கலிபோர்னியா பயணம்!
பெப்ரவரி மாதத்தில் செய்த இந்த கலிபோர்னியா பயணம் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் மூவர் மட்டுமல்லாமல், எங்கள் மருமகன்கள் மூவரும் இந்த முறை எங்களுடன் வந்திருந்தார்கள். இரு வருடங்கள் முன்னர் புளோரிடா மாநிலம் போனபோது, ஒரு மருமகன் வந்தார். இந்த முறை மூவர். மிகவும் மகிழ்ச்சியாகப் பயணம் நிறைவேறியது.
3 வருடங்கள் முன்னர், பல உறவினர்கள் ஒரே நேரத்தில் சிங்கப்பூர், மலேசியா போய் வந்ததுபோலவே மிகவும் கலகலப்பாகப் பயணம் கழிந்தது.
முதலில் சான் பிரான்சிஸ்கோ சென்று அங்கே மூன்று நாட்கள் தங்கிய பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸ் சென்று அங்கே 4 நாட்கள் நின்று திரும்பினோம். அங்கிருந்த நேரங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும், மிதிவண்டி (bicycle) ஐயும் பயன்படுத்தியதனால், இலகுவாக நகரத்தை அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக அந்த நோக்கத்திலேயே போக்குவரத்துக்கு இந்த முறைகளைத் தேர்ந்தெடுத்தோம்.
ஒரு தடவை பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றான அமிழ் தண்டூர்தியில் (Tram) சென்றபோது, மிகவும் சுவாரசியமான அனுபவம் கிடைத்தது :). அந்த வண்டியின் ஓட்டுநர், ஒவ்வொரு நிறுத்துமிடம் வரும்போதும், சுவாரசியமான தகவல்களை, மிகழும் நகைச்சுவை கலந்து அறிவித்துக்கொண்டே வந்தார். எடுத்துக்காட்டாக, Alcatraz island க்குப் போக வேண்டிய நிறுத்தம் வரும்போது, “Here you get down if you want to go to jail, not to be bailed” என்றார். மீன் பிடித்தலுக்கான இடம் வரும்போது, “If you get down here, you can go fishing for a mermaid” என்றார். ஒவ்வொரு வசனமும் சொல்லிவிட்டு, விதம் விதமான ஒலிகளை எழுப்பி, அனைவரையும் நன்கு சிரிக்க வைத்தார். உண்மையில் அந்த வண்டியில் செல்வதற்கு, வளர்ந்தோருக்கு 2.25 $ உம், சிறியவர்களுக்கு 1.75 $ உம், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமும். ஆனால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தபோது, இருவருக்குரிய பணத்தை மட்டும் தரும்படி சொல்ல, கணவரோ “We are six” என்று கூற, “Are you going to argueing with me?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, பணத்தைப் பெறவில்லை. அன்று ஏதோ மிகக் குதூகலமான ஒரு மனநிலையில் வந்திருக்கிறார் போலும். அப்போது எனக்கு பாடசாலைக்கு பேருந்தில் போகும்போது, குறிப்பிட்ட ஒரு நடத்துநர் (conductor) வரும் பேருந்தில் ஏற நாம் காத்திருப்பது நினைவுக்கு வந்தது. அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசியபடியே, பேருந்தில் வரும் அனைவரையும் சிரிக்கச் செய்தபடியே இருக்கச் செய்வார்.
சான் பிரான்சிஸ்கோவில் பார்த்த முக்கியமான இடம் Alcatraz Island. மிகவும் பயங்கரமான குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்த இடம். தற்போது, பயணிகளின் பார்வைக்குரிய இடமாக மாறியுள்ளது. அத்துடன் பறவைகளுக்குரிய இயற்கைச் சரணாலயமாகவும் மாறியுள்ளது :). கண்ணுக்கெட்டிய தொலைவில் நகரமும், அதனை அண்டிய பிரதேசங்களும் அழகாகத் தெரியும்போது, இந்தத் தீவை விட்டு எங்கேயும் போக முடியாமல் இருக்கின்றதே மிகப் பெரிய தண்டனைதான் என்பதனை, அங்கிருந்த குற்றவாளிகளின் குறிப்புக்களிலிருந்து உணர முடிந்தது. சிறிய அழகான தீவு. நடுவே மலையில் சிறைச்சாலை. சிறைச்சாலையைச் சுற்றி அழகிய பூமரங்கள். அந்தப் பூமரங்களின் பாதுகாவலர்கள் குற்றவாளிகளே. அதை “Keepers are the kept” என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். உள்ளே போய், சிறைச்சாலை முழுவதையும் சுற்றிப் பார்க்க அனுமதியுண்டு. தேவையான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து பார்க்கும்போது, Golden Gate அழகாகத் தெரிகின்றது. அங்கு நடந்த ஒரு பிரபலமான தப்பித்தல் முயற்சி பற்றிய “Escape from Alcatraz” படம் (Clint Eastwood நடித்தது) பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை.
Golden gate பார்க்க Bicycle ride எடுத்தோம். என்ன இரு பெரிய மலைகளில் ஏறும்போது மட்டும் என்னால் ஓட்ட முடியாமல் போனது. கொஞ்ச தூரம் இறங்கி உருட்டிக்கொண்டு போனேன். மிகவும் இரசித்த பயணத்தில் ஒன்றாக அமைந்தது.
மாலை மயங்கும் நேரம், சூரியன் மறைவதைப் பார்ப்பதற்காக ஒரு படகுப் பயணம். ஓஓஓஓஓஓ, என்ன அழகு, என்ன அழகு. Golden gate உம் அதன் பின்னணியில் சூரியன் மறைவதும், அந்த மங்கிய நேரத்தில், தூரத்தில் தெரிந்த படகுகளும், பறந்து கொண்டிருந்த பறவைகளும்…. கொள்ளை அழகு. இன்னொரு புறம் தெரிந்த Oakland Bay Bridge ஐ, அவர்கள் Silver gate என்றே பெயரிட்டிருக்கலாம். இரவில் அதனைப் பார்க்கையில் வெள்ளியால் செய்தது போன்றே தோற்றம் தந்தது.
இது ஏன் வேலியில் கம்பிக்கு பூட்டுப் போட்டிருக்கிறார்கள்? காதலர்கள் தமது காதல் நிறைவேறுவதற்காக இப்படி செய்வதாகக் கூறினார்கள். அட, இதுவும் ஒருவகை வேண்டுதல்தானோ?
பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸ் போனோம். Hollywood city ஐயும், ஒரு வழிகாட்டியுடன் அமைந்த சுற்றுலாவில் சென்று பார்த்ததுடன், Warner Brothers Studio க்கும் சென்று, back the screen என்ன நடக்கின்றது என்பதனைப் பார்த்தோம். Walk of fame இல் அலைந்து திரிந்தோம். Madame Thussaud இற்குள் சென்று மெழுகுச் சிலைகள் பார்த்தோம். சிங்கப்பூரிலும் இந்த மெழுகுச் சிலைகள் பார்த்திருந்தாலும், இங்கிருந்தவற்றில் பல, உண்மையான மனிதர்களைப் போலவே இருந்தது. சிலவற்றை அடையாளம் கண்டு பிடிக்கவே நேரம் எடுத்தது.
நல்ல பயணம். ஆனால் என்ன வீடு திரும்பிய பின்னர் jet lag தான் படுத்தி எடுத்துவிட்டது.
அடுத்த பதிவு, இரு கிழமைகளுக்கு முன்னர் நான் சென்று வந்த, மிகவும் சுவாரசியமான பயணம் பற்றியது. பேராதனைப் பல்கலையில் கூடப்படித்த தமிழ் நண்பர்கள் கனடாவில் சந்தித்து (நாம் பிரிந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னர்) ஒன்றாகச் சந்தித்து, 3 நாட்கள் நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே தங்கியிருந்து திரும்பிய பயணம் :).
மறுமொழியொன்றை இடுங்கள்