நண்பர்களின் ஒன்றுகூடல்!
கடந்த மாதம் மிகவும் நல்ல ஒரு நிகழ்வு நடந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளின் பின்னர், பழைய பல்கலைக்கழக நண்பர்களைச் சந்தித்து ஒன்றுகூடிய நிகழ்வுதான் அது.
2014 நவம்பர் மாதமளவில், நண்பர்கள் சிலரிடையே திடீரெனத் தோன்றிய ஒரு எண்ணத்தில், பல்கலைக்கழகத்தில் கூடப்படித்த தமிழ் நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஒன்றுகூடலுக்கான தயார்ப்படுத்தலைத் தொடங்கினோம். நான்கு ஆண்டுகள் ஒன்றாகவே படித்த 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்த நமது குழுவில், 22 பேர் தமிழர்கள். நாட்டு சூழ்நிலை காரணமாக, அதில் அனைவரும் குறிப்பிட்ட படிப்பைப் படித்து முடிக்கவில்லை. சிலர் வெவ்வேறு படிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்து போய் விட்டார்கள். ஒரு சிலர் தொடர்பற்றும் போய் விட்டார்கள். ஆனாலும், 19 பேரைத் தொடர்புகொள்ள முடிந்தது. வெவ்வெறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டாலும், நாம்தான் 4 ஆண்டுகள் கூடப் படிக்கவில்லையே என்ற எண்ணம் சிறிதுமின்றி, விட்டுப் போனவர்கள்கூட எம்மில் ஒருவராய் உணர்ந்து நம்முடன் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. நம் அனைவரையும் அத்தனை நெருக்கமாக வைத்திருந்தது, நமது பல்கலைக்கழக வாழ்க்கையின் ஆரம்பத்தில் மகா இலுப்பல்லம என்ற இடத்தில் ஆறு மாத காலம் தங்கியிருந்து பயிற்சிப் படிப்புப் படித்ததுதான். சிறிய குழுவாகவும், வெளி மக்களுடன் பெரிதாக தொடர்புகளற்று, பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்ததுமே காரணம் என நினைக்கின்றேன். அனைவரும் அந்த ஆறுமாதம் ஒரு குடும்பம்போல ஒன்றாகவே இருந்தோம். வெவ்வேறு பாதையில் பயணமானது அதன் பிறகுதான்.
பல உரையாடல்களைத் தொடர்ந்து, அதிகமானோர் கனடாவில் இருப்பதால், கனடாவில் ஒன்றுகூடலைச் செய்வதெனத் தீர்மானித்தோம். “பின்போடும் காரியம் கைகூடாமல் போகச் சாத்தியம் உண்டு” என்று சிலர் அபிப்பிராயம் கொண்டதால் ஏப்ரல் ஆரம்பத்தில் ஒன்றுகூடலை வைப்பதெனத் தீர்மானித்தோம். கனடாவில் காலநிலை மிகப் பெரிதாக நன்றாக இருக்காதெனத் தெரிந்தாலும், அந்தக் காலத்தையே தெரிவு செய்தோம். குறிப்பிட்ட காலம் நமது குடும்பத்தை அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமற்றுப் போனதால், வெளிநாடுகளிலிருந்து சென்ற 6 பேரால், குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியவில்லை. ஏனைய கனடாவில் இருந்தோர் அனேகமாக குடும்பத்தையும் அழைத்து வர முடிந்தது. 13 பேரும் (6 பெண்கள், 7 ஆண்கள்), சிலரது குடும்பங்களும் என 26 பேரானோம். கிழக்கிலிருந்து மேற்கு, தெற்கிலிருந்து வடக்கு என ஒன்றுக்கூடலுக்கு வந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவர், இலங்கையிலிருந்து ஒருவர், நோர்வேயிலிருந்து ஒருவர் (வேறு யார், நான்தான்), பிரித்தானியாவிலிருந்து இருவர், அமெரிக்காவிலிருந்து ஒருவர், மற்ற எல்லோரும் கனடாவில் இருப்பவர்கள்.
எமது சந்திப்பின்போது, மிக அழகான நயகரா நீர்வீழ்ச்சி அருகே ஏற்பாடு செய்யப்படும் ஒரு தங்குமிடத்தில் 3 நாட்கள் ஒன்றாகத் தங்கியிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த மூன்று நாட்கள் வருவதற்கு, 4 நாட்களுக்கு முன்னராகவே கனடா சென்று, உறவினர்கள் சிலரையும், வேறு சில நண்பர்களையும் (பல்கலைக்கு முன் + பல்கலைக்குப் பின் கிடைக்கப்பெற்ற நண்பர்கள்) சந்திக்கலாம் என முடிவெடுத்தேன். எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக, பலரையும் சந்தித்து மகிழ முடிந்தது.
எமது பல்கலைக்கழகப் பயணத்தில் இரண்டாம் ஆண்டிலேயே எம்மை விட்டுப் பிரிந்து சென்று மருத்துவப் படிப்பை முடித்து, மருத்துவராக இருக்கும் ஒருவர் வீட்டில் எமது முதல் சந்திப்பை மேற்கொண்டோம். அவர் வீட்டில் இரவுணவும் ஏற்பாடு செய்திருந்தார். நீண்ட காலத்தின் பின்னர்தான் சில முகங்களைப் பார்க்க நேர்ந்தது. சிலரால், ஒரு சிலரை அடையாளம் கண்டுபிடிக்கக் கூட முடியவில்லை. அதுவே ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கித் தந்தது.
மறுநாள் நயகரா நீர்வீழ்ச்சி நோக்கி அனைவரதும் பயணம் செய்தோம். அங்கே மூன்று நாட்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு… அனைவரும் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, அந்தப் பழைய நாட்களை மீண்டும் ஒரு தடவை வாழ்ந்து வந்தது போன்றதொரு உணர்வு. 30 வயது குறைந்து போனதாகவே உணர்ந்தோம். அங்கிருந்தபோது, நிகழ்வுக்கு வர முடியாமல் போன 4 பேருடன் ஸ்கைப்பிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு அனைவரும் பேசினோம். சமைத்துச் சாப்பிட்டு, சிரித்து மகிழ்ந்திருந்தோம்.
30 ஆண்டுகள் முன்புகூட இத்தனை மனம்விட்டுப் பேசிக்கொண்டோமா என்றே எண்ணத் தோன்றியது. மிக அருமையான ஒரு ஒன்றுகூடல். அருமையான, மறக்க முடியாத ஒரு அனுபவம்.
[…] சந்திக்காமல் இருந்த அவளை இந்த முறை கனடாப் பயணத்தில் கண்டு வந்தேன். கண்டதில் எனக்குண்டான […]