பூக்கள் மட்டும்!!
இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன்.
இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் மனதில் தோன்றியது. சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை.
கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!
கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!
அண்மையில் எங்கள் வீட்டிற்கு எனது சினேகிதியின் குடும்பத்தினர் வந்து தங்கினார்கள். அவருக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை செளம்யாவுக்கு நான்கு வயது. அந்தக் குழந்தையை இப்போதுதான் முதன் முதலாய் சந்தித்தேன்.
அவர்கள் வந்து சேர்ந்த நேரம் இரவு 10.30 மணி, வந்து இறங்கிய நேரத்தில் செளம்யா நித்திரையாகி இருந்தாள். வந்து இறங்கியதும் அவளை எழுப்பினார்கள். அவள் கண்ணை விழித்து எங்களைப் பார்த்தாள். அப்போது நான் அவளிடம் “என்னை தெரியுமா?” என்று (meaningless?) கேள்வி ஒன்றைக் கேட்டேன். அவள் அதுக்கு ஒரு சிரிப்பு சிரித்தாளே பார்க்கலாம். அழகான ஒரு கள்ளச் சிரிப்பு. அந்தச் சிரிப்பை பிறகு பல தடவை எங்கள் வீட்டில் இருந்த பொழுதுகளில் பார்த்தேன். அதுபற்றி கவிதை (அல்லது வழமையான எனது கிறுக்கல்) ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. இதுபற்றி இன்னொரு சினேகிதி (எம் இருவருக்கும் பொதுவான சினேகிதிதான். குழந்தை செளம்யாவையும், அவளது கள்ளச் சிரிப்பையும் அறிந்த சினேகிதிதான்), தானே ஒரு கவிதை வடித்து விட்டாள். அந்த கவிதை இங்கே.
வீட்டிற்கு விஜயம் செய்த கவிதை இங்கே>
நண்பியின் கவிதை இங்கே>
கள்ளச் சிரிப்பில் என் கற்பனையை தூண்டி
சிறு கவிதை புனைய வைத்த கண்மணியே
கற்றவர்கள் பெற்றெடுத்த கருவிழி நீ – உன்
மேனிதான் கறுப்பு, உன் உள்ளம் வெள்ளையடி
நாலாண்டென்ன, நாற்பது ஆனாலும்
உன் சிரிப்பு மாறக்கூடாது
கற்பதைக் கற்று கால்நூற்றாண்டில் பெறும்
கல்வி பேரொளியாய் வர
கந்தனை வேண்டுகிறேன்
கவிதைக்கு நன்றி சொர்ணா. 🙂
(கவிதைக்கு மட்டுமில்லை. பல காலமாய் தொடப்படாமல் இருந்த இந்த பக்கத்தை தொட வைத்ததுக்கும் நன்றி. :))