ஒரு நல்ல மனிதரை இழந்தோம்!
இந்தப் பழைய பதிவை என்னுடன் பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி ஜெயகுமார்!
https://m.facebook.com/story.php?story_fbid=1530599960289175&id=100000175560903
அருமையான, இனிமையான, அன்பான இரவீந்திரநாத் sir ஐப் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் கிளறிச் சென்றுள்ளது.
பேராதனையிலிருந்து வேலைக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கு வந்தபோது, என்னை நேர்காணல் செய்தவர்களில் முக்கியமானவர். நேர்காணலின்போதும், அதன் பின்னர் அவர் தலைவராக இருந்த துறையில் வேலையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், துறைத் தலைவராக அவருடனான சந்திப்பிலும், அதன் பின்னர் அவருடைய துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், எளிமையானவர். வேலை தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விடயங்களாக இருந்தாலும் சரி, தயங்காமல் ஆலோசனை பெற அவரை அணுகுவது மிகவும் இலகுவாக இருந்தது. வேலைத் தளத்தில், தான் துறைத் தலைவர் என்ற எந்தவித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். திறமைகளை அடையாளம் கண்டு கொள்வதில், பாராட்டுக்களைத் தாராளமாக வழங்குவதில், நகைச்சுவையாக உரையாடலை இனிமையாகச் நகர்த்திச் செல்வதில் வல்லவர்.
அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவருமே அன்பானவர்கள்தான். நான் அங்கேயிருந்த காலத்தில், மிக நெருங்கிப் பழகிய நண்பிகள் மூவரும் (ஜெயரதி, சொர்ணா, சீதா), எனக்கு முன்னரே கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போய்விட்டார்கள். அப்போது நான் தனித்து விடப்பட்டதான ஒரு உணர்வு எனக்கும் இருந்தது. நாங்கள் ஒன்றாக சென்று வருவதைப் பார்த்திருந்த இரவீந்திரநாத் sir இன் அருமை மகள்கள், நான் தனியாக இருப்பதாக உணர்ந்து அவரிடம் சென்று “அவ இப்ப தனியா இருக்கிறா. நாங்கள் அவவோட friends ஆக இருக்கலாமா? அவவோட போய் உடன் இருக்கலாமா?” என்று கேட்டதாகவும், தான் “தாராளமாகப் போய் இருங்கோ” என்று சொன்னதாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் வந்து என்னையும் கூட்டிக்கொண்டு, நான் முன்னர் எனது நண்பிகளுடன் மாலை வேளைகளில் நடந்து செல்லும் இடங்களெல்லாம் நடப்பார்கள். தங்கள் வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிப் போவார்கள்.
நான் முன்னர் நண்பிகளுடன் இருந்து கதைத்த இடங்களில் என்னுடன் இருந்து கதைப்பார்கள் / பாடுவோம். அப்போது (1988-89) அவர்கள் இருவரும் குழந்தைகள். நாம் என்ன கதைத்தோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர்களது அன்பு என்னைக் கட்டிப் போட்டது என்னவோ உண்மை. இப்போது நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன. அவர்கள் மிகச் சிறியவர்களாக இருந்தமையால் என்னை நினைவிருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களில் நானும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தை விட்டு, வவுனியா விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் போய்விட்டேன். நான் வேலை விட்டு நீங்கும்போது, அவர் எனக்கு எழுதித் தந்த சான்றிதழ் சிறந்ததாகவும், இன்னொருவரின் முன்னேற்றத்திற்காக அடி மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவும் அமைந்திருந்தது. விரிவுரையாளர் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சித் தளத்திலும் காலூன்றுவது நல்லது என்று எடுத்துக்கூறி, என்னை உற்சாகப்படுத்தி, தானே ஓர் ஆய்வுக்கான திட்டத்தையும் தொடக்கித் தந்தார்.
பின்னர் 1993 இறுதியில் நோர்வேக்கு இடம் பெயர்ந்து விட்டேன். நான் இங்கு வந்த பின்னர் அவர் இரு தடவைகள் நோர்வேக்கு தொழில் நிமித்தமாக வந்து போனார். ஒவ்வொரு தடவையும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க மறக்கவில்லை. அவர் வந்திருந்த இடமும், நாம் வசிக்கும் இடமும் தூரமாக இருந்தமையாலும், மிகக் குறுகிய நாட்களே அவர் நோர்வேயில் இருந்தமையாலும் அவர் எங்களை வந்து சந்திக்க முடியாமல் போயிற்று. அப்போது அவர் என்னிடம் கூறிய “அடுத்த தடவை நோர்வே வரும்போது, உங்களிடம் வருவேன்” என்று கூறிய வார்த்தைகளே இறுதியாகப் போனது வேதனை ☹.
எனக்கு மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் இதே அன்புடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டிருப்பார் என்பது தெரியும். அவரின் இயல்பே அதுதானே. மேலும் நான் திருமணம் முடித்து வந்த பின்னர் எனது மாமனார், மாமியார் இவரைத் தெரியும் என்றும், அவர் ஆராய்ச்சிப் பிரிவில் பணி புரிந்த காலத்தில் தங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் வருவது பற்றியும், அவரது நல் இயல்புகள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல ஒரு மனிதரை இழந்து விட்டோம்.
‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்
வெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது.
மனதை மிகவும் பாதித்த சில வரிகள்:
- “அவங்கள் யாருக்குப் பதில் சொல்லணும் எண்டு தேவை கிடக்குது இங்க. விட்டாச்சுது எண்டு சொல்லியாச்சுது. பத்துப்பேரை விட்டிட்டு, இருபதுபேரைக் கொன்று போட்டாலும் இங்க உலகமும் கேக்காது. ஊராக்களும் கேக்க மாட்டாங்க.” எத்தனை விரக்தியான வார்த்தைகள்.
- “போர் அவளது மேல் கையொன்றில் தன் பதிவைச் செய்வதற்காக அக் கையின் உணர்வைப் பறித்திருந்தது. சூம்பிய கையில் விரல்கள் தம் பாட்டில் விரிந்து வேலை செய்வதில்லை. ஆனால் அந்தக் கையால் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு அந்த ஆழக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கிறாள்! இயலாமை என்பது எல்லாம் உடலில் இல்லை என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.”
- “மனிதம். புனர்வாழ்வு என்றால் என்ன? யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்பென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும்?”
அலை அழித்த தமிழ்!
அலை அழித்த தமிழ்!
இரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.
அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா
கல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த ஆசிரியரும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை எப்படி ஆர்வமுடன் கேட்கும்படி (வாசிக்கும்படி) செய்வது என்று இந்த இருவரும் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மிகவும் விறுவிறுப்பாக, ஆர்வத்தைத் தூண்டும்படியாக எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.
புனைவும், கற்பனையும் கலந்திருப்பதாக அவர்கள் சொல்லியிருப்பதால், வாசிப்பினூடே (முக்கியமாக இறந்த காலம் பற்றிய பக்கங்களில்) எது கற்பனை என்றும் சேர்த்தே ஆராய்ந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான வரலாற்று விடயங்களையும் எழுதியிருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர்களுக்கே இன்னமும் மேலதிகமாக எழுதும் உத்வேகம் இருப்பதையும் கூறிவிட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.
எதிர்காலம் பற்றிய கற்பனை (அல்லது எதிர்வுகூறல் என்றும் கொள்ளலாமோ), கவலைக்குரியதாக இருந்தாலும், வித்தியாசமாக எழுதப்பட்டிருந்க்கிறது. எதிர்காலம் மட்டுமன்றி, எழுத்தின் போக்கே வித்தியாசமாக இருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எனது வாசிப்பு!
மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.
மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:
1. Long walk to freedom – Nelson Mandela
2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்
3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்
4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)
5. ஆதிரை – சயந்தன்
6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி
7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா
எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.
அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma
மலாவியில் ஓராண்டு!
மலாவியில் வாழும் ஒராண்டு வாழ்க்கை பற்றி எழுத, ஒரு புதிய பக்கத்தை எழுத ஆரம்பித்தேன்.
அதன் இணைப்பு Life in Malawi
ஆப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு மலாவி. இது ‘The warm Heart of Africa’ என அழைக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் மலாவி மலாவியின் தோற்றம் (மலாவி ஏரியுடன்)
எமது வாழ்க்கை மலாவியின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் தலைநகரமான லிலொங்வேயில். மலாவியின் மிகப் பெரிய மருத்துவமனையான Kamuzu Central Hospital (KCH) இல் வேலை.
இடம், கூடப் பணிபுரிபவர்கள், வேலை எல்லாமே பிடித்துள்ளது. மகளுக்கும் பாடசாலை, இடம், நண்பர்கள் என எல்லாமே பிடித்துள்ளது. இலங்கையர்கள், இந்தியர்கள் என பலரும் உள்ளனர். மகளது பாடசாலை நண்பிகள் மூலம் எனக்கும் நண்பர்கள் கிடைத்துள்ளனர். எனவே வாழ்க்கை சுமுகமாகப் போகின்றது.
அடிக்கடி எனது Life in Malawi பக்கத்தை இற்றைப்படுத்த வேண்டும் என நினைத்தாலும் முடிவதில்லை. இணைய இணைப்பு இருந்தாலும், மிக மெதுவாக இருப்பதுபோல் தோன்றுவதால், அடிக்கடி எழுதத் தோன்றுவதில்லை. அத்துடன் நேரமும் எப்படி விரைவாக ஓடிவிடுகின்றதோ தெரியவில்லை 🙂
குருவி சொன்ன கதை!
இதனை ஒரு மீள்பதிவு என்று சொல்லலாம். இதனை எப்போதோ பதிவு செய்திருந்தேன். ஆனாலும் எனது வலைப்பதிவிலிருந்து காணாமல் போனது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தள நிருவாகத்தில் போய்ப் பார்த்தால், பதிவு Published என்றே காட்டுகின்றது. ஆனால் பதிவை வலைப்பதிவில் பார்க்க முடியவில்லை. எனவே இதனை மீள்பதிவு செய்து பார்க்கிறேன்.
குருவி சொன்ன கதை!!
சுவரிலே மாட்டியிருந்த குருவி ஒன்றை உள்ளே வைத்திருக்கும் குடிசை அமைப்புடைய கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை ‘கூ கூ‘ என்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. ‘அட, அதற்குள் மணி ஒன்று ஆகி விட்டதா?’ என்று அகல்யா தனக்குள் கேட்டுக் கொண்டாள். காலை எழுந்து முற்றம் கூட்டி முடிக்கவே ஒரு மணித்தியாலம் எடுத்தது அகல்யாவுக்கு. அவர்கள் வீட்டிற்கு முன்னால் பெரிய முற்றம். வெள்ளை வெளேரென்று, மிகவும் அழகாக இருக்கும் வெண்மணல் முற்றம். அந்த வீட்டை அப்பா கட்ட நினைத்த போது அந்த வளவு வெறும் பள்ளக் காணியாகத்தான் இருந்தது. அதற்கு செம்மண் வாங்கி கொட்டி நிரப்பி விட்டு, அதன் மேலாக, கடற்கரை மணலும் வாங்கி கொட்டியிருந்தார் அப்பா. பூங்கன்றுகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் மட்டும் செம்மண் நிரப்பியபடி விட்டிருந்தார்கள். அகல்யாவும், அம்மாவுமாக இணைந்து அங்கே விதம் விதமான பூக்கன்றுகளை வைத்து, அதற்கு நீர் இறைத்து பராமரித்த நாட்கள் அவளது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.
அகல்யா வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கிப் பார்த்தாள். உச்சி வெயில் அகோரமாக எரித்தது. வெள்ளை மணல் நெருப்பாய் காலில் சுட்டது. அம்மா நெல் அவித்து, முற்றத்திலே பாயில் பரவி இருந்தார். நெல் மணிகளை உண்ண காகம் வந்து விடுமே என்று, நீண்ட தடி ஒன்று காகம் கலைப்பதற்காக சுவரில் சாத்தப்பட்டு இருந்தது. காகம் கலைப்பதே சில சமயம் பெரிய வேலையாக இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு காகமும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவற்றிற்கும் இந்த வெயிலைக் கண்டு பயம் வந்து விட்டது போலும் என்று அகல்யா எண்ணிக் கொண்டாள்.
அப்பா வேலை முடிந்து வருவதற்கு இன்று இரவாகி விடும் என்று கூறிச் சென்றிருந்தார். எனவே அம்மாவும், அகல்யாவுமாக நிதானமாக பல கதைகளும் பேசியபடியே வீட்டு வேலைகளை முடித்து, மதிய சமையலையும் முடித்து, சாப்பிட்டும் ஆயிற்று. அகல்யாவால் நாட்டு சூழ்நிலை காரணமாக ஆறு மாதமளவில் வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் அவளுக்கு அம்மாவிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தது. அவளுக்கு வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா விடயங்களையும் சொல்லி ஆக வேண்டும். அப்பா கூட அவர்களை கேலி செய்வார், “சினேகிதிகளிடம் கூட இப்படி வாய் ஓயாமல்தான் பேசுவாயா?” என்று. அம்மாதான் அவளுக்கு மிக நெருங்கிய சினேகிதி. அதற்குப் பிறகுதான் மற்ற சினேகிதிகள்.
முற்றத்திலே வீட்டில் இருந்து பத்தடிகள் தள்ளி அடர்ந்து படர்ந்த மாமரம். அநேகமாக மதிய உணவை முடித்த பின்னர் அனைவரும் அந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்வார்கள். வீட்டுக்குள் இருப்பதை விட இந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. இன்று அவள் வந்து மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவும் அங்கே வந்து, அருகிலிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டார். இருவரும் மீண்டும் அவள் ஊரில் இல்லாதபோது, ஊரில் நடந்த புதினங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா அப்படியே சரிந்து வாங்கில் படுத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.
அப்போது சின்னஞ் சிறிய குருவி ஒன்று அடிக்கடி தங்கள் தலைக்கு மேலாக அந்த மாமரத்திற்கு வந்து வந்து போவதை அகல்யா அவதானித்தாள். எதற்கு அந்த இத் குருவி வந்து வந்து போகிறது என்று குறிப்பாகப் பார்த்தபோதுதான், அங்கே ஒரு குருவிக் கூடு இருப்பதைக் கண்டாள். அதற்குள் குருவிக் குஞ்சுகள் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. ஆனால் எப்படி பார்ப்பது, அவள்தான் அவ்வளவாய் உயரம் கிடையாதே. கொஞ்சம் தூரமாகப் போய் நின்று எம்பிப் பார்த்த போது, அந்த கூட்டுக்குள் இருந்து வெளிப்பக்கமாக அந்தக் குருவிக் குஞ்சுகள் சின்னஞ்சிறிய அலகுகளை அகலத் திறப்பதைப் பார்க்க கூடியதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் போகத்தான் அவளுக்குத் தெரிந்தது, அங்கே வந்து போவது ஒரு குருவி அல்ல, இரண்டு குருவிகள் என்று.
ஒரு குருவி வந்து விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த குருவி உணவுடன் வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடே, இவை அந்தக் குஞ்சுகளின் அம்மாவும், அப்பாவுமாகத்தான் இருக்கும்” என்று அம்மாவிடம் சொன்னாள்.
எத்தனை சிறிய குருவிகள், அவைகள்தான் எத்தனை பொறுப்புடன், குழந்தைகளுக்குஉணவூட்டுகின்றன. அம்மா சொன்னார், “அந்த குருவிக்குப் பெயர் பிலாக்கொட்டை குருவி” என்று. பலாக்கொட்டை போலிருப்பதால் பலாக்கொட்டைக் குருவி எனப் பெயர்வந்திருக்கலாம். பலாக்கொட்டை பேச்சுவழக்கில் பிலாக்கொட்டையாகிவிட்டது.அந்தக் குருவிகள், வந்து வந்து உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே, நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அகல்யாவின் பெரியம்மாவின் மகன், ரூபன் சைக்கிளில் வந்தான். அகல்யா அக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து லீவில் வந்திருக்கிறார் என்றால், அவனும் முக்கால்வாசி நேரம், சித்தி வீட்டிலேயேதான் இருப்பான். சகல கதையும் பேசி அரட்டை அடிப்பதில் அவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும்.
இன்றைக்கு அந்தக் குருவிகளைச் சுற்றிச் சுற்றியே அவர்களது சம்பாஷணை அமைந்திருந்தது. ரூபன் நல்ல உயரம். ஆறு அடிக்கும் மேலே, மெல்லிய ஒடிந்துவிடுவது போன்ற உடல் அமைப்பு. அகல்யா கூட அவனைக் கேலி செய்வாள், “எலும்புக்கு மேல் தோலைப் போர்த்தி வைத்திருக்கிறாயா?” என்று. பதிலுக்கு அவனும் அகல்யாவை, “குண்டுப் பூசணிக்காய்” என்று கேலி செய்வான். கொஞ்சம் எட்டிப் பிடித்தால், அவனுக்கு அந்தக் குருவிக்கூடு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அவனும் அந்தக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக, அந்தக் கூடு இருந்த கிளையைப் பிடித்து, மெதுவாக கீழ் நோக்கி இழுத்து உள்ளே எட்டிப்பார்க்க முயன்றான்.
எங்குதான் இருந்தனவோ அந்தக் குருவிகள். இரண்டும் விரைவாகப் பறந்து வந்து ரூபனைச் சுற்றிச் சுற்றி பறந்த படி ‘கீ கீ கீ‘ என்று கத்தின. கிளையைவிட்டு விட்டு ரூபன் பதறினான். அகல்யாவும், அம்மாவும் கூடப் பதறித்தான் போனார்கள். அந்தக் குருவிகள் இரண்டும் பறந்த வேகமும், கத்திய கத்தலும், அவை எத்தனை கோபமாக இருக்கின்றன என்பதை காட்டின. அவை ரூபனைக் கொத்திவிடுவன போல இருந்தன. அந்தக் கத்தலுக்கு அகல்யா பயந்தே போனாள். தங்களது குஞ்சுகளைப் பிடிக்கப் போகின்றான் என்று நினைத்துத்தான் அவை அத்தனை கத்தல் போட்டன. நல்ல வேளையாக, சிறிது நேரம் கத்தி விட்டு, அவை ரூபனை விட்டு அகன்றன.”குருவிகள் அகன்று விட்டனவே என்றுவிட்டு, மீண்டும், அவை என்ன செய்கின்றன என்று மூவருமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தக் குருவிகள் இரண்டும் உணவு கொண்டு வருவதை நிறுத்தி விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தன. கூட்டுக்கு அருகில் சென்று அமர்வதும், கத்துவதும், மீண்டும் தூரமாகச் சென்று வேலியுடன் இருந்த நாவல் மரத்தில் அமர்வதுமாக இருந்தன.
‘இவை ஏன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிட்டன, ஏன் சுற்றிச்சுற்றி கத்திக் கொண்டே இருக்கின்றன‘ என்று அகல்யாவும், ரூபனும் திகைத்துப் போயிருந்தார்கள். மிகவும் கவலையுடன் அந்தக் குருவிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ரூபனுக்கு, ‘தன்னால்தானே இப்போ அந்தக் குருவிக் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லை‘ என்று ஆதங்கமாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அம்மா மட்டும் எதையோ உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தார்.
இப்படியே சில நிமிடங்கள் கரைந்தது. அந்தக் குருவிக் குஞ்சுகளும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. அவற்றுக்கு பசியாகவும் இருக்கலாம். என்ன செய்வது என்று புரியாத நிலையில், குருவிக்குஞ்சுகளுடன் சேர்ந்து அகல்யாவும் ரூபனும் கூட துடித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் ஒரு குருவிக் குஞ்சு மெதுவாக வெளியே பறந்து வந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாமரக் கிளைகளில் பறந்து பறந்து உட்கார்ந்தது. அப்போது, அந்த குருவிகள் நாவல் மரத்துக்கு தூரமாக போக, குஞ்சும் அங்கேயே பறந்து, அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டது. அதற்குப் பிறகு ஒரு குருவி, அந்தக் குஞ்சைக் கூட்டிக் கொண்டு பறந்து பறந்து தூரமாகச் செல்ல ஆரம்பித்தது. மற்ற குருவி, தொடர்ந்தும், மற்ற இரு குஞ்சுகளையும் வெளியே பறக்கச் செய்யும் முயற்சியில் இருந்தது.
‘அதுதான் அம்மாக் குருவியோ?’ என்று அகல்யா நினைத்துக் கொண்டாள்.இப்படியே மேலும் ஒரிரு மணி நேரம் ஓடி முடியும்போது, மற்ற இரு குஞ்சுகளும் கூட மெதுவாக கிளம்பிப் பறக்க ஆரம்பித்தன.
ஆபத்து என்று உணர்ந்த பின்னர், அந்தக் குருவிகள் எத்தனை சாமர்த்தியமாக அந்த குஞ்சுகளை தம்முடன் அழைத்துச் சென்று விட்டன என்று நினைக்கையில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது அகல்யாவுக்கு. ‘குஞ்சுகளுக்கு உணவைக் கொடுக்காமல் ஏன் இந்தக் குருவிகள் குஞ்சுகளைத் தண்டிக்கின்றன?’ என்று எண்ணி நொந்து கொண்டிருந்த அகல்யாவுக்கு, இப்போதுதான் அந்தக் குருவிகளின் சாதுர்யம் புரிந்தது. இந்தச் சிறிய குருவிகளுக்கு இத்தனை புத்திசாலித்தனமா? வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.
‘உணவு கொடுக்காமல் குஞ்சுகளைப் பட்டினி போட்டாலும், அவை ஆபத்து என்று உணர்ந்த இடத்தில் இருந்து, குஞ்சுகளை எப்படியோ கூட்டிச் சென்றுவிட்டனவே? ”நமது பெற்றோர்கள்கூட நமக்கு கஷ்டமாக இருக்கும் சில விடயங்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது நமது நன்மைக்காகத்தானே?’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
அம்மா மட்டும், மெதுவாக புன்னகை புரிந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முதலிலேயே அம்மாவுக்குப் புரிந்திருந்ததோ? இதுதான் அனுபவம் அம்மாவுக்கு தந்திருக்கும் முதிர்ச்சி போலும்‘ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
‘நேரம் போனதே தெரியவில்லை. இனியாவது எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்போம்‘ என்று சொன்னபடியே அம்மாவீட்டினுள் சென்றார். அகல்யாவும், ரூபனும் பிரமிப்பிலிருந்து மீளாமல் குருவிகள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு, எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.
வன்முறைக்கு எதிர்ப்பு!
எப்பொழுதோ எழுதப்பட்ட இந்தப் பதிவு draft இல் இருந்தது. அதனை தற்போது பதிவிடுகின்றேன்.
வன்முறைக்கு எதிர்ப்பு
வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரனான டாக்டர் அருண் காந்தியும், அவரது மனவியாரும் இணைந்து எம்.கே.காந்தி நிறுவனத்தை (M.K.Gandhi Institute for nonviolence) 1991 இலிருந்து நடாத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, வன்முறைக்கு எதிராக விரிவுரைகள் ஆற்றி வருகிறார்கள். இந் நிறுவனத்தின் கல்வித்திட்டமானது அபிப்பிராய பேதங்களை தடுத்தல், கோபத்தை அடக்கியாளல், நல்ல உறவுகளை, சமூகத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டது. உள்ளூர் மட்டத்திலும், தேச மட்டத்திலும், உலக மட்டத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், நடைமுறைப்படுத்துவதுமே இந் நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். Puerto Rico பல்கலைக்கழகத்தில் டாக்டர் அருண் காந்தி வழங்கிய விரிவுரை ஒன்றில் வன்முறையற்ற, முரட்டுத்தனமற்ற, கொடூரமற்ற, பலாத்காரமற்ற பிள்ளை பராமரிப்பு (non-violent parenting) பற்றி பேசும்போது, அவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்றை அண்மையில் நண்பரொருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார். அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். டாக்டர் அருண் காந்தி அவர்கள் அவரது பதினாறாவது வயதில், தனது பெற்றோருடனும், இரு சகோதரிகளுடனும் தென்னாபிரிக்காவில் Durban என்ற இடத்தில் வசித்து வந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அந்த விரிவுரையில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த Durban என்ற இடம் ஒரு கிராமப்புறமாகவும், அக்கம்பக்கத்தார் என்று சொல்லிக் கொள்ள அதிகமானோர் இல்லாத ஒரு இடமாகவும் இருந்ததால், தானும், தனது சகோதரிகளும், 18 மைல் தொலைவிலுள்ள நகரத்திற்கு செல்ல ஏற்படும் சந்தர்ப்பங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருப்பார்களாம். ஒரு முறை அவரது தந்தையார் ஒரு முழுநாள் கூட்டத்திற்காக நகரத்திற்கு செல்ல வேண்டி இருந்தபோது, அவரிடம் தன்னை காரில் நகரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டாராம். அத்துடன் தாயாரும் அங்கு வாங்கி வர வேண்டிய மளிகைபொருட்களுக்கு ஒரு துண்டை கொடுத்தாராம். அத்துடன் நகரத்தில் முடிக்க வேண்டிய சிறு சிறு வேலைகள் பற்றியும் சொன்னார்களாம். அதில் ஒன்று காரை பழுது பார்த்தலுமாகும். அவரும் நண்பர்களை சந்திக்கலாம் என்ற ஆவலிலும், நகரத்திற்கு செல்லும் உற்சாகத்திலும் சென்றுள்ளார். தந்தையார் கூட்டம் நடக்குமிடத்தில் இறங்கிக் கொண்டு, தன்னை 5 மணிக்கு வந்து ஏற்றிச் செல்லும்படி கூறி இருக்கிறார். பின்னர் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு இவர் நண்பர்களுடன், ஒரு ஆங்கிலப்படத்திற்கு சென்றிருக்கிறார். படத்தில் மூழ்கிப்போய் விட்டதால் நேரத்தை தவற விட்டுவிட்டாராம். அவர் நினைவுக்கு வந்து கார் திருத்துமிடம் போய் காரை எடுத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றபோது நேரம் 6 மணி ஆகி விட்டதாம். அப்போது தகப்பனார் தாமதமாக வந்ததற்கு காரணம் கேட்டபோது, மேலைநாட்டு படம் பார்த்து வருகிறேன் என்ற சொல்லத் தயக்கமாக இருந்ததால், கார் திருத்துமிடத்தில் அவர்கள் தாமதமாகத்தான் தந்தார்கள் என்று கூறி இருக்கின்றார். தகப்பனார் கார் திருத்துமிடத்திற்கு ஏற்கனவே தொலைபேசியில் அழைத்துப் பார்த்திருந்த விடயம் இவர் அறிந்திருக்கவில்லையாம். அப்போது தகப்பனார் சொன்னாராம், உண்மையில் தாமதத்திற்கு காரணத்தை என்னிடம் சொல்ல நீ தயங்கும்படி, அல்லது அதற்காக ஒரு பொய்யை சொல்லும்படி நான் உன்னை வளர்த்து விட்டேன். அப்படியானால் நான் உன்னை வளர்த்த முறையில் எங்கோ தவறு நடந்துள்ளது. அதற்காக, இன்று இந்த 18 மைலும் அதை யோசித்த படியே நடந்து வருகிறேன். நீ காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டாராம். அந்த இருட்டிலும், அந்த பாதையிலும் அவர் ஐந்தரை மணித்தியாலம் நடந்து வர விட்டுவிட்டு போக முடியாமல் இருந்ததால் அவருக்குப் பின்னால் காரை மெதுவாக ஓட்டியபடி, தான் சொன்ன அவசியமற்ற பொய்யை நினைத்த படியே போனாராம். அன்றே எந்த பொய்யும் சொல்லக் கூடாது என்று அவர் முடிவு எடுத்தாராம். வேறு விதமான வன்முறையுடன் கூடிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டு, அதன் வலி மறைந்ததும், அந்த நிகழ்ச்சியையும் மறந்திருக்கக் கூடும், தொடர்ந்தும் அதே மாதிரியான பொய்களும் சொல்லி இருக்கவும் கூடும். ஆனால் இந்த தனித்தன்மையுடைய, சக்தி மிக்க, வன்முறையற்ற முறை தன்னை ஒரு நல்ல வழிக்கு திருப்ப முடிந்தது என்று கூறியுள்ளார். இதுவே வன்முறையற்ற ஒரு செயற்பாட்டின் பலம் பொருந்திய சக்தி என்கிறார் டாக்டர் அருண் காந்தி அவர்கள்.
மலாவி வாழ்க்கை ஆரம்பம்!
மலாவியில் 13.08.15 அன்று குடும்பத்துடன் வந்து இறங்கினோம். தொடரப்போகும் ஒரு வருடத்திற்கு மலாவி வாழ்க்கை. வேறுபட்ட சூழல், புதிய மனிதர்கள், புதிய வேறுபட்ட வேலைத்தளம் என்று மலாவியில் வாழ்க்கை ஆரம்பித்தாயிற்று. புதிய அனுபவங்களுடன், வாழ்க்கை நன்றாகப் போகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இரு வாரங்கள் எனக்கு தென்னாபிரிக்காவில் ஒரு பயிலரங்கம் இருப்பதனால், நான் மட்டும் தென்னாபிரிக்கா வந்துள்ளேன்.
இந்த மலாவி வாழ்க்கை எனது வேலையுடன் தொடர்புடையதாகவும், குறிப்பிட்ட ஒரு செயல்திட்டத்துடன் இணைந்ததாகவும் இருப்பதால், கூடப் பணிபுரிபவர்களும் வாசிப்பதற்காக, இது தொடர்பான விடயங்களை ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவில் எழுத எண்ணியுள்ளேன்.
இணைப்பு https://kalainmalawi.wordpress.com/
மலாவியில் ஓராண்டு வாழ்க்கைக்கு ஆயத்தம்!
15.07.15
நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், மலாவியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. வருகின்ற ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம்.
வேறுபட்ட சூழல், கலாச்சாரம் கொண்ட ஒரு இடத்தில் வேலை செய்வது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். மகளுக்கும் இப்படியான புதிய அனுபவங்களைப் பெறுவதில் ஆர்வம் இருப்பதனால், அவளும் மிகவும் ஆர்வத்துடன் பயணத்தை எதிர்நோக்கியிருக்கின்றாள்.
* மகளுக்கு மருத்துவமனைக்கு அண்மையிலேயே இருக்கும் International School ஒன்றில், IB DP க்கு நுழைவு அனுமதி பெற்றுக் கொண்டாயிற்று.
* மலாவியைப்பற்றிய தகவல்களைத் தேடித்தேடிப் படிக்கின்றேன் :).
* அங்கே போவதற்காக நாம் பெற வேண்டிய தடுப்பூசிகள் அனைத்தும் எடுத்தாயிற்று.
* போவதற்கு முன்னால் ஆயத்தம் செய்ய வேண்டிய ஆவணங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
* அங்கே போவதற்கு முன்னால்ஆராய்ச்சிப் பணியை முடித்துக் கொடுக்க விரும்பியதால், வேலையில் அதிக நேரம் செலவளிக்க வேண்டியிருந்தது.
* மலாவிப் பயணத்திற்கு முன்னர் இலங்கை போய் வரவிருப்பதால், அவசரம் அவசரமாக எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன.
விரைவில் அங்கிருந்து அடுத்த பதிவை இடுவேன் என நினைக்கின்றேன் :).
12.08.15
மேலுள்ள விடயங்களை எழுதிவிட்டு பதிவேற்றாமல் விட்டுவிட்டேன். இன்று பயணம் ஆரம்பித்துவிட்டது.
இலங்கைப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர், நேற்றுவரை வேலைக்குப் போய்விட்டு இன்று மலாவிப்பயணம் ஆரம்பித்தாயிற்று. சுவீடன் விமான நிலையத்தில், அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கின்றோம். இங்கே இலவச இணைய இணைப்பே மிக நிறைவாக வேலை செய்கின்றது. எனவே விடயங்களை இற்றைப்படுத்துகின்றேன் :).
என் உயிர்ச் சினேகிதி!
எனது மகள் என்னிடம் “யார் உங்களுடைய best friend?” என்ற கேள்வியைக் கேட்கும்போது, நான் உடனே சொல்லும் பதில் ‘ஜெயமணி’. அவளை நான் சந்தித்தது இலங்கையில் தாதியர் பயிற்சிப் பாடசாலையில். பல்கலைக்கழக அனுமதி கிடைக்க முதல் (நாங்கள் பரீட்சைகள் எழுதி முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பல்கலை அனுமதிக்காகக் காத்திருந்தோம். அந்த இடைவெளியில், தாதியர் பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே பழக்கமானவள்தான் இந்த ஜெயமணி. அவளுக்கு நான் வைத்திருந்த பெயர் ‘ஜெசி’. அவளது பெயரின் முதலெழுத்தையும், தகப்பனார் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வைத்த பெயர்.
எப்படி நாம் சினேகிதிகள் ஆனோம் என்று யோசித்துப் பார்க்கின்றேன். அவளும் நானும் அறைத் தோழிகளும் இல்லை. ஆனால் வகுப்பில் அருகருகே அமர்ந்திருப்போம். உயரத்தின்படி அமர்த்தினார்களா, அல்லது பெயர் முதலெழுத்துப்படி அமர்த்தினார்களா என்பது சரியாக நினைவில் இல்லை. பெயர் ஒழுங்கில் என்றால் J, அடுத்தது K என்றபடியால் அருகருகே அமர்ந்ததாக நினைவு. மேலும், மருத்தவமனைக்குப் பயிற்சிக்குப் போகும்போது, ஒரே பிரிவுக்குப் போய் வருவோம். இதனால் நெருக்கமான நண்பிகள் ஆனோம்.
எனக்குப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தபோது, நான் தாதியர் பயிற்சியை விட்டு விலகிப் போவதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தபோது, அவளும், வேறு பலரும், ஏன் அனைவருமே பல்கலைக்கழக படிப்பை இழக்க வேண்டாம் என்று அறிவுறித்தியதால், விட்டுவிட்டுப் போய் விட்டேன். ஆனால் எங்களிடையேயான அன்பு மட்டும் என்றும் மறையாமல் இருந்து வருகின்றது. நாட்டுச் சூழ்நிலை காரணமான அவளது இடமாற்றத்தால், சிலகாலம் தொடர்பேயில்லாமல் போயிருந்தோம். ஆனால் அன்பு இருந்தால், அது எப்படியும் எம்மை மீண்டும் இணைக்குமல்லவா? அவள் கனடாவிற்கும், நான் நோர்வேக்கும் வந்த பின்னர், ஒரு மாதிரி எப்படியோ தொடர்பை மீண்டும் பெற்று விட்டோம்.
நான் பல்கலைக்கழகத்திற்குப் போன புதிதில், இருவரும் ஒவ்வொருநாளும் கடிதப் பரிமாற்றம் செய்து கொள்வோம். “From Jesy” என்று கடித உறையில் எழுதி மடல்கள் வரும்போது (ஒருவேளை ஜெசி என்பது ஆண்பெயர்போல் தெரிந்ததோ என்னவோ), பலருக்கும் எனக்கு காதலர் உண்டோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது :). பல்கலைக்கழகத்தில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளுக்கு எழுதுவேன். அவளும் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடக்கும் விடயங்களை எனக்கு எழுதுவாள்.
நாளொன்றுக்கு அனுப்பப்பட்ட மடல்கள், இரண்டு நாட்களுக்கு ஒன்றாகி, மூன்று நாட்களுக்கு ஒன்றாகி, கிழமைக்கு ஒன்றாகி, மாதத்துக்கு ஒன்றாகி, ஒரு கட்டத்தில் நின்றே போனது :(. அவளுக்கு வந்த காதல்தான் இதற்குக் காரணமோ என்று, கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது :). பின்னர் நாட்டுச் சூழலில் அவள் இந்தியா போய்விட, தொடர்பை இழந்தோம்.
இந்த உயிர்ப்புப் பக்கத்தில் ஏதோ ஒரு பதிவில் இவளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எந்தப் பதிவில் என்பது நினைவில் இல்லை. இப்போ இவளைப்பற்றி எழுதக் காரணம் உண்டு :). 33 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த அவளை இந்த முறை கனடாப் பயணத்தில் கண்டு வந்தேன். கண்டதில் எனக்குண்டான மகிழ்ச்சி அளவில்லாதது :).
தாதியர் பயிற்சிக் காலத்தில் சாப்பிடப் போவது, வகுப்புகளிற்குப் போவது, மருத்தவமனைக்குப் போவது என்று ஒன்றாகவே செய்து வந்தோம். மிக வேகமாகச் சாப்பிடும் பழக்கம் கொண்ட நான் அவளுடன் சேர்ந்து மிக மெதுவாக உண்ண ஆரம்பித்தேன். இப்போது அவளை விடவும் மெதுவாக உண்ணுகின்றேன் என்று நினைக்கின்றேன் :).
நான் எனது அன்பை வெளிப்படையாகக் காட்டும் இயல்பு கொண்டிருந்தேன். எனவே அவளை விட்டுப் பிரிந்து பல்கலைக்குச் செல்ல நேர்கையில் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எனவே சிலசமயம் எனக்கு அவள் மேல் இருக்கும் அன்பு, அவளுக்கு என்னிடம் இல்லையோ என்றும் எண்ண வைத்ததுண்டு. ஆனால் நான் செல்லும் நாளிற்கு முதல் நாள் அவளது கவலையையும் அறிய முடிந்தது. நான் விலகிப் போகும் நாளன்று நன்றாக அழுது தீர்த்துவிட்டு வெளியே போய் விட்டேன். அதுவரை அவள் அழவில்லையென்றே நினைவாக உள்ளது. ஆனால், ஏதோ ஒன்றை மறந்துவிட்டு நான் திரும்பி வர வேண்டி இருந்தது. அப்போது வந்து பார்த்தால் அவள் அழுது கொண்டிருந்தாள். சினேகிதி அழுகின்றாளே என்ற கவலையையும் மீறி, அவளுக்கும் என்னைப் பிரிவதில் கவலைதான் என்பதை எண்ணி ஒரு மகிழ்ச்சி மனதுக்குள் வந்து போனதை மறுக்க முடியாது :).
நேர வேறுபாடு காரணமாக அடிகக்டி பேசிக் கொள்வது இல்லையென்றாலும், இருவரும் நமது பிறந்த நாளன்று மட்டும், அது என்ன நாளாக இருந்தாலும், எப்படியும் நேரத்தைச் சரிப்படுத்தி, பேசிக் கொள்வோம். இந்த ஏப்ரல் மாதம் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, அவள் பெரிய இரு குழந்தைகளுக்குத் தாய். நானும் ஒரு பெரிய குழந்தைக்குத் தாய். அவளின் குடும்பத்தினரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அதைவிட மகிழ்ச்சி, எனது நினைவுகளை அவள் சேகரித்து வைத்திருந்து, மறக்காமல் என்னிடம் காட்டியது. ஆம், அவளது கையொப்ப ஏட்டை (autograph) கவனமாக வைத்திருந்து காட்டினாள். அதன் முதல் பக்கத்தைத் திறந்தபோது, ‘என்ன இது, அவளது வரவேற்புச் செய்தியில், அவளுடைய கையெழுத்து, என்னுடையது போலவே இருக்கின்றதே’ என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது, அது என்னுடைய கையெழுத்தேதான். நான்தான் எழுதிக் கொடுத்திருக்கின்றேன் என்று.
இவை தவிர, அவளது இந்தக் கையொப்ப ஏட்டில் 5 பக்கங்களில் எனது அன்பைக் கொட்டி, கையொப்பமிட்டிருக்கின்றேன். தவிர ஒரு பக்கத்தில் ஏதோ கொஞ்சம் கோவத்தில்வேறு எழுதி வைத்திருக்கின்றேன். ஆனால் அது எந்த சந்தர்ப்பத்தில், என்ன கோவத்தில் எழுதியது என்று இருவருக்கும் நினைவில் இல்லை. அதுவும் நல்லதுதான். மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் நினைவில் கொள்வதும், ஏனையவற்றை மறந்துவிடுவதும் நல்லதுதானே? 🙂
எனது உயிர்ச் சினேகிதிக்காக ஒரு தனிப்பதிவு போட வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கின்றது இன்று.