மதங்களும் மனிதர்களும்….
மதங்களும் மனிதர்களும்….
மதங்கள் பற்றி எனக்குள் ஓராயிரம் கேள்விகள். அவற்றில் சிலவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆண்டவன் ஒருவன்தான் என்பதையும், அவரை வேறுபட்ட வழிகளில் பார்க்க விளைகையில் தோன்றியதே மதங்கள் என்பதையும் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். வேறுபட்ட மதங்கள், வேறுபட்ட சமூகத்தினரை ஒரு இலக்கை நோக்கி நகர்த்தும் பல வழிப்பாதை என்றால், மதங்களின் பெயரால், மக்களுக்கிடையே சண்டைகள் ஏன்? மத போதனைகள் மூலம் மக்களை நல் வழிப்படுத்த வேண்டிய மதகுருமார்கள் சிலர், மதங்களின் பெயர் சொல்லி, மக்களிடையே அன்புக்கு பதில் ஆணவத்தை விதைப்பது ஏன்? கலகங்களை தூண்டுவது ஏன்? இப்படிப்பட்ட போதனைகளின் பயன் என்ன? அது மட்டுமா, ஆண்டவனின் பெயரில் நல்வழியை மக்களுக்கு உணர்த்த வேண்டிய பலர் எத்தனை கேவலமாக குற்றம் சுமத்தப் படுகிறார்கள். உண்மையில் அவர்கள் ஆண்டவன் தொண்டை மட்டுமே எண்ணி நடந்திருந்தால், அவர்கள்மேல் இத்தகைய குற்றங்கள் செலுத்த எவரும் முன் வர வேண்டிய அவசியம்தான் என்ன? அவர்களது நடவடிக்கைகளிலும், அவர்களது தொடர்புகளிலும் தவறு உள்ளது என்றுதானே அர்த்தமாகிறது?? ஆண்டவன் எங்கும் நிறைந்து இருப்பது உண்மையானால், எத்தனையோ அநாதரவான குழந்தைகள், முதியவர்கள் அநாதையாகி நிற்கையில், அதிக செலவில் தேவைக்கும் அதிகமான கோவில்களை நிர்மாணிப்பது அவசியமா? ஒரு குறிப்பிட்ட கோவில் மிக சக்தி வாய்ந்தது என்று பலர் குறிப்பிட கேட்டிருக்கிறோம். அப்படியானால், வேறு ஒரு கோவிலில் இருக்கும் அதே கடவுள் சக்தி அற்றது என்றோ, சக்தி குறைந்தது என்றோ அர்த்தம் ஆகுமா?
அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் ஆயிரமாயிரம் மக்கள் இருக்கையில், காணிக்கை என்ற பெயரில், வேள்விகள் என்ற பெயரில் கோடி கோடியாய் பணத்தை கொட்டுவது அவசியம்தானா? பால் எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாய் இருக்கும் ஏழை எளியவர் ஆயிரம் இருக்கையில், பாலாபிசேகம், தேனாபிசேகம் அவசியமா? ஆண்டவன் சந்நிதானத்திலேயே பலி என்ற பெயரில், உயிர் வதை, கொலை இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறதே? இது அவசியம்தானா? உண்மையில் ஆண்டவன் இதை ஏற்று கொள்வாரா? இந்த மூட நம்பிக்கைகள் நம்மை விட்டு விலகுவது எப்போது?
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில், அன்பை எந்த வேறுபாடும் இன்றி செலுத்துவதில் நாம் ஆண்டவனை அடையாளம் காண முடியாதா? நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருப்பது உண்மைதான். அந்த சக்தியை நாம் ஆண்டவன் என்று அழைப்பதும் சரியாக இருக்கலாம். ஆனால் அதே பெயரால் நடக்கும் அநியாயங்கள் சரியா? எனது கேள்வியெல்லாம் ஆண்டவன் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, அவர் பெயரால் நடக்கும் அநியாயங்கள் அவசியம்தானா, அவை தொடர்வதற்கு நாமும் காரணம் ஆகலாமா என்பதுதான். மனித நேயத்தில் இருந்து மனிதர்களை அந்நியப்படுத்தி அழைத்து செல்லும் பாதைகள் காட்டப்படுவதையும், அதை எல்லாம்பற்றி சிந்தித்து பார்க்காமல், நாமும் அவற்றை எல்லாம் தொடர்ந்து கொண்டிருப்பதையுமே ஆதங்கத்துடன் எண்ணி பார்க்கிறேன். உதாரணத்திற்கு, ஆண்டவனை தங்கத்தில் செய்து காணிக்கை தருவதாக வேண்டுதல் செய்கிறார்கள். அதற்கு செலவளிக்கும் பணத்தை ஒரு அநாதை குழந்தையின் முன்னேற்றத்தில் பாவிப்பதாக வேண்டிக்கொண்டால் என்ன என்பதே எனது கேள்வி. ஆண்டவனை அவரவர் நம்பிக்கைபடி எப்படியும் காணலாம். ஆனால் எந்த ஆண்டவனும் இப்படி ஒரு நல்ல செயலை விட்டு தன்னை தங்கத்தால் அலங்கரிக்க ஆசைப்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படி நல்ல வழிகளை நாம் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
இப்போதெல்லாம் பல இடங்களிலும் தெரிவது, ஆண்டவனோ, பக்தியோ அல்ல. சமூகம் பற்றிய சிந்தனை சிறிதும் அற்ற, வெறும் படாடோபமே. ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்யும் அவசரத்தில் அநாதைகளை அலட்சியம் செய்பவன் ஆஸ்திகனா, அர்ச்சனைபற்றி அலட்டி கொள்ளாமல் அநாதைகளை அரவணைப்பவன் ஆஸ்திகனா? கடவுளுக்கு கற்பூரம்தான் முக்கியம், கலங்கி நிற்பவர் பற்றி கவலை இல்லை என்பவன் ஆஸ்திகனா, கலங்கி நிற்பவருக்கு கருணை செய்வதே கடவுள் வழிபாடு என்று எண்ணுபவன் ஆஸ்திகனா? ஆண்டவனுக்கு ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து பார்க்க ஆசைப்படுபவன் ஆஸ்திகனா, சொந்தங்கள் இல்லாதோரை சொந்தமாக்கி அதில் அமைதி தேடுபவன் ஆஸ்திகனா?எங்கோ ஒரு இடத்தில் வாசித்த ஒரு விடயம் சிந்தனையில் வருகிறது. வாஸ்து சாஸ்திரப்படி கோவில் கட்டினால்தான் அந்த கோவில் சக்தி உள்ளதாய் இருக்குமாம். இல்லாவிட்டால் அந்த கோவில் அல்லது அங்கிருக்கும் கடவுள் சக்தி அற்றது என்று அர்த்தம் ஆகுமா? அப்படி என்றால் எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆஸ்திகன் என்று தன்னை சொல்லிக்கொண்டு, ஆண்டவனின் சக்தியையே சந்தேகப்படுபவனை என்ன சொல்வது?
* இங்கே எனது சிந்தனையை தூண்டிய சில குழந்தைகளின் கேள்விகளை, உங்கள் சிந்தனைக்கும் முன் வைக்க விரும்புகிறேன். சில கோவில்களில் மிருக உயிர்களை பலி கொடுத்தது பற்றி பெரியவர்கள் பேசி கொண்டதை தற் செயலாக கேட்க நேர்ந்த ஒரு 5 வயது குழந்தையின் கேள்வி இது… கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எப்போதாவது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அவர் ஆடு எல்லாம் சாப்பிடுவாரா? சரஸ்வதி பூசைக்கு அவர் முன்னால் சாப்பாடு வைத்தோமே, ஆனால் அவர் சாப்பிடவில்லையே, ஏன்? அப்படியென்றால் எதற்கு அப்படி வைக்கிறோம்?
திருஞானசம்பந்தர்பற்றி பாடம் சொல்லி கொடுத்தபோது இன்னொரு குழந்தையிடம் இருந்து புறப்பட்ட இன்னொரு கேள்வி இது… திருஞானசம்பந்தர் அழுதபோது உமாதேவியார்தானே வந்து பால் கொடுத்தார். அப்போ ஏன் அவர்களைபற்றி பாடாமல் திருஞானசம்பந்தர் சிவனை நோக்கி பாடினார். இதை வாசிக்கும்போது சிரிக்க தோன்றலாம். ஆனால் இது சிந்தனையையும் தூண்டுவது தவிர்க்க முடியாது என எண்ணுகிறேன்.
இந்த குழந்தைகள் மனதிற்கு புரியும்படி எதை சொல்வது என்பது பெரிய பிரச்சனையே…….
மதம் என்று பேசிக்கொள்வார்கள். மதத்தில் உண்மையில் சொல்லப்பட்டு இருக்கிறதோ இல்லையோ மதம் என்ற போர்வையில் தேவையற்ற, அவசியமற்ற செயல்கள் எல்லாம் கடைப்பிடிப்பார்கள். ஆனால் அங்கே சொல்லப்பட்டிருக்கும், அற்புதமான கருத்துக்களைப்பற்றி கவலையே பட மாட்டார்கள். இதுதான் மனதை சங்கடப் படுத்துகிறது.
முழுமையான சுய மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் மற்ற உயிர்களிடம் கருணை, அன்பு கொண்டு மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதாதா?
விடைகாண விளையும் கேள்விகள் இங்கே.
கேள்விகள்…கேள்விகள்…நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.
நம் மனதைவிட, மனசாட்சியைவிட வேறென்ன வேண்டும் என்ற காரணத்தால்தான் மனதை கடவுள் வாழும் இடம் என்று சொல்லியிருப்பார்களோ? உள்ளே வைத்துக்கொண்டு வெளியே தேடுதல் என்பது அதுதானோ?
உண்மைதான் தருமி. உள்ளே வைத்துக் கொண்டு வெளியே பலரும் தேடுகிறார்களோ என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது.
அப்பப்பா.. தருமி கூறியது போலவே கோபமும் எரிச்சலும் தெரிக்கும் எக்கச்சக்கக் கேள்விகள்..
கடவுளின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்துக்களை உங்கள் கேள்விகளால் துகிலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
ஆனால் கேட்க வேண்டியவர்கள் காதில் கேட்குமா? அவர்கள் மனங்கள் யோசிக்குமா?
உங்கள் பதிவின் கருப்பொருளுடன் முழுதும் உடன்படுகிறேன். கடவுளுக்கு கானிக்கை செலுத்துவதை விட அதனை கஷ்டப்படும் ஏழைகளுக்கு செலவிடுவதில் கடவுளுக்கு நிச்சயம் உடன்பாடு இருக்கும். அது உன்மையான கடவுளாக இருந்தால்
நல்ல பதிவு… இது தேவையான அளவு வாசிக்கப்படவில்லை என எனக்கு தோன்றுகிறது. ஏதோ மீபதிவுன்னு சொல்றாங்களே.. அப்படி போடுங்கள். 🙂
பல நியாயமான கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள். வேதனை அளிக்கக் கூடிய விஷயம் என்ன என்றால் பலரும் இதே போல உணர்ந்திருந்தாலும் ஒரு வித அலட்சியப் போக்கினாலோ இல்லை தங்களுடைய irrational உணர்வுகளாலோ இதனைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை.
சிலர் விஷயத்தில் இது முத்தி விட்டது அவர்களுக்கு கடவுள் என்பது முக்கியம் இல்லை தான் உணர்ந்தது தனக்குத் தெரிந்ததே எல்லாம் என்ற அகங்காரமே முக்கியம். ஆனால் அவ்வாறு இல்லாதவர்கள் கூட இந்த மாயையில் இருந்து விடுபடாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
தருமி ஐயா, குற்றம் என்று கருத்தப்படுவைகளைக் குறித்து சிறிது குற்றமனப்பான்மை தோன்றினால் மனசாட்சி இடிக்கும். ஆனால் செய்தது தவறே இல்லை என்று நாம் முழு மனதுடன் நம்பினால் அங்கு மனசாட்சி எல்லாம் வராது 🙂
கலை நிறைய கேள்வி கேட்டு வீட்டீங்க 🙂
1- பயம் பொதுவாய்
2- காலக்காலமாய் நம் மூளையில் ஏற்றப்பட்ட நம்பிக்கைகள்
3- பிறர் என்ன நினைப்ப்பார்களே என்ற தயக்கம்
4- எதுக்கு வம்பு என்ற கோழைதனம்.
5- சோஷியல் ஸ்டேடஸ் ( நான் பூஜை செய்யாமல் வெளியே கிளம்ப மாட்டேன். சனிக்கிழமையான திருவண்ணாமலை போய்விடுவேன்)
6- படிப்பு, பணம், போன்ற தகுதி குறைந்தவர்கள், தாங்கள் தீவிர ஆன்மீகவாதிகள் என்றுக்காட்டிக் கொண்டால், இப்படி
ஒரு தகுதி கிடைக்குமே, பல சாமியார்கள் உருவாகுவது இப்படிதான்.
7- பெரிய ஆட்களுக்கும் இது
மா பெரும் கவசம்
அவசரமாய் நினைவுக்கு வந்து சில அடித்துள்ளேன். பிறகு வருகிறேன்
//எனது கேள்வியெல்லாம் ஆண்டவன் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, அவர் பெயரால் நடக்கும் அநியாயங்கள் அவசியம்தானா, அவை தொடர்வதற்கு நாமும் காரணம் ஆகலாமா என்பதுதான்//
ஹ்ம்ம்.. நீங்க கேட்ட கேள்வி கண்டிப்பாக தக்க சமயத்தில் நியாபகம் வர்ர மாதிரி எழுதி இருகீங்க..
மங்கை
நீண்ட காலமாக தொடப்படாமல் இருந்த இந்த பதிவில் வந்து தங்கள் கருத்துக்களை அளித்த அனைவருக்கும் நன்றிகள்.
//ஆனால் கேட்க வேண்டியவர்கள் காதில் கேட்குமா? அவர்கள் மனங்கள் யோசிக்குமா?//
மனதின் ஓசை! சில பேராவது யோசிக்கட்டுமே என்றுதான் இந்தக் கேள்விகளை எல்லோரிடமும் கேட்டு வருகிறேன். 🙂
//இந்த மாயையில் இருந்து விடுபடாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.//
உண்மைதான் செந்தில் குமரன். இந்த மாயை என்று விலகுமோ தெரியவில்லை.
//அவசரமாய் நினைவுக்கு வந்து சில அடித்துள்ளேன். பிறகு வருகிறேன்.//
அவசரமாய் நினைவுக்கு வந்தாலும், சரியான பதில்கள்தான் உஷா. இவற்றில் இருந்து வெளியே வருவதுதான் சமூகத்துக்கு நல்லது என்றுதான் தோன்றுகின்றது. மீண்டும் வாருங்கள்.
//நீங்க கேட்ட கேள்வி கண்டிப்பாக தக்க சமயத்தில் நியாபகம் வர்ர மாதிரி எழுதி இருகீங்க..//
நன்றி மங்கை.
கலை!
பதிவை வாசிக்கும் போது, பின்னனியில் உடுக்குச் சத்தம் கேட்குதுங்க.
நீங்களும் நிறையக் கேட்டிருக்கிறீர்கள். இப்படிக் கேட்டுக்கொண்டே இருக்கப் போகிறோமா..?
” அன்பே சிவம் ” அது சத்தியம்.
அது என்னது உடுக்கு சத்தம். புரியவில்லையே. (நான் கொஞ்சம் டியூப் லைட், ஹி ஹி).
இந்தப் பதிவை வாசியுங்கள் லைற் எரியும்:))