வாசிப்பு – The Zahir!
Paulo Coelho எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட நூலை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.
அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாகவே ஒருவரிடம் இருக்கும் இயல்புகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் நாமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.
கதாசிரியர் அந்தக் கதையின் கதைசொல்லியாக இருக்கிறார். அவர் இடை இடையே சில பல வாழ்க்கை தத்துவங்களை, தத்துவங்களாக இல்லாமல், இயல்பாக தெளித்துக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றுகிறது. வீடற்றவர்கள், இரந்துண்போர், நாடோடிகள் வாழ்க்கையிலேயே பல தத்துவங்கள் புதைந்திருப்பதாய் தோன்றுகின்றது.
கதையில், காணாமல்போன (‘இனிமேல் கணவனுடன் வாழுதல் இயலாது என நினைத்து, பிரிந்துபோன’ என்றும் கூறலாம்) மனைவியை மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டு பிடித்து சந்திக்கிறான் கணவன். மனைவி பிரிந்து போனதன் பின்னர்தான், மனைவியின்மேல் தனக்கிருக்கும் உண்மையான காதலை அடையாளம் காண்கின்றான். ஆனாலும் அவளைத் தேடிப் போகும்போது, அவள் தன்னுடன் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்தே போவதாகப் படுகின்றது. இருந்தும் எதற்கும் தயாராகவே தேடிப் போகின்றான். முடிவில் அவ்வளவு சிக்கல்களைத் தாண்டிப் போயும்கூட அவள் அவனுடன் வரவில்லையே என்பது சிறிது உறுத்தலாக இருந்தாலும், அதைத் தவிர வேறு மாதிரியான முடிவு அந்தக் கதைக்கு வர முடியாது என்றுதான் தோன்றுகின்றது.
கதை முடிந்த பின்னர் ‘கதாசிரியர் குறிப்பு’ மிகவும் பிடித்திருந்தது. உதவியவர்களுக்கு நன்றி சொல்வது இயல்புதான். ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார். உரியவர் யாரென்று தெரியாமல் இணையத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கூட மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் சில பகுதிகளூடாக தான் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தக் கதையை தான் எழுதியதாகவும், பயணத்தின்போது எந்த எந்த இடங்களிலிருந்து கதையை எழுதினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
மொத்தத்தில் இது எனக்குப் பிடித்த நூல்களில் ஒன்று எனலாம்.
Zahir பற்றி ரொம்ப குறைவா எழுதி இருக்கீங்களோ? எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் இது. இதைத் தவிர பாலோ கோயிலோவின் மற்ற புத்தகங்கள் இதே போல மனதில் அறைவதாக இருக்கவில்லை.. (eleven minutes was pretty good though).
மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்..
வாங்க பொன்ஸ், ரொம்ப நாளாச்சு உங்களைப் பாத்து. வந்ததே வந்தீங்க, அந்த கதையின் முடிவில், மனவி கணவனிடம் கூறும் வசனத்துக்கு அர்த்தமும் சொல்லிட்டுப் போகக் கூடாதா? 🙂 அந்த புத்தகம் வாசிச்ச யாரையாவது தேடிக்கிட்டு இருக்கேன்.
அந்தப் புத்தகத்துக்கு என்னுடைய இந்த இடுகை, உண்மையிலேயே ரொம்ப ரொம்ப குறைச்சல்தான். ஆனா எதை எழுதுறது, எதை விடுறது. அதான் சுருக்கமா முடிச்சிட்டேன். 🙂