சினேகிதியின் கதி!

Posted On ஒக்ரோபர் 29, 2005

Filed under இலங்கை, சமூகம்

Comments Dropped 4 responses

[QUOTE]இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம்.[/QUOTE]

தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே வகுப்பில் நாங்கள் தோழிகள் ஐவர் இருந்து வந்தோம். இடை இடையே ஏதாவது கோப தாபங்கள், சின்ன சின்ன சண்டைகள் இந்த ஐவருக்கிடையேயும் வராமல் இருக்காது. அப்படி வந்தாலும் ஒரு சில மணி நேரங்களில், மிஞ்சிப் போனால் ஒரிரு நாட்களில் அந்த குழப்பம் தீர்ந்து ஒன்று கூடி விடுவோம். இருவருக்குள் குழப்பம் வந்தால், மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது, இந்த கோபம் காணாமல் போய் விடும்.இந்த ஐவரில் ஒருவரின் பெயர்தான் பேபி. அவள் வீட்டில் அவள் எட்டாவது கடைசிப்பிள்ளை. அப்பா, அம்மா, அண்ணாமார், அக்காமார் எல்லோருக்கும் செல்லக் குழந்தை. அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். பாடசாலைக்கு தனது புதிய புதிய விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் எடுத்து வருவாள். எல்லோருமாக விளையாடுவோம்.

ஒருதடவை அவளுக்கு சமையல் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டில் குட்டி குட்டி பாத்திரங்கள் வாங்கி கொடுத்திருந்தார்கள். அதை அவளும் தனது ஸ்கூல் பாக்கில் போட்டு எடுத்து வந்திருந்தாள். ஏதாவது ஃபிரீ பீரியட் வராதா, அவற்றை வைத்து விளையாட என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். நல்ல வேளை ஒரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை. அப்படி வராவிட்டாலும், வேறு யாராவது ஆசிரியர் வந்து சிலசமயம் எம்மை சங்கடத்தில் மாட்டி வைப்பார். நல்ல வேளையாக அன்று யாரும் அந்த வேண்டாத வேலையை செய்யவில்லை, ஹி ஹி.

நமது மேசைக்கு கீழே புத்தகங்கள் வைக்க கூடிய மாதிரி திறந்த பெட்டி மாதிரி (drawer?) ஒரு அமைப்பு இருந்தது. அந்த வகுப்பில் மூன்று மூன்று பேராக இருக்கும் மேசைகள். எங்களில் ஐந்து பேரில் மூவர் ஒரு மேசையிலும், மற்ற இருவர் அடுத்த மேசையிலும் இருப்போம். அந்த மேசையில் இருக்கும் மூன்றாமவர், நம்மை எல்லாம் விட ஒரு வயது கூடியவர். அவர் எமது குரூப்பில் இல்லை, அவரது குரூப் தனி. ஆனாலும் நல்லவர். ஒரு மேசையில் இருப்பவர்கள் மூவரும் ஒரு வீட்டினர் என்றும், அடுத்த மேசையில் இருந்த இருவரும் அவர்களது உறவினர் என்று பிரித்துக் கொண்டோம். ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் விசிட் போகப் போகிறோமாம். அதுபற்றி கடிதம் போடுவோம். நமது குரூப்பில் இல்லாதவர்தான் பியோன், அதாவது நமது கடிதம் எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுப்பார்.

அந்த விசிட்டுக்கு அந்த வீட்டில் சமையல் தடபுடலாய் நடக்கும். எதை சமைப்பது என்று கேட்கிறீர்களா? முதல் நாளே பேசி வைத்துக் கொண்டபடி, சாப்பிடக் கூடிய பொருட்கள், அவரவர் இஷ்டத்துக்கு எடுத்து வந்திருந்தோம். அந்த சமையல் பொருட்களில் கொய்யாக்காய், பிஞ்சு போஞ்சிக்காய் (பச்சையாய் சாப்பிடக் கூடியது), கரட் போன்ற பொருட்கள் அடக்கம். அவர்கள் சமைப்பார்கள். நாங்கள் விருந்துக்குப் போய் சாப்பிடுவோம். ஒரு மேசையிலேயே ஐவரும் நெருக்கி அடித்து உட்கார்ந்துதான் விருந்துச் சாப்பாடு. பிறகு அவர்களை நமது வீட்டுக்கு வரும்படி அழைப்பு வைத்து விட்டு வருவோம். பாத்திரங்கள் இடம் மாறி நமது வீட்டு கிச்சனுக்கு (அதுதான் மேசைக்கு கீழே, ஹி ஹி) வந்து விடும்.

இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நுழைந்ததும், அப்படி எல்லோரும் ஒரு மேசையில் உட்கார்ந்து என்ன செய்கிறோம் என்று கேட்டதும், இனிமேல் எந்த விளையாட்டுப் பொருட்களும் ஸ்கூலுக்கு எடுத்து வரக் கூடாது என்று சத்தம் போட்டதும் தனிக் கதை. அவர் சொன்னதுக்காக நாங்கள் கொண்டு போகாமல் விட்டு விட முடியுமா என்ன? அது எல்லாம் தொடர்ந்தும் நாங்கள் விளையாடிக் கொண்டுதான் இருந்தோம்.

சரி, அந்த பேபிபற்றி எழுத வந்து எதை எதையோ சொல்கிறேன் நான். என்ன செய்வது பழைய நினைவுகளுக்குப் போனால், இப்படித்தான். ஒன்றுடன் ஒன்று தொடுத்துக் கொண்டு, மாலை கோர்த்தது மாதிரி, ஒராயிரம் நினைவுகள் வரும்.

நான் சொல்ல வந்தது அந்த பேபிக்கு நடந்த கொடுமை பற்றியதாச்சே. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகியதும், புதிய இடத்துக்குப் போனதும், அதன் பிறகு சில காலத்தில் அவர்களது தொடர்பு விட்டுப் போனதும் பற்றித்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே. ஒரு சினேகிதியின் மூலம் நான் அறிந்த சோகக் கதைதான் இது. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகி வந்து பல காலத்தின் பின்னர், அந்த விஷயத்தை எனது அடுத்த சினேகிதி மூலம் அறிந்த போது எனக்கு நம்பவே முடியவில்லை. அத்தனை செல்லமாக வளர்ந்த பேபிக்கா இந்தக் கதி என்று மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, என்னை மிகவும் பாதித்தது. இவற்றிற்கு எல்லாம் காரணம் இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள். அதுவும் சில சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் என்பதுதான் வருந்தக் கூடிய விடயம்.

பேபி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதாலேயோ என்னவோ, அவள் படிப்பில் பெரிய ஆர்வமில்லாது இருந்தாள். விளையாட்டு, விளையாட்டு, எந்த நேரமும் விளையாட்டுத்தான். அதனால், அவளால் படிப்பிலும் கெட்டிக்காரியாக வர முடியவில்லை. அவள் அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. விளையாடுவதற்காகவே ஸ்கூலுக்கு வருவதுபோல் வந்து போவாள்.

அவளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்து விட்டதாம். திருமணம் முடிந்த சில காலத்தில் ஏதோ காரணத்தால், பேபிக்கு மன நிலை பாதிப்படைந்திருக்கிறது. அத்துடன் அவளுக்கு உடல் சுகவீனங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. அந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் ஒரு தீய சக்திதான் என்று நம்பிய அவர்களது உறவினர்கள், அவளை வைத்தியரிடம் அனுப்பாமல், அவர்களது மதம் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் என்ன மதம் என்பது அவசியமற்றது என நினைக்கிறேன். ஏனென்றால் வேறு பட்ட மதங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரும் இது ஒரு தீய சக்திதான் என்றும், இதற்கு தமது மத முறைப்படி சிலவற்றை செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

பேபியை அதற்குப் பிறகு, வீட்டை விட்டு வேறு ஒரு இடத்தில் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும், அவளை அடித்து எல்லாம் துன்புறுத்தியதாகவும் கூட சொல்கிறார்கள். ஒரு நிலையில் அவளால் கதைக்க கூட முடியாமல் போய் விட்டதாகவும், இப்படியே அவளது நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் இறந்தே போனாளாம்.

ஒரேயடியாக இறந்து போயிருந்தாலாவது பரவாயில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து போயிருக்கிறாள் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். உண்மையில் இதுவும் ஒருவகையில் கொலைதானே?

இதில் அதிகம் வருத்தம் தரக்கூடிய விடயம், கணவனும், அவளை அத்தனை செல்லமாக வளர்த்த அப்பா, அம்மா, சகோதரர்கள் கூட அவளது கஷ்டத்தை புரிந்துகொண்டு, அவளைக் குணப்படுத்த வேறு முயற்சிகளை எடுக்காமல், அது எல்லாம் தீய சக்தியால் வந்த விளைவு, அதற்கு இதுதான் முடிவு என்று நம்பிக் கொண்டு இருந்ததுதான்.

அவளது அந்த அழகிய, குழந்தைத்தனமான முகம் இன்னும் என் நினைவில் பதிந்துள்ளது. .

 

4 Responses to “சினேகிதியின் கதி!”

 1. கயல்விழி

  ஆரம்ப நாள் லூட்டிகளை வாசித்து சிரித்தேன். எங்கள் சிறட்டைச்சமையல் நினைவில் வந்தது.

  உங்கள் தோழியின் நிலை அறிந்து வருத்தம். பேய் சூனியம் இன்று இன்னும் தான் நேரத்தை வீணாக்கி நோயை முத்தவைத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் தோழியின் நிலை எத்தனை கவலைக்கிடமானது என்று புரியமுடிகிறது. பெற்றவர்கள் சகோதரர்கள் எப்படியோ குணம் ஆனால் சரி என்று எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களது பதட்டம் மற்றவர்கள் அறிவுரை வைத்தியரை நாடவிட்டிருக்காது. மூடநம்பிக்கையால் நடைபெறும் இப்படியான விடயங்கள் வேதனையைத்தான் அழிக்கிறது.

 2. கலை

  கருத்துக்கு நன்றி கயல்விழி.

 3. சினேகிதி

  title a parthathum oru nimisam payantiden…apuram thodakathila palaya ninavukalai varavalachidenega.
  intha mooda nambikayila irunthu epathan vidupadaporamo

 4. கலை

  நான் பழைய நினைவை பதிவு செய்திருந்தேன். நீங்க பழைய இந்த பதிவையே தூசி தட்டி எடுத்திருக்கிறீங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s