வெறும் கனவா?

Posted On ஜூலை 6, 2007

Filed under கிறுக்கல்கள்

Comments Dropped one response

இது கனவா?

பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில்  நினைவிருக்கும் கனவை (அனேகமாக  கண்  விழிக்கும்போது  கண்டு  கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும்  சொல்லுவதும் வழக்கம். இப்போதெல்லாம் அப்படி சொல்வதை கூட விட்டு விட்டேன்.

மூன்று நாட்கள் முன்னால், வழக்கம்போல் லேட்டாக (லேட்டுக்கு காரணம் மகளுக்கும், கணவருக்கும் லீவு விட்டாச்சு) காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். லீவுதானே, மற்றவர்கள் நன்றாக தூங்கி எழும்பட்டும் என்ற நல்லெண்ணத்தில் (நான் எழுந்து போக வேண்டியிருக்கே என்று உள்ளுக்கு கொஞ்சம் எரிச்சல்தான்) சத்தம் அதிகம் போடாமல் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனால் கணவரும் எழுந்து வந்தார். அவர் என்னிடம் கேட்டார் “என்ன புதினம்?”. ‘காலங்காத்தால இது என்ன கேள்வி’ என்று இந்தக்  கேள்வி ஆச்சரியத்தை தந்தாலும், அவசரமாய்  வேலைக்கு  புறப்பட  வேண்டி இருந்ததில்  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.   அதனால் நான் கடைசியாக கண்டிருந்த அன்றைய கனவை சொன்னேன். ஒரு பெரிய முதலையை எங்கள் வீட்டு குளியலறையில் கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறோம். அந்த முதலையின் வாயே குளியல் தொட்டியை விடப் பெரிது. அது எப்படி அந்த தொட்டிக்குள் இருக்கிறதென்பதெல்லாம் தெரியாது. 🙂

நான் கனவு சொல்லும்போது “வேறு வேலையில்லை.” என்று திட்டுபவர், பேசாமல் நான் சொன்ன கனவை கேட்டுவிட்டு, அவரும் ஒரு கனவு சொன்னார். அவர் கண்ட கனவில் ஒரு பாலத்தின் அருகில் கார் விபத்து நடந்ததாகவும், அந்த காரின் ஒரு பக்க சில்லுகள் இரண்டும் மேலே எழுந்து இருந்ததாகவும் சொன்னார். நான் கனவுகளையும், நிஜமான நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை என்றதால் அப்படியே அந்த கதையை விட்டு விட்டு சென்று விட்டேன்.

அன்று மாலை லண்டனில் இருக்கும் ஒரு தம்பிக்கு தொலைபேசினேன். அப்போது அவர்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமான விடயம். அன்று காலையில் அவருக்கு எனது கணவர் கனவில் கண்டது போன்ற அதே நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. அவர் high way யில் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி, இரு சில்லுகளும் மேலெழுந்து, பாதையின் ஒரு புறம் இருந்து மறு புறத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. நல்ல வேளையாக அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பொலீஸ் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்தார்களாம். வாகனம், முழுமையாக சரிந்து பாதையில் இழுபட்டுக் கொண்டு சென்றும்கூட, அவர்கள் உயிர் தப்பியிருப்பது மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விடயம் என்று சொன்னார்கள். அந்த விபத்தை நேரில் கண்ட அனைவரும் மிகவும் ஆச்சரியப் பட்டார்களாம். லண்டனில், அந்த high way யில், மிகப் பெரிய வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில் அப்படி ஒரு விபத்து நடந்தும், இவர்களது வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் அடித்துக் கொண்டு சேதப்படாமல், இவர்களும் உயிர் தப்பியது மிகவும் ஆச்சரியம் என்று பொலீஸ் உட்பட அனைவரும் சொன்னதாகச் சொன்னார்கள்.

இதில் என்னுடைய ஆச்சரியம், எப்படி அதே போன்ற கனவு, கிட்டத்தட்ட, அதே நேரத்தில் என் கணவருக்கு வந்தது என்பதுதான். எனது பாட்டியார் இறந்த ஒருநாள் அதிகாலையில், பல மைல் தொலைவில் இருந்து படித்து வந்த எனக்கு, நானே இறந்து போனதாகவும், என்னை சுற்றி பலர் நின்று அழுவதாகவும் நான் கண்ட கனவும் இப்போ நினைவுக்கு வருகின்றது. அன்று முழுவதும் நான் என்னவென்று புரியாத ஒரு மனக் கஷ்டத்தில் இருந்ததும், அன்று மாலை, பாட்டி இறந்த செய்தி என்னை வந்து சேர்ந்ததும் இப்போதும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.

I’m not a superstitious person. ஆனாலும் இந்த கனவுகளும், தொடர்ந்த நிகழ்வுகளும் ஆச்சரியமாக இருக்கின்றது.

கனவுகளைப்பற்றி பேசும்போது உங்களிடம் இன்னொரு கனவுபற்றியும்  சொல்லத் தோன்றுகின்றது. சோகக் கனவுபற்றி சொன்னதால், இனி ஒரு சந்தோஷக் கனவு. 🙂

உங்களில் யாராவது கனவில் பறந்ததுண்டா? நான் கனவுகளில் பறந்திருக்கின்றேன். யாராவது என்னை துரத்திக் கொண்டு வரும்போது, அவர்களிடமிருந்து தப்பிக்கவோ, அல்லது எனக்கு அவசரத் தேவையாக எங்கேயாவது விரைவாக செல்ல வேண்டும் என்று தோன்றும்போதோ நிலத்திலிருந்து மேலெழுந்து பறப்பேன். இறக்கை எதுவும் முளைத்திருக்காது 🙂 . ஆனாலும் இலகுவாக பறக்க முடியும். அது கனவாகவே இருந்தாலும், மிகவும் அபூர்வமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போ நீண்ட நாட்களாக அப்படி கனவு வரவில்லை. 😦

ஒருவேளை எந்த ஆபத்தும் எனக்கு இல்லாததாய் உணர்கின்றேனோ? அல்லது எந்த அவசரமும் இப்போது இல்லையோ தெரியவில்லை. 🙂

பகல் ராத்திரி!

Posted On ஜூலை 5, 2007

Filed under நோர்வே

Comments Dropped leave a response

நோர்வே – 8

நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில்  சூரியன்  வானத்தில்  வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் அறிந்தவர் அறியாதவர் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது புன்னகைத்து செல்லும் காலமாக இருக்கும்.

பைபிளில் குறிப்பிடப்படும் Johannes என்பவரின் பிறந்தநாள் 24 ஜூன் என்றும், அந்த நாளை குறிப்பிடும் விதமாக, அந்த நாளுக்கு முதல் நாள்  மாலையில், அதாவது 23 ஜூன் அன்று மாலை இந்த கொண்டாட்டம் நடாத்தப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. Sankthansaften என்று குறிப்பிடுகின்றார்கள்.

Sankthansaften  நாளில் பகலில் இரு குழந்தைகளை மணமக்களாக அலங்கரித்து, அவர்களுக்கிடையே, விளையாட்டுத் தனமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவர்களை  குதிரை  வண்டிலில்  ஊர்வலமாக  அழைத்துச் செல்வார்கள்.  அந்த ஊர்வலத்தில் நிறைய மக்கள் கலந்து கொள்வார்கள் (சிறப்பிப்பார்கள் 🙂 ). இது நடந்த நேரம் நாங்கள் போய்ச் சேரவில்லை. அதனால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி இங்கே…

ஒரு சில நாட்கள் முன்னராக குறிப்பிட்ட இடங்களில், மிக உயரமான கோபுரங்களை கட்டுவார்கள்.

 

இங்கே இருக்கும் படத்தில் ஒரு  பெரிய  கோபுரமும்,  பக்கத்திலேயே  ஒரு குட்டிக் கோபுரமும் இருப்பதை காணலாம்.

அவற்றை அந்த நாள் மாலையில் எரிப்பார்கள்.

 பெரிய கோபுரத்தின் உச்சியில் ஏறி தீ மூட்டும் காட்சி.  அப்போது நேரம் மாலை 9.30.

தீ வைத்த பின்னர், அவசரமாக இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

உச்சியில் உள்ள கூர்மையான முனை எரிகின்றது.

எரிந்து கொண்டு போகும்போது முனை கீழே விழுகின்றது, புகை கிளம்புகின்றது. அடிக்கடி நீரை அடித்து சூட்டை குறைப்பதுடன், மெதுவாக எரியும்படி பார்த்துக் கொள்கின்றார்கள்.

அதற்கு எங்கள் ஊரில்போன்று பழங்கதைகளும் உள்ளன. 🙂   ஊரில்,  மலைகளில்  வந்து தங்கி இருக்கும்  தீய  சக்திகள்,  பேய்,  பிசாசு  போன்றவை, இந்த  பெரிய  தீப்பிழம்பைக்  கண்டு  ஓடிப்  போய்  விடுமாம்.  தற்போது யாரும் இந்த  கதைகளை நம்புவதில்லை என்றாலும், ஒரு  மகிழ்ச்சியான  பொழுது  போக்காகவும்,  முழு  பகலைக்  கொண்ட நாளில் ஒரு கொண்டாட்டமாகவும் இதை   தொடர்ந்து  செய்து  வருகின்றார்களாம். அந்த கோபுரம் எரிக்கும் நாளில் , ஜூன் 23 ஆம் திகதி, கோபுரம் இருக்கும் இடத்தை சுற்றி கூடாரங்கள் எல்லாம் போட்டு, ஒரு திருவிழா மாதிரி அமைத்து வைத்திருப்பார்கள். பல இடத்திலிருந்தும் அங்கே வந்து கூடி, குடித்து, கும்மாளமடிப்பார்கள். மாலை 9.30, 10 மணிக்கு அந்த கோபுரம் எரிக்கப்படும். அதன் பின்னர் இரவிரவாக (இரவு எங்கே வருது, அதுதான் வெளிச்சமாக இருக்குமே 🙂  ) சுற்றித் திரிவார்கள்.

தீ அந்த மாலை (இரவு) வேளையில் அழகாக கொழுந்து விட்டு எரிகின்றது.

நேரம் நடு இரவு 12 மணி. இன்னும் தெளிவான வெளிச்சம் இருப்பதை பார்க்கலாம்.

எங்கள் நாட்டில் சில கோவில்களில், சிவராத்திரி நாளன்று இப்படி  கோபுரம் கட்டி எரிப்பதையும், இரவிரவாக  மக்கள்  விளித்திருந்து  கொண்டாடுவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கே சிவராத்திரி, இங்கே அது “பகல்ராத்திரி”. 🙂