புகைக் குழந்தை!
புகைக் குழந்தை!
வேலை செய்யும் இடத்தில் மதிய உணவுக்காக கூடியிருந்தோம். அப்போது புத்தம் புதிதாய் ஒரு குழந்தைக்கு பாட்டியாக பதவி உயர்வு பெற்ற ஒரு பெண்ணும் அங்கே இருந்தார். குழந்தை பிறந்தது அறிந்ததும், ஒஸ்ரியா போய் குழந்தையை பார்த்து விட்டு திரும்பி இருந்தார்.
மிகவும் ஆவலுடனும், ஆசையுடனும் அந்த குழந்தையைப் பார்த்து வந்த மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை என்ன நிறை என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர், 2400g என்று சொன்னார். உடனே இன்னொருவர் premature baby யா என்று கேட்க, “இல்லை, குழந்தை சரியான நேரத்தில்தான் பிறந்திருக்கிறது. ஆனால் உடல் எல்லாம் மிகவும் மெலிவாக இருக்கிறது. கைகளைப் பார்த்தால், ஒரு மெல்லிய தடியில், கொஞ்சம் பெரிதான உள்ளங்கையை வைத்து ஒட்டியதுபோல் இருக்கிறது. அந்தக் குழந்தை ஒரு புகைக் குழந்தை” என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார். எனக்கு புரியவில்லை. ‘அது என்ன புகைக் குழந்தை?’ என்று பக்கத்தில் இருந்தவரிடம் மெதுவாய் விசாரித்தேன். அவர் சொன்னார், “குழந்தையின் தாய் புகைப்பவர். குழந்தை வயிற்றில் இருந்த காலத்திலும் தொடர்ந்து புகைத்திருக்கின்றார்” என்று. கவலையாக இருந்தது. புகைத்தலின் கேடுகள் தெரிந்திருந்தும், அது குழந்தைக்கு கெடுதல் என்று தெரிந்திருந்தும் எப்படி அந்த தாயால் புகைத்தலை நிறுத்திக் கொள்ள முடியாதிருந்தது என்று நினைத்துப் பார்த்தேன்.
இனியாவது புகைப்பதை நிறுத்தி விடுவாராமா என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருடம் மட்டும் வீட்டிற்குள் புகைப்பதை (குறித்துக் கொள்ளுங்கள் புகைப்பதை அல்ல) நிறுத்தி வைப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றாராம். குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் புகைக்கத்தான் போகின்றார். ஆனால் வெளியே போய் புகைப்பாராம். ஒரு வருடத்துக்குப் பின்னர் வீட்டினுள் புகைத்தால் மட்டும் அது குழந்தையை பாதிக்காதா? இவர்கள் ஒன்றும் passive smoking பற்றி கேள்விப் படாதவர்கள் அல்லவே. தனது குழந்தைக்கு கேடானது என்று தெரிந்தும், எப்படி இவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிகின்றது?
நோர்வேயில் 35-44 வயது எல்லைக்குள் புகைப்பவரில் பெண்களே அதிகமாக இருப்பதாகவும், 45-54 வயதுக்கிடையில் புகைப்பவர்களில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதாகவும், ஏனைய வயதெல்லைகளில் ஆண்களே அதிகம் புகைப்பவர்களாய் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. குழந்தைகளுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் வயதில் இந்த பெண்கள் ஏன்தான் புகையை நாடுகின்றார்களோ என்று எரிச்சலாக இருக்கிறது.
புகைத்தல்!
பொது இடங்களில் நின்று கொண்டு புகைப்பவர்கள், அந்த புகையை மற்றவர் நாசிக்கும், சுவாசத்திற்கும் அனுப்பி, நாற்றத்தை கொடுப்பதோடு, தம்மை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உடல் நலிவடையச் செய்கின்றார்கள். ஏன் இதை உணர மறுக்கின்றார்கள்?
Funny pictures இல் ஒரு இடத்தில், குழந்தையின் வாயில் சிகரெட் இருப்பதுபோல் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. நகைசுவைக்காக என்று ஒரு குழந்தையின் வாயில் சிகரெட் வைத்து படம் எடுக்க எப்படி முடிகின்றது என்றுதான் எனக்கு தோன்றியது.
புகைப்பவர்களுக்கு புகைத்தலை தவிர்ப்பதற்கு வழங்கப்படும் மிக முக்கியமாக 10 காரணங்கள் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
10. வரி அதிகரித்துக் கொண்டு போகும் இந்த கால கட்டத்தில், புகைத்தலுக்குரிய செலவும் அதிகரித்துக் கொண்டே போகும். இந்த செலவு அவசியம்தானா?
9. உங்கள் குடும்பத்தை நேசிப்பவரா நீங்கள் இருந்தால், அவர்களுக்கு வலியை கொடுப்பது அவசியமானதா?
8. உங்கள் நேரத்தை விரயமாக்கி, உங்களை பலவீனமானவராய் ஆக்கும் இந்த புகைத்தல் அவசியமானதா?
7. நாற்றத்தை உருவாக்கி, உங்களை ஒரு சுத்தமானவராக காட்டாத இந்த புகைத்தல் அவசியமானதா?
6. அழகான வெண்பற்களின் நிறத்தையே மாற்றி அலங்கோலமாக காட்டுவது அவசியம்தானா?
5. உங்களுக்கு நீங்களே கெளரவமற்றவராக மாறிக் கொள்வது அவசியம்தானா? புகைத்தலை விட்டு விடுவதனால், நீங்களே கண்ணியமானவராக உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள மாட்டீர்களா?
4. நீங்கள் புகைத்தலை விட்டு விட்டால், புகைக்கும் மற்றவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முடியுமல்லவா?
3. புகைத்தலை நிறுத்துவது கடினமானது. அதையே உங்களால் நிறுத்தி விட முடிந்தால், நீங்கள் விரும்பும் வேறு பல உபயோகமான காரியங்களை செய்வதற்கும் உங்களுக்கு தனி வலிமை கிடைக்குமல்லவா?
2. கான்சரைப் பற்றியோ, இதய நோய்கள் பற்றியோ, வேறு இது தொடர்பாக வரும் நோய்கள் பற்றியோ பயந்து கொண்டிருக்காமல், உடல் நலமுள்ளவராக உணர்வது எத்தனை இனிமையாக இருக்கும்.
1. துர்ப்பழக்கத்தை கை விடுவதன் மூலம், அல்லது தூக்கி வீசுவதன் மூலம், உங்களை நீங்களே அதிக தகுதி உடையவராக ஆக்கிக் கொள்கின்றீர்கள்.
Yes, you deserve better for yourself.
இது விடயமாக, எங்கேயோ வாசித்து, மனதுக்கு பிடித்த ஒரு வரி>…….
“மனிதனே, தவணை முறையில் கிடைக்கிறது என்பதற்காக மரணத்தைக் கூடவா வாங்க துணிந்து விட்டாய்?”
புகைத்தலை விடுவதற்காய் சிலர் நிக்கோட்டின் சுயிங்கம் பாவிக்கின்றார்கள். இந்த சுயிங்கம் கன்னம், முரசு, தொண்டையில் கான்சரை கொண்டு வரலாம் என்று சொல்கிறார்கள். இதன் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இதில் பக்க விளைவு இல்லை என்று சொன்னாலும், பல ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையல்ல என்கிறார்கள். நிக்கோட்டினின் தொழிற்பாடு அங்கேயும் இருப்பதால், பக்கவிளைவுகள் மட்டும் எப்படி இல்லாமல் போகும். நியாயமான கேள்விதானே? ஒரே ஒரு நன்மை இந்த சுயிங்கத்தால்… பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லை, அந்த சிகரெட் நாற்றத்தால் மற்றவர்களை கஷ்டப்படுத்த தேவை இல்லை :). ஆனால் குடும்ப உறுப்பினர்கள், பாசம் கொண்டவர்களுக்குத் தீராத தொல்லைதான். நிக்கோட்டின் சுயிங்கத்தில், நிக்கோட்டினுடன் ஒரு addictive drug உம் உள்ளது என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு பழக்கத்தில் இருந்து விடுபட, இன்னொரு பழக்கத்துக்கு, அதுவும், அதே தீயவிளைவுகளைத் தரும், அடிமைப்படுத்தும் பழக்கத்துக்கு மாறுவதா?
ஆனால், சரியான consultant இன் உதவியுடன், இந்த சுயிங்கம் பாவிப்பதால், பின்னர் சிகரெட்டுடன், அந்த சுயிங்கத்தையும் கை விட்டு விடலாம் என்கிறார்கள். அது ஒரு வேளை சரியாக இருக்கலாம். மனதில் உறுதிதான் முக்கியம். அது இருந்தால், consultant இல்லாமலே கூட இந்தப் பழக்கத்தை கை விட்டு விடலாம். நமக்கு ஒன்று மிகவும் பிடித்ததாய் இருந்தாலும், அதை எம்முடன் உள்ளவர்களுக்காகவும், ஏன் முக்கியமாய் எமக்காகவும், அந்த ஒன்றை நாம் விட வேண்டும் என நினைத்தால், அந்த மன உறுதியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது முடியுமல்லவா?
நான் புகை பிடிப்பதை விட்டு 4 நாள் ஆச்சு!
😦
முனைகிறேன் விரைவில் நிறுத்த!
சிபி! நல்ல காரியம் செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள். இந்த மனவலிமையுடன் நீங்கள் விரும்பும் காரியங்கள் அனைத்தையும் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பாலபாரதி! விரைவில் நிறுத்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிக்கு, எனது இந்த பதிவும் ஒரு காரணமானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நீங்க புகைத்தலை நிறுத்தினால், அதை சொல்லி, உங்களுக்கு தெரிந்த மற்றவர்களையும் நிறுத்தச் செய்யலாம். 🙂