குழந்தை வளர்ப்பு!

Posted On ஒக்ரோபர் 7, 2009

Filed under குழந்தை, சமூகம்

Comments Dropped 3 responses

இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.

ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் இயற்கையாக இருக்கக் கூடிய வேறுபட்டை எப்படி உணர முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.

வளர்ந்து வரும் குழந்தைகளை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றும், அவர்களை இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்றால் கேட்கிறார்கள் இல்லை என்றும், அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். நான் சொன்னேன், “இந்த புலம்பெயர் சூழலில், இது பெற்றோருக்கு மட்டுமே பிரச்சனையில்லை. பிள்ளைகளுக்கு அதை விட பிரச்சனை உண்டு. பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு” என்று.

இப்போது வந்து Google Reader ஐ திறந்தால், முதலில் கண்ணில் பட்ட இடுகை ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு. அங்கே ஒரு அறிமுகம் மட்டுமே கிடைத்தது. எனவே Google இல் தேடி, Richard Templar எழுதிய, அந்த 100 எளிய விதிகளையும் (விளக்கமாக இல்லாவிட்டாலும்) பார்த்துவிட்டேன். விளக்கமாக பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்.

இன்று பேசியபோது குறைப்பட்டுக் கொண்ட அந்த நபர், குழந்தைகளை எந்தவொரு வேலையும் வீட்டில் தான் செய்ய விடுவதில்லை என்றும், அவர்கள் தங்களுடன் இருக்கும்வரை எதுவும் செய்து சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்பதுடன், அதை பெருமையாகவும் எண்ணுபவர். அப்படி செய்வதால் பிள்ளைகள் தமது சுயசார்பு (வெங்கடேஷ் க்கு நன்றி 🙂 தமிழ்ச் சொல்லுக்கு), நிலையை விரைவில் பெறுவதற்கான வழியை அடைத்து விடுகிறோம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதுபற்றி பல தடவைகள் அவருக்கு எடுத்துக் கூறியும் அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

அன்றொருநாள் அவரது மகளிடம் (வயது 18 ஆகி விட்டது), பேசிக் கொண்டிருந்தபோது, ”அம்மா எதுக்கு இருக்கிறா செய்து தரத்தானே. இதெல்லாம் செய்வது அம்மாவின் கடமை” என்று சொல்கிறார். எனக்கென்னவோ அப்படி சொன்னது மகளின் குற்றமல்ல. அப்படி நினைக்கும்படி செய்யும் பெற்றோரின் தவறுதான் என்றே தோன்றியது. நான் அவருக்கு சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முயன்றேன்.

இன்னொருவர் கூறினார், சில குழந்தைகள் நமக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தனது (வெளிநாட்டு) நண்பர்கள் வீட்டில் இப்படித்தான் என்று கூறி தமது பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று. அதுவும் உண்மைதான். சில பிள்ளைகளும் புத்திசாலிகள்தான் :). சில விசயங்களுக்கு தமது வெளிநாட்டு நண்பர்களை உதாரணம் காட்டி, அவர்கள் மாதிரி தாமும் செய்ய வேண்டும் என்பவர்கள், தமக்கு சாதகமாக வரக் கூடிய வேறு விடயங்களில் இது நமது கலாச்சாரம், அதன்படி செய்யலாம் என்கிறார்கள். பெற்றோரின் உதவியுடன் வாழ்வது அவர்களுக்கு இலகுவான முறையாக இருக்கிறது.

நான் அறிந்த அளவில், நோர்வே நாட்டினர் அதிகமானோர் (வேறு எதைச் சரியாக செய்கிறார்களோ, இல்லையோ 🙂 ) தமது பிள்ளைகளை சுயசார்பு நிலையில் வளர்ப்பதில் வெற்றியே கண்டிருக்கிறார்கள். பொதுவாக 18 வயதில், பிள்ளைகள் தாமாகவோ, சில சமயம் பெற்றோரின் ஊக்கப்படுத்துதலாலோ, தனியாக சென்று வாழத் தொடங்குகிறார்கள். என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் மகன், அவர்களுடைய வீட்டிலேயே, basement apartment இல், பெற்றோருக்கு வாடகை கொடுத்து வாழ்கிறார். அதனால் பெற்றோருக்கு அவர்மேல் அக்கறையில்லை, அல்லது சரியான அன்பில்லை என்று சொல்லவும் முடியாது. அந்த அம்மாவும் நானும் ஒரே அறையில் வேலை செய்வதால் அவரை என்னால் நன்றாக கவனிக்க முடிகிறது.  அடிக்கடி பிள்ளைகளுக்கு தொலைபேசி கதைப்பதும், அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டும் அக்கறையும், அவரது அன்பை சொல்கிறது. ஏதோ ஒரு பிரச்சனையில் அன்று மகள் தொலைபேசியில் எடுத்துச் சொன்னபோது, அதற்கு தன்னால் முடிந்த புத்திமதியையெல்லாம் பொறுமையுடன் கூறிவிட்டு, அவர் இறுதியில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது. அவர் சொல்கிறார் ”இது நான் உனக்கு கூறக் கூடிய புத்திமதி மட்டுமே. ஆனால் பிரச்சனைக்கேற்றவாறு, உன் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து, செயலாற்ற வேண்டியது நீதான்.” என்று.

இப்படி நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம். ‘நாங்கள் சொல்கிறோம், பிள்ளைகள் கேட்கத்தான் வேண்டும். நாம் அவர்களுக்கு நன்மைக்குத்தானே சொல்வோம். இத்தனை அன்பு வைத்திருக்கிறோம், அவர்களுக்காக என்னவெல்லாம் செய்கிறோம். இதிலும் நாம் சொல்வதைக் கேட்டால் என்ன?” இதுதான் நம்மில் பலரின் மனநிலை. அவர்களுக்கு எது நன்மை என்பதை அவர்களே உணர்ந்து செய்யும் மனநிலையில் அவர்களை விடுவதுதானே நல்லது.

பிள்ளையிடமே வாடகை வாங்குவதெல்லாம் சரியா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கெல்லாம் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தன்காலில் தானே நிற்பதற்கான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் இதுவும் ஒரு முறையே என்பதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. சில விசயங்கள் நமக்கு மிகவும் குழப்பமாகத்தான் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழல் நம்மை இப்படி குழப்புகிறது என நினைக்கிறேன்.

தற்போதைய போட்டிகள் நிறைந்த அவசர யுகத்தில், எவ்வளவுக்கெவ்வளவு பிள்ளைகள் தாமே சுயமாக முடிவெடுக்கவும், தன் சொந்தக் காலில் நிற்கவும் பழக்கி விடுகிறோமே, அவ்வளவுக்கவ்வளவு பிள்ளைக்கு நல்லது என்றே நானும் நம்புகிறேன்.