இப்படியும் சிலர்!!

Posted On நவம்பர் 4, 2005

Filed under சமூகம்

Comments Dropped 3 responses

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ கிளிப்பிங் பார்க்க கிடைத்தது. அதில் அமெரிக்காவில் வீதியில் போகும், நிற்கும் ஒரு சிலரை (இனபேதமின்றி எல்லா இனத்தவரையும்) ஒருவர் ஒரு கேள்வி கேட்கிறார். அவர் கையில் ஒரு உலக வரைபடமும் இருக்கிறது. அந்த வரைபடத்தில் வேண்டுமென்றே நாடுகளின் பெயர் பிழையாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.அவர் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி “போர், அச்சுறுத்தல் என்பவற்றின் அடிப்படையில் அடுத்ததாக தாக்கப்படவேண்டிய, அல்லது கைப்பற்றப்பட வேண்டிய நாடு எது?” என்பதாகும். அங்கே பதிலளித்த ஒவ்வொருவரும், தமது இஷ்டத்துக்கு ஒவ்வொரு நாட்டை சொல்கிறார்கள். அதில் ஒருவர் கூட ‘நாம் எந்த நாட்டையும் கைப்பற்றாமலோ அல்லது தாக்காமலோ இருப்போமே’ என்ற பதிலை கொடுக்கவில்லை. ஒருவேளை அப்படி வந்த பதில்கள் அந்த வீடியோ பதிவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை.

ஒரு பெண்மணி சொல்கிறார் செளதி அரேபியா. இன்னொரு ஆண் சொல்கிறார் மத்திய கிழக்கு நாடுகளில் ஏதோ ஒன்றாம். இன்னொருவர் சொல்கிறார் எல்லா மத்திய கிழக்கு நாடுகளும் என்று. அவர் சொன்னதோடு நில்லாமல் மத்திய கிழக்கு நாட்டு மக்களுக்கு கெட்ட வார்த்தையால் திட்டவும் செய்கிறார். இப்படியே வேறு வேறு ஆட்களால் சொல்லப்பட்ட நாடுகள் சில இத்தாலி, பிரான்ஸ், ஈரான், கொரியா என்பன. இன்னொருவர் சொல்கிறார் கியூபா, இந்தியா, பாகிஸ்தான் எல்லாமுமாம். வேறொருவர், தன்பாட்டுக்கு நாடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார். எப்படி தெரியுமா… ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, பிரேசில், கனடா.. இன்னும் சொல்லியிருப்பார் போலிருந்தது. காரணம் அவர் அங்கே நிறுத்திய மாதிரி தெரியவில்லை, கமரா அவரிடம் இருந்து வேறு பக்கம் போய் விட்டதாகவே தோன்றியது.

அந்த நாடுகளை அவர்கள் தெரிவு செய்ய காரணம் என்ன என்று சிலரிடம் கேட்டபோது ஒவ்வொருவர் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். கொரியா தாக்கப்பட வேண்டும் என்று சொன்ன ஒருவர் சொல்கிறார் அங்குள்ளவர்களின் மனோபாவம் பிரச்சனையானதாம். வடகொரியா என்று சொன்ன ஒருவர் சொல்கிறார் அணுஆயுத காரணங்களுக்காக அந்த நாடு தாக்கப்பட வேண்டுமாம்.

இன்னொரு இளம்பெண் முதலில் ஈரான் என்று சொன்னார். ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அங்கே வெகு விரைவில் ஒரு புரட்சி வரும் என்று எதிர் பார்க்கிறாராம். அதற்கு பிறகு அதே பெண் சொல்கிறார் இலங்கையும் கைப்பற்றப்பட வேண்டிய நாடு என்று தான் நினைக்கிறாராம். அவர் கையில் ஒரு இலக்கத்தை கொடுத்து, அவரை வரை படத்தில் இலங்கை இருக்குமிடத்தில், அந்த இலக்கத்தை பொருத்தும்படி கேட்டபோது, அவர் கொஞ்சம் தடுமாறிக் கொண்டு இருந்தார். அருகிலிருந்த இன்னொரு இளம்பெண் சரியான இடத்தை காட்டினார். பின்னர் அந்த இடத்தில் இலக்கத்தை பொருத்தி விட்டு, அந்த முதல் இளம்பெண் சொல்கிறார், தான் அதுபற்றி கேள்விப்பட்டு இருக்கிறாராம்.

சரி, இவர்களாவது இடத்தை சரியாக காட்டினார்கள். வேறு சிலரிடம் இதேபோல் இலக்கம் கொடுக்கப்பட்டு, அவர்கள் எந்த நாட்டை சொன்னார்களோ, வரைபடத்தில் அந்த நாட்டில் இலக்கத்தை பொறிக்கும்படி சொன்னபோது நடந்ததுதான் இன்னும் வேடிக்கையாக இருந்தது. அவர்கள் சொன்ன நாடுகள் எந்த இடத்தில் இருக்கிறதென்பதே தெரியாமல், வரைபடத்தில் தவறாக குறிப்பிட்டிருந்த இடத்தில் இலக்கத்தை பொருத்தினார்கள். அவுஸ்திரேலியாவை ஒருவர் ஈரான் என்று சுட்டிக் காட்டினார். நியூசிலாந்தை ஒருவர் பிரான்ஸ் என்று காட்டுகிறார். தாங்கள் எந்த நாட்டினால் அச்சுறுத்தல் இருக்கிறதென்றும், அந்த நாட்டை தாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த நாடு உலகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை அவர்களுக்கு.

இதை விடவும் வேறு ஒரு வேடிக்கையும் நடந்தது. ஒருவரிடம் படம் காட்டப்பட்டபோது அவுஸ்திரேலியாவை தென்கொரியா என்றும், அவுஸ்திரேலியாவுக்கு அண்மையாக இருக்கும் கடலை வடகொரியா என்றும் வரைபடத்தில் எழுதி இருந்தார்கள். அதைப் பார்த்து கதைக்கும் ஒருவர், தென்கொரியாவையும் வடகொரியாவையும் தவறாக தொட்டுக் காட்டியபடியே சொல்கிறார் வட கொரியா, தென்கொரியாவை விட பெரியது என்று தற்போது உணர்ந்திருக்கிறார்களாம். கடல் எது நிலம் எது என்பதுகூட தெரியவில்லை. அது மட்டுமல்ல, வரை படத்தில் திசைகள் எந்தப் பக்கம் என்று தெரியாமலே கூட சிலர் சுட்டிக் காட்டினார்கள். ஒருவேளை சரியாக இடங்களைக் காட்டியவர்கள் இந்த வீடியோ பதிவிலிருந்து நீக்கப்பட்டிருக்க கூடும்.

இதை பார்த்தபோது எனக்கு சிறு வயதில் நடந்த வேறு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கும், இந்த வீடியோ பதிவுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா என்பது தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன். (எழுதுகிற மூடில இருக்கும்போது எழுதி விடவேண்டுமில்லையா, அதுதான்).

நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது நமக்கு வகுப்பாசிரியை சொலமன் டீச்சர். கணவரை இழந்தவர். ஆனாலும் மாணவர்களுடன் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. பல நாட்களாக நானும் எனக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுமியும் பேசிக் கொள்வதில்லை. அவளது பெயர்கூட ஒரு வித்தியாசமான பெயர், அடைக்கலம். எதற்காக நான் அவளுடன் கோபமாயிருந்தேன் என்பது தற்போது சரியாக நினைவிலில்லை. எனது மிக நெருங்கிய சினேகிதிக்கும், எனக்குமிடையில் அடைக்கலம் அமர்ந்திருந்ததால் அப்படி நான் கோபம் கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது. (சே, எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறேன் அப்போது). இதை சொலமன் டீச்சர் அறிந்ததும், இருவரையும் கூப்பிட்டு நிறைய புத்திமதி எல்லாம் சொல்லி, நாமனைவரும் நட்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி, அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் சொல்லி, ஒரு மாணவியை அழைத்து, ஜூஸ் வாங்கி வரச் செய்து, இருவரையும் ஒருவருக்கொருவர் கொடுக்கச் செய்து, நம்மை நேசமாக்கி வைத்தார்.

அவர்தான் எங்கள் வகுப்புக்கு ஆங்கிலபாடம் எடுத்தார். அது மட்டுமல்ல, சொலமன் டீச்சர்தான் நமது பாடசாலையில் வரும் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு நம்மை தயார்ப்படுத்துவார். ஒரு தடவை சமையலறையில் இருக்கும் பொருட்கள் (அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, இன்னும் பலவகையான பாத்திரங்கள்) எல்லாம் ஆளுக்கொன்றாய் வைத்துக் கொண்டு நடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடல் முழுமையாக நினைவில் இல்லை. ஆனால் தொடக்கம் நன்றாகவே நினைவில் இருக்கிறது.

We don’t want to march like an infantry
Ride like a cavalry,
Shoot like an artillery,
We don’t want to fly over Germany,
We are the kitchen band…..
We are the kitchen band…..

இப்படிப் போகும் அந்தப் பாடல். இதன் அர்த்தம் என்ன என்று அப்போது புரிந்து கொண்டுதான் பாடினோமா என்று தெரியவில்லை. இப்போது யோசித்துப் பார்க்கிறேன். இந்தப் பாடல் சொல்ல வந்தது என்ன? போர்கள், யுத்தங்கள் வேண்டாமே, சமாதானத்தில் சந்தோஷமாய் இருப்போமே என்பதுதானே? ஜேர்மனி நாடு மட்டும் இந்த பாடலுக்குள் வந்த காரணம் என்னவாயிருக்கும்? இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு இருந்த முக்கிய பங்கினால் வந்திருக்குமோ? அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

3 Responses to “இப்படியும் சிலர்!!”

 1. Thangamani

  நல்ல பதிவு. நன்றி.

 2. தேவ் | Dev

  Its a very good sattire.

  Nagaichuvai milirum padaippu.. sindhikkavaikka thavara villai

  -Dev

 3. கலை

  நன்றிகள் தங்கமணி, தேவ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s