எனது ஆசிரியர்!
ஆட்டோகிராஃப் இன் கதை சொன்னேன்தானே. அங்கே பக்கங்களைப் ஒவ்வொன்றாக புரட்டிச் செல்கையில், அழகான கையெழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆசிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அவரைப் பற்றி இத்தனை நாளும் எப்படி நினைக்காமல் இருந்துவிட்டேன் என்று ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன்.அந்தப் பாடசாலையில், நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு, புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம். எங்களுக்கு ஒரு புதிய வகுப்பாசிரியர் வரப் போகிறார் என்று சொல்லியிருந்தார்கள். வகுப்பிற்கு மட்டும் அவர் புதியவர் அல்ல, அந்தப் பாடசாலைக்கே புதிதாக வருகிறார் என்றதும், அனைவரிடமும் அவரைப் பார்ப்பதில் அதீதமான ஆவல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
முதலாம்நாள், முதலாம் பாடம், மிகவும் ஆர்வத்துடன், யார் வந்து நமது வகுப்பினுள் நுழையப் போகிறார் என்று காத்திருந்தோம். அந்த ஆசிரியர் மெதுவாக வந்து வகுப்பறையினுள் நுழைந்தார். மெல்லிய உருவம், பொது நிறத்தைக் கொண்டவர். சுமாரான உயரம். ஆனால், அவர் கண்களில் மட்டும் ஒரு ஒளி. அத்தனை மாணவர்களையும் கட்டிப் போடக் கூடிய ஏதோ ஒரு கவர்ச்சி. அவர் வகுப்பில் வந்து பேச ஆரம்பித்ததும், அனைத்து மாணவர்களும், ஏதோ ப்ரேயரில் இருந்ததுபோல், ஒரு சிறு சத்தமும் செய்யாமல் கேட்டுக்கொண்டு இருந்தோம். அன்று அவர் எந்த பாடமும் நடத்தவில்லை. முதல் பாடம் முழுமையும் நம்முடன் கதைத்தார்.
அவர் அப்படி என்ன கதைத்தார் என்று கேள்வி எழுகிறதா? நம்முடன் ஒரு நண்பனைப் போல், சகோதரன்போல், இதமாக, இனிமையாக பல விஷயங்களையும் கதைத்தார். அதுவரை காலத்தில் (ஏன் அதற்குப் பிறகும் கூட) அப்படி ஒரு ஆசிரியரை சந்தித்திருக்கவில்லை. மாணவர்களுடன் பல ஆசிரியர்கள் நட்புடன் பழக விரும்புவதேயில்லை. அப்படி பழகினால், மாணவர்கள் தம்மை மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். வேறு சில ஆசிரியர்கள் நட்புடன் இருக்க விரும்பினாலும், அதை காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரோ மிகவும் நட்புடன் பழகுவார்.
நாம் அனைவரும், அவர்மேல் அளவு கடந்த அன்பும், அதீத மரியாதையும் வைத்திருந்தோம் என்பதுதான் உண்மை. காரணம் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த அந்த ஒரு வருடமும், அவர் எங்களுடன் பழகிய விதம், அப்படி நம்மை அவர்பால் இழுத்து வைத்திருந்தது. அவரது குழந்தையின் பிறந்த நாளுக்கு நம்மைத்தான் முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார் என்பதே நமக்கு பெருமையாக இருந்தது. அவரது வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை நமக்கு. அவரால் நமது வகுப்பிற்கே ஒரு தனி மரியாதை இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
அவர் எனது ஆட்டொகிராஃப் இல் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பிக்கையிலேயே, அந்த வரிகள் மனப்பாடம் செய்தது போல் எனக்கு வந்தது. அது என்னவென்றால்…..
அன்புத்தங்கை கலா!
இறை நம்பிக்கையும், உண்மையும் மனித வாழ்வினைச் சிறப்புடன் பார்க்க உதவும் இரு கண்கள். இவைகட்கு ஒளி கொடுப்பது அன்பு. எனவே அன்பெனும் ஒளிகொண்டு, இறை நம்பிக்கை, உண்மை எனும் இரு கண்களாலும் மனித வாழ்க்கைப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி வீறுநடை போடுங்கள். வாழ்வின் வெற்றி உங்களுக்கே!
அண்ணன்,
அ.மு.அருணாசலம்.
இதை வாசிக்கும்போது எனது கண்கள் பனித்தன. எத்தனை அருமையாக ஒரு அண்ணனாக இருந்து இதை எழுதியிருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியும். ஆனால் அங்கே எந்த இடம் என்பது நினைவில் இல்லை. அதை விலாசத்தில் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால், அங்கேயும் ‘நு/கைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்’ என்றுதான் உள்ளது.
நாங்கள் இடம் மாறி யாழ் வந்த பின்னர் சில காலம் நானும் அவருக்கு கடிதம் போட்டிருக்கிறேன். அவரும் பதில் போட்டிருந்தார். ஆனால் எப்போது, எப்படி அந்த தொடர்பு விடுபட்டது என்பது சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்பு நின்று போனது.
அவருக்கு நம்மையெல்லாம் நினைவிருக்குமா என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் எம்மைப் போல் எத்தனை மாணவர்கள் வந்து போயிருப்பார்கள். எனது அப்பாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றியதால், ஒருவேளை நினைவில் வைத்திருப்பாரோ, என்றால் அதற்கும் சாத்தியமில்லை. காரணம், அவர் அந்த பாடசாலைக்கு வந்த வருடத்தில் அப்பா, ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் போய் விட்டார். அருணாசலம் மாஸ்டர் நமக்கு எடுத்த பாடம் கணக்கு. அதில் நான் நன்றாகவே செய்வதால், ஒருவேளை என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் அப்படி எத்தனை பேர் வந்து போயிருப்பார்கள். மேலும் எல்லோரையும் கணக்கை நன்றாகச் செய்யச்செய்யும் வல்லமை அவரிடம் உண்டே.
அவர்பற்றி அறிய மிகவும் ஆவலாயுள்ளது. ஒருவேளை இதை வாசிப்பவர்களில் அவரது உறவினர்களோ, அவரைத் தெரிந்தவர்களோ, ஏன் அவரது பிள்ளைகளோ கூட இருக்கக் கூடும். அப்படி யாராவது இருந்தால், தயவு செய்து எனக்கு அறியத் தாருங்கள்..
நல்ல தோழர்களைப்போல ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. ஆசிரியரைக் கண்டு பிடித்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்.
சிலவேளை அந்தப் பள்ளிக்கூடத்தில் கேட்டால் கண்டுபிடிக்க/ தற்போதைய வசிப்பிடம் பற்றி அறிந்து கொள்ளச் சந்தர்ப்பமுண்டு.
புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம்
அடேங்கப்பா .. சூப்பர்..
பொது நிறத்தைக் கொண்டவர்
அப்படினா?? அது என்ன நிறம்ங்க??
இப்படி ஆசிரியர்கள் கிடைப்பது அரிது… கவலை வேண்டும்… ஒரு நாள் அவரின் தொடர்பு கிடைக்கும் கலை அவர்களே
எனக்கும் ஒரு ஆசிரியரை மறக்க முடியாது. அந்த ரீச்சர் வீட்டிலை நடக்கிற கோவங்களைக்காட்ட செய்த வேலைகளை எப்படி மறக்க. கொப்பி முகத்திற்கு வரும். துணி டஸ்ரர் சோக் கட்டி என்று எத்தனை வரும் முகத்தில். வளர்ந்ததன் பின்னர் நிறைய ஆசிரியர் நண்பர்களாக பழகியதுண்டு . இருந்தாலும் அந்த ரீச்சரை மறக்க முடியாது.
இங்கே கருத்தெழுதிய ஷ்ரேயா, வீ.எம். கயல்விழி அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு போட்ட பதிவிலும், எனக்கு பிடித்தமான இன்னொரு ஆசிரியைபற்றி வருகிறது. (எனக்கு பிடிக்காத ஒரு ஆசிரியரைப்பற்றியும் எழுத வேண்டும் இன்னொரு பதிவில்).
ஒன்பதாம் கிளாசில எனக்கும் ஒரு தமிழ் வாத்தியார்,முதல் நாள் கிளாஸ் எடுதார் ,ரெண்டு பீரியட் .பெல் அடிக்கிற சமயம் அப்போதான் சொல்றார் முத நாளே ஒரு சாப்டர் முடிஞ்சுதுன்னார். புத்தகத்த திறந்து பார்த்தா அவர் சொன்ன விழயங்கள்ள பத்து பர்சன்ட்தான் அப்பிடியே பாடத்துல இருந்திச்சி , இன்னிக்கும் அவர் அன்னிக்கி நடத்துன பாடம் மனசில நிக்கிதுங்கோ
ஒன்பதாம் கிளாசில எனக்கும் ஒரு தமிழ் வாத்தியார்,முதல் நாள் கிளாஸ் எடுதார் ,ரெண்டு பீரியட் .பெல் அடிக்கிற சமயம் அப்போதான் சொல்றார் முத நாளே ஒரு சாப்டர் முடிஞ்சுதுன்னார். புத்தகத்த திறந்து பார்த்தா அவர் சொன்ன விழயங்கள்ள பத்து பர்சன்ட்தான் அப்பிடியே பாடத்துல இருந்திச்சி , இன்னிக்கும் அவர் அன்னிக்கி நடத்துன பாடம் மனசில நிக்கிதுங்கோ
எனது ஆசிரியரைக் கண்டு பிடித்து விட்டேன். அது தொடர்பாய் எனது இறுதி இடுகையில் எழுதி இருக்கின்றேன். 🙂
https://kalaiarasy.wordpress.com/2013/04/06/after-a-long-time/