ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!

Posted On திசெம்பர் 16, 2009

Filed under குழந்தை, சமூகம், நோர்வே

Comments Dropped 7 responses

மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?

ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை :). ஒரு பாடம் IT & DT (Information Technolgy and Design Technology).

முதலில் சந்தித்தது IT & DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.

கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார் :). வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது’ என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்’ என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality’ தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது’ என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.

அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.

அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள ‘தெனாலிராமன்’ என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான் :). Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம் :). பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.

என் குட்டித் தேவதையின் நாடு!

Posted On திசெம்பர் 16, 2009

Filed under குழந்தை, ரசித்தவை

Comments Dropped 9 responses

“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்குச் சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாகக் கேட்டபிறகுதான் புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டைக் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.

அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் ”தாய் மிலோ கனாய் ரோ’ (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான், 🙂 ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 . 🙂 யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).

சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான் :). Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.

The word Thai (ไทย) is not, as commonly believed, derived from the word Tai (ไท) meaning “freedom” in the Thai language; it is, however, the name of an ethnic group from the central plains (the Thai people).[citation needed] A famous Thai scholar argued that Tai (ไท) simply means “people” or “human being” since his investigation shows that in some rural areas the word “Tai” was used instead of the usual Thai word “khon” (คน) for people.[13] The phrase “Land of the free” is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.

பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம். ‘Thai’ என்பது ‘சுதந்திரம்’ என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள் :).

அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ’. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவுக்கு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டில் கிடைக்கும் chocolate பற்றியும் சொன்னாள். அதுபற்றி கீழே வரும்.

அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.

அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் :). Thai Milo Kanai Ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம் :). Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.

அவளுடைய நாட்டுல அரசாங்கம் என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். அரசாங்கத்தில இரண்டே இரண்டு பேர்தானாம் ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாளாம் *யாராவது அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.

எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய சீனித்தன்மை இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி உணவுத் திருவிழா நடக்குமாம்.

அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.

அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.

நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.

நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.

Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்… (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).

இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.

நல்ல நாடுதான், இல்லையா?

அவள் பாடசாலையில் படிப்பதையும், தனக்குத் தெரிந்த சூழல் பாதுகாப்புத் தொடர்பான பல விடயங்களையும், தனது விருப்பங்களையும் ஒரு கலவையாக்கி, தனக்கென ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. இத்தகைய நாடு உண்மையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 🙂