மையும் விட்டுச் சென்றுள்ளார்கள் என்கிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்