இப்படியும் ஒரு ஆசிரியர்!
இது இன்னொரு ஆசிரியர் சம்பந்தமான கதை. அவர் ஒரு தாவரவியல் கற்பிக்கும் ரியூஷன் ஆசிரியர். மிகவும் கெட்டிக்காரர்தான். ஆனாலும் அவரை எனக்கு அதிகமாய் பிடிப்பதில்லை. காரணமுண்டு. நானும் எனது தோழியும் எமது இடத்தில் இருந்து அவரது டியூஷன் வகுப்பிற்கு போகும்போது எப்படியும், மற்றவர்கள் எல்லாம் முதலே வந்து அமர்ந்திருப்பார்கள். அதனால் நமக்கு அனேகமான நாட்களில் கடைசி வாங்கில்தான் கிடைக்கும். அந்த ஆசிரியர் என்னவோ கடைசி வாங்கில் இருப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல் அடிக்கடி கொமெண்ட் அடிப்பார். இவர் சொல்லி நமக்கென்ன ஆகப் போகிறது, அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போகட்டும் என்று நாம் விட்டு விடுவோம்.
எனக்கு தாவரவியலில் மிகவும் பிடித்தமான பகுதி, பரம்பரையியல். ஒருநாள் அவர் அதில் ஒரு கணக்கு கேள்வியை கொண்டு வந்தார். அந்தக் கேள்வி வழக்கமான கேள்விகளை விட கொஞ்சம் வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வியை தந்துவிட்டு, மாணவர்களிடம் சவால் விடுவதுபோல் “எங்கே இந்த கேள்வியை முடிந்தால் செய்யுங்கள் பார்ப்போம்” என்றார். எல்லோரும் மூளையை பிசைய ஆரம்பித்தோம். எனக்கு பிடித்த பகுதி என்பதாலும், நம்மை குறைவாக மதிப்பிடும் இவரது சவாலை முறியடித்தே ஆக வேண்டும் என்பதாலும், நான் மிகவும் தீவிரமாக சிந்தித்து, அந்த கணக்கை செய்து முடித்து விட்டேன். என்னருகில் இருந்த சினேகிதி “உடனே அவருக்கு காட்டுங்கோ. இவருக்கு எப்பவும் எங்களில ஒரு குறைதான்” என்று தூண்டினார். நானும் கையை உயர்த்தினேன். அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார். காரணம் வகுப்பில் நான் அதிகமாக கதைப்பதில்லை (அந்த காலத்தில் அப்படித்தான் இருந்தேன், ஹி ஹி). வழக்கமாக் கேள்விகள் தந்து செய்வதற்கு விட்டாரென்றால், அருகில் வந்து சரியா என்று பார்ப்பார். அதே போல் இன்றைக்கும் வந்து பார்ப்பார் என்றுதான் நான் எதிர் பார்த்தது. ஆனால் அவரோ கரும்பலகையில் வந்து அந்த கணக்கை அனைவருக்கும் செய்து காட்டும்படி சொல்லி விட்டார். வகுப்பில் கிட்டத்தட்ட 60 பேர் வரையில் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் எனக்கு அத்தனைபேர் மத்தியில் முன்னே போய் கரும்பலகையில் எழுதுவது முடியாத காரியமாக இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது சினேகிதியோ, “இவருக்கு விடக் கூடாது. நீங்கள் போய் அதை செய்து காட்டி விட்டு வாங்கோ” என்று தள்ளி விட்டார். நானும் சரியென்று எழுந்து போனேன்.
வெண்கட்டி (அதுதானே chalk க்கு தமிழ்) யை கையில் தந்தார். நான் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தபோது, நான் பயத்தில் அழுத்திய அழுத்தத்தில் வெண்கட்டி உடைந்து உடைந்து விழுந்து கொண்டிருந்தது. எனவே இடை இடையே எழுத வேண்டிய வசனங்களைத் தவிர்த்து விட்டு, எப்படியோ ஒருமாதிரி கணக்கை மட்டும் செய்து முடித்து விட்டு வந்து அமர்ந்தேன். அவருக்கு தனது சவாலை முறியடித்தது, அதுவும் தான் குறைவாக மதிப்பிட்டு கூறும் பின் வாங்கிலிருப்பவர் ஒருவர் வந்து செய்து விட்டுப் போனது பெரிய அவமானமாகத் தெரிந்ததோ என்னவோ, நான் எழுதிய விதங்களில் வசனங்கள் வரவில்லையென்றும், அதனால் இதை ஏற்றுக் கொள்வது கடினம் என்றும் கூறினார். அவர் கூறியதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் ‘இதே போன்ற கேள்வி பரீட்சைக்கு வந்தால் எப்படி இடை இடையே வசனங்கள் எல்லாம் வைத்து எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியும்தானே’ என்று எண்ணிக் கொண்டேன். தொடர்ந்து என்ன வசனங்கள் இடையில் வர வேண்டும் என்று கூறி விட்டு, அன்றைய வகுப்பை அத்துடன் முடித்துக் கொண்டு போய் விட்டார்.
அவரைப் பார்த்து நான் அறிந்து கொண்டது ஒரு ஆசிரியர் எப்படி இருக்க கூடாதென்பது, ஹி ஹி.
A good model…a negative model! some of us are like that…ஹி…ஹி..
நன்றி உங்கள் ஞாபகங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு.
சில ஆசிரியர்களுக்கு இப்படித்தான் ஒரு preconcieved idea இருக்கும் போல. மாணவர்களை தங்கள் பார்வையில் தான் பார்ப்பார்கள். திறமையின் அடிப்படையிலல்ல! :O(
உண்மைதான் ஷ்ரேயா. அதே மாதிரி மாணவர்களுக்கும் சிலசமயம் ஆசிரியர்கள் பற்றி preconcieved idea இருக்கிறதால பிரச்சனையாகிடுது. (ஒரு ஆசிரியரின் படிப்பித்தல் சரியில்லை என்று முதலே ஒருவர் சொன்னதால், அவரது வகுப்புக்கு எப்பொழுதும் நான் கதைப் புத்தகமும், கையுமாகத்தான் போவேன். ஒளித்து வைத்தபடி வாசிக்கத்தான், ஹி ஹி).
எல்லா ஆசிரியர்களும் நல்லாசிரியர்களில்லை.
யோகன் பாரிஸ்
நன்றி யோஹன் பரீஸ்