நாடு நல்ல நாடு – நோர்வே 3

நோர்வே 3!

நோர்வே பற்றிய எனது முதலாவது பதிவின் இறுதியில் நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் அடுத்த பதிவில் அதுபற்றி எழுதவில்லை. இப்போ எழுதுகின்றேன்.

நான் நோர்வேக்கு வருவதற்காக விமானத்திற்காக Netherland Amsterdam விமான நிலையத்தில் காத்திருந்தபோது, ஒரு வயது முதிர்ந்த நோர்வேஜிய மனிதர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால், மொழிப் பிரச்சனை இருக்கவில்லை. மிகவும் நட்பாக அவர் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நோர்வே பற்றிய ஒரு பாதுகாப்பு உணர்வையும் தந்தது.

நான் நோர்வேயில் கால் பதித்த நாள் நோர்வே தொடர்ந்த, இடை விடாத பனிமழையில் சில நாட்களாய் குளித்து, குளிர்ந்து, நடுங்கிக் கொண்டிருந்த ஒரு நாள். அன்று நான் தற்போது வாழும் நகரான பேர்கன் (Bergen) நகரத்தில், அதி கூடிய பனிமழை காரணமாக விமான நிலையமே மூடப்பட்டிருந்தது. நான் தலைநகரான ஒஸ்லோ விமான நிலையத்தில் தரையிறங்கினேன். தரையில் எங்கே இறங்கினேன், ஸ்னோவில் இறங்கினேன். 🙂

நோர்வேயை அண்மித்ததும் பைலட், பனிமழை காரணமாக ஓடுபாதை சீரற்று இருப்பதால் தற்போது விமானத்தை தரையிறக்க முடியாது என்றும், அதனால் வானத்தில் வட்டமடிக்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பை செய்தார். பனிமழையின் பாதிப்பு எப்படி என்று சரியாக புரியாததால், ‘சரி ஏதோ பிரச்சனை. இறக்கும்போது இறக்கி விடட்டும்’ என்றெண்ணிக் கொண்டு கண்ணை மூடி, இருக்கையில் சாய்ந்து கொண்டேன். பின்னர் இங்கே ஸ்னோவில் வழுக்கி விழவேண்டி வந்த நேரத்தில்தான் உண்மையான பிரச்சனை புரிந்தது :). இலங்கை நேரத்துக்கு தூக்கம் கண்ணை அள்ளிக் கொண்டு போனதில், அப்படியே உறங்கியும் போய் விட்டேன். மீண்டும் விமானம் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு வந்தபோது எழுந்து நேரத்தைப் பார்த்தால், அரைமணித்தியாலம் கடந்து விட்டிருந்தது. அரை மணித்தியாலத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமடித்தபடி இருந்திருக்கிறோம்.

கீழே வந்து இறங்கிய போதும், அதே வயதான மனிதர் எனது பொதிகளை எடுப்பதில் உதவி செய்தார். என்னால் தூக்க முடியாத அளவு பாரமுள்ள பொதியை அல்லவா (மேலதிக கட்டணமாக பணம் செலுத்தி எடுத்து வந்த பொதிகளை:)) அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்தேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், வெள்ளைக்கம்பளம் விரித்து ஒஸ்லோ வரவேற்றது. அந்த ஸ்னோவை தொட்டுப் பார்த்த பின்னர்தான் ஸ்னோ இதுதான் என்பது சரியாக புரிந்தது. கற்பனையில் நான் அறிந்த ஸ்னோ போலில்லாமல், மெதுமையாக இருந்தது. குளிருக்கு ஏற்ற உடை முதலே அணிந்திருந்ததால், குளிரை அதிகம் உணரவில்லை. அன்றும், தொடர்ந்த மூன்று நாட்களுக்கும் பேர்கனுக்கான புகையிரத சேவைகளும், பனி காரணமாய் இரத்துச் செய்யப் பட்டு இருந்ததால், ஒஸ்லோவில் சினேகிதர்களுடன் தங்க வேண்டி வந்தது. நோர்வே வந்த புதிதில், குழந்தையாய் மாறி ஸ்னோவில் விளையாடியது மறக்க முடியாதது. ஸ்னோ அடித்து ஓய்ந்த பின்னர், மரங்கள் எல்லாம் பெரிய பெரிய வெள்ளைப் பூங்கொத்துகளாக காட்சி அளிப்பது கொள்ளை அழகு.


ஆனால் இந்த அழகு ஆபத்தாய் முடியும் சந்தர்ப்பங்கள்தான் சங்கடமானவை. பனிமழையைத் தொடர்ந்து மழை பெய்து, ஸ்னோ இறுகிப்போய், பாதைகள் எல்லாம் வழுவழுக்கும் கண்ணாடியாய் மாறி இருக்கும்போது, நடனம் ஆடிக்கொண்டே நடக்க வேண்டி வந்து விடுகின்றது. வழுக்கி விழுந்து எழும்ப வேண்டியும் வருகின்றது. நாங்கள் மட்டும் விழுந்து எழும்பவில்லை. நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மக்களே கூட சிலர் விழுந்து எலும்பை முறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கையில் நாம் எம்மாத்திரம்? அப்படி நாட்களில் விபத்துக்கள் அதிகம் நடந்து வைத்தியசாலைகள் நிரம்பி விடுவதுமுண்டு.

வடபகுதியில். சில சமயம் பெரும் பனிமழையின் பின்னர், வீட்டின் கதவுகளை முற்றாக மூடி பனி கொட்டி இருப்பதும், கதவை திறந்து கொண்டு மக்கள் வெளியே வர முடியாமல் இருப்பதும் நடக்கும். அப்படி சந்தர்ப்பங்களில் காவல்நிலையத்துக்கோ, அல்லது தீயணைக்கும் பிரிவினருக்கோ, தொலைபேசி மூலம் தகவல் அனுப்பி, அவர்கள் வந்து பனியை அப்புறப்படுத்தி, அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியதிருக்கும்.

நோர்வே வந்த முதல் நாள் அதிகாலையில் 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. 6 மணி வரை படுக்கையிலேயே படுத்திருந்தேன். யாரும் எழுவதாயில்லை. போய் குளித்து விட்டு வந்தேன். அப்போதும் யாரும் எழுவதாயில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். புத்தகமும் வாசித்து முடிந்து விட்டது. 3 மணித்தியாலமும் கடந்து விட்டது. அப்போதும் யாரும் எழுவதாயில்லை. வெளியே பார்த்தால் இன்னும் இருள். அடுத்த புத்தகத்தை எடுத்து வாசித்தேன். ஒரு வழியாக 11 மணியளவில் ஒவ்வொருவராய் எழுந்து வந்தார்கள். அன்று விடுமுறை நாள், அதனால் அப்படி எழுந்ததாகச் சொன்னார்கள். வெளியே இருள் மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. அப்படியே சில மணி நேரம் கடந்த பின்னர், 3 மணி போல், மீண்டும் இருள் கவிய ஆரம்பித்தது. எனக்கு இருள் பிடிப்பதில்லை. இவ்வளவு நேரம் இருளாய் இருந்தால் என்ன செய்யப் போகின்றேன் என்று முதல் முறையாய் பயப்பட ஆரம்பித்தேன்.

இருள் பற்றி நான் சோகமாக சொன்னபோது மற்றவர்கள் சிரித்தார்கள். நோர்வேயின் வடபகுதியில் குளிர் காலத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் அளவில் முழு இருளிலேயே வாழ்கின்றார்கள் என்று சொன்னார்கள். அங்கு வாழும் தமிழர்கள், மாலை 2-3 மணிக்கு, திறந்த வெளியில் கூட மின்சார ஒளியில்தான் கிரிக்கெட், கால் பந்து எல்லாம் விளையாடுவார்களாம். வட பகுதிகளில் இந்த குளிர்காலம் 6 மாத காலம் கூட நீடிக்கும். நோர்வேயில் குளிர் காலத்தில் (winter season) பகல் நேரம் என்பது ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே. டிசம்பர் 21 ஆம் திகதி அதி கூடிய இரவைக் கொண்ட நாள்.

அதுவே கோடை காலமாயின் (summer season), நாள் முழுமைக்கும் தொடர் வெளிச்சம்தான். ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே இரவாக இருக்கும். இரவு 11-12 மணி வரையில்தான் இருள ஆரம்பிக்கும். மீண்டும் அதிகாலை 2 மணிக்கு வெளிச்சம் வர ஆரம்பித்து விடும். அதிகூடிய பகல்நாள் ஜூன் 21 ஆம் திகதி வரும். அன்று அதை சிறிய கொண்டாட்டமாக வைத்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் இந்துக் கோவில்களில் சிவராத்திரிக்கு, பெரிய கோபுரம் போல் கட்டி, அதை எரிப்பதுபோல், பல ஊர்களிலும் ஜூன் 21 ஆம் திகதி அன்று, பலகைகளால் ஆன கோபுரம் செய்து அதை எரிப்பார்கள். நோர்வேயின் வடக்குப்பகுதி ஆர்க்டிக் வட்டத்தினுள் வருகின்றது. அங்கே முழுநாளும் பகல்தான். அதனால் நடு இரவுச் சூரியனை கண்டு களிக்கலாம். நான் இன்னும் நோர்வேயின் வட பகுதிக்கு போனதில்லை. அங்கே போவதற்கு அதிக செலவாகும். கிட்டத்தட்ட அந்த செலவில் எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்ம ஊரை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்பதால் வடநோர்வே பயணம் பின் போடப்பட்டுக் கொண்டே போகின்றது :).

அழகு நிறைந்த கடல்நீரேரிகளை (fjords தமிழ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறானால் திருத்தி விடுங்கள்) கொண்ட உலகத்தின் பகுதிகளில் நோர்வேயும் ஒன்று. எனது அடுத்த பதிவில் நோர்வேயின் அழகுபற்றி எழுதுகின்றேன்.

Advertisements

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in நோர்வே. Bookmark the permalink.

3 Responses to நாடு நல்ல நாடு – நோர்வே 3

 1. வடுவூர் குமார் சொல்கிறார்:

  சரி,நோர்வே என்று எழுதிவிடுகிறேன்.1 & 2 ம் நன்றாக இருந்தது.
  நோர்வே உள்ள உலகப்படம் ஒன்று போட்டிருந்தால் படிக்கும் போது அங்குள்ள மாதிரி ஒரு எண்ணம் வரும்.

 2. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  ரொம்பவும் விரிவாகவும் அழகாவும் எழுதுறீங்க 🙂

  நாங்களே நோர்வே வந்து பார்க்கிற மாதிரி இருக்கு… வரலாற்றையும் கொடுங்க :)))

 3. கலை சொல்கிறார்:

  நன்றி வடுவூர் குமார், பொன்ஸ். நோர்வே அமைதி முயற்சியில் முன்னால நிக்குறதுக்கு நாட்டின் வரலாறு எப்படி காரணமாகின்றது என்பது பத்தி பிறகு சொல்கின்றேன். 🙂

  வடுவூர் குமார்! நோர்வேயை நோர்வே ன்னு எழுதினதுக்கு நன்றி. :). இணைப்புக்கள் கொடுக்கப்படுவதால், அங்கே படங்கள் இருக்கிறதென எண்ணி, நான் படங்கள் கொடுக்கவில்லை. அடுத்த பதிவில் படத்தை இணைக்கின்றேன்.

  பொன்ஸ்! வரலாற்றுப் பாடத்தில் எப்போதும் குறைவான புள்ளிகளே எடுத்திருக்கின்றேன். இருந்தாலும், உங்களுக்காக அதையும் ஒரு கை பார்க்க முயற்சிக்கின்றேன். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s