The Way Home!

The Way Home

நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது. என்னைப் பொறுத்தளவில் மிகச் சிறந்த படம். கதை வாசிக்காமல் படம் பார்க்க விரும்புபவர்கள், இதனைத் தொடர்ந்து வாசிக்காமல், மூடி விட்டு, படத்தைத் தேடத் தொடங்கலாம். அவர்களுக்காக ஒருவரி விமர்சனம். ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையிலான உன்னதமான அன்புப் பிணைப்பைக் காட்டும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். கீழே எனது முழுமையான விமர்சனம். 🙂

ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.

அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான்.  சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.

பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Fried Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.

இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.

பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.

பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.

பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக பேருந்தில் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, பேருந்து கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது.

பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.

இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.

 1. திரு

  திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டுமென்று தூண்டுகிறது. அதோடு முதியவர்களின் பாசத்தையும் நினைவூட்டுகிறது…

 2. மணிவர்மா

  நல்ல திரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர், உங்கள் படம் பற்றிய விமர்சனம் சிறப்பு. படம் பார்த்த அனுபவம் கிடைத்தது.

 3. சுந்தர்

  கண்களில் நீர் நிறைந்து விட்டது. அலுவலகத்திலேயே இப்படி என்றால் வீட்டில் வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை. 🙂

 4. Kesavan

  Dear Mrs. Kalaiyarasi. Thank you very much for reviewing the movie “Jib-Buro”. I have seen already and its a heart breaking. Right now i am in Korea and ofcourse i know korean language. I have seen so many korean movies which are awesome. I have experienced different kind of love and romance after seeing korean movies. Korean movies are either fun or heart breaking. Even now some of our directors making movies as like of korean movies. If u want, i can suggest some good korean movies.

  Kesavan, Seoul, South Korea.

 5. Ramesh K

  அருமையாய் விமர்சனம் செய்திருக்கிறீர்கள் கலை.. நானும் சமீபத்தில் தான் இந்தப் படம் பார்த்தேன்… நிறைய இடங்கள் வேற்று மொழிப் படம் என்பதையும் மறந்து நெஞ்சைத் தொடுவதாய் இருந்தன.. கொரிய மொழியில் பெரும்பாலான படங்கள் இப்படித்தான் நெகிழ்ச்சியான காட்சிகளுடன் இருக்கின்றன.

  //வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான்.

  எனக்கு மிகவும் பிடித்த காட்சி அது…

  நீங்கள் சொல்வது உண்மைதான்…

  இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.

 6. rajaraja

  அந்தப்படத்தை பார்த்த உணர்வு உங்கள் எழுத்தில்
  படைப்பாளியின் உணர்வை உள்ளுக்குள் வைத்து எழுதி இருக்கிறீர்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s