உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

என் குட்டி சினேகிதி!

பதிந்தவர் கலை மேல் நவம்பர் 26, 2007

என் பிரியமான குட்டி சினேகிதி!

நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.

இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது. :)
bestfriends.jpg

ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது. :)

bestfrineds1.jpg

:) எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

.... இங்கே பதியப்பட்டது குழந்தை, நிகழ்வுகள், பாசம் | 3 மறுமொழிகள் »

வயது முதிர்ந்த வலைப்பதிவர்!!

பதிந்தவர் கலை மேல் அக்டோபர் 20, 2007

முதிர்ந்த வலைப் பதிவர்!

உலகிலேயே வயது முதிர்ந்த வலைப்பதிவர் யார் தெரியுமா? அவுஸ்திரேலியப் பெண்மணி Olive Riley. இந்த மாதம் 17 ஆம் திகதி அவர் தனது 108 ஆவது வயதை எய்தினார். மூன்று நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவரரென்ற பெருமையை பெற்றிருக்கும் இவர், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் The Life of Riley என்ற பெயரில் வலைப் பதிவு செய்து வருகின்றார்.

அவரது பதிவு உலகளவிலான அதிகளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. அவரது பதிவால் கவரப்ப்பட்ட ஒரு ஸ்பானியர், அவரது பதிவை ஸ்பெயின் மொழியில் மாற்றி அமைத்தி வருகின்றாராம்.

அவருக்கு வலைப் பதிவு செய்வதில் உதவி வரும் Mike Rubbo, Olive Riley யை active ஆக வைத்திருக்கவே தான் விரும்புவததகவும், inactivity என்ற காரணத்தால் அவர் இறந்து போகக் கூடாது என்றும் கூறுகின்றார்.

அவரது பிறந்த ந்ஆளுக்கு முதல் இந்த படிவை போட வேண்டும் என்றிருந்தேன். ஆனால் நேரமின்மையால் பின் தள்ளி விட்டது. இருந்தாலும் அந்த ம்உதிய பதிவருக்கு எனது வாழ்த்துக்கள். :)

.... இங்கே பதியப்பட்டது உலகம் | Leave a Comment »

மூட நம்பிக்கையும், அதன் பலனும்???

பதிந்தவர் கலை மேல் அக்டோபர் 1, 2007

நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே……..

 ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனைவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு ஒரு ‘மை’ போட்டுப் பார்ப்பவரிடம் போனார்களாம்.

இந்த வயோதிபரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் சொன்னாராம், “உங்களுடைய கோவிலில் இருக்கும் கடவுள் வைரவரை ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் வைரவர் தனது சக்தியை பயன்படுத்தி, உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கின்றார். அதனால்தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல்நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்”.

(உடனே நான் கேட்டேன், “மனிதனால் ஒரு கடவுளை கட்டி வைக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கவில்லையா” என்று. அதற்கு அவர், “நான் சொல்லும் கதையை முழுவதுமாய் கேளுங்கோ” என்று சொல்லி தொடர்ந்தார்.)

அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, செய்வினை செய்து புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று சொன்னாராம். அவர்களுக்கு உதவியாக (புதைத்து வைக்கப்பட்டிருக்கும் செய்வினையை தோண்டி எடுத்து அகற்றுவதற்கு) பக்கத்து வீட்டிலிருப்பவரை கூட்டிக் கொண்டார்களாம். மை போட்டுப் பார்ப்பவர் வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார்களாம். மை போட்டுப் பார்ப்பவருக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்களாம்.

அந்த வயதானவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல்நலக் குறைவும் வரவில்லையென்றும், தன்னால் இப்போது துவிச்சக்கர வண்டி ஓட்டிக் கொண்டு செல்லக் கூட முடிகின்றது என்றும் ஆனந்தமாக கூறுகின்றாராம்.

இந்தக் கதையை என்னிடம் சொன்னவர் சொல்கின்றார். அந்த வயதானவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார். அந்த வயதான தம்பதிகளிடம் நிறைய பணம் இருக்கின்றது. அந்த மை போட்டுப் பார்ப்பவருக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள். அதனால் அந்த பணம், அந்த மை போடுபவரின் குடும்பத்தினரின் பாவனைக்கு போய் சேருகின்றது. அதுவும் நல்லதுதானே என்று. இவருக்கும் சுகம், அவர்களுக்கும் தேவையான பணம்.

இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கின்றேன். :^)

.... இங்கே பதியப்பட்டது சமூகம், சிந்தனை, வாழ்க்கை | 2 மறுமொழிகள் »

ஜோதிடம்!

பதிந்தவர் கலை மேல் செப்டம்பர் 21, 2007

அன்றைக்கு சாப்பிட உட்கார்ந்தபோது வழமை போலவே டிவி பார்க்கலாமே என்றெண்ணி அதை போட்டேன். (சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது கூடாத பழக்கமாம், சொல்கின்றார்கள். ஆனால் அதை கேட்டு நடக்க என்னால் முடியவில்லை). அதில், ஒரு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. வழமை போலவே, என்ன ஏது என்று புரியாமலே நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்.

அது ஒரு அமெரிக்க நிகழ்ச்சி. இருவர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் நிகழ்ச்சி நடத்துனர், மற்றவர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஒரு அமெரிக்க பெண்மணி.

அழைக்கப்பட்டிருந்த ஏனைய மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்களில் ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர்  காலத்தில்  நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்க, அந்த பெண்மணி உடனேயே பதில் சொன்னார். அட, ‘அமெரிக்காவிலே டிவியில் வந்து நேரடி ஜோதிடம் சொல்லுறாங்க போலிருக்கே’ என்று கொஞ்சம் ஆர்வமாக பார்த்தேன்.

 அடுத்து ஒரு சிறுபெண் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து, “எனக்குரியவரை நான் எப்போது காண்பேன்?” என்று கேட்க, அந்த பெண்மணியும் உடனடியாக, “உன்னுடையவரின் பெயர் Jack. அவரை நீ இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கண்டு பிடிப்பாய்” என்று சொன்னார். பாவம் அந்தப் பெண், இன்னும் இரண்டு வருடத்துக்கு, Jack என்ற பெயருடன் காணும் ஆண்களை எல்லாம் கண்டு குழம்பப் போகின்றாள்.

அடுத்து எழுந்த ஒரு நடுத்தர வயதான பெண்மணி, “என்னைச் சுற்றி எப்போதும் தேவதைகள் இருப்பதை நான் உணர்கின்றேன்” என்று சொல்ல, அந்த ஜோதிட பெண்மணி, “எல்லோரை சுற்றியும் 5 அல்லது 6 தேவதைகள் எப்போதுமே இருக்கும்” என்று சொல்ல, அந்த பெண்மணி, “என்னைச் சுற்றி இருக்கும் தேவதைகளை உன்னால் இப்போது பார்க்க முடிகின்றதா” என்று சீரியசாக கேட்க, அவரும், “ஆம், பார்க்கிறேன்” என்று அதை விட சீரியசாக ஒரு பதில் சொல்கின்றார். “அப்படியானால், அந்த தேவதைகள் சொல்வதையெல்லாம் நான் செய்தால் தப்பில்லைத்தானே” என்று அந்த பெண்மணி கேட்க, இவர் “இல்லை, அவர்கள் சொல்வது போலவே நீ எல்லாம் செய்யலாம்” என்று பதில் கொடுத்தார். ஏதாவது தப்புக்கள் செய்யாமல் இருந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக ஒரு ஆண் எழுந்து, “நான் என்னுடைய வீட்டை விற்க வேண்டும். விற்க முடியுமா?” என்று கேட்க, ”ஆம், நீ ஒரு  நல்ல  வீடு  விற்றுக் கொடுப்பவரை உடனடியாக சந்திக்க வேண்டும்”, என்று  பதில்  தந்தார்.  

உடனே நிகழ்ச்சி நடத்துனர், “நானும் என்னுடைய வீட்டை விற்பதாக இருக்கிறேன். எப்போ விற்பேன்?” என்று கேட்க, “இன்னும் 7 கிழமைக்குள் விற்று விடுவாய்” என்று பதில் சொன்னார். நடத்துனரின் முகத்தில் சந்தோஷம்.

அடுத்ததாக எழுந்த ஒரு இளைஞன், “அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை முன் வைத்தான்” (எனக்கென்னவோ அவன் ஒரு நக்கலா கேட்ட மாதிரித்தான் இருந்தது). அதற்கு “எனக்கு யார் என்று தெரியாது. ஆனால் யார் வந்தாலும், இப்ப இருப்பதைவிட நல்ல நிலமை உருவாகும்” என்று சொன்னார். பொதுவான, பெரிய விடயங்களில் ஜோதிடம் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போலும். :)

நடத்துனர் தன்னுடைய வீட்டை நிச்சயமாக 7 கிழமைக்குள் விற்று விட முடியுமா என்று மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

எப்படித்தான் மற்றவருடைய எதிர் காலத்தை அப்படியே பட்டு பட்டென்று (எந்த ஒரு பொருளோ, புத்தகமோ அவரிடம் இல்லை) சொல்கின்றாரோ தெரியவில்லை. சும்மா உட்கார்ந்த படியே, அதுவும் டக் டக்கென்று பதில் சொல்லி அனைவரையும் அசத்தி விட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

நான் பார்க்க தொடங்கியபோதே நிகழ்ச்சி முடிவை நெருங்கி விட்டிருந்தது. அதனால் முழுமையாகப் பார்த்து சிரிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் நானும் எழுந்து விட்டேன். உலகில் எல்லா இடத்திலும், எல்லா மாதிரியான ஆட்களும் இருப்பார்கள் போல இருக்கு :)

.... இங்கே பதியப்பட்டது உலகம், சமூகம், சிந்தனை | Leave a Comment »

மதம் பிடிக்காதவர்கள்!

பதிந்தவர் கலை மேல் செப்டம்பர் 13, 2007

மதம் பிடிக்காதவர்கள்!

மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். ‘ஆரம்ப வருட திட்டம்’ (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, ‘உலக வெப்பமயமாதல்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.

இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன். :)

அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, ‘உலகிலுள்ள மதங்கள்’. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் அன்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது.மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது. :)

.... இங்கே பதியப்பட்டது குழந்தை, சமூகம், சிந்தனை | 2 மறுமொழிகள் »