நாடு நல்ல நாடு – நோர்வே 1

Posted On மே 3, 2007

Filed under நோர்வே

Comments Dropped 8 responses

நோர்வே – 1

நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதிலேயே நாட்கள் கடந்து விட்டது.மே 17 ஆம் திகதி நோர்வே நாட்டின் ‘அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினம்’ (Constitutional Day) அல்லது தேசிய தினம் (National day) வருகின்றது. அதற்கு முன்னராவது நாம் வாழும் நாடுபற்றி எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எழுதுகின்றேன். நாம் வாழும் நாட்டுக்கு ஒரு மரியாதை செய்ததாக இருக்கட்டுமே :).நோர்வேயைப்பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடிய விஷயம் ஒன்றுள்ளது. நோர்வே உலக நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீட்டின்படி, மாந்த வளர்ச்சிச் சுட்டெண்

[The Human Development Index (HDI) ] முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்த HDI ஆனது, வாழ்க்கைத் தரம் (standard of living), சராசரி மனித வாழ்க்கைக் காலம் (average life expectancy), எழுத்தறிவு (literacy), தலைக்குரிய வருமானம் (per capita income) போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப் படுகின்றது. 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நோர்வே இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.நோர்வேயானது நோர்வே இராச்சியம் (The Kingdom of Norway) என்றே அழைக்கப்படுகின்றது. இங்கே அரச பரம்பரையினர் இருந்தாலும், அவர்களிடம் அதிகாரங்கள் இல்லை. அரசியல் அமைப்பு பாராளுமன்ற முறையிலேயே அதிகாரங்களை கொண்டிருக்கின்றது. அரச பரம்பரையினர், விசேட நாட்களில், முக்கியமாக மே 17 அன்று, நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் இருக்கும் தங்களது மாளிகையின் (Royal House) மொட்டை மாடியில் நின்று மக்களை நோக்கி கையசைப்பார்கள். மக்களும் அன்றைய தினத்தில் அரச பரம்பரையினரை பார்வையிடுவதையும் அங்கு நடைபெறும் ஊர்வலங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக இந்த அரச பரம்பரையினர் அறியப்படுகின்றார்கள்.

மே 17 ஆம் திகதி கொண்டாட்டங்களை, ‘தேசிய தினக் கொண்டாட்டம்’ என்று சொல்லாமல், ‘மே 17 கொண்டாட்டம்’ (Sytende Mai = Seventeenth May) என்றே சொல்கின்றார்கள். 1814 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதியன்று, நோர்வேயின் அரசியல் நிர்ணய அமைப்பு கைச்சாத்திடப்பட்டது. அதற்குப் பின்னர் பல அரசியல் மாற்றங்கள், அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த நாள் நோர்வேயில் மிக முக்கிய நாளாகவும், கொடிதினமாகவும் கொண்டாடப் படுகின்றது.

மே மாதத்தின் ஆரம்பத்தில் இரு கிழமைகளும் (மே 1 ஆம் திகதியில் இருந்து மே 17 ஆம் திகதி வரை), பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு (மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு போகப் போகும் மாணவர்கள்) மிகப் பெரிய கொண்டாட்டம். பெற்றோரின் பாதுகாவலில் இருந்து வெளியேறி, திடீரென குழந்தைப் பருவத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமாக, வளர்ந்தோரின் நிலையை அடைவதாக இந்த நாட்களை எடுத்துக் கொள்கின்றார்கள். It is an abrupt way of ending the childhood and the entering into adulthood, but also marks acomplishing high school. இவர்களை Russ என்ற தனிப் பெயரிட்டு அழைப்பார்கள். இந்த இரு கிழமைகளில், மிகவும் சுதந்திரமாக, குதூகலமாக (பாடித் திரியும் பறவைகள் போலே) இருப்பார்கள். அந்த நாட்களில், அதற்கென விசேஷமாக இருக்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஆடையின் நிறங்கள் அவர்களது கல்வி முறைக்கேற்ப அமையுமாம். நான் அதிகம் கண்டது சிவப்பு நிற, நீல நிற ஆடைகள்தான். அந்த ஆடைகளில் நண்பர்கள் நினைத்ததெல்லாம் எழுதி வைப்பார்கள். இரு கிழமைகளும் அந்த ஆடை autograph (இதுக்கு தமிழ் என்ன?) மாதிரியான ஒரு வகைப் பயன்பாட்டில் இருக்கும். அதன் பின்னர், அதை அப்படியே வைத்திருப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை.

நோர்வே என்றதும் பலருக்கும் நினைவில் வருவது ‘நடு இரவுச் சூரியன் – (Midnight Sun)’. நோர்வே பூமிப் பந்தின் வட துருவத்தை ஒட்டி இருப்பதால், கால மாற்றங்கள் (seasonal changes) மிகத் தெளிவான வேறுபாட்டுடன் அமைந்திருக்கின்றது. நான் முதன் முதல் நோர்வேயில் வந்து இறங்கியது ஒரு குளிர் காலம். நாள் 1993 டிசம்பர் 25 ஆம் திகதி, கிறிஸ்மஸ் நாள். அன்று இந்த புதிய நாடும், இங்கே கொட்டியிருந்த வெள்ளை மழையும் (அதுதான் snow) ஒரு புதிய அனுபவம். வந்த புதிதில், இங்குள்ள இரவு பகல் வேறுபாடு, காலநிலை பற்றி மாய்ந்து மாய்ந்து வீட்டுக்கு எழுதியதில், பல கடிதங்களின் பக்கங்கள் நிறைந்து போனது.

அதுபற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகின்றேன். 🙂

 

8 Responses to “நாடு நல்ல நாடு – நோர்வே 1”

 1. gl

  Hello
  I would like know more about Narvey.’cause in my young age onwards i read a lot about Narvey. I think Narvey is one of the leading milk producting country, right.If you know could u plz write more about this..
  Thanks
  GL

 2. துளசி கோபால்

  நல்லா எழுதி இருக்கீங்க.

  ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

  இப்படியே வலை பதியும் ஒவ்வொருவரும் ஒரு நாட்டைப் பத்தி எழுதுனா,
  உலக சரித்திரம் படிச்சமாதிரி ஆச்சு!

 3. கலை

  என்னை ஆச்சரியப் படுத்திய ஒரு விடயம், நாட்டின் அரசன் ஒரு தடவை புகை பிடிக்க கூடாத இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக, குற்றப்பணம் செலுத்தியிருக்கிறாராம், நாட்டில் அனைவருக்கும் சட்டம் ஒன்றே என்பதை எப்படி நடை முறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று பாருங்கள். 🙂

 4. கலை

  நன்றி gl. நீங்க நோர்வே (Norway) என்பதை, நார்வே (Narvey) என்று குறிப்பிட்டிருக்கிறீங்க. இந்தியத் தமிழர்கள் இவ்வாறு நார்வே என்று உச்சரிப்பதை கவனித்திருக்கின்றேன். ஆனால் சரியான பெயர் Norway தான்.

  நோர்வே பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கவில்லை என்றே நினைக்கின்றேன். விவசாய உற்பத்திப் பொருட்கள் மிகவும் குறைந்து வருகின்றது. நோர்வேயின் மிக முக்கிய வளங்கள் பெற்றோலியப் பொருட்களும், மீன் வளமுமே. இதுபற்றியும் எனது வரப்போகும் நோர்வே பற்ரிய பதிவில் குறிப்பிடுகின்றேன். சரிதானே?

 5. கலை

  நன்றி துளசி. உலக சரித்திரம் படைக்கத்தான் ரவி ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறார். :). எல்லோரும் எழுதினால் சரித்திரம் படைக்க வேண்டியதுதான். 🙂

 6. கலை

  ஐரோப்பிய நாடுகளில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்பது டென்மார்க், சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து என நினைக்கிறேன்.

  உலக நாடுகளில் நியூர்சிலாந்துதான் பாலுற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது என நினைக்கிறேன்.

 7. மலைநாடான்

  கலை!
  தொடருக்கு நன்றி. அருமையான ஆரம்பம்.

  தனிமனத வளர்சிச் சுட்டெண் முதலிடத்தில், நோர்வேக்கு முன் டென்மார்க் இருந்ததாக எண்ணுகின்றேன். அது என்னவோ ஸ்கன்டிநேவியன் நாடுகள்தான் அதில் முன்னணி வகிக்கின்றன போலும்.

 8. கலை

  நன்றி மலைநாடான். நோர்வேக்கு முன்னர் லக்ஸம்பேர்க் இருந்ததாக அறிந்திருந்தேன். ஆனால் இங்கே உள்ள தகவலின்படி, நோர்வேக்கு முன்னர் கனடா இருந்திருக்கிறது. இடையில் ஜப்பான் வந்திருக்கிறது. 1980 இல் சுவிற்சர்லாந்தும் இருந்திருக்கிறது. டென்மார்க் ஐயோ, அல்லது வேறு ஸ்கண்டினேவிய நாடுகளையோ காணவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s