இது ஒரு பனிக்காலம்!

Posted On ஜனவரி 25, 2010

Filed under நோர்வே, ரசித்தவை

Comments Dropped 7 responses

இது ஒரு அழகான பனிக்காலம்!

நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை 🙂 . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் :) . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை :) . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது.

வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.


நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.

அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.


Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, ‘இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?’ என்ற கேள்வி எழுந்துள்ளது :(. காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.

பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே’ என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது :(. இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. ‘என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.

அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.