ஜோதிடம்!

Posted On செப்ரெம்பர் 21, 2007

Filed under சமூகம்

Comments Dropped leave a response

அன்றைக்கு சாப்பிட உட்கார்ந்தபோது வழமை போலவே டிவி பார்க்கலாமே என்றெண்ணி அதை போட்டேன். (சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது கூடாத பழக்கமாம், சொல்கின்றார்கள். ஆனால் அதை கேட்டு நடக்க என்னால் முடியவில்லை). அதில், ஒரு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. வழமை போலவே, என்ன ஏது என்று புரியாமலே நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்.

அது ஒரு அமெரிக்க நிகழ்ச்சி. இருவர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் நிகழ்ச்சி நடத்துனர், மற்றவர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஒரு அமெரிக்க பெண்மணி.

அழைக்கப்பட்டிருந்த ஏனைய மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்களில் ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர்  காலத்தில்  நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்க, அந்த பெண்மணி உடனேயே பதில் சொன்னார். அட, ‘அமெரிக்காவிலே டிவியில் வந்து நேரடி ஜோதிடம் சொல்லுறாங்க போலிருக்கே’ என்று கொஞ்சம் ஆர்வமாக பார்த்தேன்.

 அடுத்து ஒரு சிறுபெண் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து, “எனக்குரியவரை நான் எப்போது காண்பேன்?” என்று கேட்க, அந்த பெண்மணியும் உடனடியாக, “உன்னுடையவரின் பெயர் Jack. அவரை நீ இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கண்டு பிடிப்பாய்” என்று சொன்னார். பாவம் அந்தப் பெண், இன்னும் இரண்டு வருடத்துக்கு, Jack என்ற பெயருடன் காணும் ஆண்களை எல்லாம் கண்டு குழம்பப் போகின்றாள்.

அடுத்து எழுந்த ஒரு நடுத்தர வயதான பெண்மணி, “என்னைச் சுற்றி எப்போதும் தேவதைகள் இருப்பதை நான் உணர்கின்றேன்” என்று சொல்ல, அந்த ஜோதிட பெண்மணி, “எல்லோரை சுற்றியும் 5 அல்லது 6 தேவதைகள் எப்போதுமே இருக்கும்” என்று சொல்ல, அந்த பெண்மணி, “என்னைச் சுற்றி இருக்கும் தேவதைகளை உன்னால் இப்போது பார்க்க முடிகின்றதா” என்று சீரியசாக கேட்க, அவரும், “ஆம், பார்க்கிறேன்” என்று அதை விட சீரியசாக ஒரு பதில் சொல்கின்றார். “அப்படியானால், அந்த தேவதைகள் சொல்வதையெல்லாம் நான் செய்தால் தப்பில்லைத்தானே” என்று அந்த பெண்மணி கேட்க, இவர் “இல்லை, அவர்கள் சொல்வது போலவே நீ எல்லாம் செய்யலாம்” என்று பதில் கொடுத்தார். ஏதாவது தப்புக்கள் செய்யாமல் இருந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக ஒரு ஆண் எழுந்து, “நான் என்னுடைய வீட்டை விற்க வேண்டும். விற்க முடியுமா?” என்று கேட்க, “ஆம், நீ ஒரு  நல்ல  வீடு  விற்றுக் கொடுப்பவரை உடனடியாக சந்திக்க வேண்டும்”, என்று  பதில்  தந்தார்.  

உடனே நிகழ்ச்சி நடத்துனர், “நானும் என்னுடைய வீட்டை விற்பதாக இருக்கிறேன். எப்போ விற்பேன்?” என்று கேட்க, “இன்னும் 7 கிழமைக்குள் விற்று விடுவாய்” என்று பதில் சொன்னார். நடத்துனரின் முகத்தில் சந்தோஷம்.

அடுத்ததாக எழுந்த ஒரு இளைஞன், “அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை முன் வைத்தான்” (எனக்கென்னவோ அவன் ஒரு நக்கலா கேட்ட மாதிரித்தான் இருந்தது). அதற்கு “எனக்கு யார் என்று தெரியாது. ஆனால் யார் வந்தாலும், இப்ப இருப்பதைவிட நல்ல நிலமை உருவாகும்” என்று சொன்னார். பொதுவான, பெரிய விடயங்களில் ஜோதிடம் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போலும். 🙂

நடத்துனர் தன்னுடைய வீட்டை நிச்சயமாக 7 கிழமைக்குள் விற்று விட முடியுமா என்று மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

எப்படித்தான் மற்றவருடைய எதிர் காலத்தை அப்படியே பட்டு பட்டென்று (எந்த ஒரு பொருளோ, புத்தகமோ அவரிடம் இல்லை) சொல்கின்றாரோ தெரியவில்லை. சும்மா உட்கார்ந்த படியே, அதுவும் டக் டக்கென்று பதில் சொல்லி அனைவரையும் அசத்தி விட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

நான் பார்க்க தொடங்கியபோதே நிகழ்ச்சி முடிவை நெருங்கி விட்டிருந்தது. அதனால் முழுமையாகப் பார்த்து சிரிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் நானும் எழுந்து விட்டேன். உலகில் எல்லா இடத்திலும், எல்லா மாதிரியான ஆட்களும் இருப்பார்கள் போல இருக்கு 🙂

மதம் பிடிக்காதவர்கள்!

Posted On செப்ரெம்பர் 13, 2007

Filed under குழந்தை, சமூகம்

Comments Dropped leave a response

மதம் பிடிக்காதவர்கள்!

மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். ‘ஆரம்ப வருட திட்டம்’ (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, ‘உலக வெப்பமயமாதல்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.

இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன். 🙂

அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, ‘உலகிலுள்ள மதங்கள்’. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் அன்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது.மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது. 🙂

என்னான்னு பாத்து சொல்லுங்க!

Posted On செப்ரெம்பர் 6, 2007

Filed under சமூகம்

Comments Dropped leave a response

singer-hindu-gods1.jpgsinger-hindu-gods.jpg

 நடந்து வந்து கொண்டிருந்தபோது (இங்கே நோர்வேயில்தான்), நிலத்தில் ஒரு காகித்ததாள் கிடந்தது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் அதில் இப்படி இருந்தது. இரு பக்கத்தையும் ஸ்கான் செய்து போட்டிருக்கிறேன். பெரிதாக்கிப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தில், பல தலைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.