நீண்ட நாட்களின் பின்னர்!

நீண்ட நாட்களின் பின்னர்

இன்று சனிக்கிழமை. ஆனால் வேலை செய்யவென்று வேலைக்கான இடத்திற்கு வந்தேன். மகளுக்கு இன்று சங்கீதம் சோதனை. அவளைக் கூட்டிக்கொண்டு போய் சோதனைக்கான இடத்தில் விட்டுவிட்டு, கொஞ்சம் வேலை செய்யலாமே என்று வேலைத்தளம் வந்தேன். கடந்த வருடம் புதிதாக ஒரு project இல் வேலை செய்ய ஆரம்பித்தது முதல், நினைக்கிற நாளில் வேலை செய்து நினைக்கின்ற நாளில் விடுமுறை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. அதனால், சனியோ, ஞாயிறோ எனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்துவிட்டு, பாடசாலை விடுமுறையை ஒட்டி, எனக்குத் தேவையான நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் பல இடங்களுக்கும் பயணம் செய்ய முடிகின்றது. அதுசரி, வேலை செய்யவென்று வந்துவிட்டு, இங்கே வலைப்பதிவில் என்ன வேலை? 🙂 சும்மாதான். நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவு, வெறும் வெளி இணைப்புக்கள் கொடுக்கும் இடமாகவே உள்ளதே. இப்படியே விட்டால், எனது வலைப்பதிவு என்னுடையதுதானா என்ற சந்தேகம் எனக்கே வந்து விடுமோ என்றுதான், இன்று எதையாவது இங்கே எழுதலாமே என்று ஒரு எண்ணம் வேலைத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வந்தது. அதனால்தான் இந்தப் பதிவு.

கைத்தொலைபேசியில் ரேடியோ

வேலைத்தளம் மிகவும் அமைதியாக இருக்கின்றது. என்னைப்போல் வாரவிடுமுறையில் ஆய்வகத்தில் வேலை செய்ய (அல்லது செய்யும் எண்ணத்துடன் வந்த, ஹி ஹி)  வந்திருக்கும் ஓரிருவரைத் தவிர, அமைதியாகவே இருக்கின்றது. அதனால், தமிழ் ரேடியோவைப் போட்டுக் கேட்டுக்கொண்டே, எனது வேலையை (அதாவது வலைப்பதிவில் இடுகை இடும் வேலையை) தொடர்கின்றேன். எனது கைத்தொலைபேசியில் பல இணைய ரேடியோ நிகழ்ச்சிகளும் எடுத்து விட்டிருக்கின்றேன். எனவே கைத்தொலைபேசிக்கு இணைய இணைப்பைக் கொடுத்துவிட்டு ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். சரி இன்றைக்கு ATBC கேட்கலாம் என்று போட்டேன். ஆனால் அது இன்றைக்கு வரவில்லை. எனவே CTBC போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

மகாதேவா ஆச்சிரம் சிறுவர் இல்லம்

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்குப் போய் குடும்ப உறவுகளைப் பார்த்து வருவதுடன், உதவி தேவைப்படுபவர்களுக்கு, எம்மாலான உதவிகளைச் செய்து வருவோம். அப்படி கடந்த ஆண்டில் சென்றபோது நாம் சென்ற இடம் மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லம். தயவுசெய்து இந்த இணைப்புக்குச் சென்று, அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையைப் பார்த்துவிட்டு, முடிந்த அளவில் அவர்களுக்கு உதவுமாறு இந்த இடுகையைப் பார்க்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். ஒவ்வொருவரும் நேரடியாகவே அவர்களைத் தொடர்பு கொண்டு உதவ முடியும். கடந்த ஆண்டில் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது (நாம் கடந்த ஆண்டில் அவர்களிடம் சென்று வந்ததால் அவர்களிடம் எமது வீட்டு விலாசம் இருந்தது). அதில் அரசாங்கம் தங்களுக்கு மின்சார வசதியை இலவசமாகத் தருவதாகச் சொல்லியிருந்ததாகவும், ஆனால் தற்போது இல்லையென்று விட்டார்கள் என்றும், அதனால் தாங்கள் சூரியவலுவைப் பெற்று, மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு உதவி தேவையென்றும் எழுதியிருந்தார்கள். அதற்கு எம்மாலான உதவியைச் செய்வதுடன், நண்பர்களிடமும் கூறுமாறு கேட்டிருந்தார்கள். நான் எனதுமின்னஞ்சல் தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் இது தொடர்பாய் மடலிட்டிருந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து இதனை அறிவியுங்கள். எவரை நம்பி உதவுவது என்ற பிரச்சனை இன்றி, ஒவ்வொருவரும் தாங்களாகவே அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவலாம். அவர்களது இணையப் பக்கத்தில் தேவையான அனைத்து தொடர்புக்கான தகவல்களும் உள்ளன. தமிழ்விக்கிப்பீடியாவிலும் மகாதேவா சிறுவர் இல்லம் என்று  ஒரு கட்டுரை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருக்கின்றேன். யாராவது இதனை வாசிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களும் இதனைத் தொடங்கலாம்.

பயணங்கள் முடிவதில்லை

நோய் நிர்ணயத்துக்கான வழமையான சோதனை வேலையில் (Routine work of Diagnostic testing) இருந்து புதிதாக  புற்றுநோய் தொடர்பான ஒரு Project இல் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து வேறு வேலைகளுக்கான நேரம் குறைந்து போனது. முக்கியமாக நான் மிகவும் விரும்பிச் செய்துவந்த தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பு குறைந்து போனது :(. விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், குடும்பத்துடன் எங்காவது வெளிநாட்டுப் பயணங்கள் செய்கின்றோம். அதனால் வீட்டில் இருக்கும்போது கணினியில் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படாமல் போய்விடுகின்றது. இந்தப் பயணங்கள் பற்றி, அங்கே பார்த்த அழகான இடங்கள்பற்றி, சந்தித்த adventurous experiences, பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றியெல்லாம் பல தனிப்பதிவுகள் போட வேண்டும். ஒவ்வொருமுறை பயணம் முடிந்து வரும்போதும், அவைபற்றி எழுதி, படங்கள் இணைக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் பொறுமையாக இருந்து அதனைச் செய்ய நேரம் கிடைப்பதில்லை. கடந்துபோன இரு ஆண்டுகளில்தான் எத்தனை பயணங்கள். அவற்றில் சில உறவுகளின் சுக துக்கங்களில் பங்கேற்பதற்கான பயணங்கள். ஏனையவை குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளையும் பார்த்து வருவதற்கான பயணங்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்.

இசையும் நினைவுத்திறனும்

காரில் போகும்போது கேட்பதற்காக பாடல்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். போன ஆண்டு வாங்கிய புதிய காரில் USB யில் பாடல்கள் போடும் வசதி இருந்ததால், எல்லாப் பாடல்களையும் ஒரே இடத்தில் சேர்க்கலாமே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். கடந்த கிழமை Easter holiday க்கு ஜேர்மனியில் இருக்கும் சகோதரி வீட்டிற்குப் போயிருந்தோம். அங்கே குளிராக இருந்ததனால், அதிகமாக எங்கும் வெளியே செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து, கதைத்து, சிரித்து, சமைத்துச் சாப்பிட்டு, சேர்ந்திருந்து படங்கள் பார்த்து, விளையாடி பொழுதைக் கழித்தோம். அத்துடன் எனது பாடல் சேகரிக்கும் வேலையையும் பார்த்தேன். USB யில் 800 பாடல்களுக்கும் மேல் சேர்த்து விட்டேன். இது ஒரு கதம்பம். எல்லா வகையான பாடல்களும் இருக்கின்றன.தமிழ்ப் பாடல்களில் மிகப் பழையவை, இடைக்காலப் பாடல்கள், புதியவை எல்லாம் அடங்கும். மேலும் இவற்றில் மிகப் பிடித்த சில ஆங்கில, மலையாள, தெலுங்கு, இந்திப் பாடல்களும் அடக்கம். ஆங்கில கார்ட்டூன் படங்களில் வரும் சில நல்ல பாடல்களும் கூட சேர்த்துள்ளேன். காரில் குடும்பமாகப் போகும்போது, எல்லோரின் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக இந்த கதம்பமாலை செய்தேன். இல்லாவிட்டால், ‘எனக்கு புதுப்பாட்டைப் போடுங்கோ, இல்லையில்லை எனக்கு பழைய பாட்டைப் போடுங்கோ, இல்லை ஆங்கிலப் பாட்டைப் போடுங்கோ’ என்று ஒவ்வொருவரும் கேட்கின்றார்கள். இப்போ அப்படி யாராவது கேட்டால், ‘பொறுத்துக் கொள்ளுங்கோ! அடுத்து அதுவும் வரும்’ என்று சொல்லி விடுகின்றேன். எப்படி இருக்கு இந்த ஐடியா? 🙂 எனக்கு பாடல்கள் சேகரித்து முடித்துவிட்டு எண்ணிக்கை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இந்த 800 இல் அடங்கியவற்றை விட இன்னும் எத்தனையோ பாடல்கள் எனக்குத் தெரியும். இத்தனை பாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா என்ன என்பதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம். எனது நினைவுத் திறனை நானே மெச்சிக் கொண்ட நேரமிது :).

சுருங்கிய உலகம்

அண்மையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு விடயம் “உலகம் எத்தனை சுருங்கி விட்டது” என்பதுதான். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிடமும் உடனடியாக தொடர்பு கொள்ள முடிகின்றது. ஊரில் எங்கள் சின்ன கிராமத்தில் கூட இணைய வசதி வந்து விட்டதால், அப்பா, அம்மாவுடன் skype இல் பார்த்துப் பேசும் வசதி. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் குறைந்து விட்டதால், நினைத்தவுடன் எவருடனும் (அதிகம் யோசிக்காமல்) பேச முடிகின்றது. தவிர கைத்தொலைபேசியில் WhatsApp, Viber, Tango, Skype, Snapchat என்று வெவ்வேறு இலவச தொடர்பாடல் வசதிகள். Latest ஆ நான் தொடர்பாடலுக்குப் பயன்படுத்துவது Snapchat. எதுவும் எழுதாமலே, ஒரு படம் மூலமே விசயத்தை இன்னொருவருக்குச் சொல்லிவிட முடிகின்றது. தட்டச்சு செய்யும் வேலை மிச்சம் :). இப்போவெல்லாம் கைத்தொலைபேசியிலேயே எத்தனை விடயங்கள் முடிந்து விடுகின்றது. ஒலி, ஒளித் தொடர்பாடல்கள், இணையப் பார்வை, விளையாட்டு (நான் விரும்பி விளையாடுவது Wordfeud, Chess, Draw free, Unblock me), facebook, twitter, messenger, bank வேலைகள், Notes and reminders, alarm etc etc. அது மட்டுமா, தொழில்நுட்ப வளர்ச்சியினால், எங்கிருந்தாலும், நினைத்தவுடன் கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். முன்பெல்லாம் “வீட்டுக்குப் போய் போன் செய்ய வேண்டும்” என்று நினைப்போம். இப்போ அப்படியா என்ன? வேலையில் இருக்கின்றீர்களா? No problem. கார் ஓட்டிச் சென்று கொண்டிருக்கின்றீர்களா? No problem. காரில் போகும்போது, கைத்தொலைபேசியைத் தொடக்கூடத் தேவையில்லை. இருக்கவே இருக்கு Blue tooth and mike வசதி. வெளியே எங்காவது நின்றாலோ, வேலைத் தளத்தில் இருக்கும்போதோ கூட இலவச Wi-Fi பல இடங்களில். இலவச தொடர்பாடல் வசதிகள் கைத்தொலை பேசிகளில்.

கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் 🙂

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். முன்பொரு தடவை நான் எழுதிய எனது ஆசிரியர் என்ற இந்தப் பதிவில் குறிப்பிட்ட எனது ஆசிரியரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவரின் சொந்த இடம் மானிப்பாய் என்று எனது நினைவில் இருந்தது. அதனை அம்மாவிடம் சொல்லியிருந்தேன். அம்மாதான் மானிப்பாயில் தொடர்புள்ளவர்கள் மூலம் விசாரித்து, அவரது தொலைபேசி எண்ணை எடுத்துத் தந்தார். அதன்பின்னர் தொடர்புகொண்டு அவருடன் கதைத்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றபோது நேரில் சந்திக்க முடிந்தது. அதே பழைய அன்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வேலையில் ஓய்வெடுத்த பின்னர், பல சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றார். எனது வகுப்பில் என்னுடன் படித்த ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கேட்டார். சிலருடன் தொடர்பிலும் இருக்கின்றார். அவர் கேட்கும்போதுதான் எனக்கே சிலருடைய பெயர் நினைவுக்கு வந்தது. இப்படி பெயர்கள் கூட மறந்து விட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. அவருடைய நினைவுத் திறனையும், மாணவர்கள்மேல் அவர் தற்போதும் வைத்திருக்கும் அதே அன்பையும் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும், சரியான ஒருவரைத்தான் தேடிச் சந்தித்திருக்கின்றோம் என்று மகிழ்வாகவும் இருந்தது.

ஆசிரியரைக் கண்டு பிடித்ததுபற்றி சொல்கையில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகின்றது. மிக அண்மையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகத் தொடர்பு விட்டுப் போயிருந்த ஒரு நெருங்கிய சினேகிதியையும் கண்டு பிடித்திருக்கின்றேன். அவளிருப்பது அமெரிக்காவில். ஏதோ ஒரு கட்டத்தில் நாமும் வீடு மாற, அதே நேரத்தில் அவர்களும் வீடு மாற, தொடர்பு தொலைந்து போனது. இலங்கை சென்ற அவளது கணவர் தற்செயலாக அங்கே எனது சகோதரியைச் சந்தித்ததால் மீண்டும் தொடர்பு துளிர் விட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எனது உயிர்ப்பு

இன்று இங்கே வரும்போது, எனது இந்த உயிர்ப்பு பக்கம் Google search இல் எங்கே இருக்கின்றது என்று பார்த்தேன். அடடா 8 ஆவதாக வருகின்றதே. இது எனக்கு மட்டும்தான் வருகின்றதா, அல்லது எல்லோருக்கும் வருமா? 🙂

சரி சரி, இனி கொஞ்சம் எனது வேலையைப் பார்த்து விட்டு மகளைக் கூட்டிச் செல்ல போக வேண்டும். வணக்கம்.