பகிர்தல்!

Posted On செப்ரெம்பர் 23, 2009

Filed under சமூகம், நோர்வே

Comments Dropped one response

என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே ‘வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே’ என்கின்றார்.

இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முழுவதும் சொல்லி முடிக்க முதலே, இவர் ”நாம் வேறு ஏதாவது மகிழ்ச்சியாக பேசலாமே” என்கிறார். அது எப்படி கவலையில் வரும் ஒருவர், இவர் கேட்டதும் மகிழ்ச்சியாக பேச முடியும் என்பதை அவர் யோசிக்கவே இல்லையா என்று எனக்குத் தோன்றியது. எமது நாட்டுப் பிரச்சனை, அல்லது மக்களின் பிரச்சனை பற்றி ஏதாவது பேச்சு வரும்போது, நான் கவலைப்பட்டாலும், அவர் எனக்கும் இதையே சொல்லுகின்றார்.

சிலவேளை அவர் அப்படி சொல்வது, அவரால் அப்படி கவலையான விடயங்களை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமத்தினாலாக இருக்கலாம். ஆனால் அந்த சினேகிதியும், இவரிடம் ஒரு மன ஆறுதலுக்குத்தானே சொல்ல வந்தார். இவர் இப்படி கேட்க மறுத்தால் அவருக்கு அது மனப் பாரத்தை கூட்டாதா என்று தோன்றியது.

மகிழ்ச்சியோ, துக்கமோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதுதானே ஆறுதல்.

பதிவெழுத வந்த கதை!

Posted On செப்ரெம்பர் 19, 2009

Filed under கிறுக்கல்கள், நோர்வே

Comments Dropped 5 responses

சினேகிதி தத்தக்க பித்தக்க வில என்னையும் (நானும் ஒராளெண்டு) பதிவெழுத வந்த கதையை எழுதக் கூப்பிட்டிருக்கிறா. நானும் நாளைக் கடத்திப்போட்டன். இனியும் எழுதாமல் விட்டால், கனடாவில இருந்து நோர்வேக்கு தடியோட வந்து நிண்டாலும் நிப்பா போல கிடக்கு. வாறதுக்கிடையில எழுத வேணும் எண்டு நானும் எழுதத் தொடங்கி விட்டன். முந்தி ஒருக்கால் மழை ஷ்ரேயா இப்படித்தான் ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு, அந்த தொடர் விளையாட்டெல்லாம் முடிஞ்சு கன காலத்துக்குப் பிறகு நான் அந்தப் பதிவை எழுதினன். இந்த தொடர் விளையாட்டுல எல்லாரும் எழுதி முடிச்சிட்டினமா எண்டு தெரியேல்லை. பாப்பம்.

கணினியைப் பாத்ததும், பழகினதும்

நான் முதல் முதலில கணினியைப் பாத்தது, பேராதனைப் பல்கலைக் கழகத்தில கடைசி வருடப் படிப்பிலதான். அப்பதான் எங்களுக்கு ஒரு பாடம் கணினியில், கொஞ்சமா ஏதோ சொல்லிக் கொடுத்தாங்கள். ஏதோ கொஞ்சம் படிச்சிட்டு வந்தாச்சு. அதுக்குப் பிறகு, நான் அங்கேயே கொஞ்ச காலம் வேலை செய்தபோது, எங்களுக்கு senior ஆன, வெளிநாட்டு உதவித் தொகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, என்ரை அறைத் தோழிக்கு, தனிக் கணினி கிடைத்திருந்தது. அப்போது ஒரு நாள் “கணினி சாத்திரமெல்லாம் சொல்லுது, வாங்கோ பாப்பம்” எண்டு சொல்லி கூட்டிக் கொண்டு போய் காட்டினா. அதுக்குப் பிறகு இங்க நோர்வேக்கு வந்த பிறகுதான், வீட்டிலேயே கணினி பாவிக்கத் தொடங்கினது.  அப்பதான் தமிழிலயும் எழுதலாம் எண்டு தெரிஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா தட்டச்சு பழகினது. நான் தமிழ் எழுதத் தொடங்கினது ‘பாமினி’ யில்தான். எழுத்துக்களுக்குரிய விளக்கத்தை அச்சுப் பிரதி எடுத்து,  கையோட வைச்சுக் கொண்டு தட்டச்சினேன். முதன் முதல் நான் கணினியில் தமிழில தட்டச்சினது அப்பா, அம்மாக்கு கடிதம். அதை எழுதி, அச்சுப் பிரதி எடுத்து அஞ்சலில் அனுப்பினேன். அண்டைக்கு நல்ல மகிழ்ச்சியா இருந்தது இப்பவும் நல்லா நினைவிருக்கு.

அதுக்குப் பிறகு கணினியில் அரட்டை, இணையத் தமிழ் முற்றங்களில பங்களிப்பு, வலைப்பதிவு எண்டு எனக்கும், கணினிக்கும், இணையத்துக்குமான தொடர்பு நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமா வளர்ந்திட்டுது. இப்ப கடைசியா தமிழ் விக்கிபீடியா பங்களிப்புவரை கொண்டு வந்து விட்டிருக்கு :).

மின்னஞ்சல்

எப்ப முதன் முதலா மின்னஞ்சல் அனுப்பினன் எண்டு சரியா நினைவில்லாட்டியும், யாருக்கு அனுப்பினன் எண்டு நல்லா நினைவிருக்கு. துபாயில இருந்த மாமா (என்னை விட 2 வயதே கூடியவர்), தன்ரை மின்னஞ்சல் முகவரி எண்டு தந்திருந்தார். எனக்கும் இங்க பல்கலைக் கழகத்தில மின்னஞ்சல் முகவரி கிடைத்ததும், அதில இருந்து மாமாக்கு ஒரு மின்னஞ்சலைப் போட்டன். போட்டுட்டு கொஞ்ச நேரத்தில பாத்தால், அவரிட்ட இருந்து பதில். ஆச்சரியமும், மகிழ்ச்சியுமா இருந்துது. அட உலகம் இவ்வளவு சுருங்கியிட்டுதா எண்டு நினைச்சன். ஆனா அப்பெல்லாம் மின்னஞ்சல் ஆங்கிலத்துலதான் எழுத வேண்டியிருந்தது. அது எனக்கு ஏதோ குறையாயிருந்துது.

பிறகு சும்மா ஒருநாள் ஒரு அரட்டைப் பெட்டியுக்கை போய், யாரோ சிலரோட அரட்டை அடிக்கேக்கைதான் yahoo mail ப் பற்றி தெரிய வந்துது. சரி, எதுக்கும் இருக்கட்டுமெண்டு அதுலயும் ஒரு கணக்கை தொடங்கி வைச்சன். அப்ப அரட்டையெல்லாம் தமிங்கிலத்திலதான் தட்டச்சு செய்யுறது. அது வேற கரச்சலா இருந்துது. பிறகு தெரிஞ்சவை, தெரியாதவையெண்டு எல்லாரோடயும் அரட்டை பிடிக்காம, தெரிஞ்ச சிலரோட மட்டும் அரட்டை அடிப்பமே எண்டு MSN ஐத் தொடங்கிற எண்ணத்தில hotmail லயும் ஒரு கணக்கைத் தொடங்கினன். பிறகு Gmail க்கு ஆர் சொல்லி வந்தன், எப்படி வந்தனெண்டு தெரியேல்லை. ஆனா, மின்னஞ்சல் பரிமாற்றத்துக்கு, இப்ப மற்ற எல்லாத்தையும் விட்டுட்டு gmailலோடயே நிக்கிறன். Gmail தான் நல்லாப் பிடிச்சிருக்கு.

தமிழ் தட்டச்சு

2004 இல எண்டு நினைக்கிறன், நிலாமுற்றம் எண்ட ஒரு Tamil forum அறிமுகம் கிடைச்சுது. பிறகு யாழ்முற்றம் அறிமுகமும் கிடைச்சுது. அங்க எல்லாம் தமிழ்ல தட்டச்சலாம் என்பதே மகிழ்ச்சியைத் தந்தது. நிலா முற்றத்தில ஏற்கனவே நண்பர்கள் கிடைச்சிருந்ததால அங்கேயே நிண்டிட்டன். நிலா முற்றத்தில நிறைய எழுதத் தொடங்கினன். அங்க பட்டிமன்றம் எல்லாம் கூட நடந்துது. அப்பல்லாம் தொடர்ந்து பாமினியிலதான் தட்டச்சினனான். ஆனா கொஞ்சம் கெதியா தட்டச்ச பழகியிருந்ததால, அங்க நிறைய எழுதிக் கொண்டிருந்தன். அங்க கிடைச்ச ஒரு சினேகிதர் றெனிதான், ”இப்ப நீங்க தமிழ்லயே hotmail ல இருந்து  மின்னஞ்சல் செய்யலாம். அதுக்கு ஈகலப்பையை தரவிறக்கம் செய்யுங்கோ” எண்டு சொல்லித் தந்தார். மின்னஞ்சலில நேரடியா எழுதுறதுக்காக, ஈகலப்பையில் எழுதத் தொடங்கியதும், பாமினியை மறக்கத் தொடங்கிட்டன். ஈகலப்பை இலகுவாக இருந்ததுபோல இருந்தது.

பிறகு ரவி NHM writer பாவிச்சுப் பாக்கச் சொல்லி சொன்னதும், சரி அதையும் முயற்சி செய்வோமே எண்டு, அதையும் தரவிறக்கி பாவிக்கத் தொடங்கியிட்டன். அதில ஈகலப்பையை விட தெரிவுகள் கூட. தவிர ஈகலப்பையால, என்னால Microsoft word ல தமிழ் எழுத முடியாமல் இருந்தது. Notepad ல எழுதக் கூடியதாக இருந்தாலும், சில எழுத்துப் பிழைகள் வந்தது.ஆனால் NHM writer ஆல எல்லா இடமும் எழுதக் கூடியதா இருக்குது. இன்னொண்டையும் குறிப்பிட வேணும். முதல் NHM writer எல்லா இடமும் சரியாத்தான் வேலை செய்தது. ஆனால், இப்ப ஏனோ Internet Explorer ல gmail chat ல தமிழ் தட்டச்சும்போது எழுத்துக்கள் பிழையாக வருகுது. திடீரெண்டு என்ன நடந்ததெண்டு தெரியேல்லை. அதால நான் இப்ப Firefox browser ஐயே பாவிக்கத் தொடங்கிட்டன்.

ரவி என்னை தமிழ்99 பழகச் சொல்லி சொல்லிக் கொண்டே இருந்தாலும், ஏனோ நான் அதுக்குப் போகேல்லை. நேரமில்லாமையும், கிடைக்கிற நேரத்தில புதுசா தமிழ் எழுத்துப் படிக்க இருந்த கள்ளம்தான் காரணம் எண்டு நினைக்கிறன். பிறகு எப்படியும் தமிழ்99 சொல்லிக் கொடுத்தே தீருவது எண்டு ரவி முயற்சி செய்தபோதுதான், என்னட்டை இருக்கிற நோர்வேஜிய keyboard ல, அந்த முறையில தட்டச்சு செய்வது கொஞ்சம் சிரமமான வேலையெண்டு தெரிஞ்சுது. தப்பினன், பிழைச்சன் எண்டு நான் மகிழ்ச்சியா இருந்திட்டன். ஆனாலும், என்னட்டை யாராவது தமிழ் எழுத்துபற்றிக் கேட்டால் தமிழ்99 ஐ பரிந்துரை செய்யுறன் :).

வலைப்பதிவு

அப்பாடா, ஒரு மாதிரி கடைசியா நான் வலைப்பதிவு எழுத வந்த கதைக்கு வந்திட்டன் :).

என்ரை முதல் வலைப் பதிவு, rediffblog ல. அதை எனக்கு அறிமுகப்படுத்தினது திரு. ”ஏன் நீங்க எழுதக் கூடாது” எண்டு அவர் கேக்க, நானும் ”அதானே, நான் ஏன் எதையாவது எழுதக் கூடாது” எண்டு நினைக்க உருவாகினதுதான் என்ரை முதல் வலைப்பதிவு. இருங்க அது இப்பவும் இருக்கா எண்டு தேடிப் பாத்திட்டு வாறன்……………………………………………………….

இருக்கு இருக்கு :). ஆனா ஏன் அங்க ரெண்டு இருக்கெண்டு தெரியேல்லை. என்ரை முதல் பதிவு 10.11.2004. நிலா முற்றத்தில எழுதுறதெல்லாம், அங்க வெட்டி ஒட்டிக்கொண்டு இருந்தன். புதுசா எதையும் எழுதேல்லை :). அப்பவே எனக்கு சிலர் பின்னூட்டம் கூடப் போட்டிருக்கினம். ஆனா சில பின்னூட்டங்கள்ல தமிழ் எழுத்து வலைப் பதிவில தெரியேல்லை. எந்த தமிழ் எழுத்து பாவிச்சினமெண்டு தெரியேல்லை. அங்க நான் 21.05.2005 தான் என்ரை கடைசி இடுகையைப் போட்டிருக்கிறன்.

அதுக்கிடையில blogger பற்றி அறிஞ்சு, அங்க மாறிட்டன். அங்க ஒண்டுக்கு ஐந்து வலைப்பதிவு வைச்சிருந்தன் எண்டால் பாருங்கோவன் :). அங்க, பல வலைப்பதிவை, ஒரே கணக்கில இருந்து கட்டுப்படுத்தலாம் எண்டதை கண்டதும், ஒவ்வொரு இடுகையையும் தரம் பிரிச்சு, வெவ்வேற வலைப் பதிவாப் போட்டுட்டன். ஏதோ எழுதிக் கிழிக்கிற திறத்திலை, எனக்கு ஒரு கூடை வலைப் பதிவுகள் :). அப்படியே rediffblog ல இருந்ததையும் இங்க வெட்டி ஒட்டிப் போட்டு, blogger ல மட்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கினன். Blogger ல இருக்கேக்கைதான், வார்ப்புருவில மாற்றங்கள் எப்படி செய்யலாம் எண்டெல்லாம் சிலரிட்டை கேட்டும், நானாவே நோண்டி நோண்டியும் கண்டு பிடிச்சன். HTML எண்டாலே என்னெண்டு தெரியாம இருந்த நான், நானா எதையாவது மாத்தி மாத்தி போட்டுப் பாத்து, அது சரி வந்தபோது, நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை :).

இந்த கால கட்டத்திலதான் மழை ஷ்ரேயா ஒருநாள் எனக்கு(ம்) வலைப்பதிவு இருக்கெண்டு தெரியாமல், ”ஏன் நீங்க ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதக் கூடாது” எண்டு கேட்டா. நான் ஏற்கனவே இருக்கெண்டு சொல்லி அவவுக்கு காட்டினன். பிறகு என்ரை குட்டித் தேவதைக்கும் ஒண்டை தொடங்கிக் கொடுக்கச் சொன்னா. நான் இழுத்தடிச்சுக் கொண்டிருந்தன். அவ, இது சரிவராதெண்டிட்டு, அவவாவே ஒரு கணக்கை ஆரம்பிச்சுட்டு அனுப்பியிருந்தா. இதுக்குப் பிறகும் சும்மா இருந்தா மரியாதையில்லையெண்டு சொல்லி, அதை மகளுக்கும் காட்டி, அறிமுகப் படுத்தி, அங்க மகள் சொல்லுறதெல்லாம் எழுதிப் போடத் தொடங்கிட்டன். சொன்னா நம்புவீங்களோ தெரியேல்லை, என்ரை குட்டித் தேவதையின்ரை இந்த குட்டித் தோட்டத்தின்ரை banner நானே செய்து போட்டதாக்கும் :).

பொன்ஸ் உம் சில தொழில்நுட்ப விடயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறாங்க.

பிறகு ரவிதான் ”அக்கா, wordpress blog தான் நல்லது, நிறைய அனுகூலங்கள்” எண்டு சொன்னார். ”ஐயோ, பிறகு என்ரை blogger ல இருந்து ஆர் அதையெல்லாம் வெட்டி ஒட்டுறது” எண்டு நான் பயப்பிட, ”பயமே வேணாம். ஒரு அழுத்து அழுத்தினா போதுங்கா, அங்க blogger ல இருக்கிறது எல்லாம், இங்க கொண்டோடி வந்து போடும்” எண்டு, பயம் தெளிய வைச்சு, wordpress வலைப் பதிவுக்கு அத்திவாரம் போட்டார். ரவி நிறைய விதத்துல உதவியிருக்கிறார். அப்படியே என் குட்டித் தேவதைக்கும் அங்கே ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சுக் கொடுத்திட்டன்.

பிறகு ரவிதான் ”ஏன் நீங்க ஒரு சொந்த வலைப்பதிவு வைச்சிருக்கக் கூடாது?” என்று ஆசை காட்டி, இந்த வலைப்பதிவை போட்டுக் கொடுத்தார். kalaiarasy.com எண்டு பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா எழுதவெல்லோ வேணும்.

தற்போதைய நிலை 😦

ஆனா என்ன ஒண்டு, நானும் சரி, என் செல்ல குட்டி மகளும்சரி எழுதுறது நல்லாவே குறைஞ்சிட்டுது. அவளுடைய சில ஒலி, ஒளிப் பதிவுகளை நான் எடுத்துப் போடுறதோட சரி. இதையெல்லாம் போட சயந்தனும் உதவி செய்திருக்கிறார். (அவள் பியானோ வாசிக்கும்போது ஒளிப்பதிவு செய்து ஒரு இடுகை, அவளுடைய வலைப்பதிவில கெதியாப் போட நினைச்சிருக்கிறன். அவளின்ரை இடுகைகளைப் பார்த்து, மலைநாடான் ஒரு தடவை அவரது ஐரோப்பிய தமிழ் வானொலிக்கு ‘இணையத்தில் இன்பத் தமிழ்’ நிகழ்ச்சிக்கு அவளைப் பேட்டி எடுத்தார். அவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியேல்லை. வலைப் பதிவெழுத வந்ததில் எனக்கு கிடைத்த மிகவும் மகிழ்ச்சி தந்த விடயங்களில் அதுவும் ஒன்று.

அட, நானும் சிலருக்கு வலைப்பதிவு என்ன, எப்படி எழுதுவது, அதில சில முன்னேற்றங்கள் எப்படி செய்வது எண்டெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறன் எண்டு சொன்னால் நம்புவீங்களா? 🙂 எனக்கு நன்றியெல்லாம் கூட சொல்லியிருக்கிறாங்க ஒரு நண்பி.

தவிர இணையத்திலும், இந்த வலைப்பதிவு எழுத வந்ததாலும் எத்தனையோ நல்ல நண்பர்கள். இணையத்தில் கிடைத்து, வெறும் இணைய நட்புடன் நிற்காமல், நிலைத்த உறவுகளாய் சிலர். முகம் தெரியாமல் உதவி செய்த சிலர். இப்படி மகிழ்ச்சியடைய நிறைய………

பதிவெழுத வந்தது மொத்தத்தில் மகிழ்ச்சிதான். 🙂

(அப்பாடா, ஒரே மூச்சில இருந்து, நேரடியா வலைப்பதிவில எழுதி முடிச்சாச்சு. எழுதுற ருசியில, இடையில save பண்ணக் கூட இல்லை. நல்ல வேளை இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டு எழுதினது அழிபடேல்லை :). )

எழுதி முடிச்சாலும், சினேகிதி சொன்ன விதிகளை விட்டுட்டுப் போகேலாமலெல்லோ இருக்கு. ம்ம்ம். இந்தளவில எல்லாரும் இந்த இடுகையை எழுதி முடிச்சிட்டினமா எண்டு தெரியேல்லை. அதால ஆரைக் கூப்பிடுறதெண்டு தெரியேல்லை. திருவிட்ட இதைச் சொல்ல, முதலே சொல்லிட்டார், தன்னை கூப்பிட வேண்டாமெண்டு. எதுக்கும் இனி யாரிட்டையும் சொல்லாம மூண்டு நாலு பேரைக் கூப்பிடுவமெண்டு பாக்கிறன்.

1. மழை ஷ்ரேயா

2. நெய்தற்கரை மலைநாடான்

3. சாரல் சயந்தன்

4. காற்றோடு சோமீதரன்

(இன்னும் எழுதேல்லையெண்டால்), தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கோ என்று கேட்டுக் கொள்கிறேன்.

நட்புடன் கலை

பி.கு: அடடே, ஒண்டை சொல்ல மறந்து போனன். இருங்கோ சினேகிதியின்ரை இடுகையில போய் வெட்டிக் கொண்டு வாறன். அப்படியே இங்க ஒட்டி விடலாம். வேறென்ன, அந்த விதி முறைகள்தான் :).

உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ 🙂

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட 🙂 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

பகிர்ந்துகொள்வதற்கு சில!

Posted On செப்ரெம்பர் 18, 2009

Filed under கிறுக்கல்கள்

Comments Dropped 3 responses

1. கனவு!

என் கடைசி கனவு. நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு காடு. அந்தக் காட்டுக்கு வேலியெல்லாம் போட்டு, நம்ம வீட்டு காணியிலே இருந்து பிரிச்சு வைச்சிருக்காங்க. அந்த வேலியோரத்துல நின்னு, எனக்கு சிங்கம் bye எல்லாம் சொல்லி, tata எல்லாம் காட்டிட்டு போச்சு :). என்னோட கனவுகளை நினைச்சால் எனக்கே சிரிப்பா இருக்கு. அது எப்படி எனக்குன்னு பாத்து இப்படி கனவுகள் வருது??

மேலும் எனது கனவுகளைப் பார்க்க விரும்பினால்?  இன்றைய கனவு, வெறும் கனவா, எனது விசித்திரங்கள்.

2. ராசி பலன்!

ஏதோ ஒரு தொலைக்காட்சியில், தினமும் காலையில், யாரோ ஒருவர் ‘இன்றைய ராசி பலன்’ சொல்கிறார். காலையில் தொலைக்காட்சியை வீட்டுப் பெரியவர் போட்டு விடுவார். காலையில் மகளை பாடசாலைக்கு தயார்ப்படுத்தி, வேலைக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது, இந்த ராசிபலன்கள் காதில் விழும். எந்த ராசிக்கு என்ன பலன் என்று கேட்கா விட்டாலும் (அதில் ஆர்வமோ இல்லாததால்), அவர் சொல்லும் பலன்கள் காதில் விழும். இன்றைக்கு காலை என்ன பலன், மாலை என்ன பலன் என்று கூடச் சொல்கிறார். இன்னும் எத்தனை மணிக்கு என்ன பலன் என்று சொல்லாததுதான் குறை என எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த ராசி பலனை கேட்டபோது, எனக்குள் ஓடிய எண்ணம்…. வன்னியில் போர்ச் சூழலின் இறுதிக் கால கட்டங்களில், அங்கே அகப்பட்டிருந்த ஆயிரம் ஆயிரம் மக்களில் எல்லா ராசிக்காரர்களும்தானே இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான வாழ்க்கைதானே இருந்திருக்கும்? அல்லது எல்லோருமே ஒரே ராசிக்காரர்களா? இப்படி ஒரே மாதிரியான கடினமான சூழல்களில் அகப்பட்டுக்கொள்ளும் அத்தனை மனிதர்களுக்கும் எப்படி பல ராசியின் பலன்கள் பொருந்திப் போகிறது?

3. அன்பு

மங்கை என்ற வலைப்பதிவில, அவங்க குறிப்பிட்டிருக்காங்க “வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு”. எனக்கென்னமோ யோசிச்சுப் பாத்தா, அதன் நேரெதிர்தான் சரின்னு தோணுது. அன்பை வைச்சு நடக்கிறவங்களுக்குத்தான் எல்லா கவலைகளும். அன்பில்லாதவங்க குறைஞ்ச கவலைகளோட வாழ்ந்திட்டுப் போவாங்க. அன்பு வைத்தல் குறைவுன்னு சொன்னால், அது ஒரு பற்றற்ற நிலைதானேன்னு தோணுது. அப்படி ஒரு நிலையில் துக்கம் வருவதும் குறைவுதானே?

இன்றைய கனவு!

Posted On செப்ரெம்பர் 8, 2009

Filed under இலங்கை, சமூகம்

Comments Dropped 6 responses

வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் :(. நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்……. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.