சுதந்திர உணர்வு!

Posted On ஓகஸ்ட் 21, 2009

Filed under சமூகம், ரசித்தவை

Comments Dropped 3 responses

ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.

அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் குடும்பமில்லாமல், மேலும் தொலை தூரப் பயணம் சினேகிதிகளுடன் சேர்ந்து போக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது, சாதாரண எண்ணங்களிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டுத் தோன்றியது. அவள் இருப்பது Australia. நானிருப்பதோ நோர்வே. மற்ற சினேகிதிகள் இருப்பதோ கனடா. இப்படி எல்லோரும் கூட்டாக போக வேண்டும், எமது பழைய காலத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற அவளது எண்ணம், ஆசை, அந்த நாட்களை மீண்டும் வாழ அவளுக்கு உள்ள ஆசையைக் காட்டியது.

யோசித்துப் பார்த்ததில் எனக்கும் அப்படி ஒரு பயணம் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், எனது குழந்தையின் வயது, விடுமுறை காலத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தில் இப்போதைக்கு பங்கேற்க முடியவில்லை என்று (வருத்தத்துடன்) எழுதினேன். மற்ற சினேகிதிகள் இதற்கு என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பொதுவான மடல் எதுவும் வரவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ளாததில் அவள் கொஞ்சம் மன வருத்தம் அடைந்திருப்பாள் என்றே தோன்றியது. காரணம் அவள் மிகவும் உற்சாகத்துடன் இந்த பயணம்பற்றி எழுதி இருந்தாள். ஆனால் அதில் எவரும் இணைந்து கொள்ளவில்லை. எனக்கும் இது கொஞ்சம் மன வருத்தமாய் இருந்ததுபோலவே தோன்றுகிறது.

அதன் பிறகு நீண்ட நாட்களாய் அவளிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை. பிறகு திடீரென்று மீண்டும் ஒரு மடல். அது தனது adventure trip பற்றின மடல். மிகவும் விரிவாக அந்த மடல் இருந்தது.

அதில் தான் மட்டும் தனியாக, எவருடைய எந்த சிறு உதவியுமில்லாமல் ஒரு பயணம் ஒழுங்கு செய்து போக வேண்டும் என்று தோன்றியதாம். காரணம் திருமணத்தின் பிறகு, பல விடயங்களில் யாரையாவது (முக்கியமாக கணவனை) சார்ந்தே இருப்பது போன்ற எண்ணம். திருமணத்தின் முன்னர், துணிச்சலுடன் செய்த பல விடயங்கள், தானாக தனித்து திட்டமிட்டு, முடிவெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்திய விடயங்கள் எதையுமே தற்போது செய்ய முடியாதது போன்ற ஒரு பிரமை. எதை செய்வதாக இருந்தாலும், வேறொருவரிடம் கேட்டு, அதைப்பற்றி ஆராய்ந்து, முடிவெடுத்து…. இவையில்லாமல் முன்புபோலவே இப்போதும் தனித்து செயற்பட முடியும் என்று பார்க்கும் ஆவல்.

வீட்டில் கணவருடனோ, பிள்ளைகளுடனோ கலந்தாலோசிக்காமல், தானாகவே சுற்றுலா வழிகாட்டி ஒன்றைப் பெற்று, எவரிடமும் சொல்லாமல், சுற்றுலா பயணக் குழு ஒன்றுடன் இணைந்து ஒரு வாரப் பயணம் ஒன்றை ஒழுங்கு செய்தாளாம். மறுநாள் காலையில் பயணம் என்றால், முதல்நாள் இரவில் ஒரு தாளில் தனது பயணம்பற்றிய முழுமையான குறிப்புக்களையும் குறித்து வைத்தாளாம். தான் போகுமிடங்கள், விலாசங்கள், அவசரமானால் தொடர்பு கொள்ளக்கூடிய முறைகள் அத்தனையும் குறித்து, அவர்கள் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு, போய் வருவதாக அதிலேயே விடைபெற்றுக்கொண்டு, மறுநாள் புறப்பட்டு விட்டாளாம். அந்த பயணம்பற்றி, தான் அதை எவ்வளவு இரசித்தேன் என்பது பற்றியெல்லாம் அந்த மின்னஞ்சலில் மிகவும் விரிவாக எழுதி இருந்தாள்.

மிகவும் உற்சாகத்துடன் அந்த மடலை முடித்திருந்தாள். ஆனால் அவளுடைய கணவரைப் போலவே, எல்லா கணவர்களும் இப்படிப்பட்ட செயலை, முழுமனதுடன், புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.

நானும் கூட திருமணத்தின் பின்னர், தனித்தியங்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டதாய் எண்ணி கவலைப் பட்டது (படுவது) உண்டு. திருமணமான பெண்களுக்கு இந்த உணர்வு அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. முழு சுதந்திரத்துடன் எந்த ஒன்றையும் செய்ய முடியாமல் போகின்றதோ?

ஆனால் குடும்பத்துடன் இருப்பதால் ஏற்படும் மற்றைய மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் அவள் குறிப்பிட தவறுவதில்லை.

அண்மையில் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மடல். அவர்களது திருமணநாளை முன்னிட்டு, பிள்ளைகள் தங்களுக்கு (அவளுக்கும், கணவருக்கும்) ஒரு சுற்றுலா போய், மூன்று நாட்கள் வேறொரு இடத்தில் தங்கி, அங்கே hot air balloon இல் ஏறிப் பார்த்து வரவும் ஒழுங்குகள் செய்து, அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்ததாகவும், போய் வந்த அனுபவத்தையும் மிகவும் இரசனையுடன் எழுதியிருந்தாள். அத்துடன், அந்த மடலில், சினேகிதிகள் மட்டுமாக இணைந்து செல்ல வேண்டிய அந்த பயணத்தைப் பற்றியும் நினைவூட்டி இருந்தாள்.

3 Responses to “சுதந்திர உணர்வு!”

 1. Kalamathy

  So lovely ! keep them coming .

 2. Reniflavia

  உங்களின் சிநேகிதி துணிச்சலாக பயணம் செய்ததைப் போலவே நானும் சிறு வயதிலேயே, தனிமையில் நிறைய பயணம் செய்திருக்கிறேன்…பயணம் பெண்களுக்கு நிறைய தைரியத்தையும்,தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது…

  • கலை

   //பயணம் பெண்களுக்கு நிறைய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது…//
   பெண்களுக்கு மட்டுமில்லை. குழந்தைகளுக்கும்னு சொல்லத் தோணுது. 12 வயதான எனது மகள் பாடசாலையுடன் பிரான்ஸ்க்குப் போய் வந்ததில் இருந்து, அவளிடம் அதிகளவு தன்னம்பிக்கையை காண முடிகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s