2004 ஆம் ஆண்டு ஆடி மாத கோடை விடுமுறை!!
இந்த வருட இலங்கை பயணத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், எமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கூடியது. சகோதரர்கள் நாம் திருமணத்திற்கு முன்பே வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து விட்டோம். திருமணம் நடந்ததும் வெவ்வேறு இடங்களில்தான். அவரவர்க்கு குடும்பங்கள் என்று ஏற்பட்ட பின்னர், ஒருவரை ஒருவர் இடையிடையே சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும், எல்லா சகோதரங்களும் அவர்களது குடும்பங்களும், அம்மா, அப்பாவும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் சந்திப்பது 20 வருடங்களின் பின்னர் நிறைவேறி இருக்கிறது. அதுவே இந்த பயணத்தில் தனி மகிழ்ச்சி.
எல்லோரும் நீர்கொழும்பில் வசிக்கும் சகோதரி வீட்டில் ஒன்றுகூடி மகிழ்ந்திருந்தோம். எமது குழந்தைகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கதைத்தது, சிரித்தது, விளையாடியது என பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் வாழ்ந்தாலும், எல்லா குழந்தைகளுமே நன்றாக தமிழில் பேசக்கூடியவர்களாய் இருந்ததால் மொழிப் பிரச்சனை அவர்களிடையே இருக்கவில்லை. மிக தாராளமாக ஒருவருடன் ஒருவர் பேசி பழகினார்கள். விளையாட்டு, பாட்டு, நடனம் என அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அவர்கள் எல்லோருமாக சேர்ந்து செய்த அமர்க்களத்தில் வீடே இரெண்டு பட்டுக்கொண்டிருந்தது.
அவர்கள் அமர்க்களம் ஒரு புறம் இருக்க, பெரியவர்கள் நாமெல்லோரும், பெரியவர்கள் என்பதையே மறந்து விட்டு, நாமும் குழந்தைகளாகி, ஒன்றாக கூடி இருந்து புதிய, பழைய கதைகள் பேசி, சிரித்து, விளையாட்டாய் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு, ஒருவரை ஒருவர் காலை வாரிவிட்டு, ஒன்று கூடி சமைத்து, சாப்பிட்டு, ஆஹா… எத்தனை இனிமையான நாட்கள். சகோதரங்கள் நாம் சிறு வயதில் அம்மா, அப்பாவுக்கு ஒளித்து செய்த குறும்புகள் எல்லாம் அப்பா அம்மாவிடம் இப்போது கூடி இருந்து பேசுகையில் சொல்லி விட்டோம். அவர்களும் எங்களுடன் சேர்ந்து சிரித்தது மிகப் பெரிய ஆனந்தம். குழந்தைகள் ஒரு புறமும், பெரியவர்கள் ஒரு புறமுமாய் ஒரே கும்மாளம்தான். எல்லா குடும்ப அங்கத்தவர்களும் மீண்டும் ஒன்றாய் சேரும் நாள் இனி எவ்வளவு தொலைவில் உள்ளதோ என்பது தெரியாததால், எல்லோரும் ஒன்றாக இருந்து studio வில் போய் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக தொடர்பேதுமில்லாமல், உறவுகள் அறுந்த நிலையில் இருந்த உறவுகளையும் சந்தித்து, மகிழ்வுடன் உறவாட முடிந்தது மேலதிக மகிழ்ச்சி. இத்தனை சந்தோஷங்களுக்கிடையிலும், இத்தனை அற்புதமான நாட்களை, இந்த சுகங்களை, சந்தோஷங்களை நமது நாட்டு சூழ்நிலை காரணமாய் நாம் இழக்க வேண்டி வந்து விட்டதே என்ற ஒரு கவலை மனதின் ஒரு மூலையில் மெல்லிய கோடாய் ஓடிக்கொண்டே இருந்தது.
இலங்கையில் இருக்கும் நேரங்களில், காலையில் எழுவதே ஒரு ஆனந்தமான நிகழ்ச்சிதானே? விதம் விதமான பறவைகளின் சத்தங்களுடன் துயில் எழுவதே மனதை மகிழ்ச்சியில் நிரப்பி விடுமே. கி கி கீ…. கு கு கூ….. சத்தங்கள் எம்மை கூவிக்கூவி அழைத்து நித்திரையில் இருந்து எழுப்புவதுதான் என்ன இனிமை. அதிலும் குயிலின் கூ கூ குரலுக்கு பதில் குரல் கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி. குயில் கூ கூ… சொல்லும்போது, நாமும் பதிலுக்கு அதே குரல் கொடுக்கையில், குயிலின் கூ கூ.. வின் வேகம் அதிகரிப்பதும், நாமும் வேகத்தை அதிகரிக்கும்போது, அது இன்னும் வேகம் வேகமாக, கூ கூ…. குரல் கொடுப்பதும் எத்தனை மகிழ்ச்சி. எமது குழந்தையும் இந்த முறை குயிலுடன் போட்டி போட்டு கூ கூ… சொல்லிப் பார்த்தாள்.
யாழ்ப்பாணத்தில் நின்ற நாட்கள் அத்தனையும் இன்னும் இனிமையானவை. கிணற்றில் இருந்து, தொட்டியில் தண்ணீர் இறைத்து விட்டு, அந்த தொட்டிக்குள் இறங்கி குழந்தை குதூகலமாய் குளிக்கையில், எமது பழைய நினைவுகள் மனதில் சத்தமில்லாமல் எட்டிப் பார்த்தது. இங்கே குழாய்த்தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்து விட்டு, அங்கே போய் தொட்டியில் இருந்து நீரை பாத்திரத்தில் அள்ளி அள்ளி தலையில் கொட்டும்போது, மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இழையோடிக் கொண்டே இருந்தது.
சின்ன சின்ன குரும்பட்டிகள் பொறுக்கி, அதில் மகளுக்கு தேர் செய்து காட்டினோம். அவள் அதற்கு பூ எல்லாம் வைத்து சோடித்து தரும்படி கேட்டாள். பூ எல்லாம் வைத்து, சுவாமிப் படங்களும் அதில் தொங்க விட்டு, தென்னோலையை தேரின் கயிறாக்கி அதில் கட்டிக் கொடுத்தோம். அவள் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அதை எல்லா இடமும் இழுத்துச் சென்றாள். அவள் முகத்தில் அந்த புதிய விளையாட்டில் தெரிந்த மகிழ்ச்சிக்கு ஈடுதான் என்ன?வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடு, கன்றுகளைப் பார்த்ததில் மகளுக்கு சொல்லமுடியாத ஆனந்தம். கன்றை கிட்டப் போய் தொட்டு பார்ப்பதும், மாட்டுக்கு வைக்கோல் போடுவதை பார்ப்பதும், மாடு படுத்திருந்து அசை போடுவதை பார்ப்பதும், கன்றுக்கு பாலூட்டுவதை பார்ப்பதும், கன்றில் இருந்து பால் கறப்பதை பார்ப்பதுமாய் குழந்தைகளுக்குத்தான் எத்தனை கொண்டாட்டம்.
அம்மா ஒவ்வொருவருக்காய் சுடச்சுட தோசை சுட்டுப் போட, அதை அருகில் அமர்ந்தபடி உண்டதில்தான் எத்தனை மனத் திருப்தி. நெய்த்தோசை, முட்டைத்தோசை என்று விதம் விதமாய், அதுவும் அம்மா கையால் உண்ணும் சுவையே தனியல்லவா? நாம் நமது வீட்டில் நின்றபோது ஆடிப்பிறப்பு வந்தது. வீட்டில் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்று செய்து அசத்தினார்கள். நாமும் சாப்பிட்டு சாப்பிட்டே களைத்துப் போனோம். அது மட்டுமா, நான் எதிர் பார்த்து போனபடி மாம்பழம், பலாப்பழம் எல்லாம் ஒரு கை பார்த்து விட்டுத்தான் திரும்பினேன். (கொழும்பில் நின்றபோது ரம்புட்டான், மங்குஸ்தான், அவகாடோ என அந்த வகை பழங்களையும் ஒரு பிடி பிடித்தாயிற்று). அங்கே இருந்தபோது சேலன் மாங்காய் பிடுங்கி அதை கூறு போட்டு, உப்பு தூள் தூவி சாபிட்டது இன்னும் நாவில் தித்திக்கிறது. யாழில் இப்போது நுங்கு காலம் முடிவடைந்து பனங்காய் காலம் ஆரம்பிக்கிறது. இருந்தாலும் ஓரிரு நுங்குகள் குடித்துப் பார்க்க கிடைத்தது. பனகாய் பணியாரம் சாப்பிட ஆசையாய் உள்ளது என்று கூறினேன். அம்மா எப்படியோ தேடி பனங்காய் எடுத்து பணியாரம் செய்து தந்தார்கள். சரியான சாப்பாட்டு ராமி என சிரிக்கிறீர்களா?.
பகலில் வீட்டு முற்றத்தில், பெரிய மாமர நிழலில் கட்டில்கள், கதிரைகள் போட்டு எல்லோரும் அமர்ந்து கூடிப் பேசி சிரித்து மகிழ்ந்தது பசுமையாய் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும். இரவில் மரத்தை விட்டு சிறிது தூரமாய் கட்டிலை இழுத்துப் போட்டுவிட்டு, அதில் அண்ணாந்து படுத்துக் கொண்டு, வானில் தெரியும் அசையாத நட்சத்திரங்களையும், திடீரென நட்சத்திரங்கள் ஓடி விழுவது போல் தெரிவதையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அனுபவங்கள் இங்கே எப்படி கிடைக்கப் போகிறது?
யாழ்ப்பாணத்தில் நின்ற வேளையில் நயினாதீவுக்கும் போய் வந்தோம். மின்சாரபடகில் உள்ளே இடமிருந்தும் நாங்கள் படகின் மேலே ஏறி எல்லோரும் அமர்ந்து நீரோட்டத்தை ரசித்தபடியே போய் வந்தோம். நாம் யாழில் தங்கியிருந்த நாட்களில் இடை இடையே மழையும் எட்டிப் பார்த்ததால், கொஞ்சம் சூடு குறைவாகவே இருந்தது எமக்கு சாதகமாய் இருந்தது. யாழ் போகும்போதும், வரும்போதும் இருந்த சில அசெளகரியங்களை இந்த இனிமையான நினைவுகளுக்காய் நிச்சயமாய் மறந்து விடலாம்.
யாழில் இருந்து திரும்பி வந்த போது, கிளிநொச்சியில் குழந்தைகளுக்கான குருகுலம் போனோம். இங்கே திட்டமிட்டபடி, அங்கே தங்கும்படி எம்மால் திட்டத்தை செய்ய முடியவில்லை. ஆனாலும் அங்கே போக முடிந்ததே மகிழ்ச்சிதானே. போனதடவை இருந்ததை விட மேலதிக அபிவிருத்தி வேலைகளை அங்கே காணக் கூடியதாய் இருந்தது. குழந்தைகளுக்கான அழகான விளையாட்டு இடம் அமைத்து இருந்தார்கள். முதலில் மழலைகள் இருக்கும் இடத்திற்குப் போனோம். அந்த சின்ன மழலைகளின் சிரிப்பிலும் பேச்சிலும் எம்மையே மறக்க முடிந்தது. எமது மகளும் இந்த முறை, தனது தயக்கத்தை கொஞ்சம் தூரமாய் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களிடம் நெருங்கி சென்றது மனதில் மேலும் மகிழ்ச்சியை தந்தது. சிரித்த முகமும், சுட்டித்தனம் நிறைந்த இயல்புமாய் கரண் என்ற சிறுவனை மீண்டும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. எமக்கு அவர்கள் தாம் படித்த பாடல்கள் எல்லாம் பாடிக் காட்டினார்கள். அடுத்து கொஞ்சம் பெரிய பிள்ளைகள் இருக்கும் இடம். அங்கேயும் பிள்ளைகள் எல்லோரும் தாமே இயற்றிய பாடல் என்று பாடிக் காட்டினார்கள். நாம் நேரம் போகிறதே என்ற எண்ணத்தில் எழ முயன்ற போது, இன்னும் ஒரு பாடல் கேட்டு விட்டு போங்கள் என்று சொல்லி எம்மை தடுத்தார்கள். அவர்களது வார்த்தையை மீற முடியாமல் அமர்ந்து கேட்டு விட்டே வந்தோம். அந்த பிள்ளைகள் எல்லோரும் எந்த தயக்கமும் இன்றி எம்மிடம் பேசியது மனதிற்கு திருப்தியயும், சந்தோஷத்தையும் தந்தது.
அடுத்து அங்கிருந்து இரணைமடு குளத்தை நோக்கிப் போகும் பாதையில் இருக்கும் ‘செஞ்சோலை’ க்குப் போனோம். அன்று குழந்தைகள் அதிகமானோர் வெளியே போயிருந்ததால், அதிகமான குழந்தைகளை சந்திக்க முடியவில்லை. அங்கிருந்து பின்னர் கொழும்பு நோக்கி மேற்கொண்ட பயணத்தில், இடையே வவுனியாவில் ஒரு சினேகிதி வீட்டில் உணவு அருந்தி விட்டு, மற்ற சினேகிதர்களையும் சந்தித்தி விட்டு, கொழும்பு திரும்பினோம்.
வன்னியில் நாம் சென்ற குருகுலம், செஞ்சோலை பற்றி எல்லாம் கூறிய நான், யாழ்ப்பாணத்தில் இருந்தபோது நாம் சென்ற ஒரு முக்கியமான இடத்தை இங்கே குறிப்பிட மறந்து விட்டேன். அதுதான் மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக நடாத்தப்படும் சிவ பூமி பாடசாலை. அந்த பாடசாலையில் சிறுவர்கள், வளர்ந்தவர்கள் என கிட்டத்தட்ட 30 பேர் வரை கல்வி கற்கிறார்கள். பெரியவர்கள் யார், சிறுவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. 25 வயது பெண்ணும் சரி, 26 வயது ஆணும் சரி அங்கே குழந்தையாகவே இருக்கிறார்கள். எல்லோருக்கும் வழமையான வெள்ளை நிறத்தில் சீருடை. ஆசிரியர்களும் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு கற்பித்தலுக்கும், அவர்களுடன் நேரத்தை செலவு செய்யவும் எத்தனை பொறுமை வேண்டும். அங்கிருக்கும் ஆசிரியர்கள்மேல் ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. பூரண அறிவு நிறைந்த குழந்தைகளை வளர்த்து எடுப்பதே சிரமமாக இருக்கும்போது, அந்த மன வளர்ச்சி குன்றியவர்களுடன் நாளெல்லாம் பொழுதைக் களிப்பது இலகுவான காரியம் அல்லவே. அந்த குழந்தைகளில் சிலரை கண்டுபிடித்த சூழல் எவ்வாறு இருந்தது என்று அவர்கள் எடுத்து கூறிய போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு சிலரை பெற்றோரே, உற்றார் சுற்றத்தாரின் கேலிப் பேச்சுக்கு அஞ்சி, அறையினுள் வைத்துப் பூட்டி அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை கேட்டபோது கவலையாக இருந்தது. ஒரு பெண் கதிரையில் இருக்கவே மறுக்கிறாளாம். அவளது பெற்றோர் அடைத்து வைத்திருந்த அறையில் எந்த ஒரு தளபாடமும் இல்லாமல் இருந்தது காரணமாய் இருக்கலாம் என்றார்கள்.அந்த குழந்தைகள் அந்த பாடசாலையில் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஒவ்வொரு தனி குழந்தைக்கும் ஏற்ற வகையில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு சரியாக நடக்க கூட முடியாது. ஆனால் மிக அழகாக ‘சின்னஞ்சிறு கண்ணன்’ என்ற பாடலுக்கு கைகளால் அபிநயம் பிடித்து நடனம் ஆடுகிறாள். தவிர tape recorder இல் சில பாடல்களைப் போட்டு விட்டு எல்லோருமாக நடனம் ஆடுகிறார்கள். சிலர் முகத்தில் ஆர்வம், சிலர் முகத்தில் வெட்கம், இன்னும் சிலர் முகத்தில் சந்தோஷம் என்று எல்லாம் கலந்த கலவையாய் அங்கே துன்பம் கலந்த இன்பம் நடை போடுகிறது. அவர்களின் நடனத்தில் ஆசிரியர்களும் கூடவே மகிழ்ச்சி பொங்க சேர்ந்து ஆடி பங்கு கொள்கிறார்கள். பிறப்பிலேயே மனவளர்ச்சி குன்றியவர்கள் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் அந்த பாடசாலை செய்யும் பங்கிற்கு நாமும் தலை வணங்குவோம்.
முந்தலும், முனீஸ்வரமும்..
நீர்கொழும்பில் இருந்த நாட்களில் ஒரு நாள் முந்தல் சென்றோம். வழியில் முனீஸ்வரம் கோவிலுக்கும் போனோம். அங்கு ஒரு குறிப்பிடும்படியான நிகழ்ச்சி. ஒரு மரத்தில் ஒரு சிறு குரங்கை நீளமான கயிறில் கட்டி வைத்திருந்தார்கள். அது மரத்தில் ஏறுவதும், கீழே இறங்குவதும், பல சேஷ்டைகள் செய்வதுமாய் இருந்தது. அதற்கு அருகில் எனது மகளை விட்டு படம் எடுக்க நினைத்து எனது கணவர் மகளை அந்த மரத்தின் முன்னால் நிறுத்தினார். குரங்கு எவ்வளவு தூரம் வர முடியும் என்பதை யோசிக்கவில்லை. நமது மகள் அரை காற்சட்டை போட்டு இருந்தாள். அதன் பின் பக்கம் இரு பைகளும் (pocket) இருந்தது. பாய்ந்து இறங்கிய குரங்கு, மகளின் காற்சட்டையில் பின் பக்கம் இருந்த இரு பைகளையும் வெகு சாதாரணமாக திறந்து துளாவிப் பார்த்தது. நாம் எல்லோரும் கொஞ்சம் தூரத்தில் நின்றோம். மற்ற குழந்தைகள் குரங்கு ஏதாவது செய்து விடுமோ என்று பயத்தில் கத்தினார்கள். எனது மகளோ இழுத்துக் கொண்டு ஓடாமல், சிரித்துக் கொண்டு நின்றாள். தனது வேலையை முடித்த குரங்கு, சாதாரணமாக மீண்டும் மரத்தில் ஏறி விட்டது. அந்த குரங்கு எதுவும் செய்திருந்தாலும் என்ற சிறிய பயத்தையும் மீறி, அந்த நிகழ்ச்சியும், அங்கே எடுத்த படமும் ரசிக்கும்படியாய் வந்துவிட்டது.
முந்தலில் எமது நண்பர்களின் வீட்டில் ஒரு புது உறுப்பினரையும் சந்தித்தோம். ஆம், அவர்கள் வீட்டில் ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.செல்லும் வழிகளில் தெருவோர கடைகளில் சிறிய சிறிய பைகளில் எதுவோ தொங்கிக் கொண்டு இருந்தது. அத்துடன் சோளமும் விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு பழங்கள் ஆசை என்றால் எனது கணவருக்கு சோளம் சாபிடுவதில் ஆசை. எங்கு சோளம் கண்டாலும் உடனே வாங்கி விடுவார். எனவே வாகனத்தை நிறுத்தி கடைகளில் சோளம் வாங்கிக் கொண்டு, பைகளில் தொங்குவது என்ன என்று பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த வெள்ளரிப்பழம். வாங்கி வந்து அது வெடிக்கும்வரை பார்த்திருந்து, வெடித்ததும் பனங்கட்டி தூவி சாப்பிட்டோம்.
Guruge Nature Park
ஒரு நாள் ஜா- எல (Ja-Ela) என்ற இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படிருந்த Guruge Nature Park என்ற இடத்திற்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனோம். இயற்கையான ஒரு சூழலில் அதை நிர்மாணித்திருந்தார்கள். உள்ளே சென்றதும் சில மிருகங்கள், பறவைகள் எம்மை வரவேற்கின்றன. அவற்றை ரசித்த படியே செல்லும்போது, பழைய காலத்தில் வீட்டு வேலைகளில் பயன்பாட்டில் இருந்த சில பொருட்களும் அங்கே வைத்திருந்தார்கள். குரங்கு ஒன்று, குரங்காட்டியின் அறிவுறுத்தல்களை (சிங்களத்தில்தான்)ஏற்று, பல வித்தைகள் காட்டிக் கொண்டு இருந்தது. பெண் பார்க்க போகும்படி அவர் கூறியபோது, அது கைகளால் (அதாவது முன் கால்கள்) வாலையும் தூக்கி கழுத்துக்கு மேல் போட்டு பிடித்துக் கொண்டு, பின் கால்களால், மிடுக்காக நடந்து போனது ரசிக்கும்படியாய் இருந்தது.
பெரிய ஒரு டைனசோர் செய்து வைத்து இருந்தார்கள். இரெண்டு ரூபா காசு போட்டால், கண்களில் இருந்து வெளிச்சம் அடித்தபடி சிங்களத்தில் கதைக்கிறது. மிகிந்தலை போன்ற ஒரு மாதிரி செய்து வைத்திருக்கிறார்கள். குகைகள் போன்ற பகுதிகளினூடாக, கல்லினாலான சிறிய மலையில் ஏறி போனால், உச்சியில் பெளத்த பிக்குகளின் சிலைகள். அந்த சிறிய மலையை மிஹிந்தலை போன்று அமைத்திருக்கிறார்கள்.
வெவ்வேறு நாடுகளைப் பற்றி ஒரு சில விளக்கங்கள் எழுதி, அந்த நாடுகளில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமானவரின் உருவச் சிலை வைத்திருந்தார்கள். இந்தியாவில் காந்தியின் சிலை வைக்கப்பட்டிருந்தது. சிறிமாவோ பண்டாரனாயக்காவின் சிலை ஒன்று வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டு, ‘உலகின் முதல் பெண் பிரதமர்’ என்பதற்குப் பதிலாக, ‘உலகின் முதல் பிரதமர்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இத்தனை யோசித்து இந்த இடத்தை நிர்மாணித்தவர்கள் இப்படி தவறாக எழுதி இருக்கிறார்களே என்று தோன்றியது. யாராவது அதை சுட்டிக் காட்டுவார்கள்தானே என்றும் தோன்றியது.
சிறிய ஆறுகள் அந்த இடத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதில் படகு சவாரி செய்யலாம். சிறியவர்களுக்கு, கால்களால் இயக்கும் படகில் போக அனுமதி இல்லை என்பதால் அவர்களை, இயந்திர படகில் ஏற்றி விட்டு விட்டு, நாம் கால்களால் இயக்கும் படகுகளை எடுத்துக் கொண்டு இருவர் இருவராய் சென்றோம். ஒரு இடத்தில் Mermaid வாழும் குகை போன்ற ஒரு இடத்தை ஆறுகளின் அருகாய் அமைத்திருக்கிறார்கள். நாம் போன்போது அங்கே Mermaid இல்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றத்தில் சில சமயம் அங்கே ஒருவர் வந்து அமர்ந்திருப்பார் என்று கூறினார்கள்.
குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மாட்டு வண்டில் என்று குழந்தைகள் ஏறி மகிழவும், வேறு குழந்தைகளுக்கேயான விளையாட்டுகளும் அங்கே அமைத்திருந்தார்கள்.
ஒரு சிறிய புகைவண்டி ஓட்டமும் உண்டு. அதில் கடுகண்ணாவ புகையிரத நிலையம் என்று எழுதப்பட்ட ஒரு சிறிய நிலையம் ஒன்றை அமைத்து, அதில் இருந்து புறப்படும் புகைவண்டி, நம்மை ஏற்றிய படி ஒரு சிறிய குன்றை சுற்றி வருவதுபோல் அமைத்து இருந்தார்கள். அதில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே ஒரு குகைக்குள் இருந்து துப்பாக்கியுடன் வரும் ஒருவர், வண்டியை நிறுத்தி, “வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்களா இந்த வண்டியில்”என்று கேட்பார். எல்லோரும் முதலில் திடுக்கிட்டாலும், பின்னர் அதுவும் ஒரு விளையாட்டு என்பதை புரிந்து கொண்டு சிரித்தோம். அந்த காட்சியை video செய்யும் எண்னத்தில், குழந்தைகளிடம் சொல்லிக் கொடுத்து அவர்களை மீண்டும் வண்டியில் ஏற்றி விட்டு காத்திருந்தோம். அந்த துப்பாக்கியுடன் வரும் மனிதன் கேட்டதும், கைகளை பாசாங்குக்கு உயர்த்தும்படி சொல்லி வைத்திருந்தோம். அவர்களும் அதே போல் அந்த மனிதன் வந்ததும், கைகளை உயர்த்தி, அவர் கேட்டதுக்கு, “இல்லை, இல்லை”என்று சிங்களத்தில் சொன்னார்கள். துப்பாக்கியுடன் நின்ற மனிதனுக்கு குழந்தைகள் இவ்வாறு தனது விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டதும் சிரிப்பு வந்துவிட்டது. கடைசியில் அவர் குழந்தைகளுக்கு ஒரு சலாம் வைத்து அனுப்பி வைத்தார்.
குட்டி தீவுகள் போன்ற அமைப்புகள் ஆங்காங்கே இருந்தன. ஒன்றிற்கு போவதற்கு தொங்கு பாலம், அல்லது ஆடுபாலம் ஒன்றும் அமைத்து வைத்திருந்தார்கள். ஒரு பெரிய அனகொண்டா பாம்பு போன்று அமைத்து, அதனூடாக உள் சென்று வெளியேறுவதாகவும் அமைத்து, உள்ளே சில சிலைகளுடன் கூடிய கதைகள் அமைத்து இருந்தார்கள். பெரிய ஒரு சிங்கம் போன்று ஒரு உருவம் ஒன்று உள்ளது. அதனூடாக குகை அமைத்து, அதில் உள்ளே சென்று ஏறிக் கொண்டே போனால் ஒரு tower இன் உச்சிக்கு போய் முடியும்படி அமைத்து இருந்தார்கள். ஏறிக் கொண்டு போகும்போது, இடை இடையே சரித்திர கதைகள் சுவரில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அந்த கதைகளில் சில, அசையும் பொம்மைகள் வடிவில் செய்து காட்டப்படுவதாய் அமைத்து வைத்திருந்தார்கள்.
இன்னும் இந்த இடம் முழுவதுமாய் கட்டி முடியவில்லை. சில புதிய விடயங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததை காணக்கூடியதாய் இருந்தது.
கொழும்பில்….
ஒரு நாள் எல்லோருமாய் தெஹிவளை மிருக காட்சிச்சாலைக்குப் போனோம். அதை பலரும் பார்த்திருப்பீர்கள்தானே? நாம் போன அன்று கொஞ்சம் பிந்தி விட்டதால், யானைகள் கண்காட்சி பார்க்க வேண்டும் என்பதால், முழுமையாக சுற்றிப் பார்க்காமல் வந்து விட்டோம். எமது மகளுக்கு இதை பார்ப்பதில் அலுப்பே வருவதில்லை போலும். அதை ஐந்தாவது முறையாக பார்த்திருந்தும், நாம் இந்த தடவை நீர் யானையும், ஒட்டகமும் பார்க்க தவறி விட்டோம் என்றும், அதனால் இன்னொரு தடவை போகவே வேண்டும் என்று அடம் பிடித்து, அப்பாவுடன் மீண்டும் ஒரு தடவை அங்கே போய் வந்தாள்.
அடிக்கடி கடற்கரைக்கு போய் விளையாடுவோம். கல்கிசை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, முகத்துவாரம் (Gold face) என்று எல்லா இடத்திலும் கடற்கரையை அளந்து விட்டு வந்தோம். கடற்கரைகளில் பல இடங்களில் புதிதாய் பெரிய கற்கள் கொட்டப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அது மண்ணரிப்பில் இருந்து பாதுகாக்க என நினைக்கிறேன். ஆனால் அப்படி கற்கள் இருந்ததால், சில இடங்களில் சரியாக மணலில் ஓடி விளையாட முடியவில்லை. குழந்தைகள் மணல் வீடு கட்டி மகிழ்ந்தார்கள் (நானும் கூடவே ஒரு சிறு மணல் வீடு கட்டினேன்). அவர்கள் கட்டிய வீடு கடல் நீரால் அடித்து செல்லப்படவில்லை. (ஆனால் நான் கட்டிய வீடு இலகுவாய் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது, கட்டிய இடம் நீருக்கு அருகாய் இருந்ததால்). கொழும்பில் வேறு அதிகமான இடங்கள் எதுவும் இந்த முறை போகவில்லை.
சிங்கப்பூர் பயணம்…….
மனதில் இலங்கையை விட்டு நீங்கும் கவலையுடன் Singapore Air Lines இல் புறப்பட்டோம். நமது மகள் கேட்டாள் இனி எப்போது வந்து கடற்கரையில் நண்டு பிடிக்கப் போகிறோம் என்று. அவளுக்கு கடற்கரையில் குடுகுடுவென ஓடிக் கொண்டு இருக்கும் குஞ்சு நண்டுகளைக் கலைப்பதில் ஒரு விருப்பம். ஒரு நாள் இரெண்டு குஞ்சு நண்டுகளைப் பிடித்து சப்பாத்துக்குள் (shoes) போட்டு வைத்திருந்தாள். அவைகளும் ஏதோ பொந்துக்குள் பாதுகாப்பாய் இருக்கும் எண்ணத்தில் வெளியே வராமல் நீண்ட நேரம் அங்கேயே இருந்தன. பின்னர் கடற்கரையில் இருந்து திரும்பும்போது அவற்றை கடற்கரையில் விட்டு விட்டு வந்தோம்.அடுத்த முறையும் இலங்கை வந்து, பூவரசம் இலை எடுத்து குழல் செய்து ஊத வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மகள். அவளுக்கு இந்த முறை தனது குழல் சரியாக ஊதவில்லை என்று கவலை (அவளுக்குத்தான் சரியாக ஊதத் தெரியவில்லை என்ற உண்மையை நாங்களும் சொல்லவில்லை, ஹி ஹி).
இப்படியே நாம் இலங்கை பற்றி, அங்குள்ள உறவுகள் பற்றி, அங்கு நடந்த விடயங்கள் பற்றி பேசியபடியே சிங்கப்பூரை வந்தடைந்தோம். விமான நிலையத்திலேயே, சிங்கப்பூரில் குறிப்பிடும்படியான இடங்களை கண்டு களிப்பதற்கான பதிவுகளைச் செய்துவிட்டு நாம் தங்க வேண்டிய ஹோட்டல் நோக்கி பயணம் செய்தோம். அந்த பயணத்தின் போது நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் நடப்பட்டிருந்த பெரிய பெரிய மரங்களும், மரங்களுக்கிடையே நடப்பட்டிருந்த சிறிய பூ மரங்கள் அல்லது சிறிய புதர் செடிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தன. நாம் அங்கு தங்கி இருந்த நாட்களில் இப்படிப்பட்ட நெடுஞ்சாலைகளே சிங்கப்பூரின் அநேகமான பகுதிகளில் அமைந்திருந்ததை காணக்கூடியதாய் இருந்தது. சிங்கப்பூரில் இருப்பது கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் என்றும், அங்கு நடப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 1 மில்லியன் என்றும் சொன்னார்கள்.
சிங்கப்பூர் என்பதன் அர்த்தம் என்ன அன்பதை அங்கிருக்கும்போதுதான் அறிந்து கொண்டேன். சிங்க (singa) என்பது சிங்கம் என்பதையும், பூரே (pore) என்பது நகரம் என்பதையும் குறிக்குமாம். அதாவது சிங்க நகரம். இந்த சொற்கள் மலே மொழியில் இருந்து வந்தவையாம். சிங்கப்பூரின் அடையாளமாக (icon) கருதப்படுவது Merlion. இந்த merlion எனப்படும் சிலையை வெவ்வேறு இடங்களில் காணக் கூடியதாய் இருந்தது. இதில் mer என்பது கடற்கன்னியையும் (from mermaid), lion என்பது சிங்கத்தையும் குறிக்கிறது. அந்த சிலையானது சிங்க முகமும், கடற்கன்னியின் உடலையும் கொண்ட ஒரு உருவம். சிங்கப்பூரில் மீன் பிடித்தொழிலின் முக்கியத்துவத்தை காட்ட அவ்வாறு அமைக்கப்படதாம். அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான உருவம் ஒன்றை, சிங்கப்பூர் ஆற்றில் (singapore river) விசைப்படகில் போனபோது பார்க்க முடிந்தது. அந்த சிங்கத்தின் வாயில் இருந்து நீர் ஆற்றினுள் வீசி அடிப்பதுபோல் அமைத்து இருந்தார்கள். அந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
சிங்கப்பூரின் 39வது சுதந்திர தின நாள் 9ஆம் திகதி ஆவணி மாதம். நாம் சிங்கபூரில் இருந்தது ஒரு கிழமை முன்னர். இன்னும் ஒரு கிழமையின் பின்னர் வந்திருந்தால் சிங்கப்பூரின் சுதந்திர தின விஷேட நிகழ்ச்சிகள் எல்லாம் கண்டு களித்திருக்கலாம் என்று கூறினார்கள். நமக்கு கொடுத்து வைக்கவில்லை. 1891 இல் இருந்து 1963 வரை சிங்கப்பூர் பிரித்தானிய கொலொனியாக இருந்து வந்திருக்கிறது. 1963 இல் Malaysian Federation இல் இணைந்த சிங்கப்பூர் இரெண்டு வருடங்களின் பின்னர் சுதந்திரம் அடைந்துள்ளது.
நாம் அங்கிருந்த நாட்களில் இடையிடையே மழை பெய்ததால் கொஞ்சம் குளிர்ச்சியாய் இருந்தது. சிங்கப்பூரில் புதிய புதிய பெரிய நீர்நிலைகள், அல்லது நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாய் சொன்னார்கள். முன்னர் அதிக அளவில் மீண்டும் சுத்திகரிக்கும் நீரே (recycling water) பாவனையில் இருந்ததாகவும், தற்போது புதிதாய் அமைக்கப்படும் நீர்நிலைகளில் கடல் நீரை நன்னீராய் மாற்றி விட்டிருப்பதாயும் குறிப்பிட்டார்கள். அவற்றில் சில குடிநீராயும் பாவிக்கப்படுவதாயும் சொன்னார்கள்.
Jurong Bird Park….
இந்த இடத்தை பறவைகள் சரணாலயம் என்று கூறலாம் என நினைக்கிறேன். ஆஹா, அருமை அருமை. எத்தனை விதமான பறவைகள், சிறியவை, பெரியவை, பேசுபவை என….. அனேகமாக எல்லாம் அவற்றிற்கெனவே இயற்கையாக அமைக்கப்பட்ட சூழலில் தமது இஷ்டப்படி பறந்து திரிந்த வண்ணம். ஒரு சில மட்டுமே கூடுகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றன.
அங்கே கிட்டத்தட்ட 600 இனங்களில், 8000 க்கு மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கூறினார்கள். Antarctic இல் வாழும் penguin முதல், தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கும் அனேகமான பறவையினங்கள் வரை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் தென்கிழக்காசிய இனப் பறவைகளைக் கொண்ட இடம் இதுவாம்.
செம்மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய கூட்டமாய் flamingo பறவைகள் குளங்களில். வேறொரு குளத்தில் pelikan பறவைகள், வெள்ளை நிறம், செம்மண் நிறம் என வேறுபட்ட நிறங்களில். சாதாரண பச்சைக்கிளிகள் முதல், சிவப்புக்கிளிகள், வெள்ளை கிளிகள், பஞ்சவர்ணக்கிளிகள் என வேறுபட்ட உருவங்கள், தோற்றங்களில், அளவுகளில். ஒரு இடத்தில் பேசும் பறவைகள், மைனாக்கள், கிளிகள் கூடுகளில். அவற்றில் எந்த எந்த பறவைகள் என்ன என்ன பேச கூடியவை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அவற்றில் தமது பெயரை சொல்லக்கூடியவை, hallo சொல்லக்கூடியவை, குசலம் விசாரிக்கக்கூடியவை என பலவாறான பேச்சு தகுதி உள்ள பறவைகள் இருந்தன. அவற்றில் சில I love you சொன்னால் திருப்பி அதையே சொல்லுமாம். ஆனால் பெண் பறவைகள் சில பெண்கள் சொன்னாலோ, ஆண் பறவைகள் ஆண்கள் சொன்னாலோ திருப்பி சொல்ல மாட்டாதாம் (அட, அவை கூட யோசித்து விட்டுத்தான் I love you சொல்லுகின்றன). ஒரு பெரிய வெள்ளைகிளி நடனம் ஆடுவது போல் தலயையும் உடலையும் ஆட்டியபடி தனது குட்டி ஊஞ்சலில் அமர்ந்து இருந்தது.
அங்கே சில இடங்களைச் சுற்றிப்பார்க்க ஒரு panorail (எனது தமிழில் பறக்கும் ரெயில், ஹி ஹி) ஓடுகிறது. நிலத்தில் இருந்து உயரமாக, தாங்கிகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள குறுகிய ரயில்பாதை. அதில் அமர்ந்து கொண்டே, அந்த இடத்தின் பல பகுதிகளையும் சுற்றி வரலாம். இருந்தாலும் அந்த இனிமையான பறவைகளின் சத்தங்களைக் கேட்ட படியே, அவை நமது கையில் வந்து அமர்வதை ரசித்த படியே, அவை நம் அருகில் வந்து அமர்ந்து உணவு உண்பதை ரசித்த படியே அந்த சின்ன காடு போன்ற இடமெங்கும் நடந்தே சுற்றி வருவதுதான் நன்றாக இருந்தது. விதம் விதமான பறவைகளுக்கு அந்த மரங்கள் அடர்ந்த இடத்தில் இடை இடையே சிறு குடில்கள் வைத்திருக்கிறார்கள். அவை அந்த குடில்களில் தம் இஷ்டத்திற்கு வருவதும், உணவு அருந்துவதும், பறந்து போவதுமாய் இருந்தது பரவசத்தை தந்தது.
அங்கே ஒரு நீர்வீழ்ச்சியும் இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் இயற்கையாக அமைந்தது போல இருக்கும் அந்த நீர்வீழ்ச்சி செயற்கையாக அமைக்கப்பட்டது என்றும், அதுவே உலகிலேயே செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் நீர்வீழ்ச்சிகளில் மிகவும் உயரமானது என்றும் கூறினார்கள்.வண்ண வண்ணக்கிளிகளை தூக்கி வைத்து படம் எடுக்க அனுமதி கொடுக்கிறார்கள். நாம் மூவரும் ஆளுக்கொரு கிளிகளை கையில் தூக்கியபடி ஒன்றாக நின்று படம் எடுத்துக் கொண்டோம். ஒரு பெரிய பஞ்ச வர்ணக்கிளியை (2Kg சரி இருக்குமென நினைக்கிறேன்) ஒரு கையில் ஏந்தி மகள் படம் எடுத்து கொண்டாள்.
பறவைகளின் கண்காட்சி (Bird show) ஒன்றும் நடந்தது. அதில் பல வேறு பறவைகள் தமது சாகசங்களை செய்து காட்டின. எங்கிருந்தோ ஒரு மூலையில் இருந்து அவர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் பறவைகள் பறந்து வருவதும், அவர்கள் கொடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயல்களை செய்து காட்டியதும் ரசிக்கும்படியாய் இருந்தது. இரு வேறு மூலைகளில், தொலைவில் இருந்து பறக்க ஆரம்பிக்கும் இரு பறவைகள், பார்வையார்களில் ஒருவரிடம் தரப்படும் வளையத்தினூடாக ஒரே நேரத்தில் ஒன்றை ஒன்று கடந்து பறக்கின்றன. கிளிகள், அவர்களுக்காக பிரத்தியேகமாய் செய்யப்பட்டிருக்கும் துவிச்சக்கர வண்டிகளில் ஓட்டப்போட்டி வைக்கின்றன. Flamingos, Pelikans, Penguins போன்ற பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்து அழகு நடை போட்டு ஊர்வலம் போகின்றன. இப்படி எத்தனையொ சாகசங்கள். ஒரு கிளி மலே மொழி, சீன மொழி, ஆங்கில மொழி என மூன்று மொழிகளில் பாட்டு பாடியது. ஆங்கிலத்தில் பாடியது பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்.
சின்ன சின்ன குருவிகள் நாம் நடக்கும்போது, நம்முடன் இணைந்து, கலந்து வருவதும், பறப்பதுமாய்……. தமது சின்ன குரலில் விதம் விதமாய் ஒலி எழுப்புவதுமாய்…………. அந்த இடத்தை விட்டு வெளியேறவே விருப்பமில்லாமல், வெளியே வர வேண்டி இருந்தது.
வேறுபட்ட கலை, கலாச்சாரம்
சிங்கப்பூர் பல் வேறுபட்ட கலை, கலாச்சாரங்கள் கலவையாய் உள்ள ஒரு இடம் என்பது நாம் யாவரும் அறிந்ததே. அவற்றை கொஞ்சம் நுகருவதற்காய் சிங்கப்பூரின் பல இடங்களையும் சுற்றிக் காட்டினார்கள்.
அராபியர்களின் பிரத்தியேக துணிகள், உடைகள், உணவு வகைகள், வியாபாரப் பொருட்கள் என அவர்களின் இடத்தில் சென்று பார்த்தோம். ஆரம்பத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு கிராம அமைப்பு பார்த்தோம். அங்கு மலேய மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்தியர்கள் வாழும் இடம், இந்துக் கோவில்கள் என்பனவும் பார்த்தோம்.
China town இங்கே போய் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அதில் குறிப்பிடத்தக்கது Thian Hock temple. 160 வருட பழமை வாய்ந்த, சீன மக்களுக்கு மிக அவசியமான, முக்கியமான இடம். சீனாவுக்கே உரித்தான குறிப்பிட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய, அழகான ஒரு கோவில். இந்த கட்டடம் மரத்தூண்களால் மட்டுமே தாங்கப்பட்டு இருப்பதும், கட்டடத்தில் ஆணிகளோ, அதற்கான இணைப்புக்களோ எதுவுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் வளைவான கூரையும், இறக்கையுள்ள முதலையின் (dragon) உருவச் சிலைகள், சித்திரங்கள் கொண்ட திரைகள், கவர்ச்சிகரமான தூண்கள் அழகாயிருந்தன. சின்ன சுவர்களைக் கடந்துதான் உள்ளே செல்ல வேண்டும், காரணம் வாசலில் கூட அந்த சிறிய சுவர் இருக்கும். கட்டடம் கட்டுவதற்கான மூலப் பொருட்கள் யாவுமே சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டதாம். இங்கே இருக்கும் கடவுள் கடலுக்கான கடவுள் என்பதும், கடலில் சென்று வருபவர்களை காப்பாற்றும் கடவுள் என்பதும் அவர்களது நம்பிக்கை. இங்கே உள்ளே சென்றதும், நறுமணம் மிக்க சாம்பிராணிப் புகை நாசியை நிறைக்கிறது.
Ming villageMing village என்ற இடத்துக்கு அழைத்துப் போனார்கள். அது ஒரு Chinese porcelain பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. அங்கே எப்படி porcelain ஆல் ஆன கோப்பைகள், சாடிகள் தயாரிக்கப்படுகின்றன என்று விளக்கினார்கள். porcelain பொருட்கள் செய்வதற்கான கலவை தயாரிப்பது, அதை பின்னர் சூலைகளில் சூடாக்கி எடுப்பது, தனித்தனியாக செய்யப்படும் ஒரு பொருளின் பகுதிகள் எப்படி இணைக்கப்படுகின்றன, அழகான வேலைப்பாடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்று எல்லாம் சொன்னார்கள்.என்னை மிகவும் கவர்ந்தது நுணுக்கமான, அழகிய வேலைப்பாடுகள் செய்யும் கைவேலைப் பகுதி. எத்தனை பொறுமையுடன் இருந்து, ஒவ்வொரு கோடுகளாய் மெல்லிய brush or pencil ஆல் வரைகிறார்கள். சின்னச் சின்ன பூக்கள், மரங்கள், மிருகங்கள், பறவைகள் என அவர்களின் வரைபில் உருவாகிக் கொண்டு இருப்பது அழகாய் இருந்தது. பெரிய பெரிய அலங்காரத்திற்கு வைக்கப்படும் சாடிகளில் அழகழகாய் அவர்கள் போடும் கோலங்கள் பார்வைக்கு ரம்மியமாய் இருக்கிறது. தமது வேலையால் உருவான பொருட்களை வைத்து ஒரு show room உருவாக்கி இருக்கிறார்கள்.
Gem factory
இயற்கையில் இருந்து பெறப்படும் பல வகையான கற்களையும் செயற்கையில் மெருகேற்றி, அழகாக்கி ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் என தயார் செய்யும் தொழிற்சாலை அது. அங்கே இயற்கையில் பெறப்படும் கற்களை பல நாடுகளிலும் இருந்து வாங்குகிறார்கள். இரத்தினக்கல், மரகதக்கல், மாணிக்கக்கல், இப்படி இன்னும் எத்தனையோ வகைக் கற்கள். பின்னர் ஒவ்வொரு வகை கற்களுக்கும் ஏற்றபடி பதப்படுத்தல், மெருகேற்றல் எல்லாம் செய்து, அவற்றில் கைவேலை வல்லுநர்களின் உதவியுடன், அழகழகான அலங்காரப் பொருட்கள், ஆபரணங்கள் என தயார் செய்கிறார்கள். மிக அருமையான ஆசிய கைத்திறன் வேலையை அங்கே காணக்கூடியதாய் இருந்தது. கண்களை கவரும் அலங்காரப் பொருட்களைக் கொண்ட show room ஐயும் சுற்றிக் காட்டினார்கள்.. சுவரில் தொங்க விடுவதற்காய் செய்யப்படும் சட்டங்கள் அடிக்கப்பட்ட அலங்கார அமைப்புக்கள் அழகாய் இருந்தன. மெருகேற்றப்பட்ட பல்வகையான சின்ன சின்ன கற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, அல்லது ஒட்டி வைத்து 3-dimension இல் தெரியக்கூடியதாய், மிருகங்கள், பறவைகளை உள்ளடக்கிய இயற்கைக் காட்சிகளை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள். இயற்கைக் காட்சியை பின்புலமாய்க் கொண்டு அமர்ந்திருக்கும் பெரிய மயில்கள், குருவிகள் அடங்கிய அமைப்பு கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. இன்னும் ஆவேசமாக பாயத்தயாராக இருக்கும் புலிகள், அழகாய் புல் மேயும் மான்கள், ஓடத்தயாராய் இருக்கும் குதிரைகள் என… எத்தனை எத்தனை பொருட்கள். அது மட்டுமல்ல…. சின்னஞ்சிறிய கற்களை இணைத்து செய்யப்பட்ட பிள்ளையார் உருவமும் அங்கே காணக்கூடியதாய் இருந்தது. அவற்றில் சிலவற்றில் கை தட்டினால் சத்தம் ஏற்படுத்துவது போலவும் குழந்தைகளுக்காய் அமைத்திருந்தார்கள். (எல்லாம் சரிதான், பார்க்கலாம், ரசிக்கலாம், ஆனால் அவற்றின் விலைகளுக்கும் நமக்கும் வெகு தூரம் என்பதால், பார்த்து ரசித்ததோடு திரும்பி விட்டோம்).
இயற்கையின் எழில் மட்டுமே அழகாய் இருப்பதில்லை, செயற்கையும் கூட மனதை கவரத்தான் செய்கிறது.
Night safari
Adventure பிரியர்களுக்கு அருமையான இடம். காட்டு மிருகங்களை அவற்றின் இயற்கையான சூழலில், அவற்றின் சொந்த இடத்தில், இரவு நேரத்தில் சென்று, நேரடியாக சந்திப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடம்.
ஒன்று தெரியுமா உங்களுக்கு, உலகில் வாழும் மிருகங்களில் 90% ஆனவை இரவு விரும்பிகளாம் (nocturnal). நாற்பது hectare நிலப்பரப்புள்ள, இயற்கையாக அமைந்துள்ள ஒரு பெரிய காட்டை இதற்கு தெரிவு செய்திருக்கிறார்கள். இரவில் மட்டுமே இந்த இடம் பார்வையிட அனுமதி கிடைக்கும். உலகில் வேறு எங்கும் காண முடியாத இரவு நேர மிருகக்காட்சிச்சாலை இது மட்டுமே என்று சொன்னார்கள். அங்கே 110 இனக்களைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 1200 விலங்குகள் இருக்கின்றன.
இந்த இடத்திற்கு அருகிலேயே, பகலில் மிருகங்களை கண்டு களிக்க அனுமதி வழங்கப்படும் மிருகக் காட்சி சாலையும் உண்டு. Night safari யின் உள்ளே அடர்ந்த காட்டு சூழல் மிகவும் அருமையாக உள்ளது. அதிக வெளிச்சம் இல்லை. இதற்கென அமைக்கப்பட்ட மெல்லிய வெளிச்ச சிதறல்கள் மட்டுமே ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ளது. பிரத்தியேகமான மின்விளக்குகளில் இருந்து வரும் ஒளி, குறுகிய இடங்களை மாத்திரம் வெளிச்சமாக்குகிறது. அந்த வெளிச்ச சிதறல்களின் கீழ் விலங்குகள் வரும்போது அவற்றை மிகத்தெளிவாய் பார்க்க முடிகிறது.
அங்கே முழுமையாக திறந்து விடப்பட்ட, இருக்கைகள் மட்டும் கொண்ட tram வண்டிகள் போவதற்கான பாதைகளும், நாம் நடந்து செல்லக் கூடியதான குறுகிய பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மிருகங்களை குழப்பாத வகையில், நடை பாதைகளில் போதிய வெளிச்சம் படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நாம் tram வண்டியில் அந்த காடு முழுவதையும் ஒரு தடவை சுற்றி வந்தோம். இரவின் ரீங்காரத்தில் மெதுவாக ஓடுகிறது அந்த வண்டி.
வண்டியின் ஓட்டுனர், மிகவும் மெதுவான, ரகசியக் குரலில் வண்டியின் இரு புறமும் பார்க்கக் கூடிய விலங்குகள் பற்றி விளக்கியபடி நமக்கு அறிவுறுத்தல்கள் தந்தபடி இருக்கிறார். இடை இடையே பயமறியா குழந்தைகளின் சின்ன சின்ன சத்தங்கள் தவிர மனிதரின் சத்தங்கள் வேறு எதுவும் இல்லை. ஆனால் காட்டில் சில் வண்டுகளின் ரீங்காரமும், மிருகங்கள் ஏற்படுத்தும் சத்தங்களும் கேட்டவாறு உள்ளது. எல்லோரும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள், கொஞ்சம் பயத்தினாலும் இருக்கலாம். காரணம் நமக்கு மிக அருகிலேயே சிங்கம், புலி, கரடி என பயங்கரமான மிருகங்கள் அமைதியாக உலாவருகின்றன. சில குகைகளுக்கு முன்னால் படுத்து இளைப்பாறுகின்றன. யானைகள் அசைந்து ஆடிக் கொண்டு நிற்கின்றன. மான்கள் ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றன. நமது வண்டி ஒரு நீர் நிலையினூடாக ஓடும்போது, ஓட்டுனர் முதலை இருந்தால் கவனிக்கும்படி சொல்கிறார். முதலை ஓடி ஒளிந்து விட்டதோ என்னவோ, நாம் காணவில்லை.
ஆப்பிரிக்க கறுப்பு மான், ஒற்றைக் கொம்புள்ள காண்டா மிருகம், கோடுள்ள கழுதைப்புலி (hyaena) இப்படி விஷேடமான பல மிருகங்கள் அங்கே உள்ளன.நடந்து செல்வதே, tram வண்டியில் செல்வதை விடவும் அதிக உற்சாகத்தை தரக் கூடியதாய் இருந்தது. நமக்கு நேரம் அதிகம் இல்லாமையாலும், சிறிய மகளுடன் அதிக தூரம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் நடக்க முடியாமல் போகலாம் என்பதாலும் நாம் சில குறிப்பிட்ட இடங்களை மட்டுமே நடந்து பார்த்தோம்.
நீரோடையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் Fishing cats, தங்க நிற நரி, மரத்தில் ஒட்டியபடி வாழும் மிருகங்கள், மிருகங்களிலேயே மிக மிக மெதுவாக நகரக்கூடிய three-toed sloth (ஒரு வகைக் குரங்கு, அது மரத்தில் தொங்கியபடி, தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டு தனது கால்களால் எத்தனை மெதுவாக நகர முடியுமோ அத்தனை மெதுவாக நகருகின்றது. அதை பார்த்துக் கொண்டு நிற்கையில், அதன் காலைப் பிடித்து தள்ளி வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். காரணம், அதனை slow movement.
பார்த்துக் கொண்டே நடப்பது exciting and thrilling ஆக இருந்தது. மிருகங்களை மிக அருகில் நின்று பார்க்கலாம். மிருகங்களுக்கும் நமக்கும் நடுவில் கிட்டத்தட்ட ஒரு அடி மட்டுமே உயரமான வேலி மட்டுமே, அதுவும் சில இடங்களில் மட்டுமே தெரிந்தது. அதற்கு மறு புறமாய் மிகவும் உயரம் குறைந்த புதர்களே தெரிகின்றன. எனக்கு ஒரே ஆச்சரியம், எப்படி இத்தனை ஆபத்தான மிருகங்களை இவ்வளவு வெளியாக வைத்திருக்கிறார்கள் என்று.
நடந்து செல்லும் பாதைகளில், சந்திகளில் வழிகாட்டிகள் நிற்கிறார்கள். எங்கே போக விரும்புகிறீர்கள் அன்று கேட்டு வழி சொல்வார்கள். அவர்களில் ஒருவரிடம் எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் சொன்னார், பயப்படாமல் செல்லுங்கள், உங்களுக்கு மிகவும் பாதுகாப்பான சூழலே ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று. எப்படி அந்த பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படிருக்கிறது என்று கேட்டேன். அவர் சொன்னார் அந்த சிறிய புதர்களின் மறு புறம் நமது கண்ணுக்கு இலகுவில் படாத முறையில் குழிகளோ அல்லது வேறு பாதுகாப்பான ஏற்பாடுகளோ அமைக்கப்பட்டு உள்ளது என்று. இதுவும் ஒரு வகை மாயத்தோற்றம் (illusion) தான் என்று கூறினார்.
சிறுத்தை, புலி போன்ற சில ஆபத்தான விலங்குகளை தொடும் தூரத்தில் பார்க்க கூடியதாய், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கண்ணாடித் தடுப்புக்கள் போட்டிருக்கிறார்கள். நாம் செல்லும்போது அவை மிக அருகாக, கண்ணாடித் தடுப்பை ஒட்டி உரசியபடி சென்றால், விரும்பினால் தொடலாம், முத்தம் கூட கொடுக்கலாம் (கண்ணாடியின் மேலாகத்தான்). நமக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.
இரவில் நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் கீழாக நடந்து வன வாழ்க்கை அனுபவம் பெற சிறந்த இடம்.
சிங்கப்பூர் மிருகக்காட்சிச்சாலை
இந்த இடம் night safari க்கு அருகிலேயே உள்ளது.
அன்று காலையில் அந்த இடத்திற்குள் நாம் நுழைந்தபோது, முதலில் யானைகள் குளிப்பாட்டப்படும் நிகழ்ச்சியை கண்டு களித்தோம். அங்கிருக்கும் யானைகளில் ஒன்று இலங்கையில் இருந்து கொண்டு போகப்பட்டதாம். அதனால் யானைப் பாகர்களும் இலங்கையர்களே. அந்த யானையுடன் சிங்கள மொழியில் பேசுகிறார்கள். அங்கு இருக்கும் ஏனைய யானைகள் எல்லாம் தாய்லாந்தில் இருந்தே கொண்டு வரப்பட்டன என்றாலும், குழப்பம் வந்து விடாமல் இருக்க எல்லா யானைகளுடனும் சிங்கள மொழியிலேயே பேசுகிறார்களாம். குளிக்கும்போது, அதன் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளும் சின்ன சின்ன சோதனைகள் செய்வது இலகுவாக இருக்குமாம். அதாவது குளிக்கும் வேளையில் (அந்த உற்சாகத்திலோ என்னவோ) பாகர்கள் சொல்லும்படி எல்லாம் யானைகள் கேட்டுக் கொள்ளுமாம். காலைத் தூக்கி காட்டச் சொன்னால் காட்டும். குளியல் முடிந்ததும் அந்த யானைகளுக்கு உணவு ஊட்டவும், தொட்டுப் பார்க்கவும் நமக்கும் அனுமதி வழங்குகிறார்கள். நாம் கொடுத்த வாழைப்பழத்தை தும்பிக்கையை அழகாக வளைத்து எடுத்து வாங்கிக் கொள்கிறது.
அதன் பின்னர் கடல் சிங்கத்துக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சியை பார்க்கலாம். அங்கே அருகிலேயே 4 பாகை செல்சியெஸ் இல் குளிரூட்டப்பட்ட அறை ஏற்படுத்தி வெள்ளை துருவக்கரடியும் வைத்திருக்கிறார்கள். அடுத்ததாக காலை உணவை நமது மூதாதையருடன் இருந்து உண்டோம். ஒரு சிறிய உணவு விடுதி, அதன் அருகிலேயே அம்மாவும், பிள்ளையுமாக இரண்டு ஒறங்குட்டான் (orang-uttan / கிழக்கிந்திய தீவுகளில் காணப்படும் வாலில்லாக் குரங்கு/ மனிதக்குரங்கு என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன்) அமர்ந்து தமது காலை உணவை அருந்துகிறார்கள். படம் எடுக்க விரும்புபவர்கள், அவர்களுடன் நின்று படம் எடுத்த படியே காலை உணவை பார்த்துக் கொள்ளலாம். அந்தக் குட்டி, தனக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளாமல், தாயின் கையில் இருந்து பிடுங்கிச் சாப்பிடுவதும், அங்கும் இங்குமாய் ஒடி ஒளித்து, தாயை தேடச் செய்வதுமாய் (நம் குழந்தைகள் போலவே – என்ன இருந்தாலும் நமது மூதாதையர் அல்லவா) இருந்தது. அவர்களை தொடுவதற்கு அனுமதி சுத்தமாக மறுக்கப்படுகிறது. காரணம் பயம் அல்ல…. orang-uttan இன் பரம்பரை அலகும் (DNA) , நமது பரம்பரை அலகும் 98% ஒத்து இருப்பதால், நமக்கு ஏதாவது உடல் நோய்கள் இருந்தால் அது அவர்களையும் இலகுவாய் தொற்றிக் கொள்ளும் என்பதே. இவை ஒரு அழிந்து செல்லும்/ஆபத்துக்குள்ளாகி இருக்கும் இனம் வேறு. சிம்பன்சிக்கு 97% நமது DNA ஐ ஒத்து இருப்பதாக சொன்னார்கள். அவற்றையும் தொட அனுமதி இல்லை. (ஜூனியர் விகடன் இல் மதன் எழுதும் ‘மனிதனுக்குள் ஒரு மிருகம்’ என்ற தொடரை வாசித்த போது, அதில் சிம்பன்சியினது DNA, நமது DNA யின் 99.6% ஒத்து இருப்பதாக இருந்தது. எது உண்மை என்று தெரியவில்லை. ஜூனியர் விகடன் இல் வரும் அந்த ‘மனிதனுக்குள் ஒரு மிருகம்’ தொடரில், ஓகஸ்ட் இதழ்களில், மதன் நமக்கும் சிம்பன்சிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை நிறைய சொல்லி இருக்கிறார். அது பற்றி அறிய ஆர்வம் உள்ளவர்கள் அங்கே சென்று வாசிக்கலாம் 🙂 .
Orang-uttan, சிம்பன்சி, டொல்பின் இவை மூன்றும், கண்ணாடியில் தெரிவது நமது உருவத்தின் பிரதிபலிப்பே என்பதை உணரும் தன்மை உள்ளனவாம். கொரில்லாவுக்கோ, ஏனைய விலங்குகளுக்கோ இந்த தன்மை கிடையாதாம். மேலும் சிம்பன்சி தான் நோய்வாய்ப்படுவதை அறிந்து மருந்து கலந்த இலைகளை, மூலிகைகளை -அவை கசப்பானதாய் இருந்தாலும் கூட, முகத்தை சுளித்த படியே- உண்ணும் வழக்கம் உள்ளதாம். அறிந்தபோது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது). சரி நான் ஏதோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டு போகிறேன். விடயத்திற்கு வருகிறேன்.
அருகிலேயே ஒரு பெரிய மலைப்பாம்பை வைத்துக் கொண்டு, கழுத்தில் அதை போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்று கூறினார்கள். மனதில் ஏதோ சங்கடமாய் இருந்தாலும், எல்லோரும்தான் போட்டுக் கொள்கிறார்களே, நாமும் போட்டுப் பார்த்தால் என்ன என்று எண்ணி மலைப் பாம்பை வாங்கி கழுத்தில் போட்டேன் (ஒரிரு நிமிடங்களுக்கு). அட, அம்மாதான் கழுத்திலேயே போட்டிருக்கின்றாரே என்ற தைரியத்தில் மகளும் அருகில் வந்து அதன் வாலில் தொட்டுப் பார்த்தாள்.
அதன் பிறகு animal show பார்த்தோம். அங்கே, orang-uttan தனது சேஷ்டைகள் செய்து காட்டியது. கணக்கு கூட போட்டுக் காட்டியது. பார்வையாளர்கள் பத்திற்குள் இரு எண்களை சொன்னபோது, அதை கூட்டி சரியான விடையை எடுத்துக் காட்டியது. பாம்புகளை பார்வையாளர்கள் மத்தியில் (முதலே விட்டு வைத்திருந்தார்கள்) வந்து பிடித்துப் போனார்கள். மலைப்பாம்பு ஒன்று அழகாய் நீந்திக் காட்டியது.
அந்த இடத்திற்குள் சுற்றி வருவதற்கு tram (முற்றாகத் திறந்து விடப்பட்ட tram) வசதியும் உண்டு. பல பயங்கரமான மிருகங்களை அண்மையில் வைத்துப் பார்க்க, கண்ணாடித் தடுப்புக்கள் உள்ளன. Fragile forest என்று ஒரு பகுதி. அங்கே வண்ணாத்தி பூச்சிகள் நம்மைச் சுற்றி பறந்து கொண்டே இருக்க, அதனுள் பல சிறிய விலங்குகள், பூச்சிகள் எல்லாம் பார்க்கலாம். குள்ள நரி, வரி கொண்ட கீரி, Lemurs (நரி முகமும், நீண்ட வாலும் கொண்ட குரங்கு), Mousedeer (மான் போன்ற உடலும் எலி போன்ற முகமும் கொண்ட ஒரு அடிக்குள்ளான உயரம் கொண்ட விலங்கு), பழ வெளவால், மர கங்காரு போன்ற பல வித்தியாசமான விலங்குகளைப் பார்க்கலாம். மர கங்காருவை, ‘பறக்கும் கங்காரு’ என்று சொல்கிறார்கள். அவற்றின் origin அவுஸ்திரேலியா அல்லவாம், பப்போ நியூ கினியாவாம்.
Elephant show வும் உண்டு. அவை யானைப் பாகர்கள் சொல்லும்படி நிறைய வித்தைகள் செய்து காட்டின. அது மட்டுமல்லாமல், அவர்கள் சொல்வதை தலையாட்டி மறுத்து விட்டு, தாம் விரும்பியபடிதான் செய்வோம் என்று பிடிவாதம் பிடிப்பது போல் நடித்து, சிரிக்கவும் வைத்தன.
Sentosa
இது ஒரு தீவு இருக்கிறது. அங்கே போய் Dolphin show பார்த்தோம். Pink Dolphins உயர எழும்பிப் பாய்வதும், உயரே உள்ள வளையங்களுக்குள் நுழைந்து குதிப்பதும், வளையங்களை தமது முன் அலகில் வைத்து சுழற்றியபடி நீந்துவதுமாய் வேடிக்கை காட்டின. அங்கே உள்ள Under water world க்கும் போய்ப் பார்த்தோம். நாம் ஒரு moving belt இல் நிற்போம். அந்த belt நம்மை ஒரு கடலின் ஊடாக எடுத்துச் செல்வதுபோல் இருக்கும். ஒரு Tunnel இனுள், கண்ணாடியினால் ஆன தடுப்பு நமக்கும், கடல் உயிர்களுக்கும் இடையே இருக்கும். சிறிய மீன்கள், பெரிய மீன்கள், பெரிய ஆமைகள் என பல வகையான கடல் உயிரினங்களைப் பார்த்தபடி சென்று வரலாம். அங்கே அதிசயமான சில உயிரினங்களையும் பார்க்க முடிந்தது. அவற்றில் ஒன்று Sea dragon. மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகள் கொண்டு, dragon உருவத்தில், இலைகளால் ஆன கால்கள் போன்ற அமைப்புகள். Sea dragons இல் ஆண்கள்தான் முட்டை இடுமாமே? அழகழகான jelly fishes, star fishes, ‘Nemo’ cartoon இல் வரும் Nemo, Dori போன்ற மீன்களை நேரில் பார்க்க முடிந்ததில் நமது மகளுக்கு ஆனந்தமோ ஆனந்தம். இப்படி இன்னும் பலவகை கடல் உயிரினங்களை கண்டு களிக்க முடிந்தது.
அடுத்து அந்த தீவில் இருந்து cable car இல் திரும்பினோம். அதி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டு செல்வது ஒரு நல்ல அனுபவம். முன்னரும் சில தடவை cable car இல் போயிருக்கிறேன். ஆனால் இது அவை எல்லாவற்றையும் விட உயரமாய் இருந்ததும், கடல் மேலாக நகர்ந்ததும், கொஞ்சம் பயத்தை தந்ததுதான். அந்த பயத்தில் இருந்து காப்பாற்றியது நமது மகள்தான். அவள் வாய் ஓயாமல் எதேதோ பேசிக் கொண்டே வந்ததால், நமக்கு நமது பயத்தை நினைக்க முடியாமல் போய்விட்டது. (அவளும் பயத்தால்தான் பேசிக்கொண்டே வந்தாளோ தெரியவில்லை. ஆனால் பயம் பற்றி அவள் பேசவில்லை. சிறிய வயதில் நமக்கு பயம் வரும்போது ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று பாடிக் கொண்டே போவதுபோல்தான் அவளும் எதையாவது பேசினாளோ தெரியாது, ஹி ஹி). அவளும் அந்த cable car riding ஐ மிகவும் ரசித்ததாகவே தோன்றியது.
Fountain of Wealth
நாம் நோர்வே திரும்புவதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு Suntec city என்ற இடத்தில் இருக்கும் The world highest fountain பார்க்கப் போனோம். இது 1998 இல் கின்னஸ் புத்தகத்தில் world highest fountain ஆக பதிவு செய்யப்பட்டதாம். அதை Fountain of Wealth என்று அழைக்கிறார்கள். 13.8ம் உயரமான நான்கு பித்தளைக்கால்கள், 21m விட்டமுடைய வட்டவடிவான ஒரு பித்தளை வளையத்தை தாங்கி நிற்கும். அந்த இடத்தின் மையத்தில் நீரை மேல்நோக்கி விசுறுவதற்கான அமைப்பு உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி 5 பெரிய office towers அமைந்துள்ளது. Fountain of Wealth ஒற்றுமையையும், முடிவற்ற தன்மையையும் குறிப்பிடுகிறதாம். ஐந்து அடிப்படை elements (அவசரத்திற்கு இதற்கு என்ன தமிழ் என்று வருகுதில்லையே) உலோகம், மரம், நீர், நெருப்பு, நிலம் இணையும்போது ஒரு நேர் சக்தி உருவாகுமாம். 14m உயரத்திற்கு இங்கே நீர் சிதறப்படும்போது தோன்றும் வீரியம்மிக்க எதிர் அயன்கள் (negative ions) அந்த இடத்தில் ஒரு தீவிரமான, நேர் சக்தியையும் (strong positive energy), காந்த சக்தியையும் (magnetic energy) உருவாக்குவதாகவும், அந்த இடத்தை சுற்றி நடக்கும்போதும், அந்த நீர் திவலைகளைத் (vibrating water) தொடும்போதும் நமக்குள் ஒரு சக்தி பெறப்படுவதாக சொல்கிறார்கள். அங்கே ஒவ்வொரு நாள் இரவும் ஒரு show நடக்கும். அந்த நேரத்தில் நீர்த்திவலைகள் மிக உயரமாய் எழுப்புவார்கள் அந்த fountain இல். உயரம் குறைவாய் ஆரம்பிக்கும் நீர்த்திவலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் உயர உயரப் போய் அந்த உயரத்தில், அழகழகான நிறங்களில் தெரியும். Laser பாவித்து, அந்த நீர்த்திவலைகளில் பலவகை பிம்பங்கள் (images) உருவாக்கி காட்டினார்கள். ஒட்டகச்சிவிங்கி, குழந்தை என விதம் விதமான பிம்பங்கள் அந்த நீர்த்திவலைகளில் தோன்றுவதும், மறைவதுமாய், அவற்றுடன் சேர்ந்த இசையுமாய் மிக அழகாய் இருந்தது. இந்த இடம் அமைதியையும், சிறந்த எதிர்காலத்தையும் கொடுக்க கூடியது என்ற நம்பிக்கை அங்கே இருக்கிறது.
வீடு திரும்பினோம்
நமது பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் நமது இடம் திரும்புவதற்காய் Singapore airport வந்தோம். அங்கே வேறுபட்ட ஏழு மொழிகளில் எழுதி இருந்தது “உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்”என்று. அவர்கள் விமானப் பயணத்தை குறிப்பிடுகிறார்களா, இல்லை வாழ்க்கைப் பயணத்தை குறிப்பிடுகிறார்களா தெரியவில்லை. நமது இந்த விடுமுறைப் பயணமும் இனிதே நிறைவுற்றது.
சுனாமி அழிவுகள்………
சுனாமி அழிவுகள்………
(தை மாதம் 11 ஆம் திகதி எழுதியது.)
சீற்றத்துடன் கொந்தளித்த கடல் ஆயிரமாயிரம் மக்களை கொலை செய்து விட்டதுமல்லாமல், மீதி இருந்த மக்களையும் நிலை குலையச் செய்துவிட்ட அனர்த்தத்தால் மனது மிகவும் களைத்து இருக்கிறது. இது பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று பல தடவை தோன்றினாலும், எதுவுமே எழுத முடியாமல்…. முயற்சிகள் வீணாகியது. எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டபோது, அவற்றினிடையே வார்த்தைகளும் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தேன். எத்தனை கொடுமை நடந்து விட்டது. செய்திகளைக் கேள்விப்படும்போது மனது பாரத்தால் கனத்துப் போகின்றது. கண்கள் குளமாகின்றன. நடந்து விட்ட கொடூரம் மனதை பிசைகிறது. கடந்த வருடத்தின் கடைசி ஞாயிறு எல்லோர் மனதிலும் கவலையை விதைத்துச் சென்று விட்டது. நெஞ்சமெல்லாம் வெறும் மேக மூட்டம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. துயரத்துடன் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.
நடந்து முடிந்துவிட்ட கொடூரத்தை நினைத்தால் யாருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூட மனதிற்கு தைரியமில்லாமல் இருந்தது. கோரமான இந்த அழிவில் இறந்துபோன உயிருடன் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது தற்போதைய நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில், வாழ்த்துக்கள்கூட எந்த அர்த்தமும் இல்லாதவையாக மனதிற்கு தோற்றம் தந்தது. இயற்கையின் கொடூரம் இத்தனை பயங்கரமாக இருக்கக் கூடும் என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது போல் இருக்கிறது. நமது நிலத்தில், நமது இனத்தில், அதுவும் ஏற்கனவே பல வழிகளாலும் நொந்து போயிருக்கும் ஒரு சமூகத்திலும் இது நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணும்போது மேலும் மேலும் துன்பம் அதிகரிக்கிறது.
எத்தனை ஆயிரம் குழந்தைகள்… அப்பப்பா.. நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாய் குழந்தைகள் என்று அறிகையில். பாதிக்கப்பட்ட இடங்களில் எப்படி எதிர்காலம் அமைய போகின்றது என்ற கேள்வி மனதை குடைகிறது. எதிர்காலச் சந்ததியின் முக்கியமான பகுதியையே கடல் கொண்டு போய் விட்டது என்பதை நினைக்கையில் சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியானது போல் இருக்கிறது.நமது எந்த ஆறுதலும் தமது குழந்தைகளை, கணவனை, மனைவியை என பல நெருங்கிய உறவுகளையும் பறி கொடுத்து விட்டுத் தவிக்கும் மக்களுக்கு உண்மையான ஆறுதலாக அமைய முடியாமா என்பது தெரியவில்லை. பலரும் மனிதாபிமானத்துடன் செய்யும் பண உதவிகள், பொருள் உதவிகள் அவர்களது தொடரப் போகும் வாழ்க்கையை கட்டி எழுப்ப உதவும்தான். ஆனால் அவர்களது இழப்பை ஈடு செய்யுமா என்பது தெரியவில்லை. நம்மாலும் வேறு எதைத்தான் செய்துவிட முடியும் என்பதும் புரியவில்லை. எத்தகைய கொடூரம் நடந்து முடிந்து விட்டது. எத்தனை ஆயிரம் மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் கடல் அலைகளினுள் காணாமலே போய் விட்டனர். நினைக்க நினைக்க மனது ஆறுவதாயில்லை. செய்திகளைப் பார்க்கையில் உள்ளம் குமுறுகிறது. அதற்காக பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. இன மத பேதம் எதுவுமே இல்லாமல், கடல் இப்படி ஒரு அட்டூழியத்தை நிறைவேற்றிச் சென்றுவிட்டது.
கடலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பாதுகாக்க, தனது மூன்று குழந்தைகளில், இரண்டை மட்டுமே தனது இரு கரங்களால் இழுத்துப் பிடிக்க முடிந்ததாகவும், மூன்றாவது குழந்தையை கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்திருந்தும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கதறும் ஒரு தாய். மூன்று குழந்தைகளில் ஒன்றை விட்டு ஒன்றை தெரிவு செய்வது ஒரு தாயால் முடிகின்ற காரியமா? இந்த சூழ்நிலையில் அந்த தாயின் மன நிலையை நினைத்தாலே மனம் பதறுகிறது. தனக்கு மூன்று கைகள் இருந்திருக்கக் கூடாதா என்று நொந்து கொள்ளும் அந்த தாய்…
பொங்கி வரும் கடல் அலை கண்டு, இனி ஓடி தப்ப முடியாது என்பதை உணர்ந்து, அருகில் இருந்த தோணிகளை இழுத்துக் கட்டும் இரும்புக்கம்பியை கட்டிபிடித்தபடி இருந்த ஒருவர், தன்னை மூழ்கடித்த அலை திரும்பிப் போன பின்னர், மறுபுறம் திரும்பிப் பார்த்தால், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, தன்னை கடந்து சென்ற அலை, இழுத்துக் கொண்டு கடலினுள்ளேயே திரும்பி விட்டது என்கிறார். கண்முன் விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஒரு சில வினாடிகளில், அடித்துச் சென்று விட்ட கடலை சபிக்கும் அந்த நபர்…
பெரிய கடல் அலை வருகிறது என்று ஐந்து வயதுக் குழந்தை ஓடி வந்து எச்சரிக்கை கொடுத்ததில், ஆலயத்தில் இருந்து ஒடியதில் பல பெரியவர்கள் தப்பித்துக் கொள்ள, எச்சரிக்கை கொடுத்த குழந்தை உட்பட பல குழந்தைகளை கடல் அலை அடித்துச் சென்ற பரிதாபம். என்னைக் காப்பாற்றிய குழந்தையால், தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே என்று முணுமுணுக்கும் பாதிரியார்…
தனது தாய் இறந்து விட்டார் என்பதை உணராத நிலையில், அருகிலேயே இருந்து கவனிப்பாரற்று அழுது கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தை…
சில சம்பிரதாயங்களை நிறைவேற்ற கடற்கரைக்கு வந்த புது மணத்தம்பதிகளை, கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்தும், காப்பாற்ற முடியாத வருத்ததில் கரையில் இருந்து ஓடித் தப்பிய உறவினர்கள்…
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தனது துணையை கடல் கொண்டு சென்றுவிட்ட நிலையில், கடலை கேள்வி கேட்டபடி கடற்கரையிலேயே உலாவிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்…
இப்படி எத்தனை எத்தனை செய்திகள்… தாங்கவே முடியவில்லை. காலங்காலமாய் நடத்தி வந்த நிகழ்வுகளையே இயற்கை இப்போதும் நடத்தி முடித்திருக்கிறது என்பது இந்த அறிவுக்கு புரிகிறது. உலக வரைபடத்தில், நாட்டின் எல்லைகள், நாட்டின் எண்ணிக்கைகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு வந்ததே இத்தகைய இயற்கை அழிவுகளுடன் இணைந்துதான் என்பதும் கூட அறிவுக்குப் புரிகிறது. ஆனாலும் என்ன, இந்த மனதுக்கு அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தியோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ இல்லாமல்தானே இருக்கிறது. இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள இந்த கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே.
ஆக்கியவன் அழிக்கிறான், இது ஆண்டவன் நியதி என்கிறது ஆன்மீகம். அழிப்பவன் இப்படி கொடூரமாகவா அழிக்க வேண்டும் என மனது கேள்வி கேட்கிறது. உயிரை இழந்தவர்களை விடவும், இதை எல்லாம் நேரில் அனுபவித்துவிட்டு, பரிதாபமான சூழ்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தை, குழந்தையை இழந்த பெற்றோர், இன்னும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன்.. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள். கண்முன்னாலேயே கடலுக்கு காவு கொடுத்து விட்டு இருக்கும் அவர்களது இழப்பு, அவர்களால் வாழ்க்கையில் மறக்க கூடியதா என்ற கேள்வி தீயாய் தகிக்கிறது. உலகின் நியதி, இயற்கையின் நியதி, ஆண்டவன் நியதி என்ன பெயர் சொல்லி அழைத்துக் கொண்டாலும் அறிவுக்கு புரிவது மனதுக்குப் புரிவதாயில்லை. அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இப்படி நிலைகளில் அடிபட்டுத்தான் போகின்றது. மனமெல்லாம் வெறுமையாய் இருப்பது போல் உணர்வு, என்ன இது வாழ்க்கை என்றுதான் தோன்றுகிறது.
இது எல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வேதனையான நிலைகளிலும் சிலரது கருத்துக்களும், வேறு சிலரது நடவடிக்கைகளும் ஆச்சரியமாகவும், மிகவும் வேதனையை தருவதாகவும் இருக்கிறது. இந்த இயற்கையின் கொடூரத்தை எப்படி எல்லாம் தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ள விளைகிறார்கள் என்று எண்ணும்போது ஆத்திரமும் கூடவே வருகிறது. சிவ அடியாரை (அதாவது ஜெயேந்திரரை) நிந்தித்ததால், இந்த இயற்கை அழிவின் மூலம் சிவன் உலக மக்களுக்கு பாடம் கற்பித்து விட்டார் என்பதுபோல் ஜெயேந்திரருக்கு ஆதரவான சில ஆத்மாக்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்களாம். இப்படி எல்லாம் சொல்வதற்கும், அதை கேட்பதற்கும் முட்டாள்கள் இருக்கிறார்களே என்று எண்ணும்போது, சிரிப்பதா, அழுவதா, ஆத்திரப்படுவதா, அவர்களின் முட்டாள்தனத்தை எண்ணி பரிதாபப்படுவதா என்று புரியாமல் இருக்கிறது. இத்தனை கொடூரமாய் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்களே என்ற எண்ணம், தவிப்பு சிறிதளவாவது இருந்திருந்தால், அவர்கள் இப்படி சொல்லி இருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். சே….. என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம். ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இத்தனை உயிர்களை சித்திரவதை செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தவரா ஆண்டவர். இந்த மனிதர்கள் எதற்கு இப்படி எல்லாம் சிந்திக்கிறார்களோ தெரியவில்லை.
ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியன் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்… ஜெயேந்திரருக்கு இப்படி செய்ததற்கு தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும் தண்டனையே இது, அதனால் தயவு செய்து யாரும் அங்கே இருக்கும் மக்களுக்கு (அதாவது தப்பி பிழைத்த மக்களுக்கு) எந்த ஒரு உதவியும் செய்யாதீர்கள் என்று. இவர்கள் எல்லாம் படித்தவர்களாம். யாரிடம் சொல்லி அழுவது. ஆண்டவன்தான் வாய்மூடி மெளனமாகவே எப்போதும் இருக்கிறாரே.
அது மட்டுமல்ல. நடந்து முடிந்த பரிதாப நிலையை தமது சுய இலாபத்திற்கு பாவித்துக் கொள்ளும் இரக்கமற்ற மனிதர்கள். நிவாரணப் பொருட்களை உரியவர்களுக்கு வழங்காமல் சொத்துச் சேர்க்க நினைக்கும் அதிகாரிகள். தனித்து, தவித்திருக்கும் குழந்தையை விற்று, பணம் பார்க்க விரும்பும் கொடூர உள்ளம் படைத்தவர்கள். அழுதுகொண்டிருக்கும் பெண்களை (குழந்தைகளை) பாலியல் கொடூரம் செய்ய நினைக்கும் கல் நெஞ்சக்காரர்கள், பெரிய மட்டத்தில் பார்க்கப் போனால் பாரிய அரசியல் சூதே நடக்கிறது. இத்தனையும் பார்க்கையில் மனம் கொதிக்கிறது.
குருவி சொன்ன கதை!
குருவி சொன்ன கதை!!
சுவரிலே மாட்டியிருந்த கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை ‘கூ கூ’ என்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. ‘அட, அதற்குள் மணி ஒன்று ஆகி விட்டதா?’ என்று அகல்யா தனக்குள் கேட்டுக் கொண்டாள். காலை எழுந்து முற்றம் கூட்டி முடிக்கவே ஒரு மணித்தியாலம் எடுத்தது அகல்யாவுக்கு. அவர்கள் வீட்டிற்கு முன்னால் பெரிய முற்றம். வெள்ளை வெளேரென்று, மிகவும் அழகாக இருக்கும் வெண்மணல் முற்றம். அந்த வீட்டை அப்பா கட்ட நினைத்த போது அந்த வளவு வெறும் பள்ளக் காணியாகத்தான் இருந்தது. அதற்கு செம்மண் வாங்கி கொட்டி நிரப்பி விட்டு, அதன் மேலாக, கடற்கரை மணலும் வாங்கி கொட்டியிருந்தார் அப்பா. பூங்கன்றுகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் மட்டும் செம்மண் நிரப்பியபடி விட்டிருந்தார்கள். அகல்யாவும், அம்மாவுமாக இணைந்து அங்கே விதம் விதமான பூக்கன்றுகளை வைத்து, அதற்கு நீர் இறைத்து பராமரித்த நாட்கள் அவளது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.
அகல்யா வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கிப் பார்த்தாள். உச்சி வெயில் அகோரமாக எரித்தது. வெள்ளை மணல் நெருப்பாய் காலில் சுட்டது. அம்மா நெல் அவித்து, முற்றத்திலே பாயில் பரவி இருந்தார். நெல் மணிகளை உண்ண காகம் வந்து விடுமே என்று, நீண்ட தடி ஒன்று காகம் கலைப்பதற்காக சுவரில் சாத்தப்பட்டு இருந்தது. காகம் கலைப்பதே சில சமயம் பெரிய வேலையாக இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு காகமும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவற்றிற்கும் இந்த வெயிலைக் கண்டு பயம் வந்து விட்டது போலும் என்று அகல்யா எண்ணிக் கொண்டாள்.
அப்பா வேலை முடிந்து வருவதற்கு இன்று இரவாகி விடும் என்று கூறிச் சென்றிருந்தார். எனவே அம்மாவும், அகல்யாவுமாக நிதானமாக பல கதைகளும் பேசியபடியே வீட்டு வேலைகளை முடித்து, மதிய சமையலையும் முடித்து, சாப்பிட்டும் ஆயிற்று. அகல்யாவால் நாட்டு சூழ்நிலை காரணமாக ஆறு மாதமளவில் வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் அவளுக்கு அம்மாவிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தது. அவளுக்கு வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா விடயங்களையும் சொல்லி ஆக வேண்டும். அப்பா கூட அவர்களை கேலி செய்வார், “சினேகிதிகளிடம் கூட இப்படி வாய் ஓயாமல்தான் பேசுவாயா?” என்று. அம்மாதான் அவளுக்கு மிக நெருங்கிய சினேகிதி. அதற்குப் பிறகுதான் மற்ற சினேகிதிகள்.
முற்றத்திலே வீட்டில் இருந்து பத்தடிகள் தள்ளி அடர்ந்து படர்ந்த மாமரம். அநேகமாக மதிய உணவை முடித்த பின்னர் அனைவரும் அந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்வார்கள். வீட்டுக்குள் இருப்பதை விட இந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. இன்று அவள் வந்து மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவும் அங்கே வந்து, அருகிலிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டார். இருவரும் மீண்டும் அவள் ஊரில் இல்லாதபோது, ஊரில் நடந்த புதினங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா அப்படியே சரிந்து வாங்கில் படுத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.
அப்போது சின்னஞ் சிறிய குருவி ஒன்று அடிக்கடி தங்கள் தலைக்கு மேலாக அந்த மாமரத்திற்கு வந்து வந்து போவதை அகல்யா அவதானித்தாள். எதற்கு அந்த இத் குருவி வந்து வந்து போகிறது என்று குறிப்பாகப் பார்த்தபோதுதான், அங்கே ஒரு குருவிக் கூடு இருப்பதைக் கண்டாள். அதற்குள் குருவிக் குஞ்சுகள் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. ஆனால் எப்படி பார்ப்பது, அவள்தான் அவ்வளவாய் உயரம் கிடையாதே. கொஞ்சம் தூரமாகப் போய் நின்று எம்பிப் பார்த்த போது, அந்த கூட்டுக்குள் இருந்து வெளிப்பக்கமாக அந்தக் குருவிக் குஞ்சுகள் சின்னஞ்சிறிய அலகுகளை அகலத் திறப்பதைப் பார்க்க கூடியதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் போகத்தான் அவளுக்குத் தெரிந்தது, அங்கே வந்து போவது ஒரு குருவி அல்ல, இரண்டு குருவிகள் என்று.
ஒரு குருவி வந்து விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த குருவி உணவுடன் வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடே, இவை அந்தக் குஞ்சுகளின் அம்மாவும், அப்பாவுமாகத்தான் இருக்கும்” என்று அம்மாவிடம் சொன்னாள்.
எத்தனை சிறிய குருவிகள், அவைகள்தான் எத்தனை பொறுப்புடன், குழந்தைகளுக்குஉணவூட்டுகின்றன. அம்மா சொன்னார், “அந்த குருவிக்குப் பெயர் பிலாக்கொட்டை குருவி” என்று. பலாக்கொட்டை போலிருப்பதால் பலாக்கொட்டைக் குருவி எனப் பெயர்வந்திருக்கலாம். பலாக்கொட்டை பேச்சுவழக்கில் பிலாக்கொட்டையாகிவிட்டது.அந்தக் குருவிகள், வந்து வந்து உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே, நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அகல்யாவின் பெரியம்மாவின் மகன், ரூபன் சைக்கிளில் வந்தான். அகல்யா அக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து லீவில் வந்திருக்கிறார் என்றால், அவனும் முக்கால்வாசி நேரம், சித்தி வீட்டிலேயேதான் இருப்பான். சகல கதையும் பேசி அரட்டை அடிப்பதில் அவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும்.
இன்றைக்கு அந்தக் குருவிகளைச் சுற்றிச் சுற்றியே அவர்களது சம்பாஷணை அமைந்திருந்தது. ரூபன் நல்ல உயரம். ஆறு அடிக்கும் மேலே, மெல்லிய ஒடிந்துவிடுவது போன்ற உடல் அமைப்பு. அகல்யா கூட அவனைக் கேலி செய்வாள், “எலும்புக்கு மேல் தோலைப் போர்த்தி வைத்திருக்கிறாயா?” என்று. பதிலுக்கு அவனும் அகல்யாவை, “குண்டுப் பூசணிக்காய்” என்று கேலி செய்வான். கொஞ்சம் எட்டிப் பிடித்தால், அவனுக்கு அந்தக் குருவிக்கூடு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அவனும் அந்தக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக, அந்தக் கூடு இருந்த கிளையைப் பிடித்து, மெதுவாக கீழ் நோக்கி இழுத்து உள்ளே எட்டிப்பார்க்க முயன்றான்.
எங்குதான் இருந்தனவோ அந்தக் குருவிகள். இரண்டும் விரைவாகப் பறந்து வந்து ரூபனைச் சுற்றிச் சுற்றி பறந்த படி ‘கீ கீ கீ’ என்று கத்தின. கிளையைவிட்டு விட்டு ரூபன் பதறினான். அகல்யாவும், அம்மாவும் கூடப் பதறித்தான் போனார்கள். அந்தக் குருவிகள் இரண்டும் பறந்த வேகமும், கத்திய கத்தலும், அவை எத்தனை கோபமாக இருக்கின்றன என்பதை காட்டின. அவை ரூபனைக் கொத்திவிடுவன போல இருந்தன. அந்தக் கத்தலுக்கு அகல்யா பயந்தே போனாள். தங்களது குஞ்சுகளைப் பிடிக்கப் போகின்றான் என்று நினைத்துத்தான் அவை அத்தனை கத்தல் போட்டன. நல்ல வேளையாக, சிறிது நேரம் கத்தி விட்டு, அவை ரூபனை விட்டு அகன்றன.”குருவிகள் அகன்று விட்டனவே என்றுவிட்டு, மீண்டும், அவை என்ன செய்கின்றன என்று மூவருமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தக் குருவிகள் இரண்டும் உணவு கொண்டு வருவதை நிறுத்தி விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தன. கூட்டுக்கு அருகில் சென்று அமர்வதும், கத்துவதும், மீண்டும் தூரமாகச் சென்று வேலியுடன் இருந்த நாவல் மரத்தில் அமர்வதுமாக இருந்தன.
‘இவை ஏன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிட்டன, ஏன் சுற்றிச்சுற்றி கத்திக் கொண்டே இருக்கின்றன’ என்று அகல்யாவும், ரூபனும் திகைத்துப் போயிருந்தார்கள். மிகவும் கவலையுடன் அந்தக் குருவிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ரூபனுக்கு, ‘தன்னால்தானே இப்போ அந்தக் குருவிக் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லை’ என்று ஆதங்கமாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அம்மா மட்டும் எதையோ உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தார்.
இப்படியே சில நிமிடங்கள் கரைந்தது. அந்தக் குருவிக் குஞ்சுகளும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. அவற்றுக்கு பசியாகவும் இருக்கலாம். என்ன செய்வது என்று புரியாத நிலையில், குருவிக்குஞ்சுகளுடன் சேர்ந்து அகல்யாவும் ரூபனும் கூட துடித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் ஒரு குருவிக் குஞ்சு மெதுவாக வெளியே பறந்து வந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாமரக் கிளைகளில் பறந்து பறந்து உட்கார்ந்தது. அப்போது, அந்த குருவிகள் நாவல் மரத்துக்கு தூரமாக போக, குஞ்சும் அங்கேயே பறந்து, அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டது. அதற்குப் பிறகு ஒரு குருவி, அந்தக் குஞ்சைக் கூட்டிக் கொண்டு பறந்து பறந்து தூரமாகச் செல்ல ஆரம்பித்தது. மற்ற குருவி, தொடர்ந்தும், மற்ற இரு குஞ்சுகளையும் வெளியே பறக்கச் செய்யும் முயற்சியில் இருந்தது.
‘அதுதான் அம்மாக் குருவியோ?’ என்று அகல்யா நினைத்துக் கொண்டாள்.இப்படியே மேலும் ஒரிரு மணி நேரம் ஓடி முடியும்போது, மற்ற இரு குஞ்சுகளும் கூட மெதுவாக கிளம்பிப் பறக்க ஆரம்பித்தன.
ஆபத்து என்று உணர்ந்த பின்னர், அந்தக் குருவிகள் எத்தனை சாமர்த்தியமாக அந்த குஞ்சுகளை தம்முடன் அழைத்துச் சென்று விட்டன என்று நினைக்கையில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது அகல்யாவுக்கு. ‘குஞ்சுகளுக்கு உணவைக் கொடுக்காமல் ஏன் இந்தக் குருவிகள் குஞ்சுகளைத் தண்டிக்கின்றன?’ என்று எண்ணி நொந்து கொண்டிருந்த அகல்யாவுக்கு, இப்போதுதான் அந்தக் குருவிகளின் சாதுர்யம் புரிந்தது. இந்தச் சிறிய குருவிகளுக்கு இத்தனை புத்திசாலித்தனமா? வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.
‘உணவு கொடுக்காமல் குஞ்சுகளைப் பட்டினி போட்டாலும், அவை ஆபத்து என்று உணர்ந்த இடத்தில் இருந்து, குஞ்சுகளை எப்படியோ கூட்டிச் சென்றுவிட்டனவே? ”நமது பெற்றோர்கள்கூட நமக்கு கஷ்டமாக இருக்கும் சில விடயங்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது நமது நன்மைக்காகத்தானே?’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
அம்மா மட்டும், மெதுவாக புன்னகை புரிந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முதலிலேயே அம்மாவுக்குப் புரிந்திருந்ததோ? இதுதான் அனுபவம் அம்மாவுக்கு தந்திருக்கும் முதிர்ச்சி போலும்’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
‘நேரம் போனதே தெரியவில்லை. இனியாவது எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்போம்’ என்று சொன்னபடியே அம்மாவீட்டினுள் சென்றார். அகல்யாவும், ரூபனும் பிரமிப்பிலிருந்து மீளாமல் குருவிகள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு, எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.
காதில் கேட்டவை!
எங்கேயோ கேட்டு இரசித்தவை!!!
நாள் காட்டி
வருடம் முழுவதும்
இலையுதிர் காலம் உனக்கு
வசந்தம் வருவதோ
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே..
எச்சில் இலை
எச்சில் இலையை
எந்த பக்கம் போட
இந்தப் பக்கம் நாய்
அந்த பக்கம் மனிதன்
தேடல்!
அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
தேடல்!
மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்
உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின்
ராஜாங்கம்
தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்
எல்லாமே நான் மகிழ்ந்த
கதை பேசின
பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே
வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய் தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது
காமமாம் இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த நண்பன்
எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும் தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?
மிக நீண்ட பிரயத்தனத்திற்குப் பின்
சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ
நன்றி: சு.கவிதா
அவள் விகடன்..
தாமரையின் கவிதைகள்!!
தாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………
வலி
ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..
எதிர்வினை
‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?
வீடு
நண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!
மழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…
எல்லாம் சரி…
தண்டாயுதபாணி கோயிலுக்குப்
போகும் நடைபாதையில்
பழைய சாக்கு விரித்து
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரைவயிற்றிக் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
சூடம் விற்கும்
தாயம்மா கிழவியை
நினைத்தால்தான்..
ஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….
யார் அடிப்பது மனசின் ஒட்டடை?
நியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…
கனவுகள் கண்டு
கொண்டுநான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு
கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு…
இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ…
நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்..
அந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…
முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்…
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை…
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை…
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!
புத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…
ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….
குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”
நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை
இரசாயன ஆதிக்கம்!
மட்டக்களப்பு நவம் அரவிந்தன்
இரசாயன ஆதிக்கம்!
புறாக்களும்
ஒலிவஞ்செடிகளும்
கருகிப்போயின
மனிதன் மனிதனை
அடித்துக் கொண்டான்
சின்ன நாடுகளை
பெரிய நாடுகள்
ஏப்பம் விட்டு விட்டு
எச்சில் துண்டுகளை
தூர வீசியது
அனேகம்பேர்
பழமை சொல்லியே
குளிர் காய்ந்தார்கள்
அனேகமாய்
இரசாயனம்
முழுவதுமாய்
மனிதனை ஆண்டு கொள்ளும்! நன்றி: “காத்திருத்தல்!”, மட்டக்களப்பு நவம் அரவிந்தன்
கண்களுக்குள் கண்ணீர்!!!
அன்னை தெரெசாவுக்கு ரா.பார்த்திபனின் கிறுக்கல்களில் இருந்து……..
கண்களுக்குள் கண்ணீர்!!!
கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
‘அன்னை’ ஆனவளே! – உன்
முக வரிகளில் மனித நேயத்தின் முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் – இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்சிஜனாக சுவாசிப்போம்!
நன்றி: ரா.பார்த்திபன்
கிறுக்கல்கள்
மதங்களும் மனிதர்களும்….
மதங்களும் மனிதர்களும்….
மதங்கள் பற்றி எனக்குள் ஓராயிரம் கேள்விகள். அவற்றில் சிலவற்றை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆண்டவன் ஒருவன்தான் என்பதையும், அவரை வேறுபட்ட வழிகளில் பார்க்க விளைகையில் தோன்றியதே மதங்கள் என்பதையும் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். வேறுபட்ட மதங்கள், வேறுபட்ட சமூகத்தினரை ஒரு இலக்கை நோக்கி நகர்த்தும் பல வழிப்பாதை என்றால், மதங்களின் பெயரால், மக்களுக்கிடையே சண்டைகள் ஏன்? மத போதனைகள் மூலம் மக்களை நல் வழிப்படுத்த வேண்டிய மதகுருமார்கள் சிலர், மதங்களின் பெயர் சொல்லி, மக்களிடையே அன்புக்கு பதில் ஆணவத்தை விதைப்பது ஏன்? கலகங்களை தூண்டுவது ஏன்? இப்படிப்பட்ட போதனைகளின் பயன் என்ன? அது மட்டுமா, ஆண்டவனின் பெயரில் நல்வழியை மக்களுக்கு உணர்த்த வேண்டிய பலர் எத்தனை கேவலமாக குற்றம் சுமத்தப் படுகிறார்கள். உண்மையில் அவர்கள் ஆண்டவன் தொண்டை மட்டுமே எண்ணி நடந்திருந்தால், அவர்கள்மேல் இத்தகைய குற்றங்கள் செலுத்த எவரும் முன் வர வேண்டிய அவசியம்தான் என்ன? அவர்களது நடவடிக்கைகளிலும், அவர்களது தொடர்புகளிலும் தவறு உள்ளது என்றுதானே அர்த்தமாகிறது?? ஆண்டவன் எங்கும் நிறைந்து இருப்பது உண்மையானால், எத்தனையோ அநாதரவான குழந்தைகள், முதியவர்கள் அநாதையாகி நிற்கையில், அதிக செலவில் தேவைக்கும் அதிகமான கோவில்களை நிர்மாணிப்பது அவசியமா? ஒரு குறிப்பிட்ட கோவில் மிக சக்தி வாய்ந்தது என்று பலர் குறிப்பிட கேட்டிருக்கிறோம். அப்படியானால், வேறு ஒரு கோவிலில் இருக்கும் அதே கடவுள் சக்தி அற்றது என்றோ, சக்தி குறைந்தது என்றோ அர்த்தம் ஆகுமா?
அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் ஆயிரமாயிரம் மக்கள் இருக்கையில், காணிக்கை என்ற பெயரில், வேள்விகள் என்ற பெயரில் கோடி கோடியாய் பணத்தை கொட்டுவது அவசியம்தானா? பால் எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாய் இருக்கும் ஏழை எளியவர் ஆயிரம் இருக்கையில், பாலாபிசேகம், தேனாபிசேகம் அவசியமா? ஆண்டவன் சந்நிதானத்திலேயே பலி என்ற பெயரில், உயிர் வதை, கொலை இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறதே? இது அவசியம்தானா? உண்மையில் ஆண்டவன் இதை ஏற்று கொள்வாரா? இந்த மூட நம்பிக்கைகள் நம்மை விட்டு விலகுவது எப்போது?
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில், அன்பை எந்த வேறுபாடும் இன்றி செலுத்துவதில் நாம் ஆண்டவனை அடையாளம் காண முடியாதா? நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருப்பது உண்மைதான். அந்த சக்தியை நாம் ஆண்டவன் என்று அழைப்பதும் சரியாக இருக்கலாம். ஆனால் அதே பெயரால் நடக்கும் அநியாயங்கள் சரியா? எனது கேள்வியெல்லாம் ஆண்டவன் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, அவர் பெயரால் நடக்கும் அநியாயங்கள் அவசியம்தானா, அவை தொடர்வதற்கு நாமும் காரணம் ஆகலாமா என்பதுதான். மனித நேயத்தில் இருந்து மனிதர்களை அந்நியப்படுத்தி அழைத்து செல்லும் பாதைகள் காட்டப்படுவதையும், அதை எல்லாம்பற்றி சிந்தித்து பார்க்காமல், நாமும் அவற்றை எல்லாம் தொடர்ந்து கொண்டிருப்பதையுமே ஆதங்கத்துடன் எண்ணி பார்க்கிறேன். உதாரணத்திற்கு, ஆண்டவனை தங்கத்தில் செய்து காணிக்கை தருவதாக வேண்டுதல் செய்கிறார்கள். அதற்கு செலவளிக்கும் பணத்தை ஒரு அநாதை குழந்தையின் முன்னேற்றத்தில் பாவிப்பதாக வேண்டிக்கொண்டால் என்ன என்பதே எனது கேள்வி. ஆண்டவனை அவரவர் நம்பிக்கைபடி எப்படியும் காணலாம். ஆனால் எந்த ஆண்டவனும் இப்படி ஒரு நல்ல செயலை விட்டு தன்னை தங்கத்தால் அலங்கரிக்க ஆசைப்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படி நல்ல வழிகளை நாம் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
இப்போதெல்லாம் பல இடங்களிலும் தெரிவது, ஆண்டவனோ, பக்தியோ அல்ல. சமூகம் பற்றிய சிந்தனை சிறிதும் அற்ற, வெறும் படாடோபமே. ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்யும் அவசரத்தில் அநாதைகளை அலட்சியம் செய்பவன் ஆஸ்திகனா, அர்ச்சனைபற்றி அலட்டி கொள்ளாமல் அநாதைகளை அரவணைப்பவன் ஆஸ்திகனா? கடவுளுக்கு கற்பூரம்தான் முக்கியம், கலங்கி நிற்பவர் பற்றி கவலை இல்லை என்பவன் ஆஸ்திகனா, கலங்கி நிற்பவருக்கு கருணை செய்வதே கடவுள் வழிபாடு என்று எண்ணுபவன் ஆஸ்திகனா? ஆண்டவனுக்கு ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து பார்க்க ஆசைப்படுபவன் ஆஸ்திகனா, சொந்தங்கள் இல்லாதோரை சொந்தமாக்கி அதில் அமைதி தேடுபவன் ஆஸ்திகனா?எங்கோ ஒரு இடத்தில் வாசித்த ஒரு விடயம் சிந்தனையில் வருகிறது. வாஸ்து சாஸ்திரப்படி கோவில் கட்டினால்தான் அந்த கோவில் சக்தி உள்ளதாய் இருக்குமாம். இல்லாவிட்டால் அந்த கோவில் அல்லது அங்கிருக்கும் கடவுள் சக்தி அற்றது என்று அர்த்தம் ஆகுமா? அப்படி என்றால் எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆஸ்திகன் என்று தன்னை சொல்லிக்கொண்டு, ஆண்டவனின் சக்தியையே சந்தேகப்படுபவனை என்ன சொல்வது?
* இங்கே எனது சிந்தனையை தூண்டிய சில குழந்தைகளின் கேள்விகளை, உங்கள் சிந்தனைக்கும் முன் வைக்க விரும்புகிறேன். சில கோவில்களில் மிருக உயிர்களை பலி கொடுத்தது பற்றி பெரியவர்கள் பேசி கொண்டதை தற் செயலாக கேட்க நேர்ந்த ஒரு 5 வயது குழந்தையின் கேள்வி இது… கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எப்போதாவது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அவர் ஆடு எல்லாம் சாப்பிடுவாரா? சரஸ்வதி பூசைக்கு அவர் முன்னால் சாப்பாடு வைத்தோமே, ஆனால் அவர் சாப்பிடவில்லையே, ஏன்? அப்படியென்றால் எதற்கு அப்படி வைக்கிறோம்?
திருஞானசம்பந்தர்பற்றி பாடம் சொல்லி கொடுத்தபோது இன்னொரு குழந்தையிடம் இருந்து புறப்பட்ட இன்னொரு கேள்வி இது… திருஞானசம்பந்தர் அழுதபோது உமாதேவியார்தானே வந்து பால் கொடுத்தார். அப்போ ஏன் அவர்களைபற்றி பாடாமல் திருஞானசம்பந்தர் சிவனை நோக்கி பாடினார். இதை வாசிக்கும்போது சிரிக்க தோன்றலாம். ஆனால் இது சிந்தனையையும் தூண்டுவது தவிர்க்க முடியாது என எண்ணுகிறேன்.
இந்த குழந்தைகள் மனதிற்கு புரியும்படி எதை சொல்வது என்பது பெரிய பிரச்சனையே…….
மதம் என்று பேசிக்கொள்வார்கள். மதத்தில் உண்மையில் சொல்லப்பட்டு இருக்கிறதோ இல்லையோ மதம் என்ற போர்வையில் தேவையற்ற, அவசியமற்ற செயல்கள் எல்லாம் கடைப்பிடிப்பார்கள். ஆனால் அங்கே சொல்லப்பட்டிருக்கும், அற்புதமான கருத்துக்களைப்பற்றி கவலையே பட மாட்டார்கள். இதுதான் மனதை சங்கடப் படுத்துகிறது.
முழுமையான சுய மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் மற்ற உயிர்களிடம் கருணை, அன்பு கொண்டு மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதாதா?
விடைகாண விளையும் கேள்விகள் இங்கே.
நமது பண்பு????
நமது பண்பு????
அண்மையில் எமக்கு ஒரு அழைப்பு வந்தது… விழாவாம், பூப்புனித நீராட்டு விழாவாம்…..
மகள் வயதுக்கு வந்துதான் ஆறு மாதமாயிற்றே, அப்போது கூட ஒரு விழா எடுத்தீர்களே வினாவினோம்… அது.. அவசரமாய் உடனுக்கு செய்தது உறவுக்கு மட்டுமே எடுத்த விழா…இப்போது இது…ஊருக்கு சொல்லி செய்வது…இயம்பினார்கள்…
ஐந்நூறு பேர் கூடும் மண்டபமாம் – அதை நிரப்ப மனிதர்கள் வேண்டுமாம். தேடி அலைவதாய் சொன்னார்கள்… என்னே அன்பு… வியந்தேன் நான்… மண்டபம் நிரப்ப மக்கள் தேடும் பண்பு…வெட்கமே இல்லாமல், வெளிப்படையாய் சொன்னார்கள். மண்டபம் நிரம்பாவிட்டால் வீடியோ அழகிராதாம் – அதனால் கட்டாயம் வரும்படி கட்டளை போட்டார்கள்… மண்டபத்தை நிரப்பத்தான் மனிதர்கள் தேவையா? மனங்களை நிரப்ப இல்லையா? மனதில் எழுந்தது கேள்வி.
எதற்காக கொண்டாட்டம் என்ற கேள்விக்கு. நமது கலாச்சாரம் பேணவாம் பதில் வந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் குத்து விளக்கு பரிசாம்.குழந்தையவள்… பத்து வயதேயானவள். விழா பற்றி கேட்டேன். நகை நட்டு அலங்காரம், பளபளக்கும் உடைகள், அழகாயிருந்ததுவாம். நிறையப்பேர் வந்தார்கள், நிறையப் பரிசுகளாம். குழந்தையவள் மனதின் எஞ்சிய பதிவுகள் இவை…
இப்படியாக நடத்தப்படும் விழாக்களைப்பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இந்த ஆடம்பர கொண்டாட்டங்கள்தான் நமது கலாச்சாரமா? இந்த கொண்டாட்டங்களே நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து விடுமா? சடங்குகள் சம்பிரதாயங்கள் எதற்கு செய்கிறோம்? காலங்காலமாய் செய்ததை நாமும் செய்கிறோம் சொல்கிறார்கள். ஆனால்….. பழையவர் செய்ததில், பல பல மாற்றங்கள் பகட்டுக்காகவென வசதிக்கேற்பவென, செய்துதானே இருக்கிறோம். அப்படி மாற்றங்களை கொண்டு வர தெரிந்த நமக்கு, அவசியம் இல்லாதவற்றை ஒதுக்கியும், அவசியமானவற்றை செய்யவும் கூடிய மாற்றங்கள் மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று? புரியவில்லை எனக்கு.
சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அந்தந்த காலத்திற்கேற்ப மாறி கொண்டுதான் வந்திருக்கின்றன. உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாமலே எதுவும் இருந்தது இல்லை. அப்படி இருக்கையில், பகுத்தறிவதன் மூலம் தேவையற்ற சடங்குகளை தவிர்த்து, தேவையானவற்றை தொடர்ந்தால் என்ன கெட்டுப் போய் விடும்?
திருமணத்தை எடுத்துக் கொண்டால், எத்தனை பவுணில் தாலி செய்யப்படுகிறது என்பதே பிரதானமாயிருக்கிறது. உண்மையில் நடந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். ஐரோப்பிய நாட்டில் வாழும் சகோதரர்கள் இருவருக்கு திருமணத்திற்கு தயாராய் பெண்கள் இருவர் அந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். தம்பி திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளபோவதாய் அந்த அண்ணன் இருந்தார். காரணத்தை அறிந்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி எத்தனை பவுணில் தாலி போடுகிறானோ என்று பார்த்து விட்டு, அதை விட அதிகமாய் தாலி செய்து போடுவதற்காய் அண்ணன்காரன் காத்திருந்தான். பார்த்தீர்களா மனித பண்பை. கடைசியில் தம்பி 40 பவுணும், அண்ணன் 50 பவுணிலும் தாலி செய்து மனவிமாருக்கு போட்டுள்ளார்கள். அவர்கள் அந்த தாலியை காவிக் கொண்டு திரிவதில் உள்ள சிரமம் கருதியும், கள்ளர் பயத்திலும், தாலியை கழற்றி வங்கியில் வைத்து விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து நமது கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
நமது பழைய நடைமுறையில், விழாவுக்கு வருகிறவர்களுக்கு சந்தன கும்பா, குத்து விளக்கு, எவர்சில்வர் தட்டு எல்லாம் கொடுத்து விடும் வழக்கம்தான் இருந்ததா? ஒரு சிலர் வாதிடலாம், இவை எல்லாம் ஒரு நட்புக்காய், மற்றவருக்கும் நமது அன்பை காட்ட கொடுக்கிறோம் என்று. ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், ஒருவர் செய்வதை விட நாம் அதிகமாக செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை. ஒருவர் 100 பேரை விழாவுக்கு அழைத்தால், இதோ நான் 200 பேரை அழைக்கிறேன் பார் என்ற போட்டி. அவர் என்ன சந்தன கும்பாதானே கொடுத்தார், இதோ பார் நான் பெரிய குத்து விளக்கே கொடுக்கிறேன் என்ற அகங்காரம். அவர் 5 பலகாரம்தானே செய்து கொடுத்தார், நான் பார் 7 பலகாரம் செய்துள்ளேன் என்ற ஆணவம்.
இவை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படால் சந்தோஷம்தான். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது? இந்தப் போட்டி மனப்பான்மை உறவினர்களுக்குள்ளேயே, ஏன் சகோதரர்களுக்குள்ளேயே இருப்பதுதான் இன்னும் வேதனை. கடன்பட்டாலும் பரவாயில்லை. விழா பெரிதாக நடக்க வேண்டும் என்பது சிலரது ஆதங்கமாய் இருக்கிறது. இதுதானா நமது கலாச்சாரம்? இதுதானா நமது குழந்தைகளுக்கு நாம் புகட்டும் பண்பாடு?
பொருளுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதைத்தானா நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும்? இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால், எத்தனை பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்பதில் கூட ஒரு பெருமை. அதிகமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பினேன் என்பதை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்காக, என்றுமே கதைத்து அறிந்திராதவருக்கு கூட, நிச்சயமாக விழாவுக்கு அவர்கள் வரப்போவதில்லை என்பதை அறிந்தே இருந்திருந்தாலும் கூட அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது.
இப்படி பெரிதாக எடுக்கப்படும் விழாக்களில், எத்தனை உறவினர்கள், நண்பர்களிடம் நின்று நிதானமாக பேச நேரம் கிடைக்கிறது? ஓடி ஒடி வீடியோவுக்கு ஒவ்வொருவராய் அழைத்து நிற்க வைத்து படங்கள் எடுத்துக் கொள்வதுடன், சாப்பாட்டுக்கு அழைத்து உட்கார வைத்து விடுவதுடன் நெருக்கம் நிறைந்து விடுமா என்ன? எவ்வளவோ தூரத்தில் இருந்து விழாவுக்கு வந்து போவார்கள். ஆனால் எவருடனும் நிதானமாக பேசக்கூட நேரம் கிடைக்காது.
அது மட்டுமா…. விழா முடிந்ததும் எத்தனை குறைகள் குற்றங்கள் வருகிறது. அது சரியாக இல்லை, இது சரியாக இல்லை என்று. தான் செய்ததை விட மற்றவர் அதிகப்படியாக செய்திருந்தால், அதை மட்டம் தட்டவென்றே ஏதாவது குறைகளை கண்டு பிடித்து சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
பூப்புனித நீராட்டு விழாவைப் பொறுத்த அளவில் அந்த விழாவே அவசியம் இல்லை என்பது எனது கருத்து. அந்த காலத்தில் அதை நம்மவர்கள் செய்தார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. பழைய காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள். படிக்கவோ, வேலைக்கோ போவதில்லை. எனவே தமது பெண் வயதுக்கு வந்து விட்டாள், திருமணம் செய்யலாம் என்பதை ஊருக்கு அறிவித்தார்கள். ஆனால் இப்போதைய நிலமை அப்படியா? நிலமைக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டாமா? அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்புவது, அல்லது வேலைக்கு அனுப்புவது பாவமாக கருதப்பட்டது. அதுவே நமது கலாச்சாரம் என்று எண்ணி, அதையே தொடர்கிறோமா என்ன? மாற்றம் அதில் ஏற்படுத்திய நமக்கு, இந்த தேவையற்ற விழாவை நிறுத்துவதால் மட்டும் கலாச்சாரம் பழுதுபட்டு போய் விடுமா என்ன?
உண்மையில் வயதுக்கு வரும் குழந்தைக்கு தகுந்த ஆரோக்கியமான ஆகாரங்களை வழங்கி, அவளுக்கு புரிய வைக்க வேண்டிய விடயங்களை புரிய வைத்தால், அதுவே குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாகும். அதை விடுத்து, இந்த அவசியமற்ற விழாவினால் எந்த பலனும் இல்லை. கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் சிந்தித்துப் பார்த்தால் என்ன?
பகுத்தறிவோடு ஒத்துப்போகாத பண்பு ஒரு சமூகப்பண்பாகவோ, அல்லது மனிதப் பண்பாகவோ இருக்க முடியுமா?பூப்புனித நீராட்டுவிழா நடத்துவது அந்த குழந்தைகளுக்கு அவர்களது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லிப் புரியவைப்பதற்கே என ஒரு விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எப்படி புரிய வைக்கப்படுகிறதோ, அதே போல் பெண்களுக்கும் புரிய வைக்கப்படலாம். தவிர விழா எடுக்கும் ஒரே நாளில் புரிய வைக்க கூடிய விடயமில்லை இந்த விடயம். படிப்படியாக பெண்ணின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தை, படிப்படியாகத்தான் குழந்தைக்கு புரிய வைக்க முடியும். இப்படி விழா நடத்துபவர்களில் எத்தனை பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கிறார்கள்? உண்மையில் விழா எடுக்காதவர்கள் இந்த வேலையை திறம்பட செய்கிறார்கள் என்பது எனது கருத்து. தவிர வெளி நாட்டில் வாழும் குழந்தைகளைப் பொறுத்த அளவில், அவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்திலேயே எல்லாம் விபரமாக சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் விழா வைத்துத்தான் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
பூப்புனித நீராட்டு விழா செய்வதன் மூலம், வயதுக்கு வந்த பெண்ணுக்கு தகுந்த கெளரவம் கண்ணியம் வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளை மதித்தலிலும், அவளது கருத்துக்கள், செயல்பாடுகளை அங்கீகரித்தலிலும், அவளுக்குரிய கெளரவத்தை கண்ணியத்தை அளிக்க முடியாதா என்ன?
உண்மை கலாச்சாரம் எங்கோ ஒளிந்திருந்து தன்னைத்தானே தேடுகிறது. எளிமையில் இனிமை மறந்தும் போயிற்று. பெருமைக்காய் நிகழ்ச்சிகள் வளர்ந்தும் ஆயிற்று. அநாவசிய செலவுகள் ஆடம்பர கொண்டாட்டங்கள்.கலாச்சாரத்தை கற்று கொடுக்க விளைகையில், அங்கே மனித நேயத்தை அதிகமாய் கலந்து கொடுத்தால் என்ன? அதுதானே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும், அவசரமானதும். அன்புடன் கலை