நேரத்தின் மதிப்பு!

Posted On ஜூன் 19, 2007

Filed under ரசித்தவை

Comments Dropped leave a response

நேரத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள:

> பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.
> நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.
> ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர்,
இறுதிப் பரீட்சையில் தோல்வியடந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.
> ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.
> ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர்,
கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.
> ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்துகொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.
> ஒரு மணித்தியாலத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.
> ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.
> ஒரு செக்கனின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.
> ஒரு மில்லி செக்கனின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.

நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவு செய்யும்போது, உங்களது நேரம் மேலும் பெறுமதி மிக்கதாயிருக்கும்.

நாடு நல்ல நாடு – நோர்வே 7

Posted On ஜூன் 18, 2007

Filed under நோர்வே

Comments Dropped 2 responses

நோர்வே – 7!

நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது :).

நோர்வேயில் பேர்கன் நகரமானது இரண்டாவது பெரிய நகரமாகும் 1240 ஆம் ஆண்டில் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய தலைநகரம் ஒஸ்லோ என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்தானே.

இங்கே நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது பேர்கன் நகரில் உள்ள Bryggen என்றழைக்கப்படும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். இது மிகவும் பழமை வாய்ந்த கட்டடத் தொகுப்பு அல்லது குடியிருப்பு ஆகும். அதை “counting house” என்று அழைக்கின்றார்கள். இந்த இடமானது UNESCO னால் 1972 இல் உருவாக்கப்பட்ட ‘பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களின் பட்டியல்’ இல் 1979 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இந்த Bryggen கட்டடத் தொகுப்பில் காலத்துக்கு காலம் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டாலும், இது ஒரு பரம்பரைச் சொத்தாக கணிக்கப்பட்டு, அதே பழைய நிலையில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது.


இந்த கட்டடத் தொகுதி 1070 ஆம் ஆண்டளவில் நோர்வேஜிய மக்களால் கட்டப்பட்டு இருந்தாலும் (இதுவரை நாளும் நான் இந்த கட்டடங்கள் ஜேர்மனியர்களால் கட்டப்பட்டவை என்று தவறாக எண்ணியிருந்தேன்), 1360 – 1764 காலப் பகுதியில் அந்த இடம், ஜேர்மனியர்கள் வசம் இருந்தபோது மிகவும் பிரசித்தமடைந்து இருந்தது. 1360 ஆம் ஆண்டில் நோர்வேயை ஆண்ட ஒரு டென்மார்க் அரசனால், Hanseatic League என்றழைக்கப்பட்ட, ஜேர்மனிய வர்த்தகர்களின் கட்டுப் பாட்டுக்குள் நோர்வேயின் வியாபாரம் வந்து சேர்ந்தது. அப்போது இந்த குடியிருப்பு பகுதியும் அவர்களிடம் வந்தது. 1764 இல் நோர்வேஜிய அரசனால், மீண்டும் நோர்வேஜிய வர்த்தகர்கள் வசம் அந்த வர்த்தக முக்கியத்துவம் பெற்ற இடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் இந்த இடத்தை தமது வியாபார நோக்கத்திற்கு பாவித்து வந்தனர். இந்த கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கடல்நீரேரி வருவதனால், பெரிய கப்பல்களும் நேரடியாக, கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கொண்டு வரப்பட்டு வியாபாரிகளுக்கு இலகுவாக இருந்தது. பேர்கன் மிக முக்கிய பண்டமாற்று வியாபாரத் தலமாக அமைந்திருந்தது. நோர்வேயில் இருந்து உலர் மீன்கள் (dry fish) அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றது. இந்த உலர் மீன்கள் உப்பு சேர்க்கப்படாமல், காற்றில் உலர்த்தப் பட்டு பெறப்படுபவை. (1980 ஆம் ஆண்டளவில் எண்ணெய்வளம் கண்டு பிடிக்கப்படும்வரை, நோர்வேயின் பொருளாதாரம் மீனிலும், கப்பல் கட்டும் தொழிலிலுமே தங்கி இருந்தது).

பின்னர் இந்த கட்டடத் தொகுதி ஜேர்மனியர்கள் வசமானது. ஹன்சியன்ஸ் என்றழைக்கப்படும் ஜேர்மனிய வர்த்தகர்கள் தமது அலுவலகத்தை இந்த கட்டடத்தில் வைத்திருந்ததுடன், ஜேர்மனிய வியாபாரிகளே இந்த குடியிருப்புக்களில் இருந்தனர். ஒவ்வொரு கட்டடத் தொகுதியிலும் 10 தனி வீடுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் 10 வேலை பழகுபவர்கள் (13 வயது வந்த சிறுவர்களே apprentices ஆக அழைத்து வரப் படுவார்கள்) இருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முகாமையாளர் இருப்பார். ஒரு கட்டடத் தொகுதிக்கு ஒரு சொந்தக்காரர் இருப்பார். அவர் மட்டும் திருமணம் செய்து ஜேர்மனில் வசிப்பார். மற்ற எவரும் திருமணம் செய்யாதவர்கள். எனவே இந்த முழுமையான கட்டடத் தொகுதியில், முற்று முழுவதுமாய் ஆண்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். பெண்களுடன் பேசுவதற்கு கூட தடை உண்டாம். முக்கியமாக நோர்வேஜிய பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால், முகாமையாளராக இருந்தாலும், அதற்கு தண்டனை உண்டு. முகாமையாளருக்கு அதி குறைந்த தண்டனை எல்லோருக்கும், ஒரு அண்டா பியர் (barrel bear) வாங்கிக் கொடுப்பது. தொழில்பழகும் இளவயதினருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுமாம்.

இந்த கட்டடங்கள் முற்றிலும் பலகைகளால் ஆனதாய் இருப்பதனால், இங்கே எதையும் சூடாக்கவோ, விளக்குகள் வைத்திருக்கவோ, மெழுகுதிரி வைத்திருக்கவோ அனுமதி இருக்கவில்லை. அனைவரின் வீட்டிலும் தீயணைப்பதற்காக கட்டாயமாக தண்ணீர் கலன் இருக்க வேண்டும். குளிர் காலங்களில் அனேகமானோர் பின்னே இருக்கும் ஓய்வறையிலேயே அதிக நேரத்தை செலவளிப்பார்கள். அந்த காலங்களில் வியாவாரமும் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெறும். ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைந்திருக்கும் 10 வீடுகளுக்கும் பொதுவான ஓய்வு வீடு ஒவ்வொரு குடியிருப்பின் பின் பக்கம் அமைந்திருக்கும். அந்த ஓய்வறை கல்லால் ஆனது. அங்கே வேலை பழகுபவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதுடன், கூட்டங்களும் நடத்தப்படும். சமையல் செய்வதற்கென ஒவ்வொரு குடியிருப்பின் பின் பகுதியிலும் பொதுவான, தனியான சமைக்கும் வீடு கட்டப்பட்டிருக்கும். எத்தனை பாதுகாப்புடன் இருந்தாலும், காலத்துக்கு காலம் இந்த குடியிருப்பு நெருப்பின் தாக்கத்துக்கு உட்படுவதும், மீள அமைக்கப்படுவது நடந்திருக்கின்றது.ஒவ்வொரு குடியிருப்புக்கும் பொதுவான மலசல கூடம் (ஒன்றே ஒன்றுதான் அத்தனை பேருக்கும்), குடியிருப்புக்கு முன்பாக, கடலை அண்டி இருக்கும். அவற்றை நகரின் அழகு கருதி, பின்னர் அகற்றி விட்டடர்கள். அங்கே வெளிப்புறத்தில் சரக்குகள் இறக்கி வைப்பதற்கான கட்டடமும் உண்டு. தற்போது அந்த இடம் அதே பழைய நிலையில் இருந்தாலும், அந்த கட்டடத் தொகுதியின் பகுதிகள், உல்லாசப்பயணிகளுக்கான பொருட்கள் விற்கப்படும் கடைகளால் நிறைந்து இருக்கின்றது.

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்!

Posted On ஜூன் 18, 2007

Filed under சமூகம்

Comments Dropped 2 responses

உலக சுற்றுச் சூழல் தினமன்று, சுற்றுச் சூழல் பாதுகாப்பு சம்பந்தமாக பல்கலைக் கழக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளைப் பார்ப்பதற்கும், அது தொடர்பான ஒரு ஆய்வரங்கத்திற்குப் போகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்தை விளக்கும் ஒரு விவரணப்படத்தை பார்வையிடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்தப் படம், ‘An inconvenient truth’ . அமெரிக்க அரசியலில் மிக முக்கிய பங்கெடுத்த Al.Gore உலக வெப்பமயமாதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இந்த விவரணப் படத்தை தயாரித்து வழங்கியிருக்கின்றார். அதில் நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து, இந்த உலகம் பாதிப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி கவலைப்படாமல் இருக்கும் அறியாமை பற்றியும், அதை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சியை எடுக்க வேண்டும் என்ற உண்மையும் கூறப்படுகின்றது. நம்மைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். நச்சு வாயுக்களால் நிரப்பப்பட்டு, அவர்களை அழிக்க கூடிய சூழலையா? சலசலத்தோடும் நீரோடை, காற்றில் அலையும் இலைகளின் சத்தம், பறவைகளின் இனிமையான குரல் இப்படியெல்லாம், நாம் அனுபவித்த இனிமைகளை நமது சந்ததிக்கு தெரியாமலே ஆக்கி விடப் போகின்றோமா என்ற கேள்வியை படம் பார்த்த பின்னர் நமக்குள் ஏற்படுத்துகின்றார் Al.Gore. படம் பார்த்து முடிக்கையில், மனதில் பாரமாய் உணர வேண்டியிருந்தது.

சூழல் மாசினால் முதலில் வெப்பநிலை அதிகரிப்பும், அதனைத் தொடர்ந்த பாதிப்புக்களும் ஏற்படும் நாடுகள் வட துருவத்தை அண்டியிருக்கும் நாடுகள் (நோர்வேயும்தான் :)). வெப்பநிலை அதிகரிப்பால் கடல்மட்டம் உயரும்போது நெதர்லாந்து இலகுவாக பாதிப்படையும் (ஏற்கனவே கடல் மட்டத்திற்கு கீழே நிலப் பகுதியை கொண்டிருக்கு). இப்படி பல தகவல்கள் படத்தில் தரப்பட்டிருக்கின்றது.

Al.Gore யின் குடும்பத்துக்கு சொந்தமான விவசாயப் பண்ணையில் புகையிலை வளர்த்து வந்தார்களாம். புகையிலை புற்று நோயை ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பது தெரிந்தும், அவர்கள் அதை தொடர்ந்து செய்திருக்கின்றார்கள். Al.Gore யின் அக்கா சிறு வயதிலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்து, இறுதியில் நுரையீரல் புற்று நோயால் இறந்த போதுதான், அந்த தாக்கம் தமக்கு ஏற்பட்டதாகவும், அன்றிலிருந்து புகையிலை பயிரிடுவதை அவரது அப்பா கை விட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப் படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதிகளின் பாதிப்பை விடக் கொடூரமானதாக சுற்றுச் சூழல் மாசு வந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார் Al.Gore.

ஐரோப்பிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதி முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பாவை பொறுத்த அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சூழல் மாசடைதலை தவிர்க்க நான் ஏதாவது பங்களிப்பு செய்ய முடியுமா? ஆம் என்கின்றார்கள். நாம் மேற்கொள்ளக் கூடிய 10 இலகுவான காரியங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் வீட்டில், வெளியில், அலுவலகத்தில் நாம் எவ்வாறு நடந்து கொண்டால், நமது பங்களிப்பை பயனுள்ளதாக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஏன் நமது பங்களிப்பை இன்றே ஆரம்பிக்க கூடாது?

புகைக் குழந்தை!

Posted On ஜூன் 12, 2007

Filed under சமூகம்

Comments Dropped 3 responses

புகைக் குழந்தை!

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவுக்காக கூடியிருந்தோம். அப்போது புத்தம் புதிதாய் ஒரு குழந்தைக்கு பாட்டியாக பதவி உயர்வு பெற்ற ஒரு பெண்ணும் அங்கே இருந்தார். குழந்தை பிறந்தது அறிந்ததும், ஒஸ்ரியா போய் குழந்தையை பார்த்து விட்டு திரும்பி இருந்தார்.

மிகவும் ஆவலுடனும், ஆசையுடனும் அந்த குழந்தையைப் பார்த்து வந்த மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை என்ன நிறை என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர், 2400g என்று சொன்னார். உடனே இன்னொருவர் premature baby யா என்று கேட்க, “இல்லை, குழந்தை சரியான நேரத்தில்தான் பிறந்திருக்கிறது. ஆனால் உடல் எல்லாம் மிகவும் மெலிவாக இருக்கிறது. கைகளைப் பார்த்தால், ஒரு மெல்லிய தடியில், கொஞ்சம் பெரிதான உள்ளங்கையை வைத்து ஒட்டியதுபோல் இருக்கிறது. அந்தக் குழந்தை ஒரு புகைக் குழந்தை” என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார். எனக்கு புரியவில்லை. ‘அது என்ன புகைக் குழந்தை?’ என்று பக்கத்தில் இருந்தவரிடம் மெதுவாய் விசாரித்தேன். அவர் சொன்னார், “குழந்தையின் தாய் புகைப்பவர். குழந்தை வயிற்றில் இருந்த காலத்திலும் தொடர்ந்து புகைத்திருக்கின்றார்” என்று. கவலையாக இருந்தது. புகைத்தலின் கேடுகள் தெரிந்திருந்தும், அது குழந்தைக்கு கெடுதல் என்று தெரிந்திருந்தும் எப்படி அந்த தாயால் புகைத்தலை நிறுத்திக் கொள்ள முடியாதிருந்தது என்று நினைத்துப் பார்த்தேன்.

இனியாவது புகைப்பதை நிறுத்தி விடுவாராமா என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருடம் மட்டும் வீட்டிற்குள் புகைப்பதை (குறித்துக் கொள்ளுங்கள் புகைப்பதை அல்ல) நிறுத்தி வைப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றாராம். குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் புகைக்கத்தான் போகின்றார். ஆனால் வெளியே போய் புகைப்பாராம். ஒரு வருடத்துக்குப் பின்னர் வீட்டினுள் புகைத்தால் மட்டும் அது குழந்தையை பாதிக்காதா? இவர்கள் ஒன்றும் passive smoking பற்றி கேள்விப் படாதவர்கள் அல்லவே. தனது குழந்தைக்கு கேடானது என்று தெரிந்தும், எப்படி இவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிகின்றது?

நோர்வேயில் 35-44 வயது எல்லைக்குள் புகைப்பவரில் பெண்களே அதிகமாக இருப்பதாகவும், 45-54 வயதுக்கிடையில் புகைப்பவர்களில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதாகவும், ஏனைய வயதெல்லைகளில் ஆண்களே அதிகம் புகைப்பவர்களாய் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. குழந்தைகளுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் வயதில் இந்த பெண்கள் ஏன்தான் புகையை நாடுகின்றார்களோ என்று எரிச்சலாக இருக்கிறது.

புகைத்தல்!

பொது இடங்களில் நின்று கொண்டு புகைப்பவர்கள், அந்த புகையை மற்றவர் நாசிக்கும், சுவாசத்திற்கும் அனுப்பி, நாற்றத்தை கொடுப்பதோடு, தம்மை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உடல் நலிவடையச் செய்கின்றார்கள். ஏன் இதை உணர மறுக்கின்றார்கள்?

Funny pictures இல் ஒரு இடத்தில், குழந்தையின் வாயில் சிகரெட் இருப்பதுபோல் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. நகைசுவைக்காக என்று ஒரு குழந்தையின் வாயில் சிகரெட் வைத்து படம் எடுக்க எப்படி முடிகின்றது என்றுதான் எனக்கு தோன்றியது.

புகைப்பவர்களுக்கு புகைத்தலை தவிர்ப்பதற்கு வழங்கப்படும் மிக முக்கியமாக 10 காரணங்கள் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

10. வரி அதிகரித்துக் கொண்டு போகும் இந்த கால கட்டத்தில், புகைத்தலுக்குரிய செலவும் அதிகரித்துக் கொண்டே போகும். இந்த செலவு அவசியம்தானா?

9. உங்கள் குடும்பத்தை நேசிப்பவரா நீங்கள் இருந்தால், அவர்களுக்கு வலியை கொடுப்பது அவசியமானதா?

8. உங்கள் நேரத்தை விரயமாக்கி, உங்களை பலவீனமானவராய் ஆக்கும் இந்த புகைத்தல் அவசியமானதா?

7. நாற்றத்தை உருவாக்கி, உங்களை ஒரு சுத்தமானவராக காட்டாத இந்த புகைத்தல் அவசியமானதா?

6. அழகான வெண்பற்களின் நிறத்தையே மாற்றி அலங்கோலமாக காட்டுவது அவசியம்தானா?

5. உங்களுக்கு நீங்களே கெளரவமற்றவராக மாறிக் கொள்வது அவசியம்தானா? புகைத்தலை விட்டு விடுவதனால், நீங்களே கண்ணியமானவராக உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள மாட்டீர்களா?

4. நீங்கள் புகைத்தலை விட்டு விட்டால், புகைக்கும் மற்றவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முடியுமல்லவா?

3. புகைத்தலை நிறுத்துவது கடினமானது. அதையே உங்களால் நிறுத்தி விட முடிந்தால், நீங்கள் விரும்பும் வேறு பல உபயோகமான காரியங்களை செய்வதற்கும் உங்களுக்கு தனி வலிமை கிடைக்குமல்லவா?

2. கான்சரைப் பற்றியோ, இதய நோய்கள் பற்றியோ, வேறு இது தொடர்பாக வரும் நோய்கள் பற்றியோ பயந்து கொண்டிருக்காமல், உடல் நலமுள்ளவராக உணர்வது எத்தனை இனிமையாக இருக்கும்.

1. துர்ப்பழக்கத்தை கை விடுவதன் மூலம், அல்லது தூக்கி வீசுவதன் மூலம், உங்களை நீங்களே அதிக தகுதி உடையவராக ஆக்கிக் கொள்கின்றீர்கள்.

Yes, you deserve better for yourself.

இது விடயமாக, எங்கேயோ வாசித்து, மனதுக்கு பிடித்த ஒரு வரி>…….

“மனிதனே, தவணை முறையில் கிடைக்கிறது என்பதற்காக மரணத்தைக் கூடவா வாங்க துணிந்து விட்டாய்?”

புகைத்தலை விடுவதற்காய் சிலர் நிக்கோட்டின் சுயிங்கம் பாவிக்கின்றார்கள். இந்த சுயிங்கம் கன்னம், முரசு, தொண்டையில் கான்சரை கொண்டு வரலாம் என்று சொல்கிறார்கள். இதன் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இதில் பக்க விளைவு இல்லை என்று சொன்னாலும், பல ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையல்ல என்கிறார்கள். நிக்கோட்டினின் தொழிற்பாடு அங்கேயும் இருப்பதால், பக்கவிளைவுகள் மட்டும் எப்படி இல்லாமல் போகும். நியாயமான கேள்விதானே? ஒரே ஒரு நன்மை இந்த சுயிங்கத்தால்… பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லை, அந்த சிகரெட் நாற்றத்தால் மற்றவர்களை கஷ்டப்படுத்த தேவை இல்லை :). ஆனால் குடும்ப உறுப்பினர்கள், பாசம் கொண்டவர்களுக்குத் தீராத தொல்லைதான். நிக்கோட்டின் சுயிங்கத்தில், நிக்கோட்டினுடன் ஒரு addictive drug உம் உள்ளது என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு பழக்கத்தில் இருந்து விடுபட, இன்னொரு பழக்கத்துக்கு, அதுவும், அதே தீயவிளைவுகளைத் தரும், அடிமைப்படுத்தும் பழக்கத்துக்கு மாறுவதா?

ஆனால், சரியான consultant இன் உதவியுடன், இந்த சுயிங்கம் பாவிப்பதால், பின்னர் சிகரெட்டுடன், அந்த சுயிங்கத்தையும் கை விட்டு விடலாம் என்கிறார்கள். அது ஒரு வேளை சரியாக இருக்கலாம். மனதில் உறுதிதான் முக்கியம். அது இருந்தால், consultant இல்லாமலே கூட இந்தப் பழக்கத்தை கை விட்டு விடலாம். நமக்கு ஒன்று மிகவும் பிடித்ததாய் இருந்தாலும், அதை எம்முடன் உள்ளவர்களுக்காகவும், ஏன் முக்கியமாய் எமக்காகவும், அந்த ஒன்றை நாம் விட வேண்டும் என நினைத்தால், அந்த மன உறுதியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது முடியுமல்லவா?

மொழி!

மொழி!

நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.

படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது :). பெண்ணின் பெற்றோரிடம், “நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்.” என்று சொல்வது நன்றாக இருந்தது :).

அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.

படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.

மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.

காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.

ஆனாலும், அந்த ‘பேசா மடந்தையே’ என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.

எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை ‘மொழி’, ‘மெளனம்’.

அன்புக்கு மொழி அவசியமில்லை!!!