குழந்தையின் பெயர்!
ஒரு இடுகை போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :).
குழந்தைக்குப் பெயர் வைத்த கதை :).
குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையிலும் குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு.
என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் “அஞ்சலி“.
ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, “அஞ்சலிதானே?”. “ஆம்” என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை :).
கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
குழந்தை பிறந்தபோது மற்றவர்களிடம் அறிவித்தபோது, “அஞ்சலி பிறந்திட்டாள்”, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், “என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?” என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.
மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு :). மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, “அழகான பெயர்” என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து ‘அழகான பெயர்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் “It sounds like ‘angel'” என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும்.