உருவாக்கப்படும் உறவுகள்!
கடந்த மாதத்தில் ஒருநாள், எதிர்பார்த்தேயிராத ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. மின்னஞ்சலின் சாரம் இதுதான் “நானும், மகனும் லண்டன் வருகின்றோம். அப்போது நோர்வேக்கும் உங்களிடம் வரலாம் என நினைக்கின்றேன். இந்தக் குறிப்பிட்ட காலம் உங்களுக்கு வசதி வருமா?”. குறிப்பிட்ட காலம் நம் வீட்டில் அனைவரும் விடுமுறையில் நின்றோம் என்றபடியால் உடனடியாகவே, நமக்கும் வசதிதான் நீங்கள் வரலாம் என பதிலிட்டேன்.
இதிலென்ன ஆச்சரியம்? இந்த மடல் வந்தது எனது அண்ணாவிடமிருந்து. அதாவது… உடன்பிறவாத, உறவாகவும் பிறந்திராத, ஆனால் எனது பல்கலைக்கழக வாழ்க்கையின்போது உருவான உறவான அண்ணாவிடமிருந்து. நமது பிறப்பால் ஏற்படும் உறவுகளும் உண்டு. அவ்வாறின்றி, நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் உறவுகளும் உண்டு. நண்பர்கள், நண்பிகள் தவிர, சிலருடன் சகோதரர்கள் போன்ற உணர்வும், அப்படியான ஒரு பாசமும் ஏற்பட்டு விடுகின்றது. அப்படிப்பட்ட உறவுதான் இந்த அண்ணா.
நான் பல்கலைக்கழகம் செல்ல முன்னர், எனது தோழிகள் பலருக்கும் அண்ணாக்கள் அதிகம். அவர்கள் எப்போது பார்த்தாலும் அண்ணா – புராணம் பாடிப் பாடியே எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். நான் “எனக்கும் ஒரு அண்ணா வேண்டும்” என்று கூறினால், “தம்பிக்கு ஆசைப்பட்டாலும் பரவாயில்லை. கிடைக்க வாய்ப்புண்டு. அது எப்படி அண்ணா கிடைக்கும்?” என்று மற்றவர்கள் கேட்பார்கள். அப்போதெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கவலையுடன் இருப்பேன். பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் போனபோது, இந்த வார்த்தை பொய்யாகி, எனக்கு அண்ணா கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த அண்ணாவுக்கு உடன் பிறந்த ஒரு தங்கையும் உண்டெனினும், என்னையும் சேர்த்து இரு தங்கைகள் என்று அனைவருக்கும் கூறியிருக்கின்றார்.
அதுசரி, அப்படிப்பட்ட அண்ணா வந்ததில், அப்படியென்ன ஆச்சரியம்? ஆம் ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சிதான். என்னென்னவோ காரணங்களால், தொடர்பு முற்றாக இல்லாமல் இருந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது மீண்டும் பார்ப்பதென்றால் மகிழ்ச்சிதானே?
அண்ணாவும், அவரது மகனும் வந்து இரண்டே இரண்டு நாட்கள்தான் எம்முடன் தங்கியிருந்தார்கள் என்றாலும், அதுவே உடன் பிறந்த அண்ணா வந்து எம்முடன் தங்கிச் சென்றது போன்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.