ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!
மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?
ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை :). ஒரு பாடம் IT & DT (Information Technolgy and Design Technology).
முதலில் சந்தித்தது IT & DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.
கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார் :). வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது’ என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்’ என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality’ தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது’ என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.
அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.
அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள ‘தெனாலிராமன்’ என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான் :). Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம் :). பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாகவே இங்குள்ள சில அல்லது பல ஆசிரியர்களிடம், குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். மகள் இங்கே பாலர் பாடசாலைக்கு (Kindergarten) போன பொழுதில், அங்கு ஒரு ஆசிரியை (அதுவும் அந்த முழுத் தொகுதிக்கும் பொறுப்பானவர்), மகளைத் தன் வழிக்கு கொண்டு வர முடியாமல், தான் மகளின் வழிக்கு மாறி விட்டதைக் கூறியதும், அதன் பின்னர் மகளும் அந்த ஆசிரியையும் நல்ல சினேகிதர்களாக இருந்ததும் நினைவில் வருகிறது. அது ஒரு பெரிய கதை. அட ஒரு பதிவாவே போடலாம் 🙂
இந்த காலத்து சுட்டிகள் தான் எவ்வளவு விடயத்தை கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது. மகளுக்கு வாழ்த்து சொன்னன்னு சொல்லுங்க 🙂
:O)
——
assignment – ஒப்படை
//assignment – ஒப்படை//
நன்றி (நினைவு படுத்தியதற்கு) 🙂
assignment (இதுக்கு தமிழ் என்ன) //
ஒப்படை என்றுதான் நாங்களும் செய்தோம். இந்த assignment சமாசாரமெல்லாம் நமக்கு உயர்தரம் படிக்கும் போதுதான் அறிமுகமானது 🙂 அடுத்த நாள் முடிவுத்திகதி – இரவோடு இரவாக இலங்கை போக்குவரத்து – சிக்கல்களும் தீர்வுகளும் என்றொரு ஒப்படையை – கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை – பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன். அதற்கு A வேறு போட்டார்கள் 🙂
//கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை – பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன்.//
பரவாயில்லையே. கற்பனைதான் என்று ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்குமோ. 🙂
\\நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான்.//
அருமையா இருக்கும் ..
இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்.. இன்னும் சில உங்கள் இடுகைகளும் வாசித்தேன்..உங்கள் அளவு குழந்தையிடம் தன்மையாய் நடக்க இன்னும் பயில்வேன்.