குட்டி இளவரசன்!

‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.

The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம் :). மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.

ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, ‘Time line of my life’ செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.

அஞ்சலியின் மரம்

இது ஒரு மரமாம்.

Untitled

இது ஒரு பெண்மணியின் முகமாம்.

அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.

ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.

கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.

அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.

அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.

அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.

முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம் ‘எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்’. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்’.

அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்’.

அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்’ என்று சொல்லி அடிப்பது. ‘சே என்ன மனிதன் இவன்’ என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், ‘குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா’ என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்’.

அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு ‘முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை’ என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை’. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்’ என்று நினைத்தபடி போகின்றான்.

இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான். எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது :). குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.

அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள். சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.

இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?’ என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.

பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் ‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்கின்றான். பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.

அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது. நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம் என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, ‘அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல’. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது “இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை’ :). அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், ‘குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்’.

ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், ‘அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்’ என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.

இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.

[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன் :).]

அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.

Matters of importance must be given the priority over the matters of consequence.

எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. The Little Prince (pdf file) ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s