தற்கால மனிதன் – 1
தற்கால மனிதன் – 1 Sapiens!
யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) ஒரு இஸ்ரேலிய அறிவுஜீவி. வரலாற்றாசிரியரான இவர் ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ( Hebrew University, Jerusalem) வரலாற்றுத் துறையில் பேராசிரியராக உள்ளார்.
இவர் எழுதிய Sapiens என்ற நூலை ஒலி வடிவில் கேட்க ஆரம்பித்தேன். அச்சு வடிவிலான நூலைக் கையில் வைத்து வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றவே நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
மனித வரலாற்றை அறிவு பூர்வமாக, மிகவும் எளிய நடையில், சுவாரசியம் நிறைத்து தந்திருக்கிறார்.
13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றிய இயக்கவியல் பற்றியும், அணுக்கள், மூலக்கூறுகள் தோன்றிய வேதியியல் பற்றியும் கூறிவிட்டுப்,
பின்னர் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் தோன்றியது பற்றியும், 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினங்கள் தோன்றிய உயிரியல் பற்றியெல்லாம் கூறிவிட்டு, 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது மூதாதையர் பற்றிக் கூறி, இறுதியாக மனிதன் தோன்றிய 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கு வருகிறார்.
இந்த நூலை வாசிப்பவர் அனைவரும் Homo sapiens என்று கருதுவதாகக் கூறி ஆரம்பிக்கிறார் 😀. தற்கால மனிதர்களின் உயிரியற் பெயர் Homo sapiens (Homo = man and sapiens = wise). தற்போதைய மனித இனத்திற்கு மூதாதையர்களான வேறு மனித இனங்கள் பற்றியும், அவர்களது குணாம்சங்கள் பற்றியும், அவர்களது மூதாதையர்கள் பற்றியும் சொல்கிறார்.
ஆனாலும் அந்த உண்மையை மனித இனம் (அதாவது தற்கால மனித இனம்) ஒத்துக்கொள்ளப் பிரியப்படாமல், இரகசியமாக வைத்துவிட்டுத் தாங்கள் வேறு எந்த ஒரு உயிரியல் குடும்பத்தையும் (biological family) சார்ந்தவர்களல்ல என்றும், தாங்கள் எந்த ஒரு விலங்கு இனத்துடனும் (species) எந்த ஒரு தொடர்பும் அற்றவர்கள் போலவும் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறார்.
இதை வாசித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் (நாமெல்லாம் வலைப்பதிவுகளில் நேரம் செலவளித்த ஒரு கால கட்டத்தில்) ஒருவர் வலைப் பதிவொன்றில் “குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்தால் இப்ப இருக்கிற குரங்கெல்லாம் ஏன் இன்னும் மனிதனாகவில்லை?” என்று கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இந்தக் கேள்விக்குரிய பதிலாக இந்த நூலில் நூலாசிரியர் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது … 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிம்பன்சிக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஒரு மகள் தற்போதைய சிம்பன்சிகளுடைய மூதாதையராகவே இருக்க, மற்றைய மகள் (சில மரபணுப் பிறழ்வுகளால்) நமது மூதாதையராக மாற்றம் பெற்று விட்டார்.
அந்த மூதாதையர்கள் மனிதர்கள் என்ற சாதியைச் (Genus Homo), சேர்ந்தவர்களாயினும், வேறு இனத்தைச் (species) சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்படி நம்மை விடவும் வேறு மனித இனங்களும் (species) இருந்த காரணத்தால், Homo என்ற சாதியில் உள்ளடக்கப்படும் அனைத்து உயிரினங்களும் (தற்கால மனிதன் உட்பட) மனிதர்கள் என்பதால் அவர்களையெல்லாம் human என்றும், தற்கால மனிதனை sapiens என்றும் நூலில் குறிப்பிடப் போவதாகச் சொல்கிறார். அதனால்தான் நூலின் பெயர் Sapiens.
பி.கு.: இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வாசித்துவிட்டால், ஏதாவது வகையில் எனக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். ஒரு சின்ன புள்ளிவிபரத் தேவைக்காக இந்த வேண்டுகோள் 😀 .
மறுமொழியொன்றை இடுங்கள்