மரணத்தின் வாசனை!

இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

One Response to “மரணத்தின் வாசனை!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s